இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவின் செவ்வியல் நடன வடிவமாக அறியப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தோடு சேர்ந்து எழுந்த கலைவடிவமான பரத நாட்டியத்துக்கும், ஆரம்பகால தமிழ் சினிமாவுக்கும் இடையிலான உறவு மற்றும் கொடுக்கல் வாங்கல்களை நுட்பமாக ஆராயும் ஆங்கில நூல்தான் செல்லுலாய்ட் க்ளாசிசம் (CELLULOID CLASSICISM).
தமிழ்நாட்டில் மரபாய் இருந்த கலைவடிவங்களான கூத்து, இசை நாடகம், ராஜா ரவிவர்மா வரைந்த ஓவியங்கள், பார்சி நாடக வடிவம், தேவதாசிகளின் சதிராட்டம் ஆகியவற்றிலிருந்து உரம்பெற்று, நவீன கலைவடிவமாக எழுந்த சினிமா வடிவத்தோடும் உரையாடல் நடத்தி படித்த உயர்மக்களின் கலை அடையாளமாக எழுந்த பரத நாட்டியம், தன் வேர்களையும், தன் மூலகங்களையும் வரலாற்று நினைவிலிருந்தே இல்லாமலாக்கிய கதையையும் பேசும் நூல் என்பதால் ஹரிகிருஷ்ணன் எழுதிய இந்த நூல் முக்கியத்துவம் பெறுகிறது.
காலம்காலமாக தேவதாசிகள் என்ற சமூகமாக அறியப்பட்டு, புரவலர்களின் வீடுகள், ஆலயங்கள், சபைகளில் பாடி, ஆடி வீணை தனம்மாள், பாலசரஸ்வதி போன்ற மேதைக் கலைஞர்களை சமீபத்திய நினைவுகளின் அடையாளமாகக்கொண்ட ஒரு அறிவுமரபை, சத்தமில்லாமல் அழித்து பரதநாட்டியம் என்ற பெயரில் ‘தூய்மைப்படுத்தி’, பார்ப்பனர்களும் மேல்சாதியினரும் கையகப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் கதையும் கூட. அதனால் இந்நூல் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்தியாவின் நவீன பண்பாட்டு வரலாற்றிலும் வெகுமக்கள் வாழ்க்கை மற்றும் மதிப்பீடுகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை ஆஷிஸ் நந்தி, டெல்யூஸ் போன்ற ஆய்வாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்ததன் அடிப்படையில்தான் தமிழ் வெகுஜன சினிமாவை முக்கியமான ஆய்வுப்பொருளாக நாம் பேசிவருகிறோம். அந்த அடிப்படையில், பழமைக்கும் புதுமைக்கும் நடந்த போராட்டக் களமாக ஆரம்பகால தமிழ் சினிமா எப்படி இருந்தது? பாரம்பரியத்துக்கும் நவீனத்துக்கும் உலகளாவிய தன்மைக்கும் பிராந்தியத் தன்மைக்கும் என்னவிதமான உரையாடல்கள் நடந்தன? புராணிகமும் கற்பனையும் எப்படி கொண்டு கொடுத்துக் கொண்டு தமிழ் சினிமா தன்னை வடிவமைத்துக் கொண்டது என்பதையும் ஆராய்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
இருபதாம் நூற்றாண்டின் கலைவடிவமாக பரதநாட்டியம் உருவான சமூக வரலாற்றில், நவீன தமிழ் நாடகம் அளித்த பங்களிப்பு மீது இந்நூல் கவனம் குவிக்கிறது. இசை நாடகம், ஸ்பெசல் நாடகம் என்ற பெயரில் உருவான நாடகங்களில் பயிற்றுவிக்கப்பட்ட நடிகர்களும் நடன வடிவமைப்பாளர்களும் இசைக்கலைஞர்களும்தான், ஆரம்பகால தமிழ் சினிமாவுக்கும் பங்களித்தவர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் தேவதாசி சமூகப்பின்னணியிலிருந்து வந்தவர்கள். பாம்பேயை மையமாகக் கொண்ட பார்சி நாடகங்களின் வடிவத்தை எடுத்துக்கொண்டு, ஆங்கில நாடகங்களின் தாக்கத்தையும் பெற்று 1870 ஆம் ஆண்டு முதல் 1930 வரை சங்கரதாஸ் சுவாமிகள் தொடங்கி பம்மல் சம்பந்த முதலியார் வரை எண்ணற்ற தமிழ் நாடகங்களை உருவாக்கினர்.
