Skip to main content

குழந்தை, மேதை, கோமாளி

நண்பர்களான வரதன், கவிஞர் இசை, நாவலாசிரியர் சாம்ராஜ் எல்லோரும் ஏற்கெனவே எனக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மிஷ்கினுக்கு அறிமுகமாகிவிட்டனர். நான் கி.அ.சச்சிதானந்தம் மற்றும் கவிஞர் ஆசையை கௌரவிக்கும் எத்திராஜ் கல்லூரி நிகழ்ச்சியிலும், கவிஞர் லீனா மணிமேகலை புத்தக வெளியீட்டு விழாவிலும் பக்கத்து இருக்கைக்காரராக, அடுத்து இருப்பவர் மீது எந்த கவனமும் இல்லாத ‘சினிமா’ நபராகவே மிஸ்கினையும் உணர்ந்ததால், நண்பர்கள் அவரோடு நெருக்கமானாலும், கூடுமானவரை மிஸ்கினுடனான சந்திப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தேன்.

2021 ஆம் ஆண்டின் குளிர்கால மாதமொன்றில், நவம்பராகவோ டிசம்பராகவோ இருக்கலாம். நண்பர் வரதன் என்னுடன் எனது வீட்டில் நள்ளிரவில் தங்கியிருந்தபோது, மிஷ்கினிடமிருந்து அவருக்கு போன் வந்தது. ஷங்கர் வீட்டில் தங்கியிருப்பதாக அவர் சொல்கிறார் போனில். உடனடியாக மிஷ்கின் என்னிடம் போனில் பேசுகிறார். உடனே வாருங்கள் வீட்டுக்கு என்கிறார்.

இப்படித்தான் நள்ளிரவில் மிஸ்கினுடனான உறவு தொடங்கியது.

எஸ்.வி.ராஜதுரை, நாசர் எல்லோரும் அவருக்குத் தந்தையார் ஸ்தானத்தில் இருப்பவர்கள். அவர் வீட்டின் சுவரில் அவர்களது புகைப்படங்களை அவரை ஆகர்ஷித்த ஆளுமைகளின் புகைப்படச் சட்டகங்களுடன் வைத்திருந்தார்.

ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர் அறிமுகத்தைப் பற்றிச் சொன்னதுபோல, புதுமணத் தம்பதிகள் போல, ஆரம்ப நாட்கள் எங்களுக்குள் அத்தனை ஈர்ப்புடன் விளங்கியவை.

லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி.மோகன், விக்ரமாதித்யன், தேவதச்சன், ந. ஜயபாஸ்கரன், ஆனந்த் என என்னைப் பாதித்த எழுத்தாளுமைகளுக்கு ஈடாக மிஷ்கின் என்னுடன் பழகிய மூன்றாண்டுகளில் என் உடல்மொழி உட்பட பலவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு ஆளுமை.

ரஷ்ய இலக்கியங்களை சிறுவயதிலிருந்து ஈடுபாட்டுடன் படித்த அவர், தமிழ் சிறுபத்திரிகை வட்டத்தில்கூட அறிமுகமாகாத லேவ் டால்ஸ்டாயின் சிறுகதையான ‘அல்யோஷா தி பாட்’ சிறுகதையை அறிமுகப்படுத்திப் பேசியவர் அவர்.

அந்தச் சிறுகதையை நான் ஐந்து முறையாவது படிதிருப்பேன். அந்தக் கதையில் வந்து இறந்துபோகும் அல்யோஷாவின் களங்கமின்மை மொழிபெயர்ப்புக்குள் வரவே இயலாதது.

மிஸ்கினுக்கு அந்தக் களங்கமின்மை மேல் பெரிய பித்து உண்டு. மிஷ்கின் என்ற பெயரே அந்தக் களங்கமின்மை தொடர்பிலான பிரேமையினால்தான். ஆனால், நான் மிஸ்கினை தஸ்தயவெஸ்கியின் கதாபாத்திரமாகப் பார்ப்பதைவிட, மிகுவெல் டி செர்வான்டிஸின் டான் குவிகாத்தேவாகவே பார்ப்பேன்.

