Skip to main content

மறதி என்னும் உயிர் - வலி

 


சமீபத்தில் யுவன் சந்திரசேகரின் கதைகளைத் தொடர்ந்து படிக்கும்போது ஆச்சரியப்பட்ட அம்சம், அந்தக் கதைகளின் ஒவ்வொரு பக்கமும் அடுக்கடுக்காகக் கொண்டிருக்கும் முடிவேயில்லாத தகவல்கள், நினைவுகள். 

பிரிவு, நஷ்டம், துரோகம் ஆகியவற்றுக்கு இணையான, ஆனால் தற்காலிகமான வலியாய் மறதி இருப்பதை இந்த வயதில் உணர்கிறேன். ஏனெனில் நாம் எல்லோரும் பாதியளவு நினைவின் வாழ்க்கையை வாழ்பவர்களாக உள்ளோம். 

ஒரு மேகம் போலத் தோன்றி மறைவது, நிறையற்றது நினைவு எனத் தெரிந்திருந்தாலும் ஒரு நினைவென்பது- அத்தியாவசியமானது, மகிழ்ச்சியளிப்பது, உறுத்துவது, ஆறுதலானது, குரூரமாக எரியச் செய்வது, அவமானத்துக்குத் தள்ளுவது- அது எப்படியான குணத்துடன் இருந்தாலும் மனத்தின் நாவுக்கு அசைபோடுவதற்கு, உண்ட புல்லாகவும், உயிர்ப்பாகவும் திகழ்வதை உணர்கிறேன். 

ஒரு நினைவின் துணுக்கு சல்லிசாய், அனாவசியமானதாய் இருந்தாலும் அது மறதிக்குள் விழுந்துவிட்டால், அது மாபெரும் அத்தியாவசியம் என்ற  தோற்றத்தை மனம் ஏற்படுத்தி, மறதியுடன் போரிடத் தொடங்குகிறது. பல்லில் சிக்கிய உணவுத்துணுக்கைப் போல அந்த வேளைக்கு, அதுதான் இந்த உலகிலேயே அகற்றப்பட வேண்டிய பிரச்சினையாக, அந்த நினைவு தொலைந்த இடத்தில் ஒரு பள்ளமும் வலியும் ஏற்பட்டு விடுகிறது. தொலைந்த நினைவின் ஒரு தடயம் கூட இல்லை. ஆனால், அது காலிசெய்த வெறுமை இருக்கிறது.

வெளியே இருக்கும் அத்தனை வேலைகளையும் எதிரில் இருக்கும் நபரையும் விட்டுவிட்டு மறதியின் ஆழ்சேற்றுக்குள் தொலைத்ததைப் பிடிக்கக் குதித்துவிடுகிறேன். ஒரு மறதி வெளியில் என் முகத்தை வெளிறச் செய்துவிடுகிறது. அகத்தில் சில விளக்குகளைக் கல்லெறிந்து உடைத்து அமர்த்தி விடுகிறது. பிரிவைவிட இழப்பைவிட நஷ்டத்தை விட துரோகத்தை விட அதனால்தான் மறதி ஆழ்ந்த வலியென்று நான் சொல்கிறேன். 

ஒரு மாபெரும் விருந்து மேஜையென என் முன்னர் வீற்றிருக்கும் உலகம் எனக்குத் தூசியும் துச்சமும் ஆகிவிடுகிறது. அருகில் அமர்ந்திருக்கும் தொலைபேசியின் எதிர்முனையில் பேசிக்கொண்டிருப்பவர்களுடன் நான் கட்டிய அப்போதைய பாலம் நொறுங்கிவிடுகிறது. திரும்ப எல்லா பள்ளங்களையும் பழுதுபார்த்து மீள்வது மிகச் சிரமமானதாகவும் அன்றாடமாகவும் ஆகியிருக்கிறது.   

