Skip to main content

புதுமைப்பித்தனின் செல்லம்மாள் மற்றும் டி எச் லாரன்சின் ‘Odour of Chrysanthemums’

எல்லாத் திக்கிலும் மூச்சை அழுத்தும் இருட்டு கொப்பளிக்கும் புதுமைப்பித்தனின் மொழிக்குள், இன்னும் கூடுதல் துல்லியத்துடன் பிரமநாயகம் பிள்ளையையும் செல்லம்மாவையும் அவர்கள் வசிக்கும் மெட்ராஸின் ஏதோ ஒரு மூலையில் உள்ள வீட்டையும் பார்க்க முடிந்தது. நோயில் வீழ்ந்து நடைபிணமான மனையாள் செல்லம்மாளுக்கும் அவளைப் பராமரிப்பதற்காகவே பட்டணத்தில் ஜீவித்துவரும் மனித எந்திரமான கணவன் பிரமநாயகம் பிள்ளைக்கும் இடையிலான அழியாத காதல் தான் ‘செல்லம்மாள்’. காமம் சிறிதும் இல்லாத அபூர்வமான ‘காதல்’ கதை என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். மினுக்கட்டான் பூச்சி போல, அந்த வீட்டின் இருளைத் திரட்டித் திரட்டிக் காட்டும் மெல் வெளிச்சம் அந்தக் காதல் தான். நடைபிணமாக நமக்கு அறிமுகமாகும் செல்லம்மாள் பிணமாகிவிடுகிறாள். அவள் உடம்பில் மூச்சு, மெல்லிய இழைபோல ஓடியபோது மூக்கின் மேல் உட்காரும் அதே ஈ தான், அவள் இறந்த பிறகும் அவளைச் சுற்றியதா என்று தெரியவில்லை. அவளது வாழ்வின் இறுதிநாட்களிலும் அவள் இறந்தபிறகு பிரமநாயகம் அவளுடலை நடத்துவதிலும், செல்லம்மாளின் அன்பும் குணமும் புலப்பட்டுவிடுகிறது. மரணத்துக்கு முன்னால் செல்லம்மாள் சற்று தேறுவது போல தேறி, சமையலறைக்குத் தானே போய் உட்கார்ந்து பிரமநாயகம் பிள்ளைக்குத் தோசை சுட முயற்சிக்கும்போதும், பிரமநாயகத்திடம் செல்லக் கோபத்துடன் எசலும்போதும் அவளது வாஞ்சையையும் உயிர்த்துவத்தையும் சென்ற நூற்றாண்டின் முன்பகுதியில் புழங்கிய திருநெல்வேலி பாஷை வழியாக இறக்குகிறார் புதுமைப்பித்தன். நோயுற்ற குருவியைப் போல செல்லம்மாள் வெளிப்படுகிறாள். செல்லம்மா சிறுகதையைப் படிக்கும்போது சென்னையில் தான் கதை நடக்கிறதென்ற தகவல் வெளிப்படையாக உள்ளது. ஆனால் செல்லம்மாவும் பிரமநாயகமும் குடித்தனம் நடத்திய வீட்டிலிருந்து அவர் வேலை பார்க்கும் ஜவுளிக்கடை நிறைய நேரம் செலவழித்து எட்டும் தூரத்தில் இருக்கிறது. ஆனால் அது எந்த இடம் என்று தெரியவில்லை. தியாகராய நகரா, புரசைவாக்கமா, மவுண்ட் ரோடா? எங்கே இருக்கிறது பிரமநாயகம் வேலை பார்த்த ஜவுளிக்கடை? பிரமநாயகம் செல்லம்மாவுக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்துவிட்டு, வேலை பார்க்கும் இடத்துக்கு ரயிலில் பயணித்தாரா? பேருந்திலா? கடவுளும் கந்தசாமி பிள்ளையும் கதையில் பிராட்வேயில் கடவுளுடனான சந்திப்பு நடைபெறுகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டுக்கு