பூங்காவில் விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தைகளை
ப்ரவுனி
கம்பிச் சுவருக்கப்பால்
வேடிக்கை பார்க்கிறது
ப்ரவுனியை பூங்காவுக்குள்
விளையாட அழைக்கிறார்கள் குழந்தைகள்
பூங்காவின் கண்காணிப்பாளர்
ப்ரவுனியை அனுமதிக்க முடியாதென்று மறுக்கிறார்
பூங்காவின் கதவருகே இருதரப்பும் சந்திக்க
தற்காலிக ஏற்பாடொன்று நடக்கிறது
குழந்தைகள் எல்லாரையும்
தன்னைத் தொட்டுப் பார்க்க
அனுமதிக்கிறது ப்ரவுனி
பயப்படுவது போலத் தயங்கித் தயங்கி
பயப்படுவதை விரும்பி விரும்பி
தொட்டுப் பார்த்துவிட்டு
மீண்டும் தங்கள் சறுக்கு விளையாட்டுக்குத் திரும்புகிறார்கள்
குழந்தைகள்
கம்பிகளினூடாக தனது ஈரமூக்கை நுழைத்து
விளையாடப் போன குழந்தைகளை மறுபடியும்
ஏக்கமாய்
வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறது
ப்ரவுனி
குழந்தைகளும் ப்ரவுனியும் ஒன்றல்ல என்றெனக்குத் தெரிகிறது
குழந்தைகளும் ப்ரவுனியும் வேறுமல்ல என்றும் தெரிகிறது
குழந்தைகளும் ப்ரவுனியும்
எங்கோ ஒரு இடத்தில் சந்தித்து நேசிக்கிறார்கள்
எங்கோ ஒரு புள்ளியில் விலகியும் சென்று விடுகிறார்கள்
ஆனால்
ப்ரவுனியும்
குழந்தைகளும்
என்னைவிட
உங்களைவிட
பரஸ்பரம்
தம்மை
ஆழமாக
பார்த்துக் கொள்கிறார்கள்
எங்கோ.
Comments