இலங்கையின் கண்டி நகரத்தில் பிறந்து வளர்ந்த அஜித் போயகொட, எல்லோரையும்போல கடற்படையினர் அணியும் வித்தியாசமான சீருடை மேலுள்ள கவர்ச்சியால் கடற்படைக்கு விண்ணப்பம் போட்டு, இளநிலை அதிகாரியாக 1974-ல் பணியில் சேர்ந்தவர். சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான இணக்கம் சீர்குலைந்து, பதற்றம் தொடங்கிய நாட்களிலிருந்து தனது நினைவுகளை ஆரம்பிக்கிறார் அஜித் போயகொட. நிலத்தில் ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவினரும் பின்பற்றும் நெறிமுறைகள், கட்டுப்பாடுகளைவிட அதிக நெறிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் வைத்திருக்கும் கப்பல் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமான பல தகவல்களைச் சொல்கிறார். குடிநீர் உட்பட எல்லாமே வரையறைக்கு உட்பட்டே கிடைக்கும் இடத்தில் கட்டுப்பாடும் பாதுகாப்பு நெறிகளும் காலங்காலமாக அங்கே ஒரு பண்பாடாகவே ஆகிவிட்ட சூழல் அது. நிலத்தில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் கெடுபிடிகளுக்கும் இடையில் இருந்த நல்லுறவையும், உள்நாட்டு முரண்பாடுகள் அதிகரிப்பதற்கு முன்னர் கடலில் மீனவர்களுக்கும் சிங்களக் கடற்படையினருக்கும் இருந்த நட்பையும் கொடுக்கல் வாங்கல்களையும் நெகிழ்வோடு விவரிக்கிறார்.
நிலத்தில் தனது முதல் பணியிடமான நயினா தீவில் இருந்த பௌத்த மடத்தைப் பாதுகாக்கும் பணி அனுபவத்தைச் சொல்லத் தொடங்குகிறார். தமிழர்கள் சூழ்ந்த பகுதியான அவ்விடத்தில் பௌத்தத் துறவிகளுக்கும் தமிழர்களுக்கும் இருந்த இணக்கமான உறவை, அரசுப் பாதுகாப்பு கொடுக்கிறோம் என்ற பெயரில் எப்படி அறுக்கத் தொடங்கியது என்பதை நுட்பமாகச் சொல்கிறார். திருமணம், சென்னை, கெய்ரோ பயண அனுபவங்களினூடாக அஜித் போயகொட விரைவிலேயே உயர் பதவியை அடைகிறார். ரோந்து, வயர்லெஸ் செய்திகளை ஒட்டுக்கேட்கும் பணிகளைத் தவிர பெரிய அளவு போர் அனுபவம் எதையும் அஜித் போயகொட பெறவில்லை. 1991-ல் காரை நகர் படையெடுப்பில்தான் போர் என்பது அப்பாவி மக்களின் வாழ்க்கையில் எப்படியான துயரத்தை ஏற்படுத்துகிறது என்பதை நேரடியாகக் காணும் வாய்ப்பைப் பெற்றார்.
இலங்கை ராணுவம் காரை நகரைப் பிடித்த பிறகு, தமிழ் மக்களின் வீடுகளைத் திறந்து கொள்ளையிட்ட ‘யுத்த-சுத்த’ நடைமுறையைப் பற்றி விவரிக்கிறார். ராணுவத்தினர் அப்பாவி மக்கள் மீது நடத்திய அட்டூழியங்கள், புலிகளின் மீது அவர்கள் அனுதாபம் கொள்வதற்குக் காரணமாக இருந்ததைக் குறிப்பிடுகிறார். தனது அதிகாரத்துக்கு உட்பட்ட பிராந்தியத்தில் நெறிமுறைகள், மனிதாபிமான அடிப்படையில் எந்தக் கொள்ளையையும் கொலைகளையும் ஊக்குவிக்காமல் அதைத் தடுப்பவராகவும் அஜித் போயகொட இருந்திருப்பது தெரிகிறது.
1994-ல் விடுதலைப் புலிகளால் அஜித் போயகொட கமாண்டராகப் பணியாற்றிய கப்பல் நள்ளிரவில் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டு, அஜித்தும் கைதுசெய்யப்படுவதிலிருந்து புத்தகத்தின் இரண்டாம் பகுதி தொடங்குகிறது. சுதந்திர இருப்பு, சிறையிருப்பு என இரண்டு மாறுபட்ட அனுபவங்கள் காட்சியாக்கப்பட்டு, இரண்டு அனுபவங்களும் நம்மிடம் உரையாடும் நூல் இது.