ஏனெனில், சமகால அரசியல், சமகால எதார்த்தம் எல்லாவற்றையும் தவிர்த்து பொதுச்சமூகத்தின் வாழ்நிலை குறித்த எந்தத் தகவல்களும் வந்துசேராத ஒரு குமிழுக்குள் தனது பிரபலத்தையும் தனது கலைத்துவத்தையும் தனது வெற்றியையும் நிறுவ முயல்பவர்களில் ஒருவர் அவர்.

கருப்புக் கண்ணாடியே வெளி எதார்த்தத்தை மறுப்பதற்காகப் போட்டுக்கொள்வதுதான்.

அவரது படுக்கையறை ஜன்னல் திரைகள் எதுவும் பகலையோ இரவையோ காட்டாதவை.

அதை அவர் விரும்பவுமில்லை.

000

மிஸ்கினின் சினிமா ஆளுமையை மீறி அவரிடம் நான் ரசித்த இரண்டு முக்கியமான அம்சங்கள் இசை தொடர்பில் அவர் கொண்டிருக்கும் பித்து. கிராஃபிக் நாவல்கள், ஜப்பானியப் பண்பாடு தொடர்பில் அவர் கொண்டிருந்த வேட்கை. அகிரா குரோசாவாவின் மேலிருக்கும் பிரியத்திலிருந்து அது வந்திருக்கலாம்.

நள்ளிரவில் எல்லா நண்பர்களும் போதையேறியிருக்கும் அறையில் ஒரு சாமுராய் தொடர்பான கதையை வேறு வேறு மாதிரியாக, தனது நூலக அறையையே மேடையாகக் கொண்டு நடித்துக் கதைசொல்லிக் காட்டுவார். கழிப்பறையின் கதவுவரை அவரது உடல் போகும். குழந்தைகளுக்கான கதைசொல்லியும் நாடக உடலுமாக வெளிப்படுவார் அப்போது.

இன்னொன்று அவரிடமிருந்த இசை தொடர்பிலான உணர்வு.

குண்டான உடம்பு. ஆனால், இளையராஜாவின் பாடலான, ஆசை நூறு வகை, வாழ்வில் நூறு சுவை வா... பாடலுக்கு ஆட ஆரம்பித்தால் அவர் உடலே மறைந்துவிடும்... ஆடியிருக்கிறோம் எல்லோரும்.

இசை கேட்பது சார்ந்த கூடுதல் கவனத்தையும் அது அகத்தில் ஏற்படுத்தும் லயம், குணம் பற்றிய போதத்தையும் பழகிய குறுகிய காலத்தில் உருவாக்கியவர் மிஷ்கின். இளையராஜா, ரஹ்மான், சோபின், ஆர்வோ பாட், என்னியோமோரிகான் வரை அவரது நூலக அறையில் தான் மேலும் கூர்மையானார்கள்.

நிகழ்ச்சிகளை, அனுபவங்களை, நபர்களை, அழகை, கோரத்தை, இன்ப துன்பங்களை, அன்பை, அன்பற்றதை, ஒட்டுமொத்தமாக உணரும் அனாதைத்தனத்தை மிக அண்மையிலும் அதேவேளையில் தூரமாகவும் பார்க்கும் தன்மையைக் கொடுக்கிறது இசை.

குறிப்பாக, இளையராஜா தொடர்பில்... மிஷ்கின் கருதுகிறார்... தமிழ்ச் சமூகம் முற்றிலும் புதைந்து அழிந்துபோனாலும் இளையராஜா போன்ற சில ஜீனியஸ்கள் வழியாகத் தமிழினத்தின் நினைவுகளை மீட்டெடுத்துவிட முடியுமென்று பல இரவுகள் எனக்குச் சொல்லியிருக்கிறார்... டால்ஸ்டாயின் துர்க்கனேவின் கதையைச் சொல்வது போல, டி எச் லாரன்சின் பாம்பு கவிதையை மொழிபெயர்ப்பது போலவே சீரியசாக இசையைப் பற்றிப் பேசியபடி இருப்பவர் மிஷ்கின்.