வரலாறு, புராணிக, சமூகக் கதைகளை உள்ளடக்கமாகக் கொண்ட நாடகங்கள் அவை. தேவதாசிக் கலைஞர்கள் மட்டுமின்றி வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த கலைஞர்களும் சேர்ந்து புழங்கும் மேடையாக தமிழ் நாடக மேடை இருந்துள்ளதையும் ஆசிரியர் தியோடர் பாஸ்கர், ராண்டார் கை, வீ. அரசு, மங்கை ஆகியோரின் ஆய்வுத் தரவுகளிலிருந்து நமக்கு எடுத்துத் தருகிறார்.
தமிழ் சினிமாவின் துவக்க கால வரலாற்றில் நட்சத்திர நாயகிகளாக இருந்தவர் எஸ். டி. வரலட்சுமி, கும்பகோணம் பானுமதி போன்றவர்கள் எப்படி குறைந்தபட்ச வாழ்க்கைத் தகவல்களின்றி மறக்கடிக்கப் பட்டுள்ளார்கள் என்பதையும் சொல்கிறார். இந்தியாவில் நாட்டியத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட முதல் சினிமாவான ஜலஜாவின் நாயகி கும்பகோணம் பானுமதிதான். ஆந்திராவைச் சேர்ந்த தேவதாசி சமூகத்தினரான கலவந்துலு சமூகத்தைச் சேரந்த நடிகையரின் பங்களிப்பையும் குறிப்பிட்டுள்ளார்.
பாட்டுப் புத்தகங்கள், பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதைப் புத்தகங்கள், குஜிலி புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து தமிழ் நாடகங்களும் சினிமாவும் பெற்ற தாக்கத்தை வரலாற்றாய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியை மேற்கோள் காட்டி, இந்த நூலில் படங்களோடும் தரப்பட்டுள்ளது குறிப்பிட வேண்டியது. பாட்டுப் புத்தகங்களாக முதலில் வெளியிடப்பட்ட பிரசுரங்கள் கதைச்சுருக்கங்களையும் வெளியிடுமளவுக்குப் பரிணமித்துள்ளன.
அச்சு, நாடகம், நடனம், சினிமா என பல்வேறு கலைகளின் பரிமாற்றம் அபாரமாக இந்தப் புத்தகத்தில் காட்சியாகிறது. ஆரம்பகால தமிழ் சினிமாக்கள் எதுவும் சரியாக ஆவணப்படுத்தப்பட்டு தற்போது பார்ப்பதற்கு இயலாத சூழ்நிலையில் சினிமா தகவல்களைச் சுமந்து வந்த பத்திரிகைகளும் பாட்டு, கதைச்சுருக்கப் புத்தகங்களுமே ஆரம்ப கால சினிமா பற்றிய தகவல்களைச் சொல்லும் பெரிய ஆவணமாக இருந்துள்ளது. இந்த நூலுக்கான பெரும் தரவுகளைத் தந்துள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தையும், தனிநபராக அவர் அந்த ஆவணங்களைச் சேகரித்ததின் மதிப்பையும் நாம் இங்கே நன்றியோடு நினைவில் கொள்ளவேண்டும்.
அடுத்துவருவது சதிர் பரதநாட்டியமாகத் தூய்மைப்படுத்தப்பட்ட கதை.
