Skip to main content

பைரவருக்குப் பரிகாரம்

பரபரப்பும் சந்தடியும் ஓட்டமும் ஒரு பழைய ஞாபகமென அசைபோடும் அளவுக்கு இந்தப் பெருந்தொற்று நம்மை எல்லா முனைகளிலும் அறைந்து வீட்டில் இருத்தி வைத்து, கிட்டத்தட்ட ஒரு வருடத்தைக் கடந்துவிட்டோம். இந்த நாட்களில் அதிகம் பாதிக்கப்பட்ட உயிர்களில் ஒன்றாக எனக்குக் கண்ணுக்குத் தெரிவது, தெரு நாய்கள். 

பூனைகளின் வாழ்க்கை என்றைக்குமான ரகசியத்துடனேயே திகழ்கிறது. அவர்களது உலகத்தில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்துக் குறைபாடு, வேலையின்மை, சம்பளக் குறைப்பு, குடும்ப வன்முறை என எந்தப் பிரச்சினை குறித்தும் நமக்குத் தகவல்கள் இல்லை. அவை நாம் வசிக்கும் வீடுகளில் தெருக்களில் நம்மைக் கடக்கும்போது தென்படுகின்றன. வீடுகளில் சமையலுக்காக மீனின் தலைகள் பிய்க்கப்படும் வரை அவற்றின் உலகம் ரகசியமாகவேத் திகழும் என்று நாம் இப்போதைக்கு நம்பலாம். ஆள் நடமாட்டம் குறைந்து, ஆள் நடமாட்டம் குறைவதால் கிடைக்கும் உணவாதாரமும் குறைந்து காலி வீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் தெருக்களில், பூங்காக்களில், ரயில் நிலையங்களின் வளாகங்களில் நாய்கள் சலித்து நிற்பதையும் அலைவதையும் பார்க்கிறேன். இந்த வருடமும் நிறைய நாய்க்குட்டிகள் பிறந்திருக்கின்றன. அவை என்னைப் போலவே சாலையின் குறுக்கும் நெடுக்குமாக கவலையில்லாமல் அலைந்து திரிகின்றன - என்னைப் போலவே.

சமீப நாட்களில் பசு மாடுகளும் வேளச்சேரியில் அந்தி நெருங்கும் வேளையில் தெருக்களின் முனைகளில் நிற்பதைப் பார்க்கிறேன். அவை ஒருவிதமாக வயிற்றைப் புரட்டும் ஓங்காரத்தை வெளியிடுகின்றன. அந்தச் சத்தம் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. பகல் முழுவதும் அவை மேயவிடப்பட்டு, உரிமையாளர்களால், இரவில் அவற்றின் தொழுவங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றன. சமீப சில ஆண்டுகளில் ஆலய கோசாலைகளிலும், ஆளும் இந்துத்துவ அரசியலின் அடையாளமாகவும் ஆன இந்தப் பசுக்கள் சாலையில் அலையும்போது அந்தஸ்து ஏதுமில்லாமல், ஒரு கீரைக்கட்டுக்குக் கூட நாதியற்ற உயிர்களாகவே அலைகின்றன. இந்தியாவில் தங்களுக்கென்று ஒரு சொர்க்கபூமி வடக்கே உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருக்கிறதென்றும், மனிதர்களை விட, அங்கே தமக்கு மரியாதை அளிக்கும் தலைவர்கள் இருக்கிறார்களென்றும், இந்தத் தமிழ் மாடுகளுக்குத் தெரிவதற்கு நியாயமேயில்லை. 

