Skip to main content

புதுமைப்பித்தனின் கபாடபுரத்துக்குள் இன்னும்



தேவதச்சன் குறித்து நான் எழுதிய கட்டுரை ஒன்றில் அறிவும் விமர்சனமும் அழகும் உணர்ச்சியும் சேர்ந்த புதுமைப்பித்தனின் மரபு புதுக்கவிதையிலும் இருப்பதாக எழுதியிருப்பேன். புதுமைப்பித்தன் கன்னியாகுமரி ஆலயத்தின் கிழக்கு வாசலிலிருந்து இறங்கிப் போய் கபாடபுரக்குள் போன ஒரு பயணத்தின் இன்னொரு பிரதி தேவதச்சன் கவிதையாக உள்ளது. புதுமைப்பித்தனின் பிரமாண்ட உலகம் தேவதச்சனில் சிறு வீடாக மாறியுள்ளது.

வெளிக்கதவு திறந்து
உள்கதவைத் திறந்து
அறைக்கதவைத் திறந்து
பீரோ திறந்து
ரகசியச் சிற்றறை திறந்து
பெட்டியை எடுத்தேன்
மணம் வீசிக்கொண்டிருக்கிறது
கருநாவல் பழம் ஒன்று
பிசுபிசுவென்று.
கபாடபுரத்தின்
சுடுகாட்டு மரத்தில்
பறிக்கையில்
ஒட்டிய தூசு தும்பட்டையுடன்

காலத்தின் எத்தனையோ மடிப்புகளுக்கப்பால், எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் கபாடபுரத்தின் சுடுகாட்டு மரத்தில் பறிக்கும்போது ஒட்டியிருந்த அதே தூசு தும்பட்டையுடன் பிசுபிசுவென்ற கருநாவல் பழம் இருக்கும் பெட்டி ஒன்று திறக்கப்படுகிறது. புதுமைப்பித்தனும் தேவதச்சனும் தமிழ் என்ற ஆதி உணர்வை, அறிவை, நினைவை கபாடபுரம் என்ற சொல், இடம் வழியாகத் திறக்கிறார்களா? சுடுகாட்டு மரத்தில் பறிக்கப்பட்ட நாவல்பழம் என்ற செய்தியில் காரைக்காலம்மையாரைக் கடக்காமல் இருக்க முடிகிறதா? தேவதச்சன் இந்தக் கவிதையில் பயன்படுத்தியிருக்கும் பிசுபிசுப்பு, தூசுதும்பட்டை என்ற இரண்டு வார்த்தைகளும் கொடுக்கும் உணர்வு அர்த்தச் சுமை அலாதியானது.

மனிதனை உண்ணும் மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியை கபாடபுரத்தின் கதைசொல்லி சாப்பிடத் தயங்கும்போது, சுடுகாட்டு மரத்தில் பறிக்கப்பட்ட மாம்பழத்தை நாம் சாப்பிடுவதில்லையா என்று சித்த புருஷர் கேலியாகக் கேட்கிறார். கபாடபுரத்திலும் இன்னும் பல கதைகளிலும் மரணம் என்ற விஷயத்தின் மேல் விசாரணையும் வசீகரமும் தொடர்ந்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறிவின் தன்மை அறிவுக்குத் தெரிய அறிவு அடங்குவதை நோக்கி, கற்பனை உலகங்களை சிருஷ்டித்து தனது கேள்விகளை மரணத்தை நோக்கி எழுப்பிய கதைகளாக உபதேசம், செவ்வாய்தோஷம் கதைகளைச் சொல்வேன். உபதேசம் கதையில் நவீன மருத்துவத்தால் விளங்கிக் கொள்ள முடியாத, கண்ணாடிகளைத் தின்று உயிர்வாழும் ஹடயோகியின் உடலைத் திறந்து பார்ப்பதன் வழியாகத் தான் ஆங்கில மருத்துவர் விஸ்வநாத்தின் பாதையே மாறுகிறது.

