நவீன அரசமைப்பு, நீதி அமைப்பு சார்ந்த விமர்சனங்களையும், பகுத்துப் பார்க்க முடியாமல் அது வைத்திருக்கும் பயங்கரங்களின் அடர்த்தியையும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே சகுனங்களைப் போல எச்சரித்துவிட்டுப் போன இலக்கிய ஆசிரியன் காஃப்கா, இந்த நூற்றாண்டிலும் பொருள் பொதிந்தவராக இருக்கிறார் என்பதை, ஆதிவாசி மக்கள் உரிமைகள் செயல்பாட்டாளரும், மனித உரிமைப் போராளியுமான பாதிரியார் ஸ்டான் சுவாமியின் அநியாயமான கைதும் மரணமும் நிரூபிக்கிறது.
ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அவர் இறக்கும்வரை அவரைக் கைதுசெய்வதற்காகச் சொலப்பட்ட குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை. மாவோயிஸ்டுகள் தொடர்பில் அவரது கணிப்பொறியில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானவை அல்ல என்று ஸ்டான் சுவாமி தொடர்ந்து கூறிவந்திருக்கிறார்.
காஃப்காவின் 'விசாரணை' நாவலின் நாயகன் யோசப் க.வும் இப்படித்தான் அவன் செய்த குற்றம் என்னவென்று தெரிவிக்கப்படாமலேயே கைது செய்யப்படுகிறான்; கடைசியில் மரண தண்டனைக்கும் உள்ளாகிறான். கோவிட் என்னும் பெருந்தொற்றுச் சூழல் சர்வாதிகாரத்துக்கும் அரசு பயங்கரவாதத்துக்கும் அநீதிக்கும் தீண்டாமைக்கும் கூடுதல் நியாயத்தைத் தந்துவிட்டது. பகுத்தறிவுக்குப் புலப்படாத துரதிர்ஷ்டம் தான் இது.
ஸ்டான் சுவாமி செய்த குற்றம்தான் என்ன?
பாதிரியார் ஸ்டான் சுவாமி ஜார்க்கண்டை மையமாகக் கொண்ட யேசுசபை பாதிரியார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிவாசி மக்களின் நிலம், வனம், தொழிலாளர் உரிமைகளுக்காகச் செயல்பட்டு வருபவர். தேசிய புலனாய்வு நிறுவனம் அவரைக் கைது செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வரை, நக்சல்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கில் ஆதிவாசி இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு எதிராகப் போராடியும் கருத்துகளைச் சொல்லியும் வந்தவர். வனத்தில் வாழும் ஆதிவாசிகளுக்கு ஆதரவாக அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டுள்ள அம்சங்களை வலியுறுத்தி வளர்ச்சி, மேம்பாடு என்னும் பெயரால் அரசுகள் கொண்டுவந்த சட்டங்களை எதிர்த்தவர்.
எல்கர் பரிஷத்/ பீமா கொரேகான் வழக்கு தொடர்பில் புலனாய்வு என்ற பெயரில் தேசிய புலனாய்வு நிறுவனம் கைது செய்த அறிவுஜீவிகள், செயல்பாட்டாளர்கள் 16 பேரில் ஸ்டான் சுவாமியும் ஒருவர்.
1818-ம் ஆண்டு மகர் சமூகத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலேயர்களோடு சேர்ந்து மராட்டிய பேஷ்வாக்களை வென்ற பீமா கொரேகான் சண்டையின் 200-வது ஆண்டைக் கொண்டாட தலித் மக்கள் புனே அருகில் கூடியபோது ஏற்பட்ட வன்முறை தொடர்பில் பாதிரியார் ஸ்டான் சுவாமி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார். 84 வயதில் முதுமையின் அத்தனை உடல்துயரங்களையும் அனுபவித்த அந்தப் பாதிரியாருக்கு கடந்த ஒன்பது மாதங்களாக பிணையில் வீடு திரும்புவது கூட அனுமதிக்கப்படவில்லை.
காது கேளாமை, பார்கின்சன் நோய், ஹிரனியா என எத்தனையோ பிரச்சினைகள் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டும் அவருக்கு மருத்துவ அடிப்படையில் கூட பிணை அளிக்கப்படவில்லை.
திரவ உணவை உட்கொள்வதற்கு அவருக்கு சிரமம் இருந்த நிலையில் உறிஞ்சுகுழல் அவருக்கு சிறையில் அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் காஃப்காவை ஞாபகப்படுத்தும் அவலம்.
ஒரு உறிஞ்சுகுழலை அவருக்குக் கொடுப்பதற்கான விளக்கம் கேட்டு நமது நீதிமன்றம் இருபது நாட்களைக் கடத்தியிருக்கிறது. சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் என்பது அத்தனை பயங்கரமானது. அது ஒரு முதியவருக்கு தண்ணீரைக் குடிப்பதற்கான உறிஞ்சுகுழலைக் கூட அனுமதிக்காதது.
அமைப்புகள் தனது கொடுங்கோன்மையின் குருட்டுக் கரங்களை அப்பாவி மனிதர்கள் மீதும் எதிர்த்துக் கேள்வி கேட்பவர்கள் மீதும் தொடர்ந்து நீட்டிக்கொண்டிருக்கும் வரை காஃப்கா இங்கே இருந்துகொண்டிருப்பார்.
Comments