Skip to main content

பிரவுனி அறிமுகப்படுத்திய விளையாட்டு






காலை நடைக்கு அடிக்கடி செல்லும் பெருங்குடி ரயில் நிலையத்துக்கு அருகில் தான் எனக்கு பிரவுனி, தனது சகோதரனுடன் சேர்ந்து அறிமுகமானது. பிறந்து முப்பது முதல் நாற்பது நாட்கள் இருக்கலாம். நடமாட்டமும் பராமரிப்பும் குறைந்த பூட்டப்பட்ட சிறிய பூங்காவின் வாயிலில் உடம்பு முழுவதும் துறுதுறுப்பு, விளையாட்டுடன் எனக்கு பிரவுனி அறிமுகமானது. சில நாட்களிலேயே அதன் சகோதரனுக்குக் காலில் விபத்து ஏற்பட்டு, காலில் யாரோ கட்டுப்போட்டிருக்க இறந்தும் போனது. தனது சகோதரன் இறந்துபோனது தெரியாமல், பிரவுனி அதைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருந்தது. அதுவரை, நாய் வளர்ப்பு தொடர்பில் அசூயை கொண்டிருந்த எனக்கு, பிரவுனியை வீட்டுக்குக் கொண்டு போகவேண்டுமென்று தோன்றிவிட்டது. நான் பிரவுனியைத் தேர்ந்தெடுக்கவில்லை; அதுதான் என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.

பிரவுனி பெண் நாய்க்குட்டி. ஆனால், எங்களுக்கு ஏற்கெனவே மகள் இருப்பதாலும், பிரவுனியின் துடுக்கு, விளையாட்டுத் தனத்தாலும் அதைக் கேலி செய்வதற்கு வாகாக இருப்பதாலும் நாங்கள் அதை ஆணாகவே  விளிக்கிறோம்.

என்னுடைய விளையாட்டு இயல்பின் முழு உருவகமாகப் பிரவுனியைக் காண்கிறேன். ஆனால் பிரவுனியை ஒப்பிடும்போது நான் அழுகுணி, இன்னும் தீவிரப் போக்கைக் கைவிட வேண்டியவன். இந்த உலகிலிருந்து எதையும் எடுப்பதல்ல, கொடுப்பது தான் விளையாட்டு என்பதை எனக்கு நித்தமும் சொல்லித்தந்த குரு பிரவுனிதான்.

பிரவுனியின் வேலை என்ன? பிரவுனி இந்த உலகத்துக்குக் கொடுக்கும் அர்த்தம் என்ன? பிரவுனியால் இந்த உலகத்துக்கு என்ன பயன்?

பிரவுனியால் ஒரு கடைக்குச் சென்று கீரைக்கட்டு வாங்க முடியாது. பிரவுனியால் ஒரு வாளி தண்ணீரை எடுத்து செடிகளுக்கு ஊற்றமுடியாது. பிரவுனியால், வரும் விருந்தினர்களுக்கு ஒரு காபி போட்டுத் தரமுடியாது.

ஆனால், அலுவலகத்திலிருந்து எத்தனை வாதைகளுடன் திரும்பும்போதும் ப்ரவுனி வீட்டில் இருப்பது  அதன் முகத்தோடு ஞாபகத்துக்கு வந்துவிட்டால் மனம் ஒரு அமைதியை அடையும். இனிமேல்தான் நானே நிரப்ப வேண்டிய, நானே வண்ணமடிக்க வேண்டிய, நானே நிகழ்ச்சிகளை உருவாக்க வேண்டிய ஒரு காலியான நாளின் காலையில் விழிக்கும்போதெல்லாம், வீட்டின் வெளியறையில் பிரவுனியின் கழுத்து மணியோசை ஒலித்து இந்த உலகின் உயிர்த்தன்மையை எனக்கு ஞாபகப்படுத்தும். நம் உடம்பு, மனம் உணரும் அத்தனை படபடப்பையும் குழந்தைகளின் உடல் ஸ்பரிசம், குணம் ஊட்டுவது போல பிரவுனியின் பார்வையும் அதன் உடல் ஸ்பரிசமும் குணத்தையும் அமைதியையும் கொடுக்கவல்லது. நான் பிரவுனியுடன் கோபமாக வன்முறையாக நடந்துகொள்ளலாம்; பாராமுகமாக இருக்கலாம்; வாஞ்சையுடன் திகழலாம். அது எதுவும் என் பொறுப்பல்ல என்பதைப் போல அது அன்பையும் இதத்தையும் மட்டுமே பரிசாகத் தருகிறது.