செவ்வாய்தோஷம் கதையில் வரும் கம்பௌண்டர் வெங்கடசாமி நாயுடு, அலோபதியை வாழ்வாதாரமாகவும் சித்தவைத்தியத்திலும் ஜோதிடத்திலும் நம்பிக்கையை விடாதவராகவும் இருக்கிறார். கோயிலூர்ப் பள்ளனின் மரணத்துக்குச் சொல்லப்படும் அதீதமான பின்னணியை அலோபதி மருத்துவர் வீரபத்திரப் பிள்ளைக்குத் தெரியப்படுத்துகிறார். கபாடபுரம், செவ்வாய்தோஷம், உபதேசம் மூன்று கதைகளிலும் அறியாத ஒரு உலகம் திறக்கப்படுகிறது. கபாடபுரம் கதையில் இடமென்றால், மற்ற இரண்டு கதைகளிலும் உடலும் உடல் சார்ந்த அறிவும் விசாரணைக் களமாகிறது. நவீன பிரச்சினைகள் எல்லாவற்றுக்கும் பழையதில் தீர்வு காணும் மூர்க்கத்தில் அல்ல, ஒரு அரசாக, மதமாக, எதிர்த்துக் கேட்க இயலாத நம்பிக்கையாக மாறிவரும் நவீன அறிவின் போதாமைகளிலிருந்து புதுமைப்பித்தன் உருவாக்கும் விவேக உலகங்கள் இவை. மாயை, பயம், சபலம், சமய நம்பிக்கையைத் துறந்த அறிவார்ந்த படைப்புக் கேள்விகளாக அவை இருப்பதாலேயே பழைமை ஏறாமல் நமக்கு இன்னும் அர்த்தப்பாட்டுடன் இருக்கின்றன.

பிறப்பின் ரகசியங்களை, இருப்பின் ரகசியங்களை, வாழ்வதின் ரகசியங்களை, மரணத்தின் ரகசியங்களை, மொழியின் ரகசியங்களை, அர்த்தங்களின் ரகசியங்களை, அதன் வரையறைகளின் ரகசியங்களை மோதித் திறக்காமல் அவை வகுக்கும் நியதியை உணர்ந்து அதன் பிரகாரத்திலேயே அமர்ந்து கனிந்து அந்தக் கனிவையே அறிதலாக்கிப் படைப்பாக்கும் எழுத்தாளர்கள் ஒருவகை. பஷீர், சிவராம் காரந்த், எம். வி. வெங்கட்ராமன் போன்றவர்கள் அதற்கு உதாரணங்கள். கடவுளின் கஜானாவிலிருந்து நிறைவையும் கனிவையும் நிறை ஆயுளையும் அனுபவிப்பவர்கள்.

புதுமைப்பித்தன் போன்றவர்கள், கம்பவுண்டர் வெங்கடசாமி நாயுடுவைப் போல கையில் கத்தியுடன் நடு இரவில் அச்சமின்றி சுடுகாட்டுக்குப் போய், அறிவின் நியதிகள், மொழி வகுத்திருக்கும் நியதிகள், அமைப்பின் நியதிகள் எல்லாவற்றையும் கேள்விகளாலும் விமர்சனத்தாலும் அறுத்துப் பார்க்கத் துணியும் அதீதர்கள். தன்னைச் சுற்றி இயல்பைப் போலப் படர்ந்திருக்கும் அமைப்பை உலுக்கியெடுக்கும் அந்த அதீதம்தான் திரும்பி அவனது உயிரையும் தீண்டிவிடுகிறது.

ஆனால், அந்த அதீதம்தான், தமிழ் மொழியின் வசீகரம் குன்றாத பொற்பிரம்பாக மாறியிருக்கிறது.     

அவரது அன்று இரவு கதையில் ஈசன் முகத்தில் விழுந்த அந்தப் பொற்பிரம்பு, புதுமைப்பித்தனுடையது. அழகு, உண்மை, தெய்வம் என்ற அம்சங்களை ஆபரணங்களாகக் கொண்ட, அழகுக்கான தேடலும் நீதிக்கான தேடலும் வேறு வேறு அல்ல என்ற முன்வரைவைக் கொண்ட உருவகம் அவன். அதனால் தான் அந்த அடியிலிருந்து யாரும் தப்ப முடியவில்லை. எதுவும் தப்ப முடியவில்லை.

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின்மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகள் மீது விழுந்தது. கருவூரில் அடைபட்ட உயிர்கள் மீது, மண்ணின் மீது வனத்தின்மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின் மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின்மீது அந்த அடிவிழுந்தது.

காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள்மீது விழுந்தது. சாவின்மீது பிறப்பின் மீது மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன்மீது, வாதவூரன் வேதனையின்மீது, அவன் வழிபட்ட ஆசையின்மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. அவளது நெற்றித் திலகத்தின் மீது, கொங்கைக் குவட்டின்மீது அந்த அடி விழுந்தது. 


(அன்று இரவு கதையின் கடைசிப் பகுதி)  

Comments