Skip to main content

அபி கண்ட ‘தெளிவு’


தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே  .

- திருமூலர்

காண்பவர்கள் எல்லாம் கண்டவர்கள் அல்ல. கண்டவர்கள் எல்லாம் அதை விண்டுசொல்ல முயன்றாலும் சொல்ல முடிந்தவர்களோ சொல்லியவர்களோ அல்ல. காண்பதற்கும் கண்டுசொல்வதற்கும், காண்பவர்களுக்கும் கண்டுசொல்பவர்களுக்கும், அணுக்கமான ஊடகமாக கவிதை எல்லா கலாசாரங்களிலும் எல்லாப் பிரதேசங்களிலும் இருக்கிறது. அதனால்தான் இருப்பின் அடிப்படையை நோக்கி, அது இன்னமும் விலக்காமல் வைத்திருக்கும் ரகசியங்களின் அந்தகாரத்தைக் கிழிக்க, மொழியின் குதிரையில் ஏறிப் பயணிக்க முயற்சித்த எந்தக் கவிஞனும், நன்மை, தீமை என்று அவன் கையாண்ட உள்ளடக்க வேறுபாடின்றி, ஒரு காலகட்டத்துக்குப் பிறகு சமயத்தன்மையை அடைந்துவிடுகிறான். கிறிஸ்துவை எதிர்த்து, கிறிஸ்துவைக் கிழித்து அவன் பிறப்பதற்கு முன்பாக இருந்த ஒரு மானுடத்தோடு தம்மை இனம்கண்டு கொண்ட பாதலேரும், ஆர்தர் ரைம்போவும் கிறிஸ்துவின் தன்மையை அடைவது போன்றது அது. 

தமிழ்க் கவிதையிலும் மாணிக்கவாசகர், திருமூலர், தாயுமானவர், வள்ளலார், பாரதி என அண்மை வரை ஓர் மரபும், நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஆனந்த், தேவதச்சன் என ஒரு புதிய மரபும் உள்ளது. இவர்களில் காண்பவர்களும் கண்டவர்களும் உண்டு. பின்னால் நான் சொன்ன புதிய மரபில் ‘கண்டவர்’ என்று துல்லியமாக கவிஞர் அபியை மட்டுமே எனக்கு இப்போதைக்குச் சொல்லமுடிகிறது. மொழி, கற்பனை, கவித்துவ உச்சம் எனக் கவிதை சார்ந்த அம்சங்களின் அடிப்படையில் இந்தக் ‘கண்டவர்’-ஐ நான் வரையறை செய்யவில்லை. அபி, கவிதை என்ற ஊடகத்தின் வழியாக வாசிப்பவனுக்குத் தரும் அமைதி, தான் கண்டதை தனது கவிதை ஊடகத்தின் வழியாக, பெரிய சேதாரம் எதுவும் இன்றி பெறுமதியோடு பரிமாற்றம் செய்துவிடும் அநாயசம் ஆகியவற்றால் அபியை ‘கண்டவர்’ என்று மதிப்பிடுகிறேன். அபியின் கவிதையை வாசிக்கும்போது, அந்தக் கவிதையில் விவரிப்பவனுக்கு நிகழ்வது எல்லாம் வாசிக்கும் எனக்கும் நிகழ்கிறது. அந்தத் ‘தெளிவு’தான் அபி ‘கண்டது’.

தெளிவு

பிம்பங்களிலிருந்து 

விடுபடவும்

என் மலையடிவார நகரின்

மாலைக்காற்று வந்து வருடவும்

சரியாயிருந்தது


என்றைக்குமில்லாமல் இன்று

பின்னணி ஓசைகள் இன்றி

முனகலின்றி

வந்து நின்றது இருள்


சாம்பல்நிறம் மாறுமுன்

விடைபெற்றுக் கொண்டது வானம்


சொல் அவிதலும்

இரவு அவிழ்தலும் 

இசைவாகின

இங்கேயும் ஒன்று உள்ளேயும் புறத்தேயும் சரியாய் இணைகிறது. 


யாருடையதென்றிலாத 

சோகம்

அரைக்கண் பார்வைபோல்

கிறங்கித் திரிந்தது


எதையும் தொட்டிராத

என் புதிய கைகள்

எங்கெங்கும் நீண்டு

எதையும் தொடாது

திளைத்தன


தனித்தலின் பரவசம்

அனுபவத்தின் கையிருப்பில்

அடங்காது

நழுவி

விரிவு கொண்டது


தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்

பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன்.


காணும் காட்சிகள் நமக்கு அவதியைக் கொடுக்கின்றனவா என்ன? பிம்பங்கள்தான் துயரைத் தருகின்றன. பிம்பம் என்னில் விழுகிறது. என்னையும் சேர்த்துக் கொண்டு விழுவதால் என் ரத்தக்கறையும் அதில் ஏறிவிடுகிறது. காட்சி என்பது அதனளவில் நன்மையையோ தீமையையோ சந்தோஷத்தையோ துயரத்தையோ தருவதில்லை. அதனால் காட்சிகளிலிருந்து நாம் விடுபடவும் வேண்டியதில்லை என்பதை ‘தெளிவு’ கவிதையின் முதல் அடியே, கடைசி ஆணியைப் போல எனது சவப்பெட்டியை அறைகிறது. நான் சந்தோஷமாக செத்துப்போவதற்கு அதனால்தான் திரும்பத் திரும்ப அபியிடம் வருகிறேன்.

