மாட்டுக்கறி உணவாக ஆகும்போது, அது உயிர்களை நீட்டிக்க உதவுகிறது. உழைப்பும் உற்பத்தியும் குழந்தைகளும் அதன் வழியாக நீளும் பண்பாடும் உயிர்கள் நீட்டிக்கப்படுவதாலேயே உருவாகின்றன. உயிரை நீட்டிக்க முடிந்த எந்த உணவும் தனித்ததல்ல, விலக்கப்பட்டதல்ல. அதனால், நம்மை வாழ்விக்கும் எல்லா உணவுகளும் உயிர்த்தன்மை கொண்டவையே. அதனாலேயே அவை பொதுப் பண்பாட்டின் உயிரங்கமாகவும் ஆகிவிடுகின்றன. அந்த உயிர்த்தன்மை கலை ஆகும், கவிதை ஆகும் எழில் பச்சோந்தி எழுதிய ‘பீஃப் கவிதைகள்’ தொகுப்பில் நடந்துள்ளது.
தமிழகம், கேரளத்தின் வேறு வேறு பிராந்தியங்களில் உள்ள மாட்டுக்கறிப் பண்பாட்டினூடாகச் செய்த யாத்திரை மூலம் இந்தக் கவிதைகளை அவர் அடைந்துள்ளார். உலகெங்கும் பெரும்பான்மை மனிதர்களின் உணவாதாரமாகவும், இந்தியாவில் ஆறில் ஒரு பகுதிக்கும் மேலான மக்களின் புரதச்சத்தை உறுதிசெய்யும் உயிராதாரமாகவும் உள்ள மாட்டுக் கறி தொடர்பிலான அரிதான பண்பாட்டுத் தரவுகள்தான் ‘பீஃப் கவிதைகள்’.
பச்சோந்தியின் கவிதைகளில் குழந்தைகளுக்கு விளையாட்டுத் தோழனாக மாடு இருக்கிறது; அது குழந்தைப் பருவத்து நினைவின் ஒரு பகுதியாக ஆகிறது; அவர்களுக்கே அல்வாவாகவும் கனியாகவும் சிறுபிராயப் பண்டமாகவும் தெரிகிறது. உயிருடன் இருக்கும்போது புனிதப்படுத்தப்பட்டு, இறந்த பிறகு அதைச் சாப்பிடுபவர்களுடன் சேர்ந்து விலக்கப்பட்ட தொல்நினைவுகள் உறைந்திருக்கும் பெரும் பாறையாக உள்ளது. சில சமூகங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் பிரம்மாண்ட ரொட்டியாக உள்ளது; தொடரும் ஒடுக்குமுறையைப் பாடும் ‘உடைந்த மனிதர்’களின் பறையாக ஆகிறது. மாட்டுடன் திருப்பாவையின் நினைவுகளையும், மாட்டின் கயிறு உரலைப் பின்னும்போது கண்ணனையும் சேர்த்து எழுப்புகிறார் பச்சோந்தி.
கவிஞர்களும் ஆதிவாசிகளும் குழந்தைகளும் உருவாக்கும் தனிப் புராணங்களையும் பச்சோந்தி இந்தக் கவிதைகளில் உருவாக்குகிறார். (மாட்டுவால் மயிரைக் கயிறாய்த் திரித்து/ கரந்தமலையில் தூளியாடினேன்/ மாட்டுக்கொம்பைத் தன் தலையில் பொருத்தி விளையாடிய தங்கை/ தொரட்டிப் பழங்களைப் பறிக்கச் சென்றாள்/ குரங்கொன்று நெல்லிக்காய்களை உலுக்க/ உலுக்கலில் மலையே உதிர்ந்துவிடும்போல் இருந்தது/ பதறியடித்த தங்கையும் நானும்/ மலையை உருட்டிப் புரண்டபடி வீடடைந்தோம்/ தொரட்டிப்பழம் பறிபோன சோகத்தில்/ வழுக்குப் பாறையொத்த மாட்டுத்தொடையில்/ சறுக்கிச் சறுக்கி விளையாண்டோம்.) இந்தக் கவிதையைப் படித்த வாசகருக்கு அதற்குப் பிறகு பார்க்கும் மலைகளெல்லாம் மலையின் சரிவெல்லாம் மாடாகத் தெரியும்.
