கல்கத்தா, மும்பையை மையமாகக் கொண்டு உருவான இந்தியக் கலை மரபின் தொடர்ச்சியில் சுதந்திரத்துக்குப் பிறகு தன் சுயமரபிலிருந்து எழுந்த கலை இயக்கம் மெட்ராஸ் கலை இயக்கம். சென்னை கவின்கலைக் கல்லூரியின் முதல்வராக இருந்த கே. சி. எஸ். பணிக்கர், சிற்பி தனபால் ஆகியோரால் உத்வேகம் பெற்று ஆதிமூலம், சந்தானராஜ், கே. ராமானுஜம் என உருவான கலைமேதைகளின் தொடர்ச்சியில் உருவானவர் சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதி. தேசிய விருதுகளையும் சர்வதேசப் புகழையும் பெற்ற படைப்புகள் இவருடையவை. கும்பகோணம் கவின்கலை கல்லூரியில் முதல்வராக இருந்து ஓய்வுபெற்றவர். சுவாமிமலை ஸ்தபதிகள் குடும்பப் பாரம்பரியத்தில், 11-ம் நூற்றாண்டிலிருந்து நீளும் சிற்பிகளின் கால்வழி மரபில் வந்த நவீன சிற்பி வித்யாசங்கர் ஸ்தபதியிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது...
தாத்தா, தாத்தாவுக்கு அப்பா என்ற நீண்ட மரபு கொண்ட சுவாமிலை ஸ்தபதிகள் குடும்பத்தில் பிறந்து படிக்க வந்தவர் நீங்கள். அந்த அடிப்படையில், மரபு உங்கள் மீது எப்படியான செல்வாக்கைச் செலுத்தியது....சொல்லுங்கள்...
1880-களில் சென்னை கவின்கலைக் கல்லூரியில் முதல்வராக இருந்த இ. பி. ஹெவலின் காலத்தில் உலோகச் சிற்பக் கலைப் பிரிவை ஆரம்பித்து அதன் தலைவராகப் பணிபுரிந்தவர் என் கொள்ளுத்தாத்தா ராமசாமி ஸ்தபதியார். பிதுக்குச் சிற்பங்களில் அவர் விற்பன்னர். எனது தந்தையார் கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலில் பலிபீடம், கொடிமரம், ஆனந்த விமானம் மற்றும் வாகனங்களைச் செய்தவர். அப்போது அங்கே நான் பள்ளிப்படிப்பைப் படித்ததால் அவர் வேலையைக் காணும் வாய்ப்புகளும் ஏற்பட்டன. கோயில் சிற்பங்களையும் அரங்கநாதனுக்கு நடக்கும் திருவிழாக்களும் இசையும் சேர்ந்து எனது கலை ரசனையையும் ஈடுபட்டையும் வளர்த்தன. சிற்ப சாஸ்திரம், நாட்டியம், ஜோதிடம் சம்பந்தமான படிப்பறிவும் கேள்வியறிவும் கல்லூரிக்கு வரும்முன்னரே எனக்கு இருந்தது. திருவொற்றியூர் வடிவுடையாம்பாளுக்கு கவச வேலைகள் செய்தபோது என் அப்பாவுக்கு நான் உதவியாளனாக இருந்திருக்கிறேன்.
நீங்கள் படிக்கும்போது பணிக்கர் தானே உங்களை உலோகச் சிற்பத்துக்கு உங்களைத் திருப்பிவிடுகிறார் இல்லையா?
நான் முதலில் மாடலிங் எனப்படும் சிற்பப் படிப்பைத்தான் மூன்று வருடங்கள் முதலில் படித்து டிப்ளமோ வாங்கினேன். அந்தக் காலகட்டத்தில் எனது குடும்ப வேலையான உலோக வேலை செய்வதில் எனக்கு ஆர்வம் இல்லை. மேல்படிப்பு ஆறு வருடங்கள் படிப்பதற்காக பணிக்கரிடம் சென்று டிகிரி எடுக்கிறேன் என்றேன். ஆனால் அவர்தான், திட்டவட்டமாக படிக்கணும்னு ஆசை இருந்தால் கைவினைத் தொழில் பிரிவில், ஷீட் மெட்டல் பாடத்தை எடுத்துப்படி என்றார். இன்னும் மேம்பட்ட பயிற்சி தேவை என்று கருதினார். மூன்று வருடப் படிப்பை டபுள் ப்ரமோஷன் கொடுத்து இரண்டு வருடமாக்கித் தருகிறேன் என்றார். அங்கே போனால் சட்டி, டம்ளர், பன்னீர் செம்பு இவற்றைத் தட்டுவதுதானே வேலை. இதுதான் எனக்குத் தெரியுமே என்று நினைத்து விரும்பாமல் தான் படிக்கத் தொடங்கினேன். பணிக்கர்தான், எனக்குத் தேவைப்படும் சுதந்திரத்தைத் தருவதாகச் சொன்னார். அதுக்கு அப்புறம் அதிலே போய் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். அந்தக் கல்லூரியிலேயே படித்தவர் என் அப்பா என்பதால் இரண்டு வருடம்தானே படிடா போடா என்று சொல்லிவிட்டார்.