பிம்பங்களிலிருந்து 

விடுபடவும்

என் மலையடிவார நகரின்

மாலைக்காற்று வந்து வருடவும்

சரியாயிருந்தது

ஆமாம். எது முதலில் நிகழ்கிறது. எது காரணமாக எது காரியமாக இருக்கிறது. அது நடந்து இது நடக்கவில்லை. உள்ளே ஒன்று விடுபடுவதும் மாலைக்காற்று வெளியிலிருந்து வந்து வருடவும் ஒரே தருணத்தில் நிகழ்வது அதிசயமல்ல. ஆனால், அப்படி நிகழ்வது இங்கே எனக்குப் பகிரப்பட்டுவிடுகிறது. நான் அந்த அனுபவத்துக்குள் மறந்து கிறங்கத் தொடங்கிவிடுகிறேன்.

சொல் அவிதலும்

இரவு அவிழ்தலும் 

இசைவாகின

இங்கேயும் ஒன்று உள்ளேயும் புறத்தேயும் சரியாய் இணைகிறது. 

யாருடையதென்றிலாத 

சோகம்

அரைக்கண் பார்வைபோல்

கிறங்கித் திரிந்தது

என்று சொல்லும்போது உண்மையிலேயே அது சோகமானதா என்று சந்தேகம் தோன்றுகிறது. அந்தியின் பொன்னைக் கருக்கொண்ட சிவப்பில் தனிப்பட்ட துயரமோ, தனிப்பட்ட இனிமையோ மட்டுமா சேமிக்கப்பட்டிருக்கிறது. பீம்சென் ஜோஷியின் ஓங்கார குரல் எடுப்பில் ஒருவனது, ஒருத்தியினது ஏக்கமும் தாபமும் மட்டுமா குடிகொண்டிருக்கிறது. யாருடையதென்றில்லாமல் ஆகும்போது அது சோகம் மட்டும்தானா? 

அதன் போதை, விட்டு இறங்கிப் போய்விடாதே என்றல்லவா கெஞ்ச வைக்கிறது. ஆனாலும், அதைத் தாங்கிக் கொள்ள எனது தனியுடல் போதாது என்றும் தெரிவதால் அதை வெளியே வளியில் இசையாக, கவிதையாக, பெருமூச்சாக இறக்கிவிடுகிறேன். 

அப்போது அங்கே புலன்கள் எல்லாம் புதுமை கொள்கின்றன.

எதையும் தொட்டிராத

என் புதிய கைகள்

எங்கெங்கும் நீண்டு

எதையும் தொடாது

திளைத்தன.

எனக்குக் கைகள் வெட்டப்பட்டால் நான் முடவன் தான். ஆக்டோபஸுக்கு வெட்டப்பட்டால் திரும்பக் கைகள் வளரும். அந்தப் புலன்களின் புதிய கைகளைத் தான் அபி சொல்கிறார் போலும். இருள் அடையும் அந்தியை அவை எங்கேயும் தொடாது தரிக்காது திளைத்து நீண்டு சுருங்குபவை.   

தனித்தலின் பரவசம்

அனுபவத்தின் கையிருப்பில்

அடங்காது

நழுவி

விரிவு கொண்டது.

‘தனித்தல்’ என்று அபி சொல்வது எனக்குப் புதிதாக இருந்தது. தனித்திருத்தலுக்கும் தனித்தலுக்கும் வித்தியாசம் உள்ளது. இருப்பைவிடக் குறைந்த ஓர் அனுபவத்தை அவர் சுட்டுகிறார். இருத்தலை விட மங்கலாக நுண்மையாக அது இருக்கிறது போல.  தனித்து அலைவதும் அல்ல அது. 

அனுபவத்தின் கஜானாவை எல்லையற்றது என்று அது கருதிக்கொண்டிருக்கும் இறுமாப்புக்கும் வேட்டுவைத்து, அதன் கையிருப்பிலிருந்து அடங்காது நழுவி விரிவு கொள்கிறது, ஒரு ஜெல்லி மீனைப் போல அந்தப் பரவசம்.

கவிதையின் இறுதிப்பத்தி தோட்டா போல, கபாலத்தில் இறங்குவது. தெளிவுக்கு நேரெதிராகச் சென்று, ஆனால் தெளிவது.


தெளிவு என்பது பொய்

என அறியாது

தெளிவைத் தேடிப் பிடிவாதம் ஏறிப்

பாமரப் பயிற்சிகளால் களைத்து மகிழ்ந்த

பழைய நாட்களை நினைத்துக் கொண்டேன். 

Comments