Skip to main content

புதுமைப்பித்தன் பிறந்த நாள் ஏப்ரல் 25 - புதுமைப்பித்தனின் கபாடபுரம்


கன்னியாகுமரிக்குப் போய் சில வருடங்களாகிவிட்டன. அந்த ஏக்கத்தை பகத் பாசில் நடித்த ‘டிரான்ஸ்’ திரைப்படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன். படத்தில் நாயகன் பகத் பாசிலும் அவனது தம்பியும் படத்தின் ஆரம்பத்தில் கன்னியாகுமரியில் வசிப்பதாகக் கதை. தமிழ் சினிமாவில் கன்னியாகுமரி கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள பிரதான மண்டபத்தையும் கடற்கரையையும் இப்படிக் காட்டியிருக்கவில்லை. நூற்றாண்டு காலமாக சுற்றுலாப் பயணிகளின் கண்களால் பார்க்கப்பட்டு சலித்து சிறுத்துப் போன சிறுநகரமாகத் தோன்றும் கன்னியாகுமரி, ஒரு பெரும் புராணிகத்தின் நினைவை ரகசியத்தை எழிலை மறைத்துவைத்திருக்கிறது. புறத்தில் எத்தனையோ கண்களால் பார்க்கப்பட்டு பார்க்கப்பட்டு சலித்துப் போன கன்னியாகுமரியின் கரையை, சிதறிக்கிடக்கும் பாறைகளை, மோதிக் கொண்டிருக்கும் அலைகளின் பேரோல இரைச்சலுக்குள், அந்தப் புராதனமும் மர்மமும் இரவுகளில் நம்மிடம் வேறொரு கதையைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அவை தூண்டிய ஞாபகத்திலிருந்துதான் புதுமைப்பித்தனின் கபாடபுரத்தை மீண்டும் படிக்க வேண்டுமென்று நினைத்தது.

கன்னியாகுமரி கோயிலின் கிழக்கு வாசலில் அசந்தர்ப்பமாக மாட்டிக் கொண்ட ஒருவன் முன்னால் கன்னியாகுமரியின் அந்தப் புராணிகம் தன்னைத் திறந்து காண்பித்த கதைதான் புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம்’.

கபாடபுரத்தின் கதைசொல்லிக்கும் கன்னியாகுமரி கோயிலில் சிறுமியாக, தேசலான பெண்ணாகத் தான் அம்மன் தெரிகிறாள். மஞ்சணை என்று அழைக்கப்படும் எண்ணெய் குங்குமக்குழம்பில் அவள்  வசீகர ரூபம் கொள்கிறாள். திட்டிவாசலுக்கு வெளியே அலைகளின் அழைப்பை ஏற்று நினைவையும் சுயத்தையும் தவறவிட்டுப் படிகளில் இறங்கும்போது கடல் உள்வாங்கி இன்னொரு நிலம் துலங்குகிறது.

பஃறுளியாற்றுடன் பன்மலையடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொண்ட, இன்றும் தமிழ் நனவிலியில் மோதிச் சிதறி அடித்துக் கொண்டேயிருக்கும் மாபெரும் நினைவொன்றின் புதைநிலத்தை அலிபாபா போல புதுமைப்பித்தன் திறந்த மிகுபுனைவுக் கதை இது. ஏற்கெனவே உள்ள புராணிகத்தைக் கச்சிதமாகக் கட்டியெழுப்பிய அலங்காரம் மட்டும் அல்ல இந்தச் சிறுகதை. மரணத்தின் எல்லையில் நின்று அறிவின் வரையறையை உலுக்கும் கேள்விகள் இந்தப் படைப்பில் உண்டு.  ‘காலத்தை எதிர்த்து நிற்க நினைக்கும் ஒருவனுக்கு உடம்பு அனாவசியம்’ என்று சொல்லும் உடலற்ற தலையின் குரலில் புதுமைப்பித்தன் என்ற சிருஷ்டிகர்த்தாவின் லட்சியமும் ஒலிக்கிறது. தமிழ் நவீன இலக்கிய சரித்திரமே, சித்தம் விடுக்கும் சுளீர் சவுக்கடி விமர்சன ஓசையில்தானே துவங்குகிறது.

கடலில் இறங்குகிறான் கபாடபுரத்தின் கதைசொல்லி. கடலில் உள்ள மலையில் ஏறத் தொடங்குவதற்கு முன்னர் ஆக்டோபஸ் போன்ற உருவத்தைப் பார்க்கிறான். அதன் கசையிழைகளை துதிக்கை என்கிறார் புதுமைப்பித்தன். அதற்குக் கண்கள் இருக்கின்றன. ஒரு சயன்ஸ் பிக்ஷன் திரைப்படத்தில் வரும் விதவிதமான உயிரினங்கள், ஊன் உண்ணித் தாவரம் உள்ளிட்டவை வருகின்றன. மரணமும் உயிர்ப்பும் பொன்னாக வெள்ளியாகப் பளபளப்புடன் மின்னுகின்றன.  அகாலத்தில் தன் உயிரைவிட்ட புதுமைப்பித்தனின் கதைகள் இன்றும் மின்னுவதைப் போல விசித்திர விசித்திரமாக ஆதித்தாவரங்களாக பிரமாண்டமாகக் காட்டப்படுகின்றன.