இலங்கையை ஆண்ட அரசுகள் மாறுகின்றன; ஆட்சியாளர்கள் மாறுகிறார்கள். மனித உரிமைகளுக்கான வழக்கறிஞராக இருந்து காணாமல் அடிக்கப்பட்ட ஜேவிபி கட்சியினருக்காகப் போராடிய ஆளுமையாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவின் பழைய முகம் நமக்குத் தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்களின் மறதி, புறக்கணிப்புக்குள்ளாகி விடுதலைப் புலிகளோடு பல்வேறு இடங்களுக்குப் பெயர்ந்து சிலவேளைகளில் கொடுமையானதும் பல வேளைகளில் மென்மையானதுமான சிறைவாழ்வை அஜித் போயகோட கழித்த கதைதான் இது. வருடக்கணக்கில் தன்னைச் சிறை வைத்திருந்த புலிகள் குறித்துப் பேசும்போது, இலங்கையில் நடக்கும் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே தாம் பிடிபட்டிருக்கிறோமே தவிர, தனிப்பட்ட எந்த வெறுப்பும் புலிகளுக்குத் தன் மேல் இல்லை என்ற புரிதல் இருக்கிறது.
தான் பணியாற்றிய சிங்கள ராணுவம், தன்னைப் பிடித்து வைத்திருக்கும் புலிகள் இரண்டு தரப்பினரைப் பற்றிப் பேசும்போதும் அவர்களது குறை நிறைகளைத் தள்ளிநின்று வியக்கவும் விமர்சிக்கவும் அவர்களிடம் நட்புகொள்ளவும் முடிகிறது. தன்னைக் காவல் காக்க வரும் புலிகள், கடற்படை அனுபவம் குறித்துப் பாடம் கேட்க வரும் பெண்புலிகள், தன்னிடம் துவக்கத்தில் மரியாதைக் குறைவாக நடந்துகொள்ளும் நபர் எல்லோரையும் அவர்களது சூழலோடு பார்க்கிறார் அஜித். புத்தகத்தின் தொடக்கத்திலிருந்து தன்னையும் தன்னைச் சுற்றி நடக்கும் உலகையும் கனிவோடு ஒரு சிரிப்புடன் பார்க்கிறார். மனைவி, குழந்தைகளைப் பிரிந்த துக்கமும் சங்கடமும் வலிகளும் பகிரப்பட்டாலும் அது கசப்பாக மாறாத ஒரு தொலைவை அஜித் போயகொட தனது ஆளுமையில் சாதித்திருக்கிறார். ஒரு நிலைமை தொடர்பில் புகார் சொல்வதோ கோபப்படுவதோ அந்த நிலையை மாற்றுவதில்லை என்பதை அவர் நம்பிக்கையாகவே கொண்டிருந்திருக்கிறார்.
"இந்த மணித்தியாலத்தில் நீங்கள் உயிர்தப்பியிருந்தால் அடுத்த மணித்தியாலம் உங்களுக்காக காத்திருக்கும். நிலையானதாகிவிட்ட நிலையற்ற தன்மையில் நிலைப்பதற்கான வழியைக் கண்டுகொள்ள, இதை நான் உள்ளுணர்வுத் தூண்டலுடன் செய்யக் கற்றுக்கொண்டேனென நினைக்கின்றேன். பைத்தியமாவதற்குக் கூட எங்களுக்குச் சுதந்திரம் இருக்கவில்லை."
புலிகளின் சிறைபிடிப்பிலிருந்து வெளியே வந்த பிறகும் தமிழர்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் கசப்பையும் இணக்கமற்ற சூழலையும் மேலும் அதிகப்படுத்தக் கூடாது என்பதற்காக சர்ச்சைக்குரிய முறையில் பேசுவதைத் தவிர்த்திருக்கிறார்.
அஜித் அப்படிப் பேசாத நிலையில், எதிர்தரப்பு ஆளோ என்று இலங்கை அரசின் சந்தேகத்துக்கும் உள்ளான தர்மசங்கடத்தை அவர் அனுபவித்திருக்கிறார்.
