ஆறு நகரங்களை நோக்கி ஓடத்தொடங்கிய போது
நகரத்தில் மிச்சமிருந்த மயில்களை
பன்றிகள் துரத்தி ஓடத்தொடங்கிய போது
துணைக்கண்டத்தின் புதிய வரைபடம்
குழந்தைகள், பெண்கள், ஆண்களின்
உடம்புகளில் கீறி ஓடியபோது
பெற்ற தாய் தந்தையும்
பிறந்த பொன்னாடும்
ரத்தச் சகதியாகக் கலங்கிய தருணத்தில்
துயரத்திலிருந்து தப்பிக்க ஓடத்தொடங்கினான்
மில்கா சிங்
ஒரு கிளாஸ் பாலை ஊக்கமாக அளித்து
ஓடச் சொல்லியது
புதிய தேசம்
அம்மாவின் வெறித்த கண்கள் துரத்த
அவன் துயரத்திலிருந்து ஓடியபடி இருந்தான்
அவன் வென்றதற்காக
தேசம்
விடுமுறை அளித்தது
அவன் துயரத்திலிருந்து ஓடியபடி இருந்தான்
அவனைப் போன்ற எண்ணற்றோரை உண்டு உருவான
புதியதொரு தேசம்
அவனைப் பறக்கும் சீக்கியன் என்று அங்கீகரித்தது
அவன் ஓடியபடி இருந்தான்
நிற்காமல் ஓடு மில்கா
துயரங்கள் துரத்தும் ஓடு
தாமசங்கள் துரத்தும் ஓடு
அடையாளங்கள் துரத்தும் ஓடு
பண்பாடுகள் துரத்தும் ஓடு
பெருமிதங்கள் துரத்தும் ஓடு
கருத்துகள் துரத்தும் ஓடு
அறிவு துரத்தும் ஓடு
தேசங்கள் துரத்தும் ஓடு
நீதி துரத்தும் ஓடு
நெறிகள் துரத்தும் ஓடு
மகிழ்ச்சி துரத்தும் ஓடு
விடுதலை துரத்தும் ஓடு
உட்காராதே மில்கா ஓடு
மிச்சமின்றி
அழிந்து அழிந்து ஓடு
கிளி
பருந்து துரத்தியும் சிறகால் ஓடுகிறது மில்கா
கிளி
பருந்து துரத்தாமலும் சிறகால் ஓடுகிறது மில்கா
அந்தக் கிளிதான் நீ
அந்தக் கிளிதான் நான்
ஓடு மில்கா ஓடு.
Comments