Skip to main content

Posts

ஞானக்கூத்தன் நேர்காணல் இடிபாடுகளுக்கிடையே எனது கவிதை இருக்கிறது

எள்ளல் மற்றும் சிரிப்பை தமிழ் புதுக்கவிதைக்குத் தந்தவர் அரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஞானக்கூத்தன். புதுக்கவிதை வடிவத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், உற்சாகத்துடனும் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருபவர். விஷ்ணுபுரம் விருது   அறிவிக்கப்பட்டதை அடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது.. தி இந்து கலை இலக்கியம் இணைப்பிதழில் வெளியான நேர்காணலின் எடிட் செய்யப்படாத வடிவம் இது.. உங்களது சமீபத்திய பென்சில் படங்கள் கவிதை நூலில் உங்களது குழந்தைப்பருவம் மற்றும் இளம்பிராயத்து சித்திரங்கள் நிறைய இடம்பெறுகின்றன.. ஆறு, கடல், மரங்கள், விலங்குகள், கோவில்கள் எல்லாமே ஒரு குழந்தைக்கு முதல் முறையாக அறிமுகமாகிறது. அவைதான் மனதில் ஆழமாகப் பதிகிறது. அதிலிருந்து தான் உலகத்தை ஒரு குழந்தை புரிந்துகொள்கிறது. வளர வளர இன்னொரு உலகம் அந்தக் குழந்தைக்கு அறிமுகமாகிறது. ஏற்கனவே மனதில் இருக்கும் உலகத்தை ஒப்பிட்டுப் பார்த்து அது இன்னொரு உலகத்தைப் புரிந்துகொள்கிறது. வாலிப வயதில்  எதிர்பாலினம்,குடும்பம், அதைக் கட்டுப்படுத்தற சமூகம், சமூகத்தைக் கட்டுப்படுத்தற நாடு,மொழி எல்லாம் பற்றிய...

மிச்சம் உள்ள ஆவி

 ஷங்கர்ராமசுப்ரமணியன்  திருநெல்வேலி   டவுணில்   சந்திப்பிள்ளையார் முக்கின்   இடதுபுறம்  உள்ளடங்கி இருக்கும்   கல்லூர் பிள்ளைக் கடையில்   பின்னரவில்   பரிமாறப்படும்   இட்லியை விள்ளும்போது   ஆவி இப்போதும் வெளியேறுகிறது   இட்லியில் ஆவியைப் பார்த்து   ரொம்ப நாளாகி விட்டது   ஆவிகள் என்று சொன்னால்   அர்த்தம் விபரீதமாகி விடும்   இருந்தும்   திருநெல்வேலியின்   ஆவி   இட்லியில் மிச்சம் இருப்பதாகச்   சொல்லிக் கொள்ளலாம். 

அந்த மனிதர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஏன் அவர்கள் ரயிலடிகளில் பொதுக்கழிப்பறைகளில் நடைபாதைகளில் சாலைகளில் சுவர் மூலைகளில் புகையிலை எச்சிலைத் துப்பித் துப்பி இந்த அழகிய மாநகரத்தை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் உங்கள் ஆசுவாசமான பயணத்தின் நடுவில் சிக்னல் முனையில் காத்திருக்கும் போது ஏன் அவர்களின் குழந்தைகள் கிடைக்கும் சிறு அவகாசத்தில் அல்பப் பொருட்களின் பயன்பாட்டை உங்களுக்குக் காட்டி விற்று யாசகம் கேட்டு உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள் அவர்கள் ஏன் சாலையோரத்தில் உறங்கும்போது காவல் நிலையத்தில் மோதல்சாவுகளில் செத்துத் தொலைக்கிறார்கள்

நான் பார்க்க வேண்டும்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   கழிமுகத்தில் தேங்கிநிற்கும் கருப்பு நீர் ஆடியின் மேல் பறக்கும் பறவையின் பிம்பத்தை அது கரையைக் கடக்குமுன் நான் பார்க்க வேண்டும்

இப்போதெல்லாம்

 ஷங்கர்ராமசுப்ரமணியன்   குற்றம் என்னும் காகத்தை காமத்தைத் தன் பெயராகச் சூடிய புறாவை வேங்கையை மீனை இப்போதெல்லாம் காணவே முடியவில்லை

வேறு புறாக்கள்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் பறக்கும் ரயில் நிலையத்தின் தண்டவாள இடுக்கில் நிற்கிறது ஒரு புறா ரயில் கடந்துசென்ற பிறகு மெதுவாக  தண்டவாளக் கட்டைகளிடையே நடக்கிறது முதுமையோ நோயோ தெரியவில்லை இனி அதனால் பறக்க இயலாது ரயில் தண்டவாளத்தின் கருத்த மசித்தடங்கள் வழியாக குறைவான வெளிச்சத்தில் மெதுவாக நடக்கிறது கழுத்தில் கண்களில் அலகில் சிறகில் எந்தத் துடிப்பும் இல்லை இன்னும் சில தப்படிகள் தூரத்தில் ஜன்னல்கள் நிர்மலமான நீலவானம் கடல் வெளிச்சம் எல்லாம் இருக்கிறது அவை இன்று வேறு புறாக்களால் நிரப்பப்பட்டு விட்டன இந்தப் புறா தன் வாழ்வில் நோயைத் தவிர வேறு எந்த ஒரு குற்றமும் இழைக்கவில்லை ஆனாலும் அது தன் வாழ்க்கையின் மகத்தான குற்றமூலையில் நிற்கிறது

திருட்டுக் காக்கை

  ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்தரத்தின் படிக்கட்டில் ஏறி என் வீட்டு சமையலறை ஜன்னலுக்கு சோறுண்ண வந்தது ஒரு காகம் அது என்னைப் போல ஒரு திருட்டுக் காகம்