Skip to main content

கயிறுகள் - மேரி ஆலிவர்


பழைய நாட்களில் நாய்கள் சுதந்திரமாக எங்கள் டவுனில் திரிந்துகொண்டிருந்தன. ஆனால் பழைய வழிமுறைகள் மாறிவிட்டன.

ஒரு காலையில் கழுத்துப்பட்டியில் நீளமாகத் தொங்கும் கயிறுடன் எங்கள் வீட்டுமுற்றத்தில் ஒரு நாய்க்குட்டி வந்துநின்றது. எங்கள் வீட்டிலுள்ள நாய்களுடன் அவன் விளையாடத் தொடங்கினான்; அதற்குப் பிறகு தொலைந்துவிட்டான் அடுத்த நாள் காலை இன்னொரு கயிறு கழுத்தில் தொங்க எங்கள் வீட்டில் தென்பட்டான். இப்படியாக நிறைய நாட்கள் நிகழ்ந்தன – அவன் துருதுருப்பாகவும் நேசத்துடனும் இருந்தான். அத்துடன் கடித்து சவைத்துத் துண்டாக்கிய ஒரு கயிறு அவனுடன் எப்போதும் இருந்தது. 

ஒருசமயம் நாங்கள் இன்னொரு வீட்டுக்கு நகர்ந்தோம். ஒரே சாயங்காலத்தில் அத்தனையையும் நகர்த்திவிட்டோம். ஒரு நாளோ அதற்கும் கழித்தோ, ஒரு குறுகுறுப்பின் காரணமாக, பழைய வீட்டுக்கு வண்டியை விட்டேன். எங்கள் வீட்டின் வாசலில் புல்தரையில் அவன் படுத்திருந்ததைப் பார்த்தேன். நான் அவனை காரில் ஏற்றி எங்கள் புதிய வீடு எங்கிருக்கிறதென்று காட்டினேன். உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று சொன்னேன். கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு பின்னர் போய்விட்டான். ஆனால், அடுத்த நாள் காலை எங்கள் புதுவீட்டுக்கு கயிறு தொங்க வந்துவிட்டான். அன்றைக்கு அவனது உரிமையாளர் தனது ஆவணங்களுடன் ஒரு தோல்வாரையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். அவன் பெயர் சாம்மி என்று அந்தப் பெண்மணி கூறினார். இப்போது இவன் உங்களுடையவன் என்று கூறிச்சென்றார். 

சாம்மி வளர வளர டவுன் முழுவதும் சுற்றத்தொடங்கிவிட்டான். அதன் விளைவாக நாய் கண்காணிப்பு அதிகாரியிடம் பிடிபடவும் தொடங்கினான். ஒருகட்டத்தில் நீதிமன்றத்துக்கு நாங்கள் போகவேண்டியிருந்தது. சீக்கிரத்திலேயே விவாதம் செய்வதற்கான இடம் அதுவல்ல என்று எங்களுக்குத் தெரிந்தும்போனது. தடுப்பு வேலி ஒன்றை அமைக்க எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. நாங்களும் அதைக் கட்டினோம். 

சாம்மி கயிறுகளை மட்டும் கடித்துத் துண்டிப்பதில்லை; அவனால் வேலிகளையும் தாண்ட முடிந்தது. அவனது போக்கும் வரத்தும் தொடர்ந்தது. நாய் கண்காணிப்பு அதிகாரியைத் தவிர வேறு யாரையும் அவன் தொந்தரவு செய்யவேயில்லை. அவனுக்கு நண்பர்கள் கிடைத்தார்கள். அவன் பிற நாய்களுடன் சண்டைக்கும் போவதில்லை. யார் வீட்டு முற்றத்திலாவது அமர்ந்து ஓய்வெடுப்பதை அவன் விரும்பினான், அவ்வளவுதான், சாத்தியப்பட்டால் அந்த வீட்டு உரிமையாளர்களிடம் ஒரு ஹலோ சொல்வதற்கும். நாய் கண்காணிப்பு அதிகாரி வருவதற்குள்ளாக சாம்மியை அழைத்துப்போகச் சொல்லி எனக்கு தொலைபேசி வரத்தொடங்கியது. சிலர் அவனை வீட்டுக்குள் கூட்டிப்போய் சட்டத்திலிருந்து சாம்மியை மறைத்துவைக்கவும் செய்தனர். ஒரு நாள் டவுனின் அடுத்த மூலையிலிருந்து ஒரு பெண் என்னைத் தொலைபேசியில் அழைத்தாள். நான் அங்கே போனவுடன், சில நிமிடங்கள் காத்திருக்க முடியுமா, அவனுக்கு அவித்து வெட்டிய முட்டைகளைக் கொடுக்கவேண்டும் என்றாள்.

சாம்மி பற்றி என்னால் இன்னும் நிறைய கதைகள் சொல்லமுடியும். அவை முடிவற்றவை. நான் சந்தோஷமான முடிவாக நீங்கள் எதிர்பாராத ஒன்றைச் சொல்லப் போகிறேன். குறிப்பிட்ட நாய் கண்காணிப்பு அதிகாரி பதவியை விட்டு விலகிவிட்டார். அடுத்துவந்த அதிகாரியோ வித்தியாசமானவர். அவரும் பழைய நாட்களின் ஞாபகங்களை அசைபோடுபவராகவும் அவை தொலைந்துபோய்விட்டதைக் குறித்துக் கவலைப்படுபவராகவும் இருந்தார். அவர் சாம்மியைப் பார்த்த போதெல்லாம் அதை தனது டிரக்கில் ஏற்றி, வீட்டுக்குக் கொண்டுவந்துவிடுவார். இப்படியாக அவன் நீண்டதும் ஆனந்தமானதுமான வாழ்க்கையை பல நண்பர்களோடு வாழ்ந்தான்

இது சாம்மியின் கதை. சாம்மியிடம் எங்கோ ஒன்றிரண்டு இரண்டோ கவிதைகளும் இருக்கின்றனவென்றே நினைக்கிறேன். இந்த இனிய டவுனில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்கிறது என்பதையும் நம்மில் பெரும்பாலானவர்கள் இழந்திருப்பதையும் சாம்மி சொல்லியிருக்கக்கூடும். 

நம்மைப் பிடித்துவைத்திருக்கும் கயிறுகளை அறுத்தால் நடக்கக்கூடிய அற்புதமான காரியங்கள் தொடர்பிலானதாகவும் இருக்கலாம். 

Comments