ப்ரவுனி, பிறந்து வளர்ந்த மூன்று ஆண்டு காலத்தில் முதல்முறையாக நீண்டதொரு பயணமொன்றை சென்னையிலிருந்து மேற்கொண்டு நேற்று திருநெல்வேலிக்கு வந்திருக்கிறது.
காரில் ஏறியதிலிருந்து பரபரப்பு, ஆயாசம், பயண மயக்கத்தில் இருந்த ப்ரவுனிக்கு ஒரு நாளான பிறகும் திருநெல்வேலி பழகவில்லை. ஒரு இடமோ, வீடோ, ஊரோ பழகுவதற்கு அங்கே சாவகாசமாக சிறுநீரோ ஆயோ போகவேண்டும். அப்படித்தான் நாய்கள் ஒரு இடத்தைத் தன்வயமாக்கிக் கொள்கின்றன. நேற்று காலையிலிருந்து நள்ளிரவு வரை வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக உலாவந்தபடியே இருந்த ப்ரவுனி அதிகாலையில் தான் திருநெல்வேலி வீட்டில் முதல்முறையாக சிறுநீர் கழித்தது. அதற்குப் பிறகுதான் குரைக்கத் தொடங்கியது.
இன்று காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றபோது புதிய தெருக்கள், புதிய வீடுகள், சாலையில் உள்ள சீனிக்கற்கள், எருக்கஞ் செடிகள், காக்காய் முள் எல்லாவற்றையும் ஒரு சர்வேயரைப் போல முகர்ந்து முகரந்து பார்த்தபடி நாற்பது நிமிடங்களைக் கழித்தும் ஒரு பொட்டுக்கூட சிறுநீர் கழிக்கவில்லை. திருநெல்வேலி இன்னமும் அதற்குப் பழகவில்லை. சென்னையை விட திருநெல்வேலி கூடுதல் பரபரப்பாக இருப்பதை இந்தமுறை அதிகமாக உணர்கிறேன். மனிதர்கள், மனுஷிகள், கடைத்தெருக்கள், பாலங்கள் எல்லாமே பால்வண்டியைப் போலக் கூடுதலாக அதிர்கின்றன. மாற்றத்துக்கு ஒரு பெருநகரம் அதிர்வது கண்ணுக்குத் தெரிவதில்லை. சிறிய நகரங்களில் தான் மாற்றம் ரத்தக்களறியாக வகிர்வது போல நடக்கிறது.
ப்ரவுனி என்னை இழுத்துக் கொண்டு கம்பா நதி மண்டபத்தைத் தாண்டி நடக்கிறது. மறைந்து போன ஒரு புராணிக நதியின் பெயரில் அங்கே மண்டபமும், சிவன் கோயில் கிணற்றின் தீர்த்தமும் குறிப்பிடப்படுகின்றன. எனக்கு கம்பா நதி, மறைந்து போன நதியாக அம்மா மூலம் அறிமுகமானபோது, மிகவும் கிளர்ச்சியையும் விந்தையையும் அந்தப் பெயர் அளித்தது. அதற்குப் பிறகு ஊரிலிருந்து விலகலும் செய்த பயணங்களும் அதிகமாகும் போது, இந்தியாவெங்கும் இதேபோன்ற புராணிக நதிகள், இருக்கும் நதிகளை விட அதிகமாக, நமது தொல்நினைவுகளில் மறைந்திருக்கின்றதெனத் தெரிந்தபோது, கம்பா நதி சிறுத்துவிட்டது. கம்பா நதி ஒரு நதியாக ஒரு கதையாக பெயராக ஒரு இடத்தில் மட்டுமே இருந்திருக்கவும் வாய்ப்பில்லை. பெயர்கள் ஒன்றாக இடம் வேறு வேறாக கம்பா நதிக்கு அசல்களோ நகல்களோ வேறு வேறு தமிழ் மூலைகளிலும் இருக்கலாம்.
கம்பா நதி சிறு ஓடையாக மழைக்காலங்களில் போகும் இடத்தில் நிற்கும் இரண்டு கல்மண்டபங்கள் சுண்ணாம்பு அடிக்கப்பட்டு, அதன் கீர்த்தி மங்கி, முன்பு பார்த்ததைவிட சாலையில் கூடுதலாகப் புதைந்து குள்ளமாகியிருக்கின்றன. கம்பா நதியைப் போல, திருநெல்வேலி டவுணில் பட்டாணி மாவில் செய்யப்படும் ருசியும் மொறுமொறுப்பும் கொண்ட காராவடைகளும் கெட்டிச் சட்னியும் என் காலத்திலாவது மறைந்துவிடக்கூடாது என்பதே எனது கவலையாக இப்போது உள்ளது.
