Skip to main content

மினாரெட் புதைக்கப்பட்ட நாடு

 

இடைவெளி காஷ்மீர் சிறப்பிதழ்

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு டில்லியில் பிறந்து காஷ்மீரில் இளம்பருவத்தைச் செலவழித்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இந்திய – அமெரிக்கக் கவிஞரான ஆஹா சாகித் அலி, உணர்வுநிலை அடிப்படையில் தன்னை நாடுகடத்தப்பட்டவன்(exile) என்று அடையாளப்படுத்திக் கொள்பவர். மேற்கத்திய இலக்கியம், தாராளவாத கலாசாரத்தின் தாக்கத்துடன் அனைத்துப் பண்பாடுகளையும் தன்னுள் பிரதிபலிக்க அனுமதித்த ஆஹா சாகித் அலி, காஷ்மீரை, எப்போதைக்குமான அகமாகவும், கருப்பையாகவும் மூலாதாரமாகவும் மூலப்படிமமாகவும் ஆக்கிக் கொண்டவர். கல்வியாளர்களும் புகழ்பெற்ற மருத்துவர்களும் புழங்கும் உயர்வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவில் காலம் காலமாக நீடித்த இந்து – இஸ்லாமியப் பண்பாட்டு உறவுகளின் சாரம் தான் ஆஹா சாகித் அலியின் உள்ளடக்கம். சிறுகுழந்தையாக இருந்தபோது கிருஷ்ணன் வேடத்தில் அவர் பெற்றோர் இவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணனுக்கு தனது வீட்டின் வளாகத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்று சிறுபிள்ளையாக இருந்தபோது அவர் தனது அப்பா, அம்மாவிடம் அனுமதி கேட்க அவர்கள் அதற்கு சம்மதமும் தெரிவித்தார்கள் என்று கூறுகிறார். கடந்த சில தசாப்தங்களில் அரசியல் ரீதியாக இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டு வரும் பிளவின் பின்னணியில் ஆஹா சாகித் அலி நமக்கு ஓர்மையூட்டும் ஒரு பண்பாட்டு வரலாறு இன்று நமக்கு அவசியமானது. மத அடிப்படையில், இறந்த காலத்தில் நடந்த மோதல்களின் அடிப்படையில், அச்சம், வெறுப்பு, துவேஷம், பாகுபாடு, அநீதி ஆகியவற்றால் இந்துக்களும் முஸ்லிம்களும் பிரிவினைவாதத்துக்குள் நெட்டித் தள்ளப்பட்டிருக்கும் நிலையில் பண்பாட்டு வரலாற்றின் அடிப்படையில் இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான உறவை நெசவு செய்யும் கலைஞன் ஆஹா சாகித் அலி.

அக்பரும், தாராஷூகோவும், ஜஹன்னாராவும், திப்பு சுல்தானும், காலிப்பும், பெய்ஸ் அகமது பெய்சும், சாதத் ஹசன் மண்டோவும், கபீரும், சிர்டி சாய்பாபாவும் சேர்ந்து பின்னிய டாக்கா மஸ்லின் போன்று நுண்மையாக உருவாக்கிய அந்தப் பண்பாட்டு நினைவை, ஏக்கத்தை, பெருமூச்சை ஆஹா சாகித் அலி, பல்லாயிரம் மைல்கள் தாண்டி இருக்கும் அமெரிக்கக் கண்டத்திலிருந்து தொலைவின் அழகையும் சேர்த்துக் கொண்டு எழுதியுள்ளார். அந்தப் பண்பாட்டு இழைகளாலான பட்டுத்துணியை ஒரே நிமிடத்தில் வன்மமும் குரோதமும் கிழித்துவிடலாம். ஆனால் அது சேர்க்கப்பட்டு நெசவு செய்வதற்கு பல லட்சம் கைகள் கோத்திருக்கின்றன. காதலும் இசையும் உணவும் சினிமாவும் பருவங்களும் மணலும் கடலும் ஆறும் சேர்ந்து உருவாக்கிய பண்பாடு அது.