அப்போதுதான் உங்கள் முதல் சிற்பமான ‘பானை ஏந்திய பெண்’ உருவாகிறாள்...
எங்கள் பாடப்பிரிவின் துணைத்தலைவராக இருந்த குப்புசாமி நாயக்கர் என் தாத்தாவின் மாணவர்தான். பாத்திரங்களில் நகாசு வேலை செய்வதைத்தான் அங்கே கற்றுக்கொடுத்தார்கள். எனக்கு அந்த வேலை நன்றாகத் தெரியும் என்பதால் நான் அங்கே கொடுக்கும் பயிற்சியை சீக்கிரமே முடித்துவிட்டு, ஓரத்தில் போய் உட்கார்ந்திருப்பேன். பணிக்கர் கல்லூரியை ஒரு சுற்று வருவார். அப்போது, என்ன சங்கர், உட்கார்ந்திருக்கே என்று கேட்டார். நான் பண்ணிய ஒரு நவீன ஓவியத்தை அவரிடம் காண்பித்தேன். அதைச் சிற்பமாகச் செய்ய வேண்டுமென்று செப்புத் தகடு பெறுவதற்கான அனுமதிக்கு பணிக்கரிடம் கையெழுத்து கேட்டேன். அவர் போட்டுத் தந்தார். ஆனால், கல்லூரியில் ஸ்டாக் இல்லை என்று சொன்னார்கள். இதைக் கேள்விப்பட்ட பணிக்கர் உடனே செப்புத் தகடுக்கு ஆர்டர் போட்டு எனக்கு தகடு வரவைத்துக் கொடுத்தார்கள். தட்டையாக இருக்கிற தகட்டை வளைத்து, குவித்து மூன்று பரிணாமத்தில் செய்தேன். 1964-ம் ஆண்டு அது. இரண்டு அடியில் செப்புத் தகட்டில் உருவான முதல் நவீன புடைப்புச் சிற்பம் அது. அதைப் பணிக்கர் பார்த்துவிட்டு, அப்போது அங்கே மத்திய அரசு சிறப்பு கல்வித்தொகை கொடுத்து ஓவியம் படித்து வந்த எட்டு ஓவியர்களை அழைத்தார். எஸ். ஜி. வாசுதேவ், அக்கிதம் நாராயணன், குனிராமன் உள்ளிட்டவர்கள் தான் அவர்கள். கிட்டத்தட்ட அவர்களிடம் அரைமணி நேரம் அந்தச் சிற்பத்தைப் பற்றி பணிக்கர் பேசினார். அடுத்த நாள் ஓவியப் பிரிவிலிருந்து மாணவர்கள் கைவினைப் பிரிவுக்கு வரத் தொடங்கிவிட்டனர். என்னுடைய படைப்பு அவர்கள் மீது தாக்கம் செலுத்தியது.
அடுத்து வெட்கப்படும் பெண் சிற்பம் ஒன்றைச் செய்தேன். அதற்கு தேசிய விருது கிடைத்தது.
உங்கள் சிற்பங்களில் இந்திய, தமிழ் மரபின் தொடர்ச்சியும் அதேவேளையில் நவீனத் தன்மையும் சேர்ந்தே இருக்கிறதல்லவா..
நான் நவீனம் என்று சொல்ல மாட்டேன். அதைத் தற்காலத் தன்மை என்று சொல்வேன். அந்த இடம் என்னிலிருந்து உருவானது.
உங்கள் முதல் படைப்பே பெண் உருவம் தான். பெண் வடிவம் உங்கள் கலையின் மீது தாக்கம் செலுத்திய விதத்தைச் சொல்லுங்கள்...
