புதுக்கவிதையின் முதல் தலைமுறை முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர் சுந்தர ராமசாமி. அவரது இரண்டு கவிதைகளைப் பற்றி நண்பர் காந்தியுடன் பேசிக்கொண்டிருந்தேன். இல்லாத போது வரும் நண்பன், நம்பிக்கை என்ற தலைப்புகளில் எழுதப்பட்ட இரண்டு கவிதைகள். இந்த இரண்டு கவிதைகளையுமே ஒரு கவிஞன் இன்று எழுதமுடியாது...ஏனெனில், செல்பேசி போன்ற செய்தி சொல்லும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. நான் இல்லாதபோது ஒரு நண்பன் வரவே முடியாது...அத்துடன் நம்பிக்கை கவிதையில் சுந்தர ராமசாமி
தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன்.
வேறு யாரோ.
அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான்.
என்று எழுதியிருக்கிறார். இன்றைக்கும் மிக ஆழமான அனுபவத்தைத் தரக்கூடிய கவிதை இது. மறைந்தவன், நண்பன் என்ற குறிப்புகளின் மூலம் நான், சுந்தர ராமசாமியின் அகாலத்தில் மறைந்த நண்பர் கிருஷ்ணன் நம்பி குறித்த கவிதை என்று புரிந்துகொள்கிறேன்.
ஒருவரை உற்றுப்பார்க்கும்போதுதான், அவன்/அவள் நமக்கு பரிச்சயமானவரா, அன்னியரா என்ற குறிப்பை அடைகிறோம்.
இக்காலத்தில் நாம் யாரையாவது உற்றுப்பார்க்கிறோமா? உற்றுப்பார்ப்பது கிட்டத்தட்ட குற்றச்செயல்களின் வரிசையில் போய்விட்டது. நம்மை வசீகரிக்கும் குழந்தைகளைக்கூட நாம் தொடுவதற்கு அச்சப்பட வேண்டியிருக்கிறது...தலையைத் தொடுகிறேன் இன்னமும் பிடித்த குழந்தைகளைப் பார்க்கும்போது...
நான் எனது கல்லூரிக் காலத்தில், நண்பன் தளவாய் சுந்தரத்தைத் தேடி திருநெல்வேலியிலிருந்து, ஆரல்வாய்மொழி போய், அங்கேயிருந்து அவனது கிராமத்துக்குப் பக்கத்தில் உள்ள மதகநேரியில் இறங்கி, ஐந்து கிலோமீட்டர் நடந்து அவன் வீட்டுக்குப் போனபின்னர், அவன் நாகர்கோவிலுக்குச் சென்றிருக்கும் தகவலை அறிந்து, என்ன செய்வதென்று தெரியாமல், தளவாயின் அம்மா கொடுத்த மதிய உணவை உண்டுவிட்டு மீண்டும் திருநெல்வேலி திரும்பியிருக்கிறேன். அந்த அனுபவம் இருப்பவர்களுக்கு சுந்தர ராமசாமியின் இல்லாதபோது வரும் நண்பன் கவிதை உறுதியாகப் புரியும்.
காந்தி சொன்னார். இல்லாத போது வரும் நண்பன் கவிதையில் உள்ள குறிப்பைப் பார்த்தால் அது இயக்குனர் ஜான் ஆபிரகாம் போலத் தெரிகிறது என்றார்...நான் கவிஞர் விக்கிரமாதித்யனை அதுவரை கற்பனை செய்திருந்தேன். ஜானும் சு.ராவுக்கு மிகவும் நண்பர் என்ற வகையில் காந்தி சொன்னதுதான் சரியானதாக இருத்தல் வேண்டும்...
நானும் பொறுமையுடன் காத்திருக்கத் தயார்...நண்பனுக்காக...
இல்லாத போது வரும் நண்பன்
----------------------------------------
அந்த நண்பன்
இன்றும் அன்றுபோல்
துரதிருஷ்டவசமாக
நான் இல்லாதபோது
வந்திருக்கிறான்
அன்று
என் தலை நரைக்காத அந்தக் காலத்தில்
அவன் வந்தபோதும்
தன்னை யாரென்று சொல்லாமல் மறைந்தான் .
தாடி மீசை
வேர்வையின் நாற்றம்
பின்னோக்கி இழுத்துக் கொண்டிருக்கும்
அழுக்கு ஜிப்பாப் பைகளில்
இரு கரங்களின் மறைவு
புழுதி படிந்த பாதங்கள்
சிகிரெட் உதட்டில் தொங்கப் பேச்சு என்று
இன்றும்
அதையே ஒப்பித்தாள் மனைவி .
மீண்டும் வந்தாலும் வருவேன் என்றானாம் .
காத்திருக்கப் பொறுமை இருந்ததில்லையே என்றானாம் .
பேரென்ன முக்கியம் என்றானாம் .
எனக்கோ பெயர்கள் முக்கியம்
முகங்கள் முக்கியம்
பொறுமையுடன் காத்திருக்கவும் நான் தயார்
என்றேனும் ஒருநாள் அவன் வரட்டும் .
அன்றேனும் நான் வீட்டில் இருக்கவேண்டும் .
என் நரை அதன் திரையைப் போடாமலிருக்கவேண்டும்
அன்று வரையிலேனும் .
[ கொல்லிப்பாவை -ஜூலை -1985 ]
.jpg)
Comments