புராதனம், புராணிகம், வரலாற்றின் இடிபாடுகளுக்குள், சமகால வாழ்வின் இடிபாடுகளை ஒளித்துவைத்து எழுதும் தொனியையும் உள்ளடக்கத்தையும் கொண்ட கண்டராதித்தன், செவ்வியல் குணத்திலிருந்து எதார்த்தத்தை நோக்கி ‘பாடிகூடாரம்’ கவிதைத் தொகுதியில் மிக மெதுவாக நகர்ந்திருக்கிறார். பாடிகூடாரத்தில் உள்ள கவிதைகளில் சுயசரிதையெனத் தோன்று அந்தரங்க மொழிகொண்டு அன்றாட உலகத்துக்கு அவர் கவிதைகள் தரையிரங்கியிருக்கின்றன. கலாப்ரியாவின் சாயலையும் நகுலனின் சாயலையும் முந்தைய கவிதைத் தொகுதிகளில் மிகச் சன்னமாக உணர முடிந்திருக்கிறது. இத்தொகுதியில் உள்ள கண்டராதித்தனின் ‘தாழ்வாரம்’ கவிதையில் உள்ள சித்திரத்தன்மை கலாப்ரியாவை வெளிப்படையாகவே ஞாபகப்படுத்தியது.
தாழ்வாரம் கவிதையைப் படிக்கும்போது திண்ணையுள்ள பழைய ஓட்டுவீடு தோற்றம் கொள்கிறது. தாழ்வாரத்தை நோக்கிப் பணிந்து வாழத்தெரியவில்லை என்று கவிதை
சொல்லி சொன்னாலும், ‘பாடிகூடாரம்’ தொகுதி கவிதைகளில் மொழி, அந்தரங்கத்தை நோக்கியும் அன்றாடத்தை நோக்கியும் சன்னம் கொண்டிருக்கிறது.
தாழ்வாரம்
பணியிலிருந்து எப்போது
வீடு திரும்பினாலும்
நீங்கள் துக்கமாக இருப்பதாக
பிள்ளைகள்
புகார் சொல்கிறார்கள்
எவ்வளவுதான்
பட்டும்படாமலிருந்தும்
நாள்தோறும்
சிறுகசப்பு தட்டிவிடுகிறது
தோற்றத்தில் திண்ணை முற்றம்
வாசல் தோட்டமென
விசாலமாக இருக்கிற மனதிற்கு
தாழ்வாரத்தைப் பணிந்து
வாழத்தெரியவில்லை
ஒரு காலத்தில்
மகத்துவத்தோடு வாழ்ந்த உயிர், திசைதப்பி, குறிதப்பி தற்காலத்தில் ஒரு சிற்றூரில் வந்து
விழுந்து ஒரு குடியானவனாக சம்சாரம் நடத்திக் கொண்டிருக்கும் அதிர்ச்சியும், வலியும்,
தோல்வியும், இயலாமையும் சேர்ந்த ஒரு தொனி கண்டராதித்தனின் இத்தொகுதியிலும் தொடர்கிறது.
மகத்துவ இறந்தகாலத்தின் பாழ் இருட்டுக்குள் அது ஊடுருவிச் சென்று மோதும்போது அதிரும்
வெண்கலம் சேர்ந்த குரல் சத்தம்தான் கண்டராதித்தனின் தனி வசீகரம். அந்தப் புராதன வசீகரக்
கவச உடையை கண்டராதித்தன் இந்தத் தொகுதியில் சில கவிதைகளில் களைந்திருக்கிறார்.
‘தனிமையின் நல்வாழ்வு’,
அவரது செவ்வியல் ஆபரணங்களைக் களைந்த கவிதை.
ஆனால் உள்ளடக்கம் அநாதியானது.
‘யார் சொன்னது
நான்தான்’ என்று கவிதை முடியும்போது நகுலனையும் ஆத்மாநாமையும் ஞாபகப்படுத்துவது.
தனிமையின் நல்வாழ்வு
நண்பகலில்
இச்செடிகளுக்கு
நீ ஊற்றும் நீருக்கு
பாத்தி மடிப்பேன்
எட்டத் தெரியும்
நல்லூரில்
பூத்த
பிச்சிப்பூ முடிக்க
நாள்தோறும்
நார் தருவேன்
பிச்சையென
எது தந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்
நான் தனியன்
என்றுணர்ந்து குரைக்கும்
கூட்டு நாய்களுக்கு
செவிசாய்க்காமல்
நடையைக்கட்டுவேன்
எப்போதும்.
00
இல்லை
என்ற ஜீவன்
ஒரு சுடரைப்போல
அலைந்துகொண்டே
நித்யமானதாக
இருக்கிறது.
இருக்கிறது
என்னும் ஜீவன்
ஒருமுறை தீபத்தாலும்
மறுமுறை அதன்
நிழலாலும்
முற்றுப்பெற்றது.
யார் சொன்னது
நான்தான்.
000
இந்தக் கவிதையைப்
படிக்கும்போது யார் யாரெல்லாமோ ஞாபகத்துக்கு வருகிறார்கள். ஆண்டாள் முதல் வள்ளலார்
வரை தோன்றிப் போகிறார்கள்.
தொனி எப்போது தோன்றுகிறது ; ஆளுமை பிறக்கும்போது.
இந்தக் கவிதையில் உள்ளது ஏற்கெனவே உள்ள அறிவு அல்ல. தனித்துவமான அறிதல் இந்தக் கவிதை.
Comments