சுதந்திரப் போராட்டத்தோடு தமிழ்நாட்டிலும் எழுந்த தேசிய அலை, காங்கிரசின் எழுச்சியிலும் தென்னிந்தியாவின் கலை, பண்பாட்டு மாற்றங்களிலும் முக்கியமான பங்கை வகித்த தியாசபி சொசைட்டி அளித்த பங்களிப்பின் நீட்சியாக, தேவதாசிகளின் கலையாக இருந்த சதிராட்டம் எவ்வாறு தூய்மைப்படுத்தப்பட்டு, செயற்கையான புராதனம் ஒன்றைச் சுற்றிக் கட்டியெழுப்பப்பட்டு பரதநாட்டியம் ஆனது என்பதுதான் இந்த நூலில் ஆதாரமாக நாம் இப்போது பரிசீலிக்க வேண்டிய இடம்.
தமிழ் நடனம் மற்றும் இசை மரபை காலம் காலமாகப் பாதுகாத்து வந்தவர்களாகவும், தாய்வழிச் சமூகத்தினராகவும் அறியப்பட்ட தேவதாசிகள், நவீனமாகி வந்த நம் சமூகத்தில் ஒழுக்கரீதியாக பாலியல் தொழிலாளர்களாக, ஒதுக்கப்பட வேண்டியவர்களாக பார்க்கப்பட்ட பார்வை அழுத்தம் பெற்ற போக்கையும் நூலாசிரியர் இந்த நூலில் சுட்டிக்காட்டுகிறார். விரலி விடு தூது போன்றவை தேவதாசிகளை பொது சமூகம் எப்படி விலக்கமாகப் பார்த்தது என்பதற்கான சான்றுகளும் உள்ளன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தமிழ் நாடகங்களிலும் தேவதசாதிப் பெண்ணிடம் குடும்பத்திலுள்ள கணவன் மையல் கொண்டு வெளியேறிப் போவதும் பொருளை எல்லாம் இழந்து பதிவிரதையான மனைவியிடம் சரணடைவது போன்ற கதைகளும் நாடகங்களாகத் தொடர்ந்து வந்திருக்கின்றன. டம்பாச்சாரி விலாசம் முதல் ரத்தக்கண்ணீர் வரை அதன் தடையங்களை நாடகங்களிலும் சினிமாக்களிலும் நாம் பார்க்க இயல்கிறது.
இந்தப் பின்னணியில்தான், சினிமா என்ற புதிய வடிவத்தையே காந்தியும் ஆரம்பகால இந்திய தேசிய இயக்கமும் தீண்டத்தகாததாகப் பார்த்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டும். கல்கி தேவதாசிகளை விலைமகள்கள் என்றே பேசி, பின்னர் பாலசரஸ்வதியின் நடனத்தைப் பார்த்து தனது அபிப்ராயத்தை மாற்றிக்கொண்டிருக்கிறார். நாடகங்களிலும் சினிமாக்களிலும் தேவதாசி பெண் கலைஞர்களின் முக்கியத்துவம் குறைந்து அவர்களது பங்களிப்பு கண்ணுக்குப் புலப்படாமல் ஆன அதேவேளையில், தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், நட்டுவனார்களாக நாடகத்திலும் நடன ஆசிரியர்களாக சினிமாவிலும் முக்கியப் பங்காற்றத் தொடங்கும் வரலாறும் தொடங்குகிறது. அரசியலிலும் பொதுவாழ்க்கையிலும் தேவதாசி ஆண்கள் தடம்பதிக்கத் தொடங்குகின்றனர். வழுவூர் ராமையா பிள்ளை இதற்கு சிறந்த உதாரணம். அவரது வாழ்க்கை இந்த நூலில் விரிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டி. ஆர். ராஜகுமாரி முதல் தமிழ் சினிமாவில் 1980 கள் வரை ஐட்டம் டான்சர்களாக அறியப்பட்ட ஜோதிலட்சுமி, ஜோதி மீனா சகோதரிகள் வரை தேவதாசிகளின் மரபை ஆசிரியர் விவரமாக இந்த நூலில் புகைப்படங்களுடன் விவரிக்கிறார்.