அவர் அதிதியாக அழைத்துச் செல்லப்படுகிறார். பிரமநாயகம் பிள்ளை, செல்லம்மாவுடன் குடித்தனம் நடத்திய வீடு மந்தைவெளியாக இருக்கலாம். வள்ளலார் நடமாடிய தங்கசாலைக்கு அப்பாலோ திருவொற்றியூரிலோ சைதாப்பேட்டையிலோ குடியிருந்திருக்கலாம். செல்லம்மாள் என்ற பூரணமான கதைக்கு இந்தக் குறிப்புகள் எதுவுமே தேவை இல்லை. ஆனால், செல்லம்மாள் சிறுகதை வெகு நிஜமாக எனக்குத் துலங்குவதால், சென்னைவாசியாக நானும் இருப்பதால், இந்தக் கதையை வாசிக்கும்போதெல்லாம் எனக்குத் தெரிந்த சென்னையின் தெருக்களில் செல்லம்மாவும் பிரமநாயகம் பிள்ளையும் குடியிருந்த வீட்டை வைத்துப் பார்க்க முயல்கிறேன். பால்கார நாயுடுவின் தொழுவம் என்ற குறிப்பும் உள்ளது.
டி எச் லாரன்ஸ் எழுதிய ‘Odour of Chrysanthemums’ சிறுகதையும் புதுமைப்பித்தனின் செல்லம்மா கதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலக்கூடியது. தமிழில் ‘கிரிசாந்திமப் பூக்களின் வாடை’ என்ற பெயரில் நடேச ஜனார்த்தனன் மொழிபெயர்ப்பில் லக்ஷ்மி மணிவண்ணன் நடத்திய சிலேட் இதழில் வெளியான கதை அது. நேசத்துக்குரியவனாக இருந்து குடிகாரனாகி, விபத்தில் சிக்கி சடலமாய் வீடு திரும்பியவனை சுத்தப்படுத்தி ஆடைகள் உடுத்தி அலங்கரிக்கும் நாயகி, அவன் உடலைத் தொடுவதன் வழியாக அவனுடனான அன்புக்கு உயிர்கொடுப்பாள். பிரமநாயகம் பிள்ளையும் ஜவுளிக்கடை முதலாளியிடமிருந்து கடனாய் கேட்டுப் பெற்றுவந்த செல்லம்மாவுக்குப் பிரியமான பச்சைச் சேலையை அவளைக் குளிப்பாட்டி குங்குமமும் திருநீறும் இட்டு அணிவிக்கிறார். நோய்ப்பட்டு தேசலாகிவிட்ட செல்லம்மாவின் உடல் பிரமநாயகத்துக்குப் பளு கொடுக்கவில்லை என்பது ஒரு ஆறுதல். அந்த வீட்டில் செல்லம்மா அலங்கரிக்கப்பட்டு கிடத்தப்படும் வரை யாருமே இல்லை. அங்கே துக்கமோ அன்போ இன்னும் சம்பிரதாயமாகவில்லை. வேஷ அழுகையும் அதை மறைப்பதற்கு ஊதப்படும் சங்கும் இன்னும் அங்கே தோன்றாத போதே செல்லம்மாள் கதை நிறைவடைந்துவிடுகிறது. செல்லம்மாள் கதையில் செல்லம்மாளின் மரணம் பிரமநாயகத்துக்குப் பெரிய அதிர்ச்சியையெல்லாம் கொடுக்கவில்லை. ஏனெனில் செல்லம்மாவை மரணத்தின் வாய்க்கு அளிப்பதற்கு அவர் ஏற்கெனவே தயாராகிவிட்டார். “வியாதியஸ்தனின் நாக்கு உணரும் ஒரு கைப்பும், அதற்குச் சற்று ஆழமாக ஒரு நிம்மதியும் இருந்தன.” என்றுதான் வெளிபடுகிறார். பொருள், பணம், உயிர் எல்லாம் பற்றாக்குறையாகத் திகழும் இன்மையின் வீட்டிலிருந்து கலை என்னும் உபரி, கலை என்னும் புரதம், கலை என்னும் அமிர்தத்தைக் கடைந்து காட்டிய புதுமைப்பித்தனின் அமரப் படைப்பு இது.

Comments