பிரிவை, இழப்பை, நஷ்டத்தை, துரோகத்தை, நியதியென்றும் அதுவும் இந்த உலகத்து இயற்கையின் அங்கமென்றும், ஏற்கெனவே படிப்படியாக ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கும் இந்த வயதில், மறதியை ஏற்கவும் மன்னித்து அதற்கு விடைகொடுத்து அனுப்பவும் வலியோடு பழகத் தொடங்கியிருக்கிறேன்.

விரும்பிய எதையும் செய்ய முடியாது; விரும்பாததைச் சாப்பிட வேண்டும்; விரும்பாததை எல்லாம் செய்யவேண்டும்; அதுதான் நமக்கு வயதாகி வருகிறதென்று உணர்கிறோம் என்று தேவதச்சன் சொல்வார். இந்த மறதியையும் மருந்துக் குளிகைகளைப் போல உட்கொள்ள வேண்டிய பருவம் தொடங்கிவிட்டது.

நினைவு அல்ல மறதிதான் நம்மை மனிதர்களாக்குவதின் சாராம்சம் என்கிறார் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் . 

மறதி ஒரு விவகாரம் என்றால், நினைவு தரும் உற்பாதமும் அத்தனை குறைந்ததல்ல என்பதையும் தூக்கமற்றவனாக என்னைப் படுத்திக் கொண்டிருந்த சில வருடங்கள் ஞாபகப்படுத்துகின்றன . போர்ஹெஸ் தனது தூக்கமின்மை நோயை எதிர்கொள்ளும் விதமாக எழுதிய கதை Funes the memorius  சிறுகதை பற்றி எழுதிய குறிப்பில் மறதி எவ்வளவு கருணைமிக்கது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறார்.

“நான் உறக்கமின்மை வியாதியால் அவதிப்பட்டபோது என்னையும், எனது உடலையும், நான் படுத்திருக்கும் நிலையையும், கட்டிலையும், அறைகலனையும், தங்கும் விடுதியில் உள்ள மூன்று தோட்டங்களையும், ஈயுகளிப்டஸ் மரத்தையும், அலமாரியில் உள்ள புத்தகங்களையும், அந்தக் கிராமத்தின் அனைத்துத் தெருக்களையும், ரயில் நிலையத்தையும், பண்ணை வீடுகளையும் மறக்க முயற்சித்தேன். என்னால் அது எதையும் மறக்க இயலாததால், நான் பிரக்ஞையுடனேயே உறக்கத்தில் வீழ முடியாதிருந்தேன். அப்போது எனக்குள் சொல்லிக் கொண்டேன். கண்டது அனைத்தையும் மறக்க முடியாத ஒருவன் இருக்கிறான் என்றால் எப்படி அவனுக்கு இருக்கும். ஜேம்ஸ் ஜாய்ஸுக்கு இப்படித்தான் நடந்தது. ஆயிரம் சம்பவங்கள் நடக்கும் ஒரு நாள் இப்படித்தான் யுலிசஸ் படைப்பில் இடம்பிடிக்கிறது. அப்படியான சம்பவங்களை மறக்க முடியாது அதனால் முடிவில் செத்து அவனது முடிவற்ற நினைவுகளிலிருந்து துடைத்தழிக்கப்படும் ஒருவனைக் கற்பனை செய்தேன்.” என்கிறார். 

மறதி என்ற ஒன்று இல்லாவிட்டால் மனிதனால் ஒரு விரலை உயர்த்துவது கூட சாத்தியமில்லாமல் போய்விடும் என்கிறார் நீட்சே. நம்மைச் சுற்றி உலகம் தோன்றிக் கொண்டே இருக்கும் ஒழுக்கில் தொலைந்துபோய்விடுவோம் என்று எச்சிரிக்கிறார். 

“எல்லா செயல்களுக்கும் மறதி அவசியமானது; அனைத்து உயிர் வஸ்துக்களுக்கும் ஒளியளவுக்கு இருட்டு தேவை என்பதைப் போல"

ஆமாம். மறதியை மன்னித்து, ஏற்றுக்கொண்டுதான் நான் ஆகவேண்டும். 

Comments