ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்திரனின் மாளிகை ஒன்றை இந்திரலோகத்தின் சிறந்த கலைஞன் நிர்மாணித்தான். அதன் மேல் முகத்திரையைப் போல எல்லையற்ற மடிப்புகள் கொண்ட அனைத்துத் திசையிலும் நீளும் அற்புத வலை ஒன்றையும் தொங்கவிட்டான். இந்திரனைத் திருப்திப்படுத்துவதற்காக அந்த வலையின் ஒவ்வொரு துளையிலும் ஒரு ரத்தினத்தையும் பதித்தான். நட்சத்திரங்களைப் போல அந்த மாளிகை ஓவியமாக மின்னியது. ஒருவர் அருகில் போய் அந்த வலையில் இருக்கும் ஒரு ரத்தினத்தைத் உயர்த்திப் பார்த்தால் அந்த வலையில் தொங்கும் மற்ற எல்லா ரத்தினங்களையும் அது பிரதிபலிக்கும். அதில் பிரதிபலிக்கும் எண்ணற்ற எல்லா ரத்தினமும் மற்ற எண்ணற்ற ரத்தினங்களைப் பிரதிபலித்தன. காரணங்களும் விளைவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைப்பில் ஒவ்வொரு உயிரும் நிகழ்ச்சியும் இன்னொன்றைப் பிரதிபலித்தபடி உள்ளன என்பதை மகாயான பவுத்தத்தில் இப்படி இந்திரனின் ஆரம் என்ற படிமத்தால் குறிப்பிடுகின்றனர். கோடிக்கணக்கில் பிரதிபலித்தபடியும் பிரதிபலிப்புக்கு உள்ளாகியும் உயிர்களும் நிகழ்ச்சிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், கவிஞர் இசை எழுதிய ‘போலீஸ் வதனம்’ கவிதையில் அருள்...