பெண்ணிடம் தான் நளினம் இருக்கிறது. குழந்தைகளிலேயே பெண் குழந்தைகள் விளையாடும் விதத்தைப் பாருங்கள். அது வித்தியாசமானது. சாதாரணமாக அவள் நிற்கும்போதே நளினமாகத் தான் நிற்கிறாள். நளினமாகவே நடக்கிறாள். நளினமாகவே அன்றாடக் காரியங்களில் ஈடுபடுகிறாள். காவிரிக் கரையில் நான் பார்த்த பெண்களும் கோயிலில் பார்த்த சிற்பங்களும் என்னுடைய படைப்பில் சேர்ந்துவிடுகின்றனர். பெண் இயற்கையில் உள்ள நளினம் தான் என்னுடைய சிற்பம்.
உங்களது கலைப் பாரம்பரியம் சமய அம்சம், சடங்கியல், இலக்கணம் கொண்டது . நீங்கள் செய்யும் நவீன சிற்பங்களில் அதன் தாக்கம் உள்ளதா?
ஒரு கோயிலுக்கு அம்பாள் விக்கிரகத்தைச் செய்யத் தொடங்கும்போது தியான சுலோகம் சொல்லித்தான் தொடங்குவார்கள். அப்போதுதான் அவள் அந்த ஆலயத்தில் அம்சமாகப் போய் உட்கார முடியும் என்பது நம்பிக்கை. சிற்ப சாஸ்திரம் ஒவ்வொரு கடவுளுக்கும் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டுமென்று கூறுகிறது. குங்கும வர்ணத்தில் நான்கு கைகளை உடையவனே, அங்குசம் பாசம் லட்டு தந்த
த்தைக் கொண்டவனே, பெரிய உருவத்தை உடையவனே என்ற அர்த்தம் வரும் ‘குங்குமவர்ணம் சதுர்புஜம்’ என்று தொடங்கும் சுலோகத்தை விநாயகரைச் செய்யும்போது சொல்வார்கள். சிற்பங்களுக்கு சன்மானம் என்னும் எட்டு லட்சணங்களைச் சொல்வார்கள். ஒவ்வொரு அங்கத்தையும் அப்படிச் செய்யும்போது தன்னாலேயே அந்தந்த குறிப்பிட்ட சிற்பங்கள் உருவாகிவிடும். அதைமீறிச் செய்தால் கோயிலில் ஏற்கமாட்டார்கள். சிற்பமும் ஆகமமும் அதனால்தான் ஒன்றாகிறது.
ஒரு நவீன சிற்பக் கலைஞனாக பார்வையின் அடிப்படையில் தான் நான் இலக்கணத்தை மீறுகிறேன். இயற்கையில் இருப்பதை அப்படியே தத்ரூபமாகச் செய்வது எனது வேலையல்ல. அது யதார்த்தம். சிற்பம் என்ற வார்த்தைக்குப் முழுமையான கனபரிமாணம் கொண்டது என்றுதான் அர்த்தம். அந்த அடிப்படையில் சிற்பத்திலிருந்து மாறுபட்ட தோற்றம் கொண்ட படைப்புகளை நான் உருவாக்குகிறேன். எனது படைப்புகளை மறுபடைப்பு, மறு உருவம் என்று சொல்லலாம். அந்த உருவம் வெளியில் எங்கேயும் இல்லை. எனது கண்கள், பார்வையிலிருந்து உருவான அசல் உருவம் அது. இதை நான் மேற்கத்திய தாக்கத்திலிருந்து செய்யவில்லை. எனது பாரம்பரியத்தின் கைவினைத் திறன்களைக் கொண்டே வந்து சேர்ந்த இடம் அது.
தாந்திரீக மரபின் பாதிப்பு, ஜியோமிதி வடிவங்கள் வழியாகச் சிற்பங்கள் செய்துள்ளீர்கள் இல்லையா?
நமது மரபு இரண்டு முக்கோணங்களில் ஆண், பெண் இரண்டு நிலைகளையும் அடக்கியுள்ளது. இரண்டும் சேரும்போதுதான் உலகம் இயங்கத் தொடங்குகிறது. தக்கோணம் என்று பெயர். எட்டு முக்கோணங்களைச் சேர்த்தால் நடராஜர் வந்துவிடுவார். வைரத்தில் முக்கோணங்கள் பட்டை பிடிக்கப்பட்டு அதிகமாக அதிகமாக ஜொலிப்பும் மதிப்பும் அதிகமாகிறது. நடராஜர் என்பது தத்துவத்தைத்தான் நான் பிரமிட் போன்ற முக்கோண உருவங்களின் வழியாகச் சிற்பமாகப் படைத்திருக்கிறேன். இந்திர, அக்னி, எம, நிருதி, வருண, வாயு, குபேர, ஈசானமென ஜொலிக்கும் எட்டுத் திக்குக்கும் சம்பந்தப்பட்டவன் நடராஜன். எட்டுத் திக்கிலும் நடராஜன் ஆடிக்கொண்டிருக்கிறான். அவன் ஆட்டத்தை நிறுத்தினால் நமது ஆட்டம் அடங்கிவிடும். அதை நான் தற்காலத்துக்கு எடுத்துச் செல்கிறேன். எனது நடராஜர், எனது வேணுகோபாலன் மட்டுமல்ல நான் உருவாக்கிய இயேசுநாதர் சிற்பங்களிலும் அவர் துயரராக வெளிப்படவேயில்லை. அவரை மன்னாதி மன்னனாகவே படைத்திருக்கிறேன்.
