Skip to main content

Posts

ஹிட்லரிலிருந்து மோடி வரை மக்களை மயக்கி இறுக்கும் பிம்பங்கள்

  ஜார்ஜ் ஆர்வெல் நினைவு தினத்தையொட்டி, ஹிட்லரின் மெய்ன் காம்புக்கு அவர் எழுதிய மதிப்புரையை ‘தி வயர்’ உள்ளிட்ட இணையத்தளங்கள் கவனப்படுத்தியிருந்தன. ஹிட்லர், ஸ்டாலின் ஆகியோர் மேற்கொண்ட சர்வாதிகார நடைமுறைகளை, அவை உச்சபட்ச துயரங்களைத் தந்தாலும் ‘மேலான நன்மை’ என்ற பெயரால், கடவுளர்களின் சோதனையாக விரும்பி, வெகுமக்கள் எப்படி ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஜார்ஜ் ஆர்வெல் இந்த மதிப்புரையில் ஆராய்கிறார். ஹிட்லரின் ஆளுமையும் அவர் ஏற்படுத்திய பிம்பமும், வலிய விதியை எதிர்த்துப் போராடும் துயர நாயகனின் சாயலைக் கொண்டது என்கிறார். ஒரு எலியை எதிர்த்துக் கொல்வதாக இருந்தாலும் ஹிட்லர் போன்றவர்கள், அந்த எலியை முதலில் ஒரு டிராகன் போன்று பிரமாண்டமான எதிரியாக கதையாகக் கட்டமைத்து விடுவார்கள் என்கிறார் ஜார்ஜ் ஆர்வெல். கரோனோ போன்ற வைரசை, கருப்புப் பணத்தை, சிறுபான்மையினரை, எதிர்கட்சியினரை, பாகிஸ்தானை, போராடும் விவசாயிகளை பிரமாண்டமான எதிரிகளாகச் சித்தரித்துவிடும் மோடி ஞாபகத்துக்கு வருகிறார். ‘அச்சே தின்’ என்ற பெயரால் நல்ல தினங்கள் வரப்போகின்றன என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்த மோடி மக்கள் மேல் சுமத்திய அடுக்கடுக்கான...

தி க்ராண்ட் இன்க்விஸிட்டர் - மானுட நிலைமை குறித்த மாபெரும் ஆவணம்

  உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலின் தீர்மானகரமான அத்தியாயம் 'தி க்ராண்ட் இன்க்விஸிட்டர்’(The Grand Inquisitor) என்று அழைக்கப்படும் 'விசாரணை அதிகாரி'. நவீன இலக்கிய வரலாற்றில் அதிகபட்சமாக வாசகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய வசனங்களைக்கொண்ட காவியத்தை உள்ளடக்கிய அத்தியாயம் இது. கரமசோவ் சகோதர்கள் நாவலின் பிரதானக் கதாபாத்திரங்களில் ஒன்றும் தந்தையார் கரமசோவின் இரண்டாவது மகனுமான இவான் கரமசோவ் தனது தம்பியும் இளந்துறவியுமான அல்யோஷாவிடம் பகிர்ந்து கொள்ளும் காவியம் இது.   அல்யோஷாவின் சிறு சிறு இடையீடுகள் வழியே இந்தக் காவியம் இவானால் ஒரு உணவு விடுதியில் சொல்லப்படுகிறது இது. இந்தக் காவியத்தில் கிறிஸ்து மீண்டும், பதினைந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, அவிசுவாசிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் காலத்தில் செவைல் நகரத்துக்கு வருகிறார். முன்பைப் போலவே சில அற்புதங்களையும் செய்கிறார். செவைல் நகரத்துத் தேவாலயத்தின் முன்பு இயேசுவைப் பார்க்கும் மதகுரு, தன் காவலாளிகளை அழைத்து அவரைக் கைது செய்ய உத்தரவிடுகிறார். அன்றிரவு, அந்த ...

கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும் அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி

வேதாகமம் தொடங்கி ஆட்டோவின் முதுகு வரை நுண்மொழிகளும் பொன்மொழிகளும் நமக்கு இன்றைக்கும் அன்றாடத் தேவையாகவே உள்ளது. க்ஷணப் பொழுது உண்மைகள், நித்திய உண்மைகள், அவரவர் தொடர்புடைய, அவரவரின் அவ்வப்போதுடன் தொடர்புடைய அனுபவத்தைச் சார்ந்த உண்மைகளைப் பிரதிபலிப்பதாக இந்த நுண்மொழிகள் இயங்குகின்றன. ‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவருகளுககோ ஒரு நன்மையும் குறைவுபடாது.’ பாளையங்கோட்டைக்குள் நுழையும்போது, தேவாலயச் சுவரில் பேருந்து கடக்கும்போதெல்லாம், சிறுவயதில் என் மீது தாக்கம் செலுத்திய இந்த வரிகள் இப்போது ஒன்றும் செய்யாது. அப்படியா என்று கேட்டுவிட்டுக் கடந்துவிடுவேன். எனது கருத்துலகம், படைப்புலகத்தை வடிவமைத்த ஆசிரியர்களில் ஒருவரான காஃப்காவின் நுண்மொழிகள் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, பல நுண்மொழிகள் அந்தரங்கத் தன்மை கொண்டவை. எனக்கு அவை எதையும் தொடர்புறுத்தவில்லை. ஆனால், காஃப்காவின் உலகில் உள்ள வஸ்துகள், தொடர்ந்து அவரைப் பாதிக்கும் விஷயங்கள் உண்டு. காகம் தென்படுகிறது.  காஃப்காவின் வாழ்க்கையிலேயே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிய காலத்தில் எழுதப்பட்டத...

அநித்யச் சிவப்பு

    செம்மை ஏறியிருந்த அந்தச் சாயங்காலம் விரைவாக அந்திக்கருமை நோக்கி சைதாப்பேட்டை பாலத்தில் விசுக்கென போய்க்கொண்டிருந்தது அதன் செம்மையால் கூடுதல் சிவப்பாகியிருந்த இரண்டு செவலை நாய்கள் பாலத்தின் பக்கவாட்டு நடைபாதையில் அவற்றின் ஓட்டத்திலேயே சாயங்காலத்தைச் சந்தித்தன சிகப்புச் சேலை அணிந்து மார்க்கெட்டிலிருந்து திரும்பி எங்கள் முன்னால் போகும் நடுவயதுக்காரிதான் எங்கள் எஜமானி என்று சாயங்காலத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டன அந்தியே நீ இப்போது சிவப்பு கிழக்கும் மேற்குமாக எதன்பொருட்டும் இல்லாமல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்  நாய்கள் சிவப்பு அவை தமது எஜமானி என்று கருதும் அவளும் சிவப்பு.

சி. மோகன் 70 - அதல பாதாளத்தில் வீழ்தலின் வசீகரம்

    ரெய்னர் மரியா ரில்கேயின் தி டூயினோ எலிஜீஸ் காவியத்தின் ஏழாம் பகுதியில் இருந்து சி.   மோகனுக்கான இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.   உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளி உள்ளது அது ஒருமணித்துளியாகக் கூட இல்லாமல் இருக்கலாம், காலத்தின் விதிகளால் அளக்கப்படாத ஒருவெளி அது இரண்டு தருணங்களுக்கு இடைப்பட்டது- அங்கேதான் நீ இருந்தாய். முழுமையாக. இருப்பால் நிறைந்திருக்கிறது ரத்தநாளங்கள்.   சி. மோகனின் உலகநோக்கு, இலக்கியப் பார்வை, விமர்சனங்கள், படைப்புகளுடன் ஓரளவு நெருங்கிய பரிச்சயமுள்ளவன் என்ற வகையில் அவரது ஒட்டுமொத்த ஆளுமையையும் அதலபாதாளத்தில் வீழ்தலின் வசீகரத்தால் தாக்கமுற்றது என்று வரையறுக்க முயல்கிறேன். அவரைச் சிறுவயதில் பாதித்த இலக்கிய ஆளுமையான ஜிநாகராஜன், பின்னர் தாக்கமுற்று நாவலாக எழுதிப் பார்த்த ஓவிய மேதை ராமானுஜம் ஆகியோரைப் பரிசீலிக்கும்போது, அவர்களது கலைப்படைப்புகள் மட்டுமின்றி பின்விளைவுகளோ பலன்களோ கருதாத அவர்களது சாகசமும், பித்தும் சி. மோகனைப் பெரிதாக ஈர்த்துள்ளது.   சி. மோகன் தனக்காகத் தேர்ந்து கொண்ட வாழ்க்கைய...

