கேலிச்சித்திரம் : சதீஸ் ஆச்சார்யா |
முகேஷ் அம்பானியின் செல்ல மகன் ஆனந்த் அம்பானி, என்னைப் போல கவிஞன் அல்ல. அதனால் அப்பாவிடம் சொல்லி தனது பிரமாண்டமான கனவுத்திட்டமாக, பூர்விக மாநிலமான குஜராத்திலேயே பிரமாண்டமான விலங்குக் காட்சி சாலை ஒன்றை உருவாக்கப் போகிறார். பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனவைகள், நிலத்திலும் நீரிலும் வசிப்பவை என்று ஆயிரக்கணக்கான வகைமைகளில் உலகமெங்குமுள்ள விலங்குகளின் பண்ணையாக இது ஆகப்போகிறது.
மெக்சிகோவிலிருந்து புலிகள் வர உள்ளதாம். ஏற்கெனவே அசாமிலிருந்து இரண்டு கருஞ்சிறுத்தைகளை பரிமாற்றிக் கொண்டு பதிலாக இஸ்ரேலிலிருந்து நான்கு வரிக்குதிரைகள் கொடுக்கப்பட்டு விட்டன. அரசு விலங்குக் காட்சி சாலைகளுக்குள் தான் விலங்குகள் இப்படி பரிமாற்றம் செய்யப்படவேண்டுமென்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரிலையன்ஸ் நிறுவனத்தைப் பொறுத்தவரை இன்று இந்தியாவே அவர்களது பண்ணையம்தானே.
என் கவிதையில் இதுவரை வராத அத்தனை விலங்குகளையும் ஆனந்த் அம்பானி தனது ஜூவுக்குக் கொண்டுவரப் போவதை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. லைப் ஆப் பை திரைப்படம் ஞாபகத்துக்கு வருகிறது. சிறுவன் பை-யின் தந்தையார் பாண்டிச்சேரியில் அம்பானி அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரு சிறிய விலங்குக் காட்சி சாலையை நிர்வகிக்கும் கதை அது.
சான் பெட்ரோ கார்சா கார்சியா விலங்குக் காட்சி சாலையிலிருந்து 17 வகைமைகளைச் சேர்ந்த 286 விலங்குகள் ஜாம்நகர் ஜூவுக்கு விமானமேறியுள்ளதாம். 50 கலப்பின வங்காளப் புலிகளும் கலப்பின சிங்கங்களும் அமேரிக்க பிளமிங்கோ பறவைகளும் 12 ஆப்பிரிக்க சிறுத்தைகளும் பத்து ஜாக்குவார்களும் மலைச்சிங்கங்களும் முள்ளம்பன்றிகளும் குறுவால் பூனைகளும் பிரமாண்ட சைசில் உள்ள எறும்புத்தின்னிகளும் குஜராத்தின் புதிய விலங்குக் காட்சி சாலையை அலங்கரிக்கப் போகின்றன. சென்னை முதலைப் பண்ணையில் காணக்கூடிய கொமோடா டிராகனும் வரப்போகிறதாம்.
எண்ணெயில் தொடங்கி தகவல் தொழில்நுட்பம் வரை இந்தியாவின் வர்த்தக வரைபடத்தில் தடம்பதித்து இந்தியப் பிரதமரையே தனது விளம்பரத் தூதுவராக மாற்றிய நிறுவனத்துக்கு விலங்குக்காட்சி சாலை நடத்துவதில் அனுபவம் உண்டா என்று யாரும் கேட்க முடியுமா? விலங்குகளுடன் அதிகம் பரிச்சயம் உள்ளதற்காக ஜெமினி சர்க்கஸுக்கோ, தேவர் பிலிம்ஸ் குடும்பத்துக்கோ அனுமதி கொடுக்க முடியுமா என்ன? அது அதற்கு வேறு தகுதிகள் வேண்டாமா?
இடநெருக்கடி, அசுத்தமான கூண்டுகள், மருத்துவர்கள், மருந்துகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் ஏற்கெனவே இந்திய அரசு நிர்வகிக்கும் புகழ்பெற்ற மிருகக்காட்சி சாலைகளின் விலங்குகள் அவதிப்பட்டு அதிகமாக மரணங்களைச் சந்திக்கும் நிலையில் ஆனந்த் அம்பானி போன்ற பணக்காரத் தனியார் இளவரசர்கள் விலங்குக் காட்சி சாலை ஒன்றை நிர்வகிக்கக்கூடாது என்று நாம் சொல்லத்தான் முடியுமா? நல்லவேளை இங்கே பிராணிகளை கரோனா பெருந்தொற்று தாக்கவில்லை.
ஆயுதங்கள் விற்பனையிலும் போர்விமானங்களைத் தயாரிப்பதிலும் அனுபவம் இருந்ததா என்ன ரிலையன்சுக்கு?
இமயமலையின் வரையாடு, கேளையாடு, தேன் கரடி, இந்திய எறும்புத்தின்னி, காட்டுப்பூனை, அனகொண்டா மலைப்பாம்பு, ஆப்பிரிக்க சிங்கம், வரிக்கழுதைப் புலி என உலகில் உள்ள பெரும்பாலான மிருகங்கள் அம்பானியின் மெனுவில் இடம்பிடித்துள்ளன. பெங்குயின் பறவைகளுடன் துருவப் பிரதேசங்களுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த, இந்தப் பெருந்தொற்று காலத்தைக் காரணமாகக் காட்டி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் போக மறுக்கிறார். பெங்குயின்களிடம் பேச மறுத்தால், யோகி ஆதித்யநாத்தின் உத்திரப் பிரதேசத்தில், கன்வர் யாத்திரையைத் துவங்கிவைக்க அனுப்பிவிடுவேன் என்று மிரட்டல் விடப்பட்டுள்ளதாம்.
மயில்களை மட்டும் தன் வீட்டிலிருந்தே திறப்புவிழாவுக்கு முந்தின நாள் கொண்டுவந்துவிடுவதாக மோடி குட்டி இளவரசனிடம் பிரத்யேக வாக்குறுதி அளித்துவிட்டிருக்கிறார்.
ரிலையன்ஸ் ஜூவைத் திறக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் என்ன மாதிரியான வண்ணங்களில் உடைகளையும் தலைப்பாகையையும் அணிவார்? மாணவப் பருவத்திலேயே மயில் இறகுகளைப் பாடப்புத்தகத்தில் சேர்த்துவைத்து மயில்களை வளர்த்த கதையை தனது இதயத்திலிருந்து எப்படிப் புனைந்து தலையைச் சாய்த்துச் சாய்த்துச் சொல்வார்?
ஆனந்த் அம்பானியின் பட்டியலில் பாண்டா கரடிகள் இல்லை. மிக அருகில் இருக்கும் பூட்டானில் குழந்தைகளைக் கவரும் அந்த வசீகர உயிர்கள் உபரியாக இருக்கிறதென்று கேள்விப்படுகிறேன் ஆனந்த்!
Comments