அது எங்கள் வீட்டுக்கு வந்து ஓரிரு மாதங்களில் செருப்புகளையும் மூங்கில் நாற்காலிகளின் கால்களையும் கடித்துத் தனது ஈறுகளையும் பற்களையும் தீட்டிக் கொண்டது. அதன்பிறகு கைக்குட்டைகள், காலுறைகளை மொட்டைமாடிக்குத் தூக்கிப் போய் கந்தலாக்கிய துணிகளைத் தின்னவும் செய்தது. அடுத்த நாள் பிரவுனியின் மலத்தில் அது முந்தின தினம் சாப்பிட்ட துணிகளின் வண்ண நூலிழைகளைக் காணமுடியும்.

ஒரு நாள் கொடியில் காயப்போட்டிருந்த லுங்கியை இழுத்து மொட்டை மாடிக்குப் படியேறிய போது கையும் களவுமாகப் பிடித்தேன். துணியையோ செருப்பையோ கவ்வினால் அதைத் துரத்துவதற்குப் பாய்வோம் என்பதை பிரவுனி சில நாட்களில் அறிந்துகொண்டது.



பிரவுனிக்கும் எங்களுக்குமான உறவில் எல்லா உறவுகளையும் போன்றே இரண்டாம் கட்டம் ஒன்று வந்தது. பெண்குட்டியாக இருந்த பிரவுனி பருவத்தை அடைந்து, உதிரப் போக்கைச் சந்தித்தது. அப்போது அதன் எரிச்சலும் குரைப்பும் அதிகமானது. அப்போது வீட்டுக்கு வந்திருந்த என் மனைவியின் நெருங்கிய தோழியின் தாயார், பெண் நாயை வீட்டில் வளர்க்கக் கூடாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அப்போதிருந்து, வீட்டில் பிரவுனியை காப்பகம் ஏதாவதில் விடவேண்டுமென்று சொல்லத் தொடங்கிவிட்டார்கள். என்னைத் தவிர பிரவுனியுடன் வீட்டில் உள்ள மற்றவர்கள் விளையாடுவதை எல்லாரும் குறைத்துக் கொண்டனர். பிரவுனி யின் சின்னச் சின்னக் குறும்புகளும் அவனைக் குற்றமூலைக்குத் தள்ளிக் கொண்டிருந்தன. நான் ப்ரவுனியை விட முடியாது போராடிக் கொண்டிருந்தேன். வீட்டின் வாயில்கதவு திறந்தால், மாடியிலிருந்து இறங்கி தெருவுக்குப் போவதையும் ப்ரவுனி அப்போது பழக்கப்படுத்தியிருந்தான். திரும்ப வீட்டுக்குக் கூட்டி வருவது சிரமமாக ஆகியிருந்தது. அவனுக்கு வீடு பிடிக்கிறதா, தெரு பிடிக்கிறதா என்று எனக்கே குழப்பம் தொடங்கியிருந்தது. கீழ்வீட்டில் வசிப்பவர்கள் கொடியில் உலரப் போடும் துணிகளையும் இழுத்து, கடித்து வைத்து அவர்களும் புகார் சொல்லும் அளவுக்கு அதன் குற்றங்கள் கூடிக்கொண்டே இருந்தது.

ஒரு நாள் வீட்டிலிருந்து அலுவலகத்துக்குத் தொலைபேசி வந்தது. அவனது சமீபத்திய பழக்கத்தில் கேட் திறந்திருந்த போது, வெளியே போய், தெரு நாய்கள் சில துரத்தி, பலமான காயம் பெற்றுத் திரும்பியிருப்பதாகச் சொன்னார்கள்.

