இறைஞ்சுதல் ஓங்காரம் பிரார்த்தனையின் ஆரோகணிப்பில்
எவரோ ஒருவரின்
முகம் உதடுகள்
வானத்தை நோக்கிக்
கைகூப்பலைப் போலக் குவிந்தது
அப்போது அவை கோபுரங்களாக மினாரெட்களாகக் கூர்ந்து நீண்டன
அடையும் விழைவில் படிகள் முளைத்தன
எவரையோ எழுப்ப எவரையோ அசைக்க
எழுப்பப்பட்ட அந்த உச்ச ஒலியை
நிலத்தில் உறங்கியவர்களும் பகிர்ந்துகொண்டு விழித்தனர்
ஓட்டகங்கள் தமது மினாரெட் கழுத்தைத் தூக்கிப் பார்த்த போது
ஒரு கணம் அதன் உலோபிச் சிரிப்பு மறைந்துபோனது
கோபுரங்களிலும் மினாரெட்களிலும்
முகட்டுக்கும் கூம்புக்கும்
ஓங்கி ஒலிப்பவன்
செல்வதற்கு படிகள் இருந்ததைப் போல்
ஆரோக்கியமான நுரையீரலுக்கு
நாசிகளென்று
இலைகள் மலர்கள்
ஜியோமிதி வடிவங்களில் ஜன்னல்களும் திறப்புகளும்
வடிவமைக்கப்பட்டன
உடலுறவின் முனகலையொத்த
புறாக்களின் முனகலும்
சிறகுகளின் படபடப்பும் அங்கே தொடங்கின
பெருநகரங்களில் அதிகாலை இருளில்
பச்சையாய் ஜொலிக்கும்
செங்குத்து மினாரெட்கள் இன்றும் உண்டு
மெய்நிகர் தோற்றமோ என்று
இன்னும் நாம் ஏமாறாமல் இருக்க
புறாக்களின் சிறகுப் படபடப்பும்
முனகலும் கோபுரங்களில் உண்டு
பொந்துகளெங்கும் இறகுகளும் எச்சங்களும் உண்டு
அர்த்தப்படுத்த முடியாத இருட்டில் விழித்து முளைத்து
குரலால் சுருதியால்
எண்ணெயும் திரியும் இட்டு
அகல் ஒலியைக் கையிலேந்தி
வானை நோக்கி அறைகூவ
அதிகாலையில்
புறப்பட்டவன் ஏறிய படிகள்
எப்போது
எந்த நூற்றாண்டில்
எந்தத் தருணத்தில் களவுபோயின...
படிகள் இல்லாத அந்தக் கோபுரத்தின் உச்சியில்
வௌவால்கள் சுவைக்கும் சடலம்
யாருடையது.
Comments