Skip to main content

Posts

eggu என்றால் முட்டை என்று சொல்லும் நடேஷ்

கறுப்புமைக் கோட்டுச்சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது உயிர்த்திருப்பதன் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், ஓவியருக்கு அத்தியாவசியமான கண்கள் பழுதுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை உணர்த்தும் அர்த்தத்திலேயே ‘பிஃபோர் பிகமிங் பிளைண்டு’ (Before Becoming Blind) என்ற அதிர்ச்சி தரக்கூடிய தலைப்புடன் தனது சித்திர நூலொன்றை வெளியிட்டுள்ளார் நடேஷ். தனது கோடுகளுக்கு விடுதலை அளித்த முதல் ஆசிரியர் என்று ஆர்.பி.பாஸ்கரனை சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவரான நடேஷ் குறிப்பிடுகிறார். இரண்டாம் ஆசிரியராக ஓவியர் சந்ருவை மதிப்பிடுகிறார். தென்னிந்தியக் கோயில்களுக்கு அவர் அழைத்துச்சென்ற சுற்றுலாவில் பார்த்த சிற்பங்கள் தனது கோட்டைத் தமிழ்க் கோடாக மாற்றின என்கி...

பாழ்பட்ட தேசம் - சிவ் விஸ்வநாதன்

நரேந்திர மோடியின் இருபது ஆண்டுகள் பொதுவாழ்வைக் குறிக்கும் ஆர்ப்பாட்டக் கொண்டாட்டம் நேருக்கு நேராக எதிர்கொள்ளப்பட வேண்டியதாகும். ஊடகங்கள் சேர்ந்து ஒத்தூதும்  நிலையில், கருத்து வேறுபடுதல் எளிது அல்ல. விரக்தி உணர்வையே அடைகிறோம். இந்தக் காலகட்டத்தில் எனது பழைய தத்துவ ஆசிரியர்களின் கட்டளையையே நினைவுகூர்கிறேன். ராஜ்ஜியத்தின் மௌனங்களை வாசிப்பதுதான் அது. மோடியின் இருப்பை தன்னளவிலேயே சந்திப்பதிலிருந்து தொடங்க வேண்டும். சமூக உளவிலாளர் ஆசிஷ் நந்தி, ராமஜென்ம பூமி இயக்கத்தின் போது கூறியதைப் போல, நம்மை எதிர்கொள்ளும் மோடி 'பாசிஸ்ட்' அல்ல. இந்த மோடி ஒரு புதிய அவதாரம், ஒரு பகுதி புனைவாலான, பின் உண்மை யுகம் உருவாக்கிய ஒரு படைப்பு. இல்லாத திறன்கள் இருப்பதாக நம்பவைக்கப்பட்ட ஒரு உருப்போலி அவர். உண்மையல்லாத அவரது கற்பனை செயல்முறைகள் மூலம்  அ வர் ஆர்வெலிய நிலையையும் தாண்டிப் போகிறவர்.  ஸ்திரத்தன்மை சார்ந்த அறைகூவல்களை மீறி மோடியின் பெரும்பான்மைவாதத்தை வாசிப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் தட்டைத்தன்மையையும் இரண்டும் கெட்டான் தன்மையையும் சேர்ந்து உருவாக்கிய மென் பெரும்பான்மைவா...

நிழல் ஆடும் முன்றில்

46 வயது யுவதி அவள் தெரு மூலையில் இருக்கும் வீட்டின் முற்றத்தைத் தெளித்துவிட்டு காலியான பிளாஸ்டிக் வாளியை முறத்தைப் போல உயர்த்திப் பிடித்து தனது செல்லத்துடன் காலையிலேயே விளையாடிக் கொண்டிருந்தாள் அதன் பெயர் என்னவென்று கேட்டேன் ' நிழல் ' என்றாள் நிழலுக்கோ உலகை முழுக்கப் பிரதிபலிக்கும் கண்கள் கோலிக்குண்டின் தீர்க்கம் நிழலுக்கோ உடல் முழுதும் துள்ளும் பரபரப்பு அந்தத் தெரு முழுவதையும் உயிர்க்கச் செய்யும் வாலின் துடிப்பு அது நிழல் நீ நிழல் ஆடும் முன்றிலா என்று கேட்க வேண்டும்.

அவளையும் அவளையும் ஈன்ற அந்தச் சிறுமரம்

மரத்தினடியில் தோன்றினார்கள் அவர்கள் அவன் முகம் தொட்டு அவள் ஆகியபடியிருந்தாள் அவள் விரல்களில் மோதி மோதி அவன் ஆகிக்கொண்டிருந்தான் வளையல்கள் தொங்கட்டான்கள் அலைபேசிகள் எல்லாம் அந்த மரத்தடியில் வரிக்குதிரைகளின் வரிகள்   மேய்ந்து  கொண்டிருந்தன அடுத்த சுற்று நடையில் அவள் அந்த இடத்தை விட்டு முதுகுகாட்டி நீங்கிப் போனதைப் பார்த்தேன் குனிந்து அலைபேசியை வெறித்துக்  கொண்டிருக்கும் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறது அவளையும் அவளையும் ஈன்ற அந்தச் சிறுமரம்