நான் இரவு வந்தபோது, கிழிந்த துணி போல பிரவுனி இருந்தான். நான் உடனடியாக வேளச்சேரி மருத்துவமனை ஒன்றை அலைபேசியில் கூப்பிட்டு அவசர ஊர்தியை வரவைத்து அழைத்துக் கொண்டுபோய், கிழிந்த காயத்துக்குத் தையல் போட்டுத் திரும்பினேன்.

இரண்டாம் உலகப் போரில் ஊனமடைந்த முன்னாள் ராணுவ வீரனைப் போல இரண்டு பின்னங்கால்களில் கட்டுடன் தத்தி தத்தி நடந்து சிறுநீர் கழித்துவிட்டு வருவான் பிரவுனி. ஒரு மாதத்தில் தேறிவந்தான்.

அந்தக் காலம் மட்டும்தான் அவன் சோர்ந்திருந்த காலம். ஆனால், எந்த நிகழ்ச்சியையும் தனியாகப் பார்த்து, அதை அதிர்ஷ்டமென்றோ துரதிர்ஷ்டமென்றோ முடிவுகட்ட முடியாது; ஒவ்வொரு துரதிர்ஷ்ட நிகழ்ச்சியும் அடுத்து வரும் அதிர்ஷ்ட தருணத்தின் திருப்பத்தையும், ஒவ்வொரு அதிர்ஷ்ட தருணமும் அடுத்து வரும் துரதிர்ஷ்ட நிகழ்ச்சியின் சாத்தியத் திருப்பத்தையும் வைத்துள்ளது. அத்துடன், அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் தன் சார்பிலான விளக்கங்களே. அதை பிரவுனிதான் உரைத்தான்.

பிரவுனி, தெரு நாய்களிடமிருந்து பெற்ற தாக்குதலும் அதனால் ஏற்பட்ட படுகாயமும், பாராமுகமாக இருந்த எனது மனைவியையும் மகளையும் அவனிடம் மீண்டும் கொண்டு சேர்த்தது. அவன் படிப்படியாக அவர்களிடம் தூர்ந்து போன அன்பின் சுனையை மராமத்து செய்து  மீண்டும் தனக்குச் சாதகமான வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டான். 

பிரவுனிக்கு வாழ்க்கை ஒட்டுமொத்தமும் விளையாட்டு என்பதை யாரோ அவனது மரபின் வழியாகக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். திருமண வீட்டில் இறந்த வீடுகளில் குழந்தைகளுக்கு என்ன தேவை? எல்லா அறைகளுக்குள்ளேயும் வெளியிலும் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் எதை உருவகம் செய்கிறார்கள்?

பிரவுனி விளையாட்டுக்கு நடுவில் உணவுண்ணுகிறது; விளையாட்டுக்கு நடுவில் பூனைகளையும் அந்நிய நபர்களையும் பார்த்து குரைக்கிறது; விளையாட்டுக்கு நடுவில் உறங்குகிறது. விளையாட்டுக்கு நடுவில் வீட்டுக்கும் மொட்டை மாடிக்கும் ஓடியபடி இருக்கிறது. நாளிரவு பாராமல் வீட்டில் உள்ளவர்களை விளையாடத் தூண்டிக் கொண்டு விளையாட்டுக்குக் காத்திருக்கிறது.

துணிகளை அவ்வப்போது குதறி சேதாரப்படுத்தும் பழக்கம் முற்றிலும் போகவில்லை பிரவுனிக்கு. இப்போதெல்லாம் அந்தக் குற்றங்களில் ஈடுபடுவதில்லை என்று நான் பெருமூச்சு விடும்போதெல்லாம், ஒரு புதிய குற்றத்தைக் கேள்விப்படுவதால் நான் நிம்மதிப் பெருமூச்சே இப்போது விடுவதில்லை. ஆனால், அதன் குற்றங்கள் குறைந்திருக்கிறது. படிப்படியாக அது தன் குற்றத்தை விளையாட்டின் இடத்துக்குக் கொண்டு போய் விட்டது என்று சொல்லலாம்.