தேவதாசிகள் ஒழிப்பு இயக்கத்துக்கான ஆரம்ப விதைகள் தூவப்பட்ட காலத்தில்தான், தியாசபி சொசைட்டியால் ‘வேர்ல்ட் மதர்’ என்று பட்டம் அளிக்கப்பட்ட ருக்மிணி அருண்டேல் என்னும் குறுக்கீடு நிகழ்கிறது.
நீலகண்ட சாஸ்திரி, ஷேசம்மாள் என்ற ஸ்மார்த்த பிராமண தம்பதியினருக்கு மதுரையில் 1904 ஆம் ஆண்டு பிறந்த ருக்மிணி அருண்டேலின் தந்தை மெட்ராஸ் பொதுப்பணித் துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுக்குப் பிறகு சென்னை அடையாற்றில் ஒரு வீட்டை வாங்கி, ரஷ்ய ஆன்மிகவாதியான ப்ளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் நடத்திய தியாசபிக்கல் சொசைட்டில் உறுப்பினராகவும் ஆனவர். ரஷ்ய நடனவடிவமான பாலேயே கற்றிருந்த அருண்டேல், மெட்ராஸ் மியூசிக் அகாடமியில் நடந்த இரண்டு தேவதாசிக் கலைஞர்களின் நடனத்தைப் பார்க்கும் வாய்ப்பைப் பெறுகிறார்.
திருவளப்புத்தூர் ராஜலட்சுமி மற்றும் ஜீவரத்தினம் ஆகிய அந்தக் கலைஞர்களின் ஆசிரியர் பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. நடனம் கற்பதற்காக பந்தநல்லூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் ஒப்புதலைப் பெறுவதற்கே ஒரு ஆண்டு எடுத்த நிலையில், ஆறு மாதங்கள் நாட்டியம் கற்றார். வெறும் ஆறு மாதங்களிலேயே தியாசபிக்கல் சொசைட்டியின் வைரவிழா நிகழ்வில், போதிய பயிற்சியில்லை என்று குருவின் மறுப்புக்குப் பின்னரும், தனது அரங்கேற்றத்தை ருக்மிணி அருண்டேல் நிகழ்த்துகிறார். ருக்மிணி அருண்டேலின் அரங்கேற்றத்தில் மீனாட்சி சுந்தரம் தனது புறக்கணிப்பை மருமகனை மேற்பார்வைக்கு அனுப்பிப் பதிவும் செய்துள்ளார்.
அரங்கேற்ற நடனத்திலேயே தேவதாசிகள் நடனத்திலிருந்த கூறுகளில் பெரும்பாலானவற்றை, குறிப்பாக சிருங்காரப் பகுதிகளை, ஆபாசம் என்று கருதி அகற்றிவிடுகிறார். பழைய மெட்ராஸின் வரலாற்றில் பிராமணப் பெண் ஒருவர், உயர் மத்திய தர வர்க்க உயர்சாதிப் பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேற்றிய முதல் நடன நிகழ்ச்சியும் அதுதான். மேற்கத்திய ப்ரொசீனிய மேடையை உருவாக்கி, கோயில்கள் வரையப்பட்டுள்ள ஓவியப் படுதாக்களைப் பின்னணியாகப் பயன்படுத்தி நடுவில் நடராஜர், பக்கவாட்டில் நாட்டிய ஆசிரியர் என்ற புதிய வடிவத்தை உருவாக்கி கடவுள், குரு, சிஷ்யை என்ற புதிய வரிசையையும் ருக்மிணி புதிதாக உருவாக்குகிறார்.
இந்திய ஆன்மீக மரபில் வந்த ஒரு புராதன வடிவமென்ற புதிய பாவனையை தனது நடனத்துக்குக் கொடுத்து அதற்கு பரதநாட்டியம் என்று பெயரிட்டு அதை 1940க்குள்ளேயே உயர்தட்டினர் புழங்கும் கலையாகவும் வெற்றிகரமாக மாற்றிவிடுகிறார் ருக்மிணி அருண்டேல். பரதநாட்டியத்துக்கு ருக்மிணி அருண்டேல் உருவாக்கிய உடைகளும் தேவதாசிகள் நடனத்துக்கு அணிந்த உடைகள் அல்ல. இந்திய ஆலயச் சிற்பங்களில் பெண் கடவுளர்கள் அணிந்திருக்கும் உடைகள், ஆபரணங்களை பரதநாட்டிய உடையாக, அணிகலன்களாக மாற்றி வடிவமைத்தவர் ருக்மிணி அருண்டேல்தான்.