இரண்டாவது அலைப் பெருந்தொற்றுக்குப் பிறகு, வேளச்சேரியிலும் பெருங்குடி ரயில் நிலையத்தை ஒட்டிய பகுதிகளிலும் ஆதரவற்று அலையும் நாய்களுக்கு உணவிடுபவர்கள் வழக்கத்தை விடக் கூடியுள்ளார்கள். இருபது நாட்களுக்கு முன்னர், என் தெருவில் உள்ள ஐந்து நாய்களுக்கு வாழை இலை கொண்டுவந்து பால் கலந்த சோறு இடும், ஒரு அம்மா எனக்கு ஏற்கெனவே பரிச்சயமானவர். அவர்தான் முதலில் எனக்கு இத்தகவலைச் சொன்னார். பைரவருக்குக் கோபம் ஏற்பட்டதால் தான் கரோனா போன்ற பேரிடர் நமக்குக் கொடுக்கப்பட்டதென்று ஜோதிடர் ஒருவர் தொலைக்காட்சியில் பேசியதாகவும் அதிலிருந்து பைரவரின் கோபத்தைத் திருப்திபடுத்தவே நாய்களுக்கு உணவிடுவதாகவும் சொன்னார். 

பெருந்தொற்று போல நீண்டநாட்கள் பெறும் தாக்கம் மற்றும் அனுபவத்திலிருந்து ஒரு சமூகம் எப்படி வினைபுரிகிறது, என்னவிதமான பரிகாரங்களுக்குத் தயாராகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கான ஒரு நிகழ்ச்சி இது. மனிதர்கள் சமூகமாக தன்னைச் சார்ந்திருக்கும் ஓர் உயிர் உலகத்தைப் போஷிப்பதற்கு, கூட்டு நனவிலியின் தளத்திலிருந்து எப்படி  பொதுவில் வெளிப்படுகிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இது. சமூகப் பொது மனம், சமூகப் பொது மொழி, சமூக ரீதியான பொது எதிர்வினைகள், சமூக ரீதியான பொது அறிதிறன் எல்லாமே காற்றில் சங்கிலிக் கண்ணிகளைப் போல இயங்குகின்றன போலும். 

சென்னையில் நான் பார்ப்பது அதே சமயத்தில் திருநெல்வேலியிலும் நடக்கத் தொடங்கியிருக்கலாம். இப்படியான நெருக்கடியான தருணங்களில் யாரும் கூடிப் பேசிக்கொள்ளாமலேயே எங்கேயோ ஏதோ ஒன்று கூடித் தெரிந்து, கூடாமல் கூடி வினையாற்றிக் கொண்டிருக்கிறது; அது நல்வினை, தீவினை, நம்பிக்கை, மூடநம்பிக்கை என அருங்கயிற்றால் கட்டப்படுவதற்கு முன்பாக.

பெருந்தொற்றால் ஏற்பட்ட இழப்புகளை, சொந்தத் துயரங்களுக்கான காரணத்தை நாம் தேடிக் கொண்டிருக்கிறோம். நம்மோடு சேர்ந்த நாய்களும் நமது நலன்களுக்காகப் பட்டினி கிடக்கும் அவலம் யாரோ ஒரு சிலரால் உணரப்படுகிறது. காரணம் புரியாமல் தலையைத் தூக்கும் இடத்தில் பைரவர் அங்கே காட்சி கொடுத்திருக்கிறார். பைரவரின் பிரதிநிதிகளாக தெருக்களில் திரியும் அந்த நான்கு காலிகளின் உலகில், கொஞ்சூண்டு மனிதக் கருணை சோறாக, பிஸ்கெட்களாக இறங்கத் தொடங்குகிறது. 

இந்த நாய்களின் பட்டினியை அவை வாழும் எளிய தளத்துக்கு அருகில் இருக்கும் ஏழைகள் தான் கூடுதலாக உணர்கிறார்கள்; பசியின் மகத்தான அனுபவத்தைப் படைப்பாகப் பெற்ற பாக்கியசாலிகள் அவர்கள் தானே. அவர்கள்தான் பைரவருக்கான பரிகாரத்தைச் செய்ய உடனடியாகத் தெருவில் இறங்கியவர்களாகவும் தெரிகிறார்கள்.       

Comments