பல் பொம்மை போதும் ஐயா

சந்தையில் ஒரு சேவையையோ, ஒரு பொருளின் விற்பனை இங்கு நடக்கிறது என்பதையோ குறிப்பிடுவதற்கு, அந்தப் பொருளின்  உருவத்தையோ சித்திரத்தையோ கேலியாக்கியோ எல்லார் கண்ணில் படவும் விளம்பரமாக வைப்பது எந்தக் காலத்திலிருந்து தொடங்கியிருக்கும். எழுத்தும் படிப்பும் பரவலாகாத சமூகங்களில் மக்களை ஈர்ப்பதற்கு இந்த உருவங்கள் உதவியிருக்க வேண்டும். மருத்துவர்கள் இப்படியாக தங்கள் விளம்பரத்தை, பல்லிலிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். திருநெல்வேலி கிழக்கு ரதவீதியில், பல் மருத்துவமனையை நிறுவியிருந்த மருத்துவர் சென்னின் க்ளீனிக்கின் முன்னால், பெரிய பல்லின் உருவம் ஒன்று விளக்கொளியில், சங்கிலி பூதத்தார் சிலையைத் தாண்டினாலே தெரியத் தொடங்கிவிடும். பல்லின் உருவங்களைப் பெரிதாக மருத்துவர்கள் வைப்பது, உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வந்திருக்க வேண்டும். குவெண்டின் டொரண்டினோ இயக்கிய ஜாங்கோ அன் செயின்ட் படத்தில், கருப்பின அடிமைகளுக்கு விடுதலை அளிப்பவராகவும், அரசாங்கம் தேடும் குற்றவாளிகளைப் பரிசுப் பணத்துக்காகக் கொல்லும் பவுண்டி ஹண்டராகவும் வரும் கிறிஸ்டோபர் வால்ட்ஸ், தனது குதிரை வண்டியின் அடையாளமாக ஸ்பிரிங்கி...

இனிமையே உன்னை எங்கே வைப்பேன்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு சாயங்காலம் என் மீது வெளியே படர்கிறது மூடிய பூங்காவின் பெஞ்சுகள் வீடுகளின் ஜன்னல்கள் சுவர்கள் கூரைகளில் அது அது அவர் அவர் நிறங்களை விரியத் திறந்து தன் நிறமின்றிப் பொழிகிறது சூரியனின் கடைசிப் பிரகாசம் . தெருவில் வசிக்கும் சினேகித நாயை ஒரு குட்டிப்பையன் கழுத்தை இழுத்து வளைத்துக்  கட்டிக்கொள்கிறான் அந்த அன்பை அவனுக்கு யாரும் இந்தப் பூமியில் போதிக்கவில்லை அது ஏற்கெனவே இங்கு இருந்ததும் இல்லை ஒவ்வொரு அடிவைக்கும் போதும் ப்பீ ப்பீ ப்பீ எனக் குலவையிடும் புதிய காலணிகளைக் கேட்டபடியே மிகக் குட்டியான சிறுமி அம்மாவுடன் சின்ன அண்ணனுடன் தெருவின் ஓர் ஓரத்தை எடுத்துக்கொண்டு எதையுமே ஆக்கிரமிக்காமல் எட்டு வைத்து நடக்கிறாள் அவளை நடுவே விட்டு அவர்கள் நடக்கிறார்கள் இந்தச் சூரியனை இந்த வேளையை எங்கே இறக்கிவைப்பேன் இனிமையே உன்னை தெருவிலும் விட முடியாது வீட்டுக்கும் எடுத்துச் செல்ல இயலாது .

அந்தக் குருவி யார் ஸ்ரீநேசன்

  கவிஞர் ஸ்ரீநேசன் நேற்று தன் வீட்டு ஜன்னலுக்கு வந்த குருவி ஒன்றின் வீடியோவை வாட்சப்பில் அனுப்பியிருந்தார். ஜன்னலில் அடிக்கப்பட்டிருந்த வலை அந்த வீடியோவை விசேஷமாக்கியது. அந்தக் குருவி முதல் பார்வைக்கு மைனா போல எனக்குத் தென்பட்டது. மிகச் சிறிய உடலைக் கொண்ட குருவி என்றாலும் ஸ்ரீநேசனின் கவிதைகளை விட உரத்துச் சத்தமெழுப்பும் குருவி அது. எதையோ ஸ்ரீ நேசனுக்குச் சொல்வதற்கு வந்த மாதிரி இருந்தது. எழுது, தொடர்ந்து எழுது, நகுலன் கட்டுரை ஞாபகம் இருக்கிறதா, எழுந்து எழுது என்று திருப்பள்ளியெழுச்சியைப் போல உடல் முழுவதும் திரட்டிக் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறது. குருவிக்குப் பின்னால் தூரத்தில் வயல், அதையொட்டிய பாதையில் ஒரு சிறுவன் கன்றுக்குட்டி ஒன்றைத் துரத்திக் கொண்டு போகிறான். கரும்பழுப்புக் கன்றுக்குட்டி ஓடி மறைந்தது.  குருவி எதையோ சொல்ல வந்தது போல, சொல்லிவிட்டு செல்ல வேண்டுமென்று காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்ட பரபரப்பில் இருந்து சொல்லிக் கொண்டே இருந்தது. கண்டராதித்தனின் அடையாளமாக எனக்கு, அவர் வீட்டில் வளர்த்த தேன்சிட்டு இருக்கும். ஸ்ரீ நேசனின் அடையாங்களில் ஒன்றாக இந்தக் குருவி சேர்ந்திருக்கிற...