மனமும் உடலும் எந்தவிதமான சங்கடங்களுக்கும் போதாமைகளுக்கும் நாம் நினைப்பதுபோலன்றி சீக்கிரமாகவே பழகிவிடுகிறது; அப்படிப் பழக்கப்பட்ட மனமும் உடலும் திரும்ப வசதியும் விடுதலையும் கிடைக்கும்போது அதற்குப் பழகுவதற்கும் கூடுதல் அவகாசத்தை எடுத்துக்கொள்கிறது. முரண்போலத் தோன்றும் இந்த உண்மையை இந்த நூல் மூலமாக நாம் அறிகிறோம்.
குரூரமான பயங்கரங்களோ, பரபரப்பான சாகச நிகழ்ச்சிகளோ இந்த நூலில் கிடையாது. ஆதிக்கத்தையும் அட்டூழியத்தையும் செய்யும் அதிகாரமும் பதவியும் இருந்த சூழ்நிலையிலும் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து மனிதாபிமானத்தோடு நடக்க முடியும் என்பதற்கான உதாரணமாக அஜித் போயகொட தெரிகிறார். அதேவேளையில், யுத்தக் கைதியாக அத்தனை வசதிகளும் ஒரே இரவில் பறிக்கப்பட்டு, மிகத் தாழ்ந்த நிலையில் வாழும்போதும் சக கைதிகளிடம் மட்டுமல்ல; தன்னைச் சிறை வைத்தவர்களிடமும் நல்லுணர்வையும் மதிப்பையும் பெற்றவராக அவர் இருந்திருக்கிறார். கடற்படைப் பணியின்போது பௌத்த துறவி அன்புடன் அளித்த விசேஷ தாயத்து, விடுதலைப் புலிகளின் தலைவர் செல்வரத்னம் நட்பின் அடையாளமாக கொடுத்த சீர்டி சாய்பாபாவை விட எத்தகைய சூழலையும் சிறந்ததாக ஆக்கிக்கொள்ளும் அவரது பண்புதான் அவரது உயிரை நீட்டித்திருக்க வேண்டும்.
அஜித் போயகொடவின் நூலைப் படிக்கும்போது, விக்டர் பிராங்கலின் 'வாழ்வின் அர்த்தம்' புத்தகம் ஞாபகத்துக்கு வருகிறது. யூத வதைமுகாம்களில் கொடுமையான சூழலிலும் கூட, அடிப்படை மனிதாபிமான நெறிகளிலிருந்து விலகாமல், ஒரு பிடிவாதத்துடன் வாழ்ந்தவர்கள் தான் சீக்கிரம் சாகாமல் வலுவாக இருந்தார்கள் என்கிறார் விக்டர் பிராங்கல். இப்படிப்பட்ட நபர்களின் ஆளுமை உருவாக்கத்தில் அவர்கள் வளர்ந்த சூழலுக்கும், பெற்றோருக்கும் முக்கியமான பங்கிருக்க வேண்டும். அதை மெய்ப்பிக்கிறார் அஜித்.
"நான் சோர்வடையாமல் இருக்க என்ன உதவியதென்று கேட்கிறீர்களா? என் வளர்ப்புமுறை, நேவிப்பயிற்சி என்பனவே எனக்குக் கைகொடுத்தன. என் பெற்றோர்கள் ஒழுக்கவிதிகளைக் கடைபிடிப்பதில் பிடிவாதமாக இருப்பார்கள். வளரும் பருவத்திலை தற்சார்புடையவர்களாகவும் வாழ்க்கையைக் குற்றங்குறை சொல்லாது முகங்கொடுக்கவும் எங்களை ஊக்கப்படுத்தியிருந்தார்கள். நேவிப் பயிற்சி எனக்கு ஒழுங்குமுறையகளைக் கடைப்பிடிக்கவும் கற்றுக்கொடுத்தது. நான் சாக விரும்பவில்லை. எனவே நான் உயிர் வாழவேண்டும். நான் உயிர் வாழ விரும்பினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது.
ஒரு மனிதனின் உண்மையான வீரம் என்பது, எத்தகைய சூழ்நிலையிலும் அவன் அனுசரிக்கும் சத்திய உணர்வு, தார்மீகத்தைக் கொண்டு மதிப்பிடப்பட வேண்டியது. அதை அஜித் போயகொடவின் இந்த நூல் திரும்பவும் நினைவூட்டுகிறது.
Comments