வீட்டிலுள்ளவர்கள் கவனத்தை ஈர்த்து தன்னுடன் ஈடுபடுத்தப் பொருட்களைக் கவ்வுவதை வழக்கமாக்கியுள்ளது. என்னை எனது வீட்டார் மிகத் தாமதமாக ஏற்றுக்கொண்டதைப் போலவே பிரவுனி தனது இரண்டாம் பருவத்தில் எங்கள் வீட்டுக்குள் அழுத்தமான தடத்தைப் பதியத் தொடங்கியுள்ளது. இதுவும் நிரந்தரம் அல்ல என்று தெரியும். அதையும் பிரவுனிதான் சொல்லிக் கொடுத்திருக்கிறது. எதுவும் நிரந்தரம் அல்ல என்பதையும். காது மடல் தொடங்கி வால் வரை அதற்கு இருக்கும் விழிப்பு எனது உடலிலும் மனத்திலும் பிரவுனியால் தொடர்ந்து ஏற்றப்பட்டு வருகிறது.

பொருட்களின் அளவு பெரியதல்ல; ஒரு கருங்கல், ஒரு செய்தித்தாள் மடிப்பு, பாலித்தீன், மஞ்சள் துணிப்பை, சுள்ளிக்கிளை எதையாவது கவ்வி பிரவுனி எங்களை விளையாட்டுக்கு அழைக்கிறது.

விளையாட்டில் யாரும் தனியர் ஆக இல்லை; ஒரு பொருளைக் கவ்வியவுடன்  கண்ணுக்குப் புலப்படாத விசையொன்றைப் பற்றித் துள்ளுகிறது. மானாகி குதிரையாகி பறவையாகிப் படிகளில் ஏறி, மிகச் சிறிய பரப்புள்ள மொட்டை மாடியின் சுவர்களை அளவில்லாததாக்கி ஓடிச் சுழன்று, என்னைத் துரத்தி அதன் தனிவிளையாட்டுக்கு அழைக்கிறது.
பிச்சாடனரும் பைரவரும் மானுடன் நாயுடன் ஏன் காட்சியளிக்கிறார்கள்?

அங்கே விளையாடுவது விளையாட்டுக்கு அழைக்கப்படுவது இரண்டுக்கும் காயங்களே ஆகாதது போன்ற விளையாட்டு அது. ஒருகட்டத்தில் நானும் ப்ரவுனியும் யார் மிருகம் என்று தெரியாதளவு எங்களின் மூச்சு சேர்ந்து இரைகிறது. இரண்டு பேரும் தரையில் புரள்கிறோம். பிரவுனியின் காது உட்பட ஒரு கிளாடியேட்டரைப் போல அசைந்து செயல்படுகிறது.

அவர்கள் காயங்களும் அல்ல.

நான் துரத்தத் துரத்த பிரவுனி ஓடும்போது பிரவுனியின் உடல் முழுவதும் விளையாட்டு; அதன் திறந்திரைக்கும் வாய், விளையாட்டு; நரசிம்மம் போலத் தொங்கும் அதன் நாக்கு, விளையாட்டு; நரசிம்மர் மடியில் வைத்திருப்பதோ பல், நகங்களால் கீறிக்கிழித்த சடலம். ஆனால், நரசிம்மரின் கண்களில் குழந்தையின் பேதைமையும் விளையாட்டும் தானே இருக்கிறது.  கோலிக்குண்டின் நடுவில் உள்ள பூ போலச் சுடரும் பிரவுனியின் கண்கள் விளையாட்டு.

பிரவுனிக்கு என் மனைவி, தனது பிறந்த நாளையொட்டி ஒரு பந்தையும் சிவப்பு வண்ணத்தில் ஒரு காலரையும் கழுத்து மணியையும் பரிசாக வாங்கி அளித்திருக்கிறாள். அந்தப் பந்தை வாயில் கவ்விக் கொண்டு உற்சாகத்துடன் அலைகிறது பிரவுனி. நள்ளிரவு நெருங்கும் நேரத்திலும் அது வாயில் கவ்விய பந்தை, என் மனைவியின் மார்பிலும் மடியிலும் கால்களிலும் போட்டு திரும்ப விளையாடக் கூப்பிடும். அந்தப் பந்தை எடுத்துத் தூக்கி எறிந்தால், அது வாயால் கவ்வி எடுத்து வந்து மீண்டும் தரும். அதுதான் விளையாட்டு. வாயில் கவ்விய பந்தை விடுவிக்க பல நேரங்களில் தடுமாறும். அப்போது வாயைப் பிளந்து விடுவிக்க வேண்டும்.