ருக்மிணி அருண்டேலின் சமகாலத்தவரும், வீணை தனம்மாள் உள்ளிட்ட ஏழு தலைமுறை மேதைகளில் வழிவந்தவருமான தேவதாசி நடனக் கலைஞர் டி. பாலசரஸ்வதி ருக்மிணி அருண்டேலின் சமகாலத்தவர் மற்றும் தோழி. ஆனால், இன்று பாலசரஸ்வதிக்கு இருக்கும் ஒரே ஆவணம், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது முன்னெடுத்து, தமிழ்நாடு அரசு நிதியில் சத்யஜித் ராயை வைத்து உருவாக்கிய ஒரே ஆவணப்படம்தான். ஆனால், ருக்மிணி அருண்டேலோ, தேசிய அடையாளம். கூகுள் அவர் நினைவைக் கொண்டாடும் அளவுக்கு.
வெறுமனே சில மாதங்களே நடனத்தைக் கற்ற ருக்மிணி அருண்டேலின் உயர்சாதி அடையாளம் சார்ந்த சமூக மூலதனம், அவர் சதிராட்டத்திலிருந்து வெட்டி உருவாக்கிய ஒட்டுச்செடியான பரத நாட்டியத்துக்கு தேசியரீதியான மேலாதிக்கத்தையும், அங்கீகாரத்தையும் வழங்கிவிட்டது. 1936 இல் தியாசபிக்கல் சொசைட்டியின் ஆதரவுடன் கலைகளுக்கான சர்வதேச கழகம் ஒன்றை உருவாக்கினார். அதுவே 1938 இல் சமஸ்கிருத பண்டிதர் பி. எஸ். சுப்ரமணிய சாஸ்திரியின் தூண்டுதலால் கலாக்ஷேத்ராவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இன்றும் இந்தியாவின் முக்கியமான பண்பாட்டு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
ருக்மிணி அருண்டேலுக்கு தேவதாசிகளின் நடனம், நாட்டியம் சார்ந்த அவரது ‘செவ்வியல்’ என்று நினைக்கும் அணுகுமுறைக்கு சங்கடத்தை அளித்துள்ளது. கற்பனையாக ருக்மிணி அருண்டேல் உருவாக்க நினைத்த ஒரு செவ்வியல் காலத்துக்கு, தேவதாசிகளின் அழகியல் கீழ்ப்பட்ட கலையாகத் தெரிந்துள்ளது. ருக்மிணி அருண்டேலின் மேல்தட்டு வர்க்க அழகியல், ரசனைக்கேற்ப அதை தூய்மைப்படுத்த வேண்டிய பணியை அவர் எடுத்துக்கொண்டார். இது ஒரு கலையை ஜனநாயகப்படுத்துவதல்ல. இந்திய பாரம்பரிய நடனத்தில் ஏற்கெனவே பயின்றவர்களை விலக்கும் பண்பாடு என்று விமர்சகர் அண்ணா மார்கம் கூறுகிறார்.
தேவதாசிகளின் சதிராட்டம், கூத்து, இசை நாடகம், சினிமா என பல்வேறு வடிவங்கள் பங்களித்த பரத நாட்டியம் பெற்ற தாக்கங்கள மறைத்து ஒரு தூய கலைவடிவமாக வரலாற்றிலும் நிலைநிறுத்தி அதை வெற்றிகரமாக ஆக்கிய அருண்டேலின் முயற்சி, தற்காலச் சூழலமைவில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியது.
இந்திய தேசிய இயக்கமும், காந்தியும் துவக்கத்தில் நிராகரித்த சினிமா என்ற கலைவடிவத்திலும் ருக்மிணி அருண்டேல் பணியாற்றிய செய்தியையும் அதற்கான ஆதாரங்களையும் அவரே அழித்த செய்திகளை இந்த நூல் நுண்மையாகப் பதிவுசெய்துள்ளது.