மனிதர்கள் கூடிச் சேர்ந்து இருக்கும் இடத்தைத்தான் எனது தாயகமாக உணர்கிறேன் என்று சொன்ன ஆஹா சாகித் அலியின் அத்தனை கவிதைகளும் உறவுக்கான பெரும் ஏக்கங்கள்தான். காஷ்மீரை உள்ளடக்கமாக வைத்து ‘தி கண்ட்ரி வித் அவுட் போஸ்ட் ஆபீஸ்’ கவிதையிலும் நிலப்பரப்பு மனிதர்கள், நண்பர்கள், காதல்களின் நினைவுகளாகவே எழுகிறது. நகுலனுக்கு காலம் இடமாக காட்சி அளிக்கிறது. ஆஹா சாகித் அலிக்கு காலமும் இடமும் பண்பாடும் முகங்களாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களாக இருக்கிறது. டெல்லியின் சாந்தினி சௌக், ஒரு காலத்தில் மல்லிகைப் பூக்கள், டாக்கா மஸ்லின், காபூல் தைலம், ஆக்ராவின் கண்ணாடி வளையல்கள் விற்கப்பட்ட நினைவுகளின் தெருவாகவே தெரிகிறது.       

தாய், தந்தையருடனான குழந்தைப் பருவத்து ஞாபகங்கள், உயர்கல்வி கற்பதற்காகச் சென்ற டெல்லியின் நிலவியல், பெருநகர் கலாசார நினைவுகள் ஏக்கங்களாக ரீங்கரிக்கும் கவிதைகளில் அகவயப்பட்ட அந்தரங்கமான கவிஞராகவே தெரிகிறார் ஆஹா சாகித் அலி. அவரது அம்மா பற்றி எழுதிய கவிதைகள் வழியாகவே எனக்கு மேலும் நெருக்கமானார் அலி. தான் பிறப்பதற்கு முன்னான அம்மாவை, அவளது யௌவனத்தோடு அவரால் தனது கவிதைகள் வழியாகப் பார்க்க முடிகிறது. தான் பிறக்காத இருப்பின் இரவில், தாழிடப்பட்ட வீட்டுக்குள் சென்று உறங்கப்போகும் புதுமணத் தம்பதிகளான அம்மாவையும் அப்பாவையும் அவர் கவிதைகளில் முதல் முறையாகப் பார்க்கிறோம். ஆஹா சாகித் அலியின் அம்மா அவளது யௌவனம், காமார்த்தம் ஆகியவற்றோடு துயரங்களைத் தாங்கிக் கடக்கப் போகும் திடமான பண்பாட்டின் அம்மாவாகவும் உருவெடுக்கிறாள். அவரது அம்மாவில் வாசகன் அனைவருடைய அம்மாக்களின் சாயலையும் பார்க்கக்கூடும்.

ஆஹா சாகித் அலிக்கு உலகப்புகழை அளித்த கவிதையான ‘தி கண்ட்ரி வித் அவுட் போஸ்ட் ஆபிஸ்’ கவிதை, காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டு அரச பயங்கரவாதம் துவங்கிய நிலையில் தபால் நிலையங்கள் செயல்படாமல் ஆக்கப்பட்ட நிலையைக் கொண்டு எழுதப்பட்டது. ‘அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு’ என்பது காஷ்மீரைச் சுட்டும் படிமமாக ஆகி இன்று நிலையும் பெற்றுவிட்டது துரதிர்ஷ்டம். இன்று காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தும் துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட பல மாதங்கள் அடிப்படை நவீன தகவல் தொடர்பான, இணைய வசதிகளும் துண்டிக்கப்பட்டு இன்று ஒட்டுமொத்த இந்தியாவுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட, சிறைவைக்கப்பட்ட ஒரு பிரதேசமாக ஜம்மு – காஷ்மீரும் அங்குள்ள மக்களும் இருக்கும் நிலையில்  ‘அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு’ மேலும் பொருத்தப்பாட்டுடன் உள்ளது. ஆஹா சாகித் அலி தனது குழந்தைப் பருவத்து நண்பரான இர்பான் ஹசனிடமிருந்து ஒரு கடித த்தைப் பெறுகிறார். ஸ்ரீநகரில் உள்ள தபால் நிலையம் ஒன்றில் தனக்கு அனுப்பப்பட்ட பட்டுவாடா ஆகாத கடிதங்களையும், ஆஹா சாகித் அலியின் தந்தைக்கு அனுப்பப்பட்ட கடிதங்களையும் ஒரு பெரும் கடிதக்குவியலிலிருந்து கண்டெடுத்து அனுப்பினார். செயல்படாத தபால் நிலையங்கள், ராணுவ வீரர்களின் தங்குமிடங்களாக மாற்றப்பட்ட தபால் நிலையங்கள் குறித்த தகவல்களிலிருந்து உந்துதல் பெற்று சன்னதம், புலம்பல், ஓங்காரம் ஒலிக்க உச்சாடனமாக கடைசியில் ஆகும் நெடுங்கவிதைதான் ‘அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு’.