உணவு, தேவை, பழக்கம், குற்றங்களை மெதுமெதுவாகத் தன் இயல்பிலிருந்தே ஒரு தனித்துவ விளையாட்டாக என் கண்முன்னால் மாற்றியது. ப்ரவுனி வடிவமைத்த விளையாட்டு அது.

Comments

Natchathra said…
ப்ரவுனி, மனித இயல்பினின்று எழும் வக்ரம் குரோதம் மிருகத் தன்மை அனைத்தையும் துறந்த சின்னஞ்சிறு ஆன்மா இவன்.பெண்ணின் உடலைக் கைப்பற்றி ஆண் தன்மையில் தன்னை வரித்துக் கொண்ட ஜீவன்.நமது அனைத்து விதமான எதிர் உணர்வுகளையும் பந்தைப் போலக் கவ்வி தனது இயல்பின் அன்பால் அவற்றைத் தூய கருணை வடிவாக்கிடும் சிறு உயிரின் அனபு மகோன்னதமானது.அருமை தோழர்.
அற்புதம், படிக்கும்போது உடனிருந்து நாமும் ப்ரவுனியுடன் பயணிப்பது போன்ற உணர்வு. 💐💐💐
வாசிக்கவே மகிழ்ச்சியாஇருக்கு. Ginger, Garluc என்னும் இரு குட்டிகளை கல்லூரி கால்பந்து மைதானத்திலிருந்து கொண்டு வந்து சிலவருடங்கள் வீட்டில் வளர்த்ததை, அந்த பொற்காலங்களை நினைவூட்டியது இந்தப்பதிவு. அலுத்துக்களைத்த மாலைகளில் யாரும் காத்திராத வீட்டிற்கு திரும்புகையில் முன்னைப்போலல்லாது அவையிரண்டும் துள்ளிக்கொண்டு என்னை எதிர்கொள்ளும் என்னும் கற்பனையே என்னை பலகாலம் செலுத்திக்கொண்டிருந்தது.ஒருஇஸ்லாமிய நண்பரின் தோட்டத்தில் கொண்டுவிடப்பட்ட அவற்றின் கண்களை சந்திக்கும் துணிவில்லாததால் மீண்டும் பார்க்கவேயில்லை இரண்டையும். பிரவுனிக்கு வாழ்வு மொத்தமும் விளையாட்டுதான் என மரபணுக்களில் பொதிந்தனுப்பிய ஊழ் நமக்கும் அப்படி பொதிந்தனுப்பியிருக்கலாம் மொத்த வாழ்வும் துயரும் துயர் சார்ந்ததுதானென்று. //பிச்சாடனரும் பைரவரும் மானுடன் நாயுடன் ஏன் காட்சியளிக்கிறார்கள்//loved this !எதையும் எடுத்துக்கொள்ளாமல் கொடுத்துக்கொண்டேயிருக்கும் விளையாட்டுகளால் நிறையட்டும் பிரவுனியின், உங்களின் வாழ்வு .
எரிச்சல், அசுயை, கோபம், பொறாமை, இரக்கம், கொடை, தயவு ,ஆசை என அனைத்தையையும் விளையாட்டு என்று உணர்த்தும் ப்ரவுனிக்கு வணக்கம். நன்றி ஷங்கர்

"யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!"
மணிகண்டன் நலமா,

தேங்க் யூ
நலம் ஷங்கர் - நீங்கள் ?

இவ்வரிகளை எடுத்துக் கண்டேன்
"செஞ்சூரியன் தலைகுனிந்து என் ப்ரவுனியை ஆசீர்வதிக்கிறான்"
shabda said…
என்னை உயிர்ப்பிக்கிறது தங்களின் இந்த எழுத்துக்கள்