நான் அவருக்கு அறிமுகமான வேளையில் அவர் மேற்கத்திய இசையையும் இந்துஸ்தானி இசையையும் ஆசிரியர் வைத்துப் படித்தார். தமிழிசையை ஆபிரகாம் பண்டிதர் தொடங்கி ந.மம்முதுவின் புத்தகங்கள் வரைத் தேடிப்போய் படித்துக் கோட்பாடாகப் பேசத் தொடங்கினார். பிசாசு 2வுக்கு அவரே பின்னணி இசை அமைத்தபோதுதான் நான் அவருக்கு அறிமுகமானேன்.

மிக அழகான இசைக்கோர்வைகளை உருவாக்கினார். கண்ணே மணியே கண்ணுறங்கு என பிசாசு 2 படத்தின் க்ளைமாக்ஸ் பாடலை அவர் பாடியிருக்கிறார். அதை இன்னும் விரும்பிக் கேட்கிறேன். இளையராஜாவின் குரலும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலும் உள்ளே இறங்கிய குரல் மிஷ்கினுடைய குரல்.

இப்போது மிஷ்கின் இயக்கி வெளிவரவிருக்கும் ட்ரெய்ன் படத்தின் பாடல்களையும் பின்னணி இசையையும் கேட்டிருக்கிறேன். பிசாசு 2 படத்தின் பின்னணி இசையை, வேறு வேறு விதமான பொருள்களைப் பயன்படுத்தி மிகுந்த ஆற்றலுடன் திகிலான ஒரு இசையை அவர் கொடுத்ததை நேரடியாகப் பார்த்தேன். டிரெய்ன் படத்தின் பாடல்கள் எனக்குப் புதிய அனுபவத்தைத் தரவில்லை. பாடல் வரிகளில் அவருக்குப் பெரிய மரியாதை இல்லை. இளையராஜா போலவே. அதை அவர் தனிப்பேச்சில் வெளிப்படுத்தியுமிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களின் வரிகளிலும் காட்ட மெனக்கெடும் நவீனத்தன்மை குறித்து விவாதித்திருக்கிறோம். ஆனால், அதைக் கேட்கமாட்டார்.

ஆனால், இம்தியாஸ் அலி இயக்கி நெட்பிளிக்ஸில் ஆவணப்படம் என்ற பெயரில் வெளிவந்த சம்கிலாவில் ரஹ்மான் இசையமைத்த ‘விடாகரோ’ பாடலின் ஆழத்தை மிஷ்கின் ஆராதித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

அத்துடன் நாகராஜ் மஞ்சுளே இயக்கிய சாய்ரத் படத்தில் வரும் பாடல்கள் மிஷ்கினுக்கு மிகவும் பிரியம். அஜய் - அதுல் இருவரும் சேர்ந்து இசையமைத்த சாய்ரத் படத்தில் வரும், சாய்ரத் சாலா ஜி பாடலில் இளையராஜா தன்மையின் பிரமாண்டம் இருக்கும். அதனால்தான் அந்த இசையமைப்பாளர்களை அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது போல.

தந்தை மீதிருக்கும் லவ் அண்ட் ஹேட்ரெட் (Love and hatered) விஷயத்தை, தொடர்ந்து இளையராஜா தொடர்பில் பராமரித்துவந்தார். கார்த்திக் ராஜாவுடனான பாதியில் முறிந்த உறவிலும் அதுவே நிகழ்ந்திருப்பதாக எனக்கு மனப்பதிவு (பிசாசு 2வில் அவரை புக் செய்து அந்த உறவு படம் முடிவதற்குள் முறிந்துவிட்டது).