கவிஞர் நாரணோ ஜெயராமனுக்கு அஞ்சலி

  வேளச்சேரி  காமாட்சி மருத்துவமனை தாண்டி நாரணோ ஜெயராமன் குடியிருக்கும் நன்மங்கலத்தில் உள்ள இல்லத்துக்கு எப்போதும் தொலைபேசியில் கேட்டுக் கேட்டுச் செல்லும் நான் இன்று கேட்கவில்லை. துக்கம், துல்லியத்தைக் கொடுக்கிறது போல. பல்லாவரம் போகும் சிக்னலில் இடதுபக்கம் திரும்பி, நேரே பயணித்து வலதுபக்கம் திரும்பி நீலவர்ணப் பெருமாள் கோயிலைத் தாண்டும்போது நம்பிக்கை வந்தது. நாரணோ ஜெயராமனின் மகனிடம் ஒருமுறை தொலைபேசியில் கேட்டு உறுதிப்படுத்தி அவர் உடல் இருக்கும் வீட்டை அடைந்தேன். குற்றாலம் தர்மராஜன் தான் வேலி மீறிய கிளை தொகுதியை மேற்கு மாம்பலத்தில் உள்ள பழைய புத்தக கடையிலிருந்து 2003-ம் ஆண்டு வாக்கில் வாங்கித்தந்தார் என்று ஞாபகம். சிகப்புத் துணி அட்டையில், மிக எளிமையான சித்திரத்துடன் ஒல்லியாக, மிக மேன்மையும் ஆரோக்கியமும் கொண்ட கவிதைகளின் தொகுப்பு அது. கலாப்ரியாவும் நாரணோ ஜெயராமனும் ஒரு காலகட்டத்தின் புதுக்குரல்கள். உரையாடல் மொழியிலிருந்து உயரும் சமத்காரம் அவரது குரல்.  பிரமிளின் முன்னுரை இன்னமும் படிப்பதற்கு தீட்சண்யத்தை இழக்காதது. கசடதபற குழுவினருக்கு மிக நெருக்கமாக இருந்தவர். க்ரியா ராமக...

டெஸர்ட் ரோஸ் -2

  அவள் ஏன் போனாள் எனக்குத் தெரியவில்லை அன்றிலிருந்து எனது டெசர்ட் ரோஸ் செடி பூக்காத மர்மம் புரியவில்லை ஒரு மரத்தைப் போல அடர்வாக்கி ஒரு வனத்தைப் போல நிறையாக்கி தேன்சிட்டு ஒன்று பூக்காத எனது செடியின் கிளையில் அமர்ந்து நேற்று கொத்தி உலுக்கிக் கொண்டிருந்தது பூக்காத அதன் மேலிருந்த கோபம் எனக்கு ஏனோ தணிந்துவிட்டது என் கோபத்தைத் தணித்தது தெரியாமல் அந்தத் தேன்சிட்டு செடியிலிருந்து விருட்டென்று தவ்வி குடியிருப்பு வீடுகளின் மேல் பறந்து வானமேகி மேகத்தில் நீலத்தில் மறைந்த காட்சியை கழுத்தை உயர்த்தி மடக்கி பார்த்துக் கொண்டிருப்பது மட்டுமே எனக்குத் தெரிகிறது.