காஃப்காவின் விசாரணை கதையில் வருவதைப் போல, ஒரு நிகழ்ச்சி தொடங்கிய பிறகே அந்த இடத்தை விளக்கேற்றிக் காண்பிக்கிறான் கதைசொல்லி. அந்த இடத்தின் வடிவம், அங்கு இருக்கும் கதவுகள், அங்கு இருக்கும் ஜீவராசிகள் எல்லாம் அறிமுகமாகின்றன. தூண்டாமணி தீபத்தின் வெளிச்சத்தில் கபாடபுரம் நம் முன்னர் துலங்குகிறது.

சூரியோதயத்தில் செண்பகமும் அஸ்தமனத்தில் மல்லிகையும் வீசும் வாசனைக் கடிகாரம் ஒன்று அங்கே உள்ளது.

பாதாள கங்கையில் நான்கு சடலங்கள் சேர்த்துக் கட்டப்பட்ட புணையில் ஏறி சித்தலோகத்துக்குப் பயணிக்கிறான். எல்லையும் எல்லையுமற்ற தன்மையுமாக இருக்கும் அந்த இடத்தில் சடலங்கள் தனது வேலை முடிந்தவுடன் மாடர்களாகவும் நந்திகணங்களாகவும் சர்வசாதாரணமாக எழுந்து கரையேறிச் செல்கின்றன.

கதைசொல்லி கடைசியில் சென்று சேரும் சித்தலோகம் நமக்குத் தெரிந்த பழைய உலகங்கள் அல்ல. இயல்பு என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதற்கு மாறாக காரியங்கள் நடந்தால் அதை இயல்புக்கு மாறானதாக நினைத்துக் கொண்டுவிடலாமா என்ற கேள்வியில் கதைசொல்லிக்கு மட்டுமல்ல நமது நவீன மூளைகளுக்கும் அடி விழுகிறது. உபதேசம் கதையில் அறிவின் அஸ்திவாரமே தவறு என்று வில்கின்சனுக்கு டாக்டர் விசுவநாத் சொல்வது போன்று தொனிக்கிறது.

உடலின் மரணத்தை வெல்ல நினைக்கும் சாகாமை விவாதிக்கப்படுகிறது. உனக்குத் தெரியாமல் போனால் அதை இல்லை என்று சாதித்துவிடுவாய் போலிருக்கிறதே என்று சொல்லும் சித்த புருஷர், சாவு என்றால் உனக்குத் தெரியாது என்று ஒரு போடு போடுகிறார்.

சாவை விசாரிக்கத் தொடங்கும் அவர், மரணத்தின் வகைகளை விவரிக்கிறார். மெதுமெதுவாக மரணம் என்பது மரணமல்ல என்பது போலத் தொனிக்கத் தொடங்குகிறது.

டினோசரஸ் போன்று தோன்றும் கர்ப்பேந்திரத்தை அழிக்கும் முயற்சியில் கபாடபுரம் ஊழியில் மூழ்குகிறது. அதற்கு கொக்கு போலக் கழுத்து உள்ளது. பூசாரி சடையன் மகளாகவும் பிறகு காவல் தெய்வமாகவும் ஆகும் கன்னியும் வருகிறாள். கதைசொல்லியின் நிறைவேறாத காதலி.

கபாடபுரத்தின் மொத்தக் கதையும் அதன் தொடக்கத்திலிருந்து கன்னி என்ற உருவகத்தின் மீதான உத்வேகத்தைக் கொண்டிருப்பது. கடல் கோயிலில் ஒரு கன்னி, தென்மதுரையின் மீன்கன்னி என்று கன்னிகள் வருகின்றனர்.

சாகாமைக்கும் பிறப்புக்கும் அடியில் பூமியின் சிசுப்பருவத்திலிருந்து மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஒன்றை, படைப்புக்கும் விழைவுக்கும் உயிராக விளங்கும் காமத்தை, கன்னியாகுமரி ஆலயத்தில் அந்தக் குமரியின் மூக்கில் நித்தியமாக மினுமினுத்துக் கொண்டிருக்கும் ஆபரணமாக தமிழில் சுடரவிட்ட காரியம் தானோ ‘கபாடபுரம்’.

அதனால்தானோ எல்லாரும் வழிபடும் அனைத்து புராணிகங்களுக்கும் மூலப்பொருளாக விளங்கும் அந்தக் கன்னியையும் கதைசொல்லியையும் காவல் இன்றி, அலட்சியமாக விட்டு பூட்டிச் சென்றார்களோ மனிதர்கள்.

இப்போது கன்னியாகுமரியின் கிழக்கு வாசல் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. கபாடம் திறமினோ. கபாடம் திறமினோ.

ஓவியம் : மருது

புதுமைப்பித்தனின் கபாடபுரம் கதையை வாசிக்க : https://archive.org/details/orr-3943/page/n7/mode/2up)

புதுமைப்பித்தனின் கபாடபுரம் தொடர்பில் கவிஞர் பெருந்தேவி எழுதிய கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க :https://minnambalam.com/k/2018/04/25/12)

பெருந்தேவி கட்டுரையின் இரண்டாம் பகுதிக்கு  : https://minnambalam.com/k/2018/04/26/8 )


Comments