இளையராஜாவை வழிபடும் கடவுளின் இடத்தில் வைத்திருப்பவர் மிஷ்கின். அவரைப் பற்றிப் பேசாமல் ஒருநாளும் எங்களுக்கு இருந்ததில்லை. கடுமையான வசைகளையும் சொல்வார்.



நாம் மதிக்கும், பிரியமாக இருக்கும் யாரிடமும் irreverence ஐயும் வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் வெளிப்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் மிஷ்கின். அதற்கான தாதுக்கள் எனது அடிப்படையில் இருந்திருக்கின்றன. அது சரியானதுதான், உபயோகப்படுத்தலாம் என்பதை உறுதிப்படுத்தியவர் மிஷ்கின். அந்த irreverence ஐ மிஷ்கின் மீதே நான் காட்டுவதற்கான துணிச்சலையும் அதுவே தந்தது.

மிஷ்கின் 50 தொடர்பில் நண்பரும் கவிஞருமான இசை ஒரு தொகுப்பு நூலை வெளிக்கொண்டுவர முயன்றார். அப்போது நான் மிஸ்கினிடம் இப்போது இது தேவையில்லாத வேலை என்று அபிப்ராயம் சொன்னேன். அதேநேரத்தில் அந்தப் புத்தகத்துக்கான கட்டுரைகள், கவிதைகள், மொழிபெயர்ப்புகளை செம்மை செய்தும் கொடுத்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டத்தில் மிஷ்கின் என்னை நீங்கள் கட்டுரை எழுதுகிறீர்கள்தானே என்று கேட்டார்.

நான் சொன்னேன்... உங்களுக்கு 60 வயது வரும்போது எழுதுவேன் என்று. இப்போது அவர் குறித்த கட்டுரையை எழுதுகிறேன். ஒரு நல்ல தூரம் கிடைத்தபின்னர்.

மிஷ்கின், அவரது அசோசியேட் நிவேதா, நான் மூன்று பேரும் பல தனிமையான ஞாயிறுகளைக் கழித்திருக்கிறோம்.

ரம்மி, தாயம் விளையாடியிருக்கிறோம்.

ஒருநாள், பாம்பு மாத்திரையை வாங்கிவரச் சொல்லி, எரியவைத்து பாம்பை வரவழைத்து வீடியோ எடுத்து அதைக் கவிதையாகச் சேர்ந்து எழுதிப் பார்த்திருக்கிறோம்.

000

மிஸ்கினின் முழுமையான படைப்புகள் என்று அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு 1, பிசாசு 2 நான்கு படைப்புகளையும் நான் மதிப்பிடுகிறேன். சித்திரம் பேசுதடி, நந்தலாலா இரண்டையும் மிக மோசமான அனுபவமாகவே இன்றுவரை நான் மதிப்பிடுகிறேன். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரைப்படம் மிகவும் போலியான வெளிப்பாடு என்று கருதுகிறேன். மிஸ்கினின் உள் இருட்டை வெளிப்படுத்திய படம் என்று பிசாசு 2 படத்தைக் கருதுகிறேன். அது இதுவரை வெளிவராதது அவருக்கும் சினிமா பார்வையாளர்களுக்கும் துரதிர்ஷ்டமானதுதான்.

நிஜத்தில் அழகான கதைசொல்லியான மிஷ்கின், திரையில் கதைசொல்வதின் மேல் மரியாதை இல்லாதவர். சினிமா என்ற தொழில்நுட்பமும் கவித்துவமும் சேர்ந்த இலக்கணத்தைக் கொண்டு கதைசொல்லும் திறனை சற்று கீழாகப் பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது. ஆனால், அவர் ஒழுங்காகக் கதைசொன்ன அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு 1, பிசாசு 2 படங்களே அவர் பெயர் சொல்பவை.

வான்கோ தொடர்பிலான முழுமையான வாழ்க்கை சரிதையை நான் அவர் நூலகத்திலிருந்து எடுத்துவந்து படித்துவிட்டு நானே வைத்துக்கொண்டேன். திரும்பத் திரும்ப அவர் கேட்டும் கொடுக்கவேயில்லை. அவரும் விட்டுவிட்டார்.

