Skip to main content

தோன்றாத பறவையை என்ன பெயர் சொல்லி அழைப்பது நக்கீராஆஆஆஆஆஆஆ?

 


ஸ்ரீநேசனின் ‘மூன்று பாட்டிகள்’ தொகுதியில் உள்ள ‘பட்சி கானம்’ கவிதை, கவிஞனுக்கு ஐம்பதாண்டுகளாகியும் தெரியவராத ஒரு பட்சியின் கானத்தைப் பற்றிப் பேசுகிறது.

தமிழ் வாழ்க்கையும் தமிழறிவும் சேகரித்த பறவைகளின் பெயர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதுவல்ல அதுவல்ல என்று விலக்கி விலக்கி கவிஞன், காணாத முகத்தை, காணாத உடலைக் கொண்ட அந்தப் பறவையை நெருங்கி அந்தத் தோன்றாத பறவையின் குரல் இனிப்பை வியக்கிறான்.

கவிஞர் இசையின் சமீபத்திய தொகுப்பான 'உடைந்து எழும் நறுமணம்' தொகுதியில் 'ஒரு பாடலில் பாடுவது எது' என்று நுஸ்ரத் பதே அலிகான் பாடலை முன்வைத்து எழுதியிருப்பார். எது பாடுகிறது என்று விசாரித்து சலித்துக் கொண்டே போகும்.

நஸ்ரத் அலிகான் 
தன் ஒற்றைக் கரத்தால் 
வானத்தை அளாவிக் கொண்டிருக்கும் படம் வெகு பிரசித்தம்

 எனக்குத் தெரியும் 
அந்த வானம்தான் பாடுகிறது 
ஒருவர் காலியிடமொன்றை 
உற்றுப்பார்த்தபடி பாடிக் கொண்டிருக்கிறார்.

 

அங்கு என்னென்னவோ 
தோன்றித் தோன்றி மறைகின்றன.

எனக்குத் தெரியும் 
காலியில் நிரம்பி வழிபவை எவையோ 
அவைதான் பாடுகின்றன.

 

தோன்றாத பறவை பற்றிப் பேசும் போது, அது கவிதையைப் பற்றிப் பேசுவதாகவும் நான் பொருள் கொண்டேன். தெரிந்த கவிதையின் அழகுகளை எல்லாம், நமக்கு வசீகரமான கவிதை ஒன்றுக்குள் இட்டு அடையாளம் காணப் பிரயாசைப்படுகிறோம். ஆனால், கவிதை, தெரிந்த தன்மைகளையெல்லாம் கடந்து தெரியாத புதருக்குள் இருந்து இனிமையைப் பகிர்வது போல பெயர் தெரியாத பறவையாக இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

குயில், நாகணவாய்ப் புள்ளான மைனா, ஆனைச்சாத்தன் என ஆண்டாள் சொல்லிய கரிச்சான். சிட்டு, தேன்சிட்டு, காடை, கௌதாரி, கிளி, கானாங்கோழி, செம்போத்து, நீர்க்கோழி என பறவைகளின் மொத்தத் தொகையும் இந்தக் கவிதையில் இடம்பிடிக்கிறது. பாடியது ஒரு பட்சிதான் என்று மட்டும் கவிஞனுக்கு உறுதியாகத் தெரிகிறது. ஆனால் பறவை இன்னும் மறைந்திருக்கிறது; அந்தப் பறவை இன்னும் பெயர் இடப்படாமல் அறிதலுக்கு முன்னால், மறைந்து மூடி மாய இருளோடு இருளாக இருக்கிறது. அந்தப் பறவை ஒரே பறவைதான். ஆனால் பலவிடங்களிலிருந்து இனிய கீதத்தை இசைக்கிறதாம்.

கவிஞன் தான் ஒவ்வொரு பறவைக்கும் பெயர் வைக்கிறான். பறவையின் பெயருக்கு முன்னாள் அந்தப் பறவையைப் பார்ப்பவன் அவன்தான்.

தோன்றாமல் இருக்கும் பறவையை, தோன்றாமல் இருக்கும் கவிதையை ‘பட்சி கானம்’ பாடுகிறது. ‘எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தனவே’ என்று ஸ்ரீநேசன் ஒரு வாக்கியத்தில் வெளிப்படுகிறார். இந்த ஏகாரத்தை இதுவரை நவீன கவிதை ஏற்றிருக்கிறதா என்று யோசிப்பது கூடுதல் சுவாரசியமான அனுபவம். பொருந்துகிறதோ பொருந்தவில்லையோ. ஸ்ரீநேசன் இதுபோன்ற வெளிப்பாடுகளை முயற்சி செய்கிறார்.

பட்சி கானம்

கரையேறியவுடன் என்னை வரவேற்பதாய் 
ஏரியுள் புதர்களில் 
ஒரே பறவை பலவிடங்களிலிருந்து பாடும் 
இனிய கீதம் 
உண்மையில் நரம்புகள் உணர்ந்த இசையை 
குயிலை நான் அறிவேன் 
பாடியது அதுவல்ல 
மீன்கொத்தி மரங்கொத்தி குரல்களையும் அறிவேன் 
பாடியது அவையுமல்ல 
நாகணவாய்ப் புள்ளான மைனாவோ 
ஆனைச்சாத்தன் என வழங்கும் கரிச்சானோ கூடயில்லை 
பாடியது ஒரு பட்சிதான் 
சிட்டு தேன்சிட்டு காடை கௌதாரி கிளி கானாங்கோழி 
செம்போத்து நீர்க்கோழி 
என நானறிந்த பறவைகள் ஒன்றிலுமில்லாத 
ஒரு பறவையின் இக்குரல் 
இத்தனை இனிக்கும் என உணர 
எனக்கு ஐம்பது ஆண்டுகள் பிடித்தனவே 
இன்னும் காணா முகம் அறிய 
அது முழுப்பிறவியும் வேண்டுமோ.

Comments