மாடு, மனிதன், இயற்கை கொள்ளும் உறவை அத்தனை விவரங்களுடன் நுட்பமாகச் சொல்லும்போது மொழி, யதார்த்தம் கடந்த மயங்கும் உணர்வைத் தனது காட்சிகள் வழியாக பச்சோந்தி சாதாரணமாய் உருவாக்கிவிடுகிறார். தோட்டிக்குளத்தில் உலாவரும் மேகங்களை உறிஞ்சிக் குடிக்கிறது மாடு என்ற காட்சியும், அதன் பொடனியில் வீற்றிருந்தபடி காதுமடலைக் குத்தும் ஊர்க்குருவியும், குளம் சொட்டியபடி இருளுக்குள் நுழையும் நண்டும் இப்படித்தான் அமைதியோடு அவர் கவிதைகளில் நுழைகின்றன. நனவுக்கும் நனவிலிக்கும் இயற்கைக்கும் இருப்புக்கும் முன்தீர்மானங்களற்று அசையும் ஊஞ்சலிலிருந்து பச்சோந்திக்குக் கிடைத்திருக்கும் காட்சிகள் இவை. இயற்கை - விலங்கு - மனிதன் ஊடாடும் ஒட்டுமொத்த உயிர்ச் சங்கிலியின் கதைகளாகவும் இவற்றைப் படிக்கலாம்.
வலிந்து மேற்கொள்ளப்பட்ட அரசியல் பாவனையோ, புதியவொன்றைச் சொல்கிறோம் என்ற பரபரப்போ இன்றி தேர்ந்த கவனமும் ஆழமும் மௌனமும் கொண்ட குரல் பச்சோந்தியுடையது. தமிழில் புதுக்கவிதை வடிவம், இங்கே நடுத்தர வர்க்கத்தினரின் உயர்சாதியினரின் விசாரங்களைக் கொண்ட கலை வடிவமாகவே தோற்றம்கொண்டது. ஞானக்கூத்தனிலும் சற்று இறங்கி கலாப்ரியாவிலும் 1990-களின் ஆரம்பத்தில் கவிஞர்கள் பழமலய், யவனிகா ஸ்ரீராம் வழியாகவும் ஜனநாயகத் தன்மையை அடைந்தது. மதிவண்ணனில் உத்வேகம் பெற்ற தலித் கவிதை அழகியல் பச்சோந்தியில் புதிய பரிமாணத்தைச் சாதித்துள்ளது. புதுக்கவிதை என்ற வடிவத்தில் இருந்த உணவும், உருவகிக்கப்பட்ட உயிர்த்தன்மையும் சேர்ந்து ஒரு பண்பாட்டை இணைத்துக்கொண்ட கலை சிருஷ்டியாக ‘பீஃப் கவிதைகள்’ உருவெடுத்துள்ளன.
ரமேஷ்-பிரேதன் சொல்வது போல, ஒரு நாவலாகவும் இந்த மொத்தக் கவிதைகளையும் வாசிக்க முடியும். நினைவுகளில் அவியும் மாட்டுக்கறி, தொழுவத்து மருத்துவக் குறிப்புகள், அக்ரஹாரத்து மாடுகள், வழிப்போக்கனின் புலால் நாற்றம், கோசாலைக் கோயில்மாடுகள், கடைசிப் பச்சையம் தேசியக் கொடியில், வேள்வியில் எஞ்சிய கறியமுதம் என அத்தியாயங்களுக்குக் கீழே கவிதைகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அக்ரஹாரத்து மாடுகள், கோசாலை கோயில்மாடுகள் இரண்டு அத்தியாயங்களையும் பற்றித் தனியாகப் பேச வேண்டும். அக்கிரஹாரத் தெருக்களில் உலவும் மாடுகள், அடக்கப்பட்ட வன்முறையின் சித்திரங்களாகத் தெரிகின்றன. உங்களின் புனிதத்துக்கும் வழிபாட்டுக்கும் எங்கள் உயிர்கள்தானா உங்களுக்கு என்பதுபோல நெற்றியில் நாமமும் திரிசூலம் வரையப்பட்ட கோசாலை மாடுகள் நம்மை வெறிக்கின்றன.
கடைசி அத்தியாயமான 'வேள்வியில் எஞ்சிய கறியமுதம்' கவிதைகள், பாப்லோ நெருடாவின், 'தக்காளிகளுக்கு ஒரு வழியனுப்புதல்' கவிதையை ஞாபகப்படுத்துவது. இந்தக் கவிதைகளில் இசை, ஓவியக் கோலங்களாக மாட்டுக் கறிப் பண்பாடு திருவிழாக் கோலம் கொள்கிறது.
Comments