காஷ்மீரின் பண்பாட்டு அடையாளமான பைஸ்லே (உடைகள் மற்றும் சேலைகளில் இருக்கும் மாங்காய் வடிவம்) ஒரு உருவகமாக, ஒரு அடையாளமாக உருப்பெறுகிறது. தபால் வில்லைகள் ஒரு மனிதனின் முகவரியாக, மனிதர்களின் அகமாக வேறு வேறு அர்த்தங்களைச் சூடுகிறது.

நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்தக் கவிதையின் முதல் பகுதியில் கவிதைசொல்லி காஷ்மீருக்குத் திரும்புகிறான். மினாரெட்கள், ஜோதிடர்கள் ஆகியோர் வருகிறார்கள். காஷ்மீரில் இருக்கும் வன்முறைச் சூழல் நினைவுகூரப்படுகிறது. தபால் வில்லைகளில் நாட்டின் அடையாளம் இல்லை. ஏனெனில் காஷ்மீர் என்ற நிலத்தின் அடையாளம் இன்றும் சர்ச்சைக்குள்ளான ஒன்றாகவே உள்ளது. மூன்றாவது பகுதியில் தொழுகைக்கு அழைக்கும் மியூசின்(தொழுகைக்கு அழைப்பவர்), தொழுகைக்கு கூப்பிடுவதற்குப் பதிலாக தபால் வில்லைகளை தான் இறப்பதற்குள் வாங்கிப் போகச் சொல்கிறார். கடைசிப் பகுதியில் பைத்திய புலம்பலுக்குச் செல்கிறான் கவிதை சொல்லி. இந்த நான்கு பகுதிகளிலும் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்ட காஷ்மீர் பண்டிட்களின் அவலமும் தீவிரமான படிமங்கள் வழியாக, எரிக்கப்பட்ட வீடுகளின் வழியாக நினைவுகூரப்படுகிறது. இந்த நீள்கவிதையின் மேற்கோளில் ரஷ்யா குறித்து எழுதப்பட்ட ஒரு கடிதமும் இன்றைய உக்ரைன் – ரஷ்ய போர்ச் சூழலில் மிகவும் பொருத்தமானது.

‘அஞ்சல் நிலையம் இல்லாத நாடு’ கவிதைத் தொடரின் நான்காவதும் கடைசியுமான கவிதையில், மினாரெட் என்ற படிமம் எதைக் குறிக்கிறது என்பது தெளிவாகிவிடுகிறது. சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்க முடியாத கடிதங்களைப் படிக்கத் தொடங்குகிறான் அவன்/ நான் அவற்றை வாசிக்கிறேன், காதலர்களின் கடிதங்கள், பைத்தியம் பிடித்தவர்களின் கடிதங்கள்/ நான் அவனுக்கு எழுதி பதில்களே வராத கடிதத்தையும். நான் விளக்குகளை ஏற்றுகிறேன், எனது பதில்களை அனுப்புகிறேன், பிரார்த்தனைக்கான அழைப்பையும் கண்டங்களாகப் பரவியுள்ள செவிட்டு உலகங்களுக்கு. மரணம் கிட்டத்தட்ட அருகில் இருக்கும் நிலையில் உலகத்துக்கு எழுதப்பட்டு, இறந்துபோன கடிதங்களைப் போல எனது அழுகையும் புலம்பலும் உள்ளது என்று எழுதுகிறார். இதை எழுதும்போது மழைபெய்கிறது. என்னிடம் பிரார்த்தனை இல்லை, வெறும் கூச்சல்தான் உள்ளது என்று மறுகுகிறார். சிறையில் நொறுங்கும் அழுகையோலங்கள்தான் இந்தக் கடிதங்கள் என்று எழுதுகிறார்.

அடிப்படையில் தன்னை நாத்திகன் என்று கூறிக்கொள்ளும் ஆஹா சாகித் அலி பண்பாட்டு அடிப்படையிலான இஸ்லாமியன் என்று தன்னை அடையாளம் காண்கிறார்.

இந்தியாவை ஆளும் அரசின் ஆதரவோடு தூண்டப்படும் மதவாதம், பிரிவினைவாதத்தால் பள்ளி மாணவிகள் உட்பட தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் விஷவாதச் சூழலில் மதச