ஸ்ரீநேசனின் மொழி ஏரிக்கு அருகில் செல்லும்போதும், மலையில் ஏறும்போதும் பாடலின் சந்தத்தையும் தாளகதியையும் அடைகிறது. அந்த அடிப்படையில் சொல் சில்பங்களென அனுபவங்காணும் கவிதைகளாக ஓர் இலைச்சருகு, காணாமல் போகும் மலைகள், சொல், சொல் சில்பம், இயற்கைப் புணர்ச்சி, வெயிற்சுவை, சூரியனுடன் வருவேன் ஆகிய கவிதைகளைச் சொல்வேன். பொருளெல்லாம் நிழலாவதும், நிழலே அடுத்து வந்து குந்தும் பொருளாகவும் ‘சொல் சில்பம்’ கவிதையில் மாறுகிறது. நிழலோடு கல் இருப்பது போல பொருளோடு இருளையும் வைத்திருக்கும் கல்லாக சொல் இங்கே தொனிக்கிறது. சிலையுமாக மலையுமாக அதன் ஆதியடக்கத்தில் கல்லாகவும் சொல்லாகவும் இருப்பதை முதலில் தொட்டுப் பார்க்கும் பூர்வகுடியைப் போலத் தொட்டு இந்தக் கவிதைகளை எழுதியுள்ளதால் ஸ்ரீநேசனின் இந்தக் கவிதைகள் மொழியின் அபூர்வ எழில் சூடியவை. அந்த அலாதி கதியில் தான் ‘ஒரு துண்டு சிவந்த வெயிலை மிளகோயோடு’ வாயிலிடும் சிறுவனாக மாறுகிறான் கவிஞன். ஒளி, மொழியில் சுவையான பருப்பொருளாக மாற்றப்படுகிறது.
ஸ்ரீநேசனிடன் தொழிற்பட்ட
சொல்சில்பக் கவிதைகளில் உச்சமும் இழைவும் கொள்ளும் கவிதையென இறுதிக் கவிதை ‘சூரியனோடு
வருவேன்’ கவிதையைச் சொல்வேன்.
வார்த்தைகள் மிதக்கும்
பொதிகளாக மாறுகின்றன இந்தக் கவிதையில். கனமேயில்லாத மிதப்பு. இருப்பும் இன்மையுமாக
இரட்டை ஆளாக இந்தக் கவிதை சொல்லி மிதக்கிறான். அவன் ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும்
இருக்கிறான். அவனை வாசிக்கும் சுயமும் விடுதலையில் மிதக்கும் அனுபவம் இந்தக் கவிதையில்
நிகழ்கிறது. பாரதியின் கண்ணன் பாட்டில் ‘நானோர் தனியாள் நரை
திரை தோன்றாவிடினும்
ஆன வயதிற்களவில்லை’ என்று உரைக்கும் சேவகனை
எங்கோ ஞாபகப்படுத்துகிறான்.
‘மூன்று பாட்டிகள்’
தொகுப்பை முன்வைத்து ஸ்ரீநேசன் உத்தேசிக்கும் அனுபவம் இதுதானென்றால் இது வெற்றிகரமான
தொகுதிதான்.
சூரியனுடன் வருவேன்
நான் இங்கிருப்பேன்
இதேநேரம் ஏதோ மலையேறிப் பாதி
வழியில் ஒரு பாறைமேல்
தங்கியிருப்பேன் மன்னியுங்கள்
உங்களை இளங்கதிரில்
வரச் சொல்லி இப்படி எங்கென்றே
தெரியாமல் எங்கேயோ
போய்க் கொண்டிருப்பதற்கு நீங்கள்
பழியுரைக்கவோ நான்
பொறுப்பேற்கவோ ஆகாது நானோ ஓர்
இரட்டை ஆள் வசதிக்கு
ஏறிக் கொண்டிருக்கும்போதே
இறங்கியும் கொள்பவன்
தையும் சித்திரையும் ஒன்றேதான்
அம்மனை வணங்கி
நிற்க ஆடி வர வேண்டியதில்லை பனி
ஓய்ந்து அனல் காய்ந்து
மழையாக்கித் தரும் பகலில் இந்த
வயல்வெளியில் வெயில்
தின்று நிழல் பருகி நிற்பேன் ஒரே
நேரத்தில் எதிருமு
புதிருமாக நிலவெளிகளைக் கடக்கும் நீண்ட
தூரப் பயணிகளை
ஒரு காரணமுமில்லாமல் காண அரவமற்ற
ரயில் நிலையம்
போவேன் வருவேன் வழியில் பள்ளி விட்டுத்
துள்ளிவரும் குழந்தைகள்
இறைத்துச் செல்லும் மகிழ்ச்சியைப்
பொறுக்கி அணிவேன்
அந்தி வந்து அணைக்கும்வரை
ஏரிக்கரைமீது கொண்டாட்டத்
தனிமையில் சீரற்றுச் சிந்தித்துக்
கிடப்பேன் சிலதுளி
கண்ணீரும் உகுப்பேன் இருள் என்
கைப்பிடித்தெழுகையில்
பற்றிப் பிறை நிலவு
நட்சத்திரங்கிடையே
நடப்பேன் களைத்தால் மேகங்களில்
படுப்பேன் உங்கள்
பூமியில் நாளை என்று வரும்போதே
சூரியனுடன் வருவேன்.
ஆதியும் அந்தமும்
இல்லாத தன்மையில் புராதனம், நவீனம் என்ற எல்லைக் கோடுகளை மயக்கி, தமிழின் அழகு மொத்தத்தையும்
சூடியிருக்கும் கவிதை இது.
தொடர்ந்து சூரியனோடு
இருந்து வாருங்கள் ஸ்ரீநேசன்.
Comments