ப்ரவுனி கம்பா நதி மண்டபத்தைக் கடக்கிறது. அது தனது விழிப்பை மோந்து மோந்து பார்ப்பதன் வழியாக நிர்வாகம் செய்தபடி, தெரியாமையின் நகரத்துக்குள், அச்சத்தின் வெடிகுண்டுகளைச் சக்தியிழக்கச் செய்தபடி நகர்ந்துகொண்டிருக்கிறது. கடைப்படிகளில் ஏறுகிறது; ஏடிஎம் கண்ணாடிக் கதவைத் தாண்டி முகர்ந்து பார்க்கிறது. உனக்கு இன்னும் எதுவும் பிடிச்சுக் காணலை ப்ரவுனி என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறேன். என்னைக் குப்பைக் குழிகளுக்குள் கூட்டிச் செல்கிறது; சென்னையில் அப்படியெல்லாம் என்னைக் காணும் இடங்களுக்கெல்லாம் உற்சாகமாக அழைத்துச் செல்வதில்லை. மோந்து மோந்து பார்ப்பதன் வழியாக புதிய புதிய அனுபவங்களுக்குள் போய்க் கொண்டே இருக்கும்போது, தான் வந்த வேலை மறந்துபோய்விடுகிறது ப்ரவுனிக்கு.
அது சிறுநீர் கழிப்பதற்கான முகாந்திரத்தையும் அதற்கு முன் செய்யும் உடல் பாவங்களையும் எதிர்பார்த்தபடி கூர்ந்து நோக்குகிறேன். சிறுநீர் கழிப்பதற்கு முன்னால் ஒரு இடத்தில் நின்று காம்பஸ் முள் போல நிலைத்துச் சுற்றிச் சுற்றிவரும். அத்துடன் மலம் கழிப்பதற்கு முன்னோட்டமாக மலத்துளை சின்ன அளவில் திறக்கும்.
என்னை கோடீஸ்வரன் நகர்வரை, அதையும் தாண்டி பேட்டைக்குத் திரும்பும் வழியில் உள்ள தர்காவரை, இழுத்துச் சென்று வேடிக்கை பார்க்கிறதே தவிர அன்றாடக் காலைக் கடன்களைக் கழித்துவிட்டு, என்னை நிம்மதியாக்கும் எந்த உத்தேசமும் அதற்கு இல்லை என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது. தென்காசி பாதையில் திரும்புவதற்காக நிற்கும் ஒரு ஸ்கூட்டரில் சொந்தக்காரர் போல முகர்ந்து, அதன் முன்பகுதியில் ப்ரவுனி ஏறும் முயற்சியை மேற்கொண்டது. தான் வந்த வேலையைப் பார்க்கும் எந்தத் தீர்மானமும் அதற்கு இல்லை என்று தெரிந்துகொண்ட பிறகு, சங்கிலியை இழுத்து கம்பா நதி மண்டபத்தைத் தாண்டி அபிராமி நகருக்குத் திரும்பினேன்.
சென்னையில் சாலையில் உள்ள கற்களின் இயல்பு, தாவரங்களின் இயல்பு வேறு, மண் வேறு என்பதை ப்ரவுனி எனக்குச் சொல்கிறது.
அங்கேயுள்ள கருங்கற்கள் அளவு இங்கே அதிகம் இல்லை. பெரும்பாலும் ரோஸ் நிறத்தில் வரி வரியாக சிகப்பு ரேகைகள் ஓடும் சீனிக்கற்கள் தான் அதிகம் உள்ளன.
கவிஞர் ஞானக்கூத்தன் தனது சிறுவயதில், காவரி நதி தஞ்சை மாவட்டத்தில் தான் உற்பத்தியாவதாக நம்பியிருந்ததாகக் கூறியது நினைவுக்கு வந்தது. அந்தச் சிறுவன்தான் மிசிசிபி நதியைப் பார்த்து அதை தனது கவிதைக்குள்ளும் கொண்டுவந்தான்.
Comments