கலைகளுக்கான சர்வதேச அகாடமியை ருக்மிணி அருண்டேல் உருவாக்கிய அதே 1936 ஆம் ஆண்டில், ராஜா தேசிங்கு திரைப்படம் தயாரிக்கப்பட்டது. டி. கே. சுந்தரப்பா நாயகனாக நடித்த படம் இது. அந்தப் படத்தில் மூன்று பாடல்களுக்கு செவ்வியல் நாட்டியமாடியிருக்கிறார் என்று ருக்மிணி அருண்டேல் விளம்பரப்படுத்தப்பட்ட சுவரொட்டிகள் இந்தப் புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் படத்தில் நடித்த ருக்மிணி, பின்னர் 1950க்குப் பிறகு சினிமாவில் பரதநாட்டியம் ஆடுவது குறித்த வேறுபட்ட நிலைப்பாட்டைச் சொல்கிறார்.
“பரதநாட்டியத்தின் செவ்வியல் வழி மிகவும் கவனமாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஒரு திரைப்படத்தில் ஆடிவிட்டபின்னர் அந்த கலைஞர் மீண்டும் தனது செவ்வியல் வழிக்குச் செல்லவே இயலாது. திரிந்த பால் எப்படி மீண்டும் நல்ல பாலாக ஆகமுடியாதோ அதுபோல.” என்கிறார் ருக்மிணி.
ருக்மிணியின் நடனத் தயாரிப்புகளின் பெயர்களே அவர் எதை நோக்கி நகர்ந்தார் என்று புரிவதற்குப் போதுமானவை. சீதா சுயம்வரம், பாதுகா பட்டாபிஷேகம், குற்றாலக் குறவஞ்சி, ராமாயணக் கதை வரிசை நடன நிகழ்ச்சிகள் அவை. வயலின் போன்றவற்றை புதிதாக நாட்டிய நிகழ்வுக்குள் இணைத்துமிருக்கிறார்.
ராஜா தேசிங்கு சினிமாவுக்கு ருக்மிணி ஆடிய பாடல்களுக்கு பதம் சொல்லித்தர நியமிக்கப்பட்டவர் அப்போதைய மெட்ராஸின் புகழ்பெற்ற கலைஞர் மைலாப்பூர் கௌரி அம்மாள். இவர்தான் கலாக்ஷேத்ராவின் ஆரம்பகாலத்தில் நடன ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைலாப்பூர் கௌரி அம்மாள் சொல்லிய அபிநயங்களை முழுமையாக மாற்றி தன் பாணிக்கு ஏற்ப சீக்கிரத்திலேயே நிகழ்த்தத் தொடங்கிவிட்டார் ருக்மிணி. சிருங்கார ரசங்களை முழுமையாக தனது அபிநயங்களில் ராஜா தேசிங்கு படத்திலும் தனது நாட்டிய நிகழ்ச்சிகளிலும் தவிர்க்கவும் தொடங்கிவிட்டார்.
ராஜா தேசிங்கு திரைப்படத்தில் தேவதாசிகள் தங்கள் நிகழ்ச்சிகளில் நிகழ்த்தும் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வரம் ஆகியவை எதையும் ருக்மிணி அருண்டேல் தனது மூன்று பாடல்களிலும் பின்பற்றி ஆடவில்லை. பொதுவான இசைவடிவமான கிருதியுடனேயே அவர் நிறுத்திக்கொண்டார் என்கிறார் நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன்.
அத்துடன் ருக்மிணி அருண்டேல் தனது சினிமா பங்களிப்பையும், சினிமா நடனத்தை உருவாக்க உதவிய தேவதாசிக் கலைஞர்களின் பங்களிப்பையும் பிரக்ஞையுடனோ பிரக்ஞையின்றியோ அழிக்கவும் செய்திருக்கிறார் என்ற துயரமான உண்மையை இந்த நூல் சொல்கிறது.
“ருக்மிணி அருண்டேலும் அவர் கணவரும் சேர்ந்து ராஜா தேசிங்கு திரைப்படத்தின் தயாரிப்பாளரிடமிருந்து அப்படத்தின் பிரதிகள் அனைத்தையும் வாங்கி, அழித்துவிட்டதாகத் தெரியவருகிறது. அருண்டேல் வெகுஜன சினிமாவில் ருக்மிணி அருண்டேல் பங்குபெற்றார் என்பதை மறைத்து அழிக்கும் முயற்சி இது என்கிறார் நடன வரலாற்றாசிரியரான வி. ஏ. கே . ரங்காராவ்.
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பரதநாட்டியத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் இடைப்பட்ட சமூக, கலாசார, கலை பரிவர்த்தனை வரலாற்றைப் பேசும் இந்த நூல் 2019 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. தமிழ் சினிமாவில் பரதநாட்டியத்தை பிரபலமாக்கிய நடிகையரில் ஒருவரான பத்மினியின் ஊக்கத்தினால் இந்த நூல் சாத்தியமானதாக சொல்லும் நூலாசிரியர் ஹரிகிருஷ்ணன் முறையாக பரதநாட்டியம் பயின்றவர் என்று தெரிகிறது.
ஒரு கலை மரபை காலம்காலமாக வைத்திருந்த ஒரு சமூகத்தினரையே அகற்றி, அந்தக் கலை வடிவத்தையும் தமது விருப்பங்களுக்கேற்ப கையகப்படுத்தி, தூய்மைப்படுத்தும் பார்ப்பன சாதியின் மேலாதிக்கத்தின் கதையாகவும் இந்தப் பகுதியை நாம் வாசிக்கலாம்.
இ.கிருஷ்ண அய்யர், கே. சுப்ரமணியன், கல்கி என பிராமணர்கள் தமிழ் சினிமாவைக் கைப்பற்றும் நிலையில் தேவதாசிக் கலைஞர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் ஆவதின் வரலாறும் இந்நூலில் சொல்லப்படுகிறது. ஆனால், தமிழ் வெகுஜன சினிமாவின் ஆரம்பகால வரலாறு குறித்த முக்கியமான இந்நூலைப் பற்றி, ஆங்கிலப் பத்திரிகைகளில் ஒரு மதிப்புரை கூட எனக்குத் தெரிந்து கண்ணில் படவில்லை. அதுவே இந்த நூலின் முக்கியத்துவத்தைச் சொல்கிறது.
தேவதாசிக் கலைஞரான எம்.எஸ்.சுப்புலட்சுமி இன்று இந்தியாவின் அடையாளமாக ஏன் திகழ்கிறார்? அதே தேவதாசிக் கலைஞராக எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு சற்றே மூத்தவரான எஸ்.டி.சுப்புலட்சுமியின் குறைந்தபட்ச தகவல்கள் கூட நமக்கு ஏன் கிடைக்கவில்லை?
ஒரு இனத்தை அழிப்பதும், அந்த இனம் காலம் காலமாக சேர்த்துவைத்த அழகியல் மரபைச் சிதைப்பதும், அவர்களின் பிரதான கலை அடையாளத்திலிருந்து நீக்குவதும் வேறு வேறு அல்ல. அதைத்தான் சென்ற நூற்றாண்டில் பரதநாட்டியம் என்ற பெயரில் பிரபலப்படுத்தப்பட்ட நடனமும் அதை உருவாக்கிய ருக்மணி அருண்டேலும் செய்திருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சாதிய, மதவாத சக்திகளும் சனாதனத்தின் மேலாதிக்கமும் திரும்ப நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சூழலில் படித்து விவாதிக்கப்பட வேண்டிய நூல் இது.
நூல்: CELLULOID CLASSICISM
ஆசிரியர் : Hari Krishnan
WESLAYEN UNIVERSITY PRESS
Middletown, Connecticut.
(நன்றி : தி ஹார்ட்லைன் இணைய இதழ்)
.jpg)
Comments