வான்கோ எனக்கு என்பதைப் போல.

மிஷ்கின் அப்படித்தான்.

000

ஆம்லேட் சாப்பிடும் எல்லையில் மட்டுமே இருந்த என்னை அருமையாக சிக்கன், மட்டன் சூப் சாப்பிட வைத்தவர் மிஷ்கின்.

மிக அருமையாகச் சமையல் செய்வார். மீன்களைப் பட்டினப்பாக்கம் போய்த் தேர்ந்தெடுத்து வாங்கிவருவார்.

சினிமாவில் சமையல், செட், சண்டை, நடனம் உட்பட 13, 14 துறைகளில் நிபுணர் அவர். உருவச்சித்திரங்களைச் சரசரவென்று வேகமாக வரைவார். அவரது ஓவியம் ஒன்றை கேட்டு வாங்கி, எனது ‘நிழல், அம்மா.’ என்ற கவிதை நூலின் பின்னட்டையில் பிரசுரித்திருக்கிறேன்.

தக்காளி வெட்டும், கறி நறுக்கும், உப்பைப் போடும்போது அவரது கைகள் இயங்கும் தாளகதியை மட்டுமே ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறேன். எனக்குப் புதிய ஷூக்களை வாங்கிக்கொடுத்து அதற்கு முட்டிபோட்டு லேஸ்களையும் கட்டிவிடும் அளவுக்கு அருமையான நட்பைக் கொடுத்திருக்கிறார்.

எனது வாழ்க்கையின் எதார்த்தத்தில், நினைத்தே பார்க்க இயலாத நிகழ்ச்சிகளை மிஷ்கின் நிகழ்த்தியிருக்கிறார். எனக்காகவே ஒரு இசைக்கோர்வையை அவர் எழுதி இசையமைத்திருக்கிறார். ஜப்பான் கலாசார அமைப்புடன் சேர்ந்து அவர் ஒருங்கிணைத்த ஒரு கோமாளியின் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அதில் அவர் எனது நெடுநாள் விருப்பத்தை நிறைவேற்றியதுதான் முக்கியமானது. கோமாளியின் மூக்கில் இட்டிருக்கும் RED NOSE அணிந்து நான் புகைப்படம் எடுக்கவேண்டுமென்று மிஸ்கினிடம் கேட்டேன்.

உடனடியாக அதற்கு ஏற்பாடு செய்து அந்தக் கோமாளியைக் கூப்பிட்டுப் பேசினார். அவருக்கு பர்சிலிருந்து பணம் எடுத்துக்கொடுத்தார்... அந்த RED NOSEஐ நான் எனக்கே உரிமையாகக் கேட்கிறேனென்று அந்தக் கோமாளி கருதிவிட்டார். நூல் கட்டப்பட்ட உள்ளீடற்ற ஒரு பிளாஸ்டிக் சிகப்புப் பந்துதான் அது. அவரிடம் சொல்லி அவரைப் புரியவைத்து வெறுமனே புகைப்படத்துக்காக மட்டுமே கேட்கிறேன் என்று சொன்னேன். அதற்குப் பிறகு புகைப்படத்துக்குச் சம்மதித்தார். ஒட்டுமொத்த புகைப்பட நிகழ்ச்சியிலும் மிஷ்கின் உடனிருந்து எனது ஆசையை நிறைவேற்றினார். அது எனது சிறுவயது ஆசை. கோமாளியாக வேடம் போடவேண்டுமென்று. இன்றும் எனது வாட்சப்பின் டி.பி. அதுதான்.

மிஷ்கின் என் வாழ்க்கைக்குத் தந்த சிறந்த பரிசு கோமாளியுடன் கோமாளியாக ஆகி எடுத்த புகைப்படம்தான்.

(நன்றி: தி ஹார்ட்லைன் இணைய இதழ்)

Comments