மரம், மங்கை, ஊஞ்சல் எனத் தொடர்ந்து இயற்கையையும் பெண்ணையும் தான் மாற்றி மாற்றி சிற்பங்களைப் படைத்து வருகிறீர்கள்...உங்கள் படைப்புகள் கொடுக்கும் புலன் அனுபவம் என்பது தனியானது...
பங்கம், சம பங்கம், அதிபங்கம் என்ற மூன்று பாவங்கள் பெண்ணுக்கு உண்டு. அதே அடவு, தாள பரிமாணங்களோடு ஆடும் ஆணின் பரதம் பெண்ணிலிருந்து அதனால்தான் வேறுபடுகிறது. நமது உணர்வுக்குத் தெரிகிறது. பெண்ணின் குரல் ஒரு இடத்தில் கொடுக்கும் அனுபவம் வேறாக உள்ளது. எனது ஊஞ்சலில் ஆடும் மங்கை சிற்பங்களில், அவள் ஊஞ்சலில் ஆடும்போது அவளில் ஏற்படும் தாக்கம் தெரிகிறது. அவள் ஏகாந்த உணர்வில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவள் எதையோ அசைபோட்டுக் கொண்டிருக்கிறாள். அது அவளைப் பரிமளிக்கச் செய்கிறது. எதிர்காலக் கணவனையோ எதையோ நினைச்சுக்கிட்டு அவள் எதிர்பார்த்திருக்கலாம். அவள் இந்தப் பூமியில் இருக்கிற பெண்தான். ஆனால் அவள் மரத்தடியில் ஆடிக்கொண்டிருக்கிறாள். அங்கே காற்றின் அசைவு, மரத்தின் அழகு எல்லாம் அவளிடம் ஆனந்தமாகச் சேர்கிறது. ஒரு நிறைவு, மகிழ்ச்சி நமது உடலை ஆடச் செய்கிறது. அவள் அசைவில் இருக்கிறாள். அசையும்போது எல்லா அங்கங்களும் அசைகின்றன. ஒவ்வொரு அங்க அசைவுக்கும் ஒவ்வொரு இன்பங்கள். அவள் எல்லாக் காலத்திலும் இருப்பவள். ஊஞ்சல் ஒரு காலத்தில் உறைந்து நிற்கவில்லை. அந்த மரத்தில் கிளி, பறவைகள் எல்லாம் அசைந்துகொண்டிருக்கின்றன.
பாரம்பரியக் கைவினைத் திறன் சார்ந்த தொழில் திறன்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சென்னை கவின்கலை கல்லூரியில் தான் பின்னர் நவீனக் கலை சார்ந்த மெட்ராஸ் கலை இயக்கம் வலுப்பெறுகிறது...இந்தப் பின்னணியில் உங்களிடமோ ஆதிமூலம், சந்ரு போன்ற ஓவியர்களிடமோ உள்ள ஓவிய, சிற்பத் திறன் என்பது பாரம்பரியக் கலைஞர்களுக்கு இணையானதாக இருந்தது. ஆனால், தற்போது உருவங்களைச் சரியாகப் படைக்கமுடியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளதே? பத்திரிகை ஓவியங்களில் கூட அக்காலத்து ஓவியர்களிடம் வெளிப்பட்ட முழுமை இப்போது அரிதாகவே உள்ளது..
காவிரி மணலில் கட்டிடங்கள் கட்டிய காலம் ஒன்று இருந்தது. இப்போது செயற்கை மணல் வந்துவிட்டது. இது காலத்தின் போக்கு. மீண்டும் வளரலாம். தேய்ந்தே மறைந்துபோகலாம். முழுமையான கல்வியுடன் வருபவர்கள் இருந்தனர். வெறும் பாதிப்பினால் வருபவர்கள் பெருகிவிட்டனர்.
இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்...
வயதாகிவிட்டது. என்னால் வேலை செய்ய முடியவில்லை. நான் செய்த சிற்பங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
Comments