அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை - போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது.
எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது போன்று தெரிகிறது; இந்தக் கவிதைக்குள் பாம்பு சுருண்டிருக்கிறது; விட்டத்தை அதிகப்படுத்தாமல் சுருசுருவென்று தன்னுள் சுருளும் பாம்பின் இயக்கம்.
அபியின் மாலை, பாம்பாக அவரைக் கொட்டியது போல, இந்தக் கவிதைகளை வாசிக்கும்போது நம்மையும் கொட்டித்தான் விடுகிறது. அப்போது சாயும் காலத்தில், முதுமையில் ரத்தம் இருள்வது தெரிகிறது.
நதி அல்ல, கடல் அல்ல, வாய்க்காலும் இரண்டு கரைகளைக் கொண்டிருக்கிறது. அதைத் தாண்டிய கரை மேட்டுப்பகுதியாக இருக்கிறது. அங்கேயிருந்து வந்துகொண்டிருக்கிறது அழைப்புக்குரல் மெல்லியதாக.
நேரத்தைச்
சுருட்டிக் கொண்டிருக்கிறது நேரம்
வயிற்றில் புரண்டு பதுங்குகிறது
பாம்பு இந்தக் கவிதையின் நடுவில் இப்படித்தான் சாயங்காலமாகச் சுருண்டிருக்கிறது. பறவைகளின் ஒலிகளைத் தன் மேல் பூசிக்கொண்டு தன் சருமத்தை மென்மையாக்குகிறது மாலை. எத்தனையோ மதிப்புகொண்ட பொழுதையும், நிறைகொண்ட உறவுகளையும், ஆலிங்கனத்தில் பற்றிய இதழ்களையும் எங்கோ ஒரு காட்டில் நிறுத்தி விடைபெறத்தானே வேண்டியிருக்கிறது.
மிகவும் மிருதுவாகவும் நிசப்தமாகவும் இருக்கிறது இந்தக் கவிதையின் முதல்பகுதி. இரண்டாவது பகுதியோ ‘போய் வருகிறேன்’ என்று உரத்துச் சத்தமிடுகிறது.
ரத்தம் இருண்டபிறகு இறுதியாகச் செய்யும் ஆர்ப்பாட்டம் போலத் தொனிக்கிறது.
‘போய்வருகிறேன்’ என்று நிறைய முறை சாதாரணமாகப் பழக்கத்திலிருந்து நாம் உரைப்பதை மிகுந்த கனம் கொண்டதாக மாற்றிவிடுகிறார் அபி. முன்னிலையில் இல்லாத ஒன்றுக்கு இடப்படும் ஒரு உத்தரவைப் போல, ஒரு அறிக்கையைப் போல உள்ளது.
போய்வருகிறேன்
இருண்ட ரத்தம்
உன்னைச் சுழற்றித் தந்துகொண்டிருக்கும்.
இமைகளுக்குள்
வானம் உன்னை வருடக் கொடுக்கும்
மாறிமாறி வருதல் ஒழிந்து
முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை
இப்படியே நடக்கட்டும்
போய்வருகிறேன்.
சுருண்ட மாலை சீறுகிறதா? மாலை தீண்டிய கவிதைசொல்லி சீறுகிறானா?
ஆமாம், அப்படியே நடக்கட்டும்; ஆமாம், அப்படியே நடந்துவிடட்டும் என்று அபியை எனக்கு வழிமொழியத் தோன்றுகிறது.
போய் வருதலில் கடிகாரத்தின் ஊசலைப் போல படிப்படியாகத் இயக்கத்தின் தேய்தல் இருக்கிறதுதானே; முற்றிலும் இழந்துபோகும் வரை ஊசல் மெதுவாகி ஆடிக்கொண்டுதானே இருக்கிறது.
இப்படியே நடக்கட்டும் என்று உத்தரவு இடுகிறார் அபி. ஆகட்டும் அபி.
000
அபியின் இந்தக் கவிதையில் கவிதைசொல்லி பேசும் முன்னிலை யார்?
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பதில்லையே என்று சொல்லும்போது அதைக் கேட்கும் முன்னிலை யார்? ‘புற்றில் வாழ் அரவும் அஞ்சேன், பொய்யர் தம் மெய்யும் அஞ்சேன்’ என்று சொல்லும்போது மாணிக்கவாசகருக்கு முன்னிலை யார். ‘ஓய்ந்தேன் என மகிழாதே/ உறக்கமல்ல தியானம்/ பின்வாங்கல் அல்ல பதுங்கல்’ என்று பசுவய்யா எழுதும் கவிதையில் கவிதைசொல்லிக்கு முன்னிலை யார்.
‘பிணி எலாம் வரினும், அஞ்சேன்; பிறப்பினோடு இறப்பும் அஞ்சேன்;’ என்று கண்ணுக்குப் புலப்படாத ஒரு முன்னிலையை நோக்கி உரக்கச் சொல்லும் அந்தக் கவிதைசொல்லி, நம் தமிழ்க் கவிதையில் வந்து வந்து போகும் அர்ஜூனனைப் போல வந்து வந்து போய்க் கொண்டிருக்கிறான்.
உண்மையிலேயே அந்தக் கவிதைசொல்லி துணிச்சலைத்தான் வெளியிடுகிறானா? அல்லது என்னைப் போலவே நடுங்கிக் கொண்டிருக்கிறானா?
மாலை - போய்வருகிறேன்
ரத்தம் இருள்வது தெரிகிறது
கைகால் வீச்சு
இயக்கம் காட்டாத இயக்கத்தினுள் கரைந்து
நிற்பது ஆகவே இருக்கிறது, நடப்பது
வாய்க்கால் தாண்டி
மேட்டுப் பகுதியிலிருந்து
மெல்லிய அழைப்புக்குரல்,
சற்றே இடைநேரம் விட்டு விட்டு.
அந்தப் பகுதிக்குள் புழங்கும் குரல்
நேரத்தை
சுருட்டிக் கொண்டிருக்கிறது நேரம்
வயிற்றில் புரண்டு பதுங்குகிறது
கவியும் இமைகளுடன்
கூடவே வானம்
பறவை ஒலிகளைப் பூசி
சருமம் மெத்திடுகிறது மாலை
என் மாலையைக் காட்டில் நிறுத்தி
விடைபெற்றுக்கொள்ள வேண்டும்
வீட்டுக்கு அழைத்துப்போக முடியாது
000
போய்வருகிறேன்
இருண்ட ரத்தம்
உன்னைச் சுழற்றித் தந்துகொண்டிருக்கும்.
இமைகளுக்குள்
வானம் உன்னை வருடக் கொடுக்கும்
மாறிமாறி வருதல் ஒழிந்து
முற்றிலும் நாம் இழந்துகொள்ளும் வரை
இப்படியே நடக்கட்டும்
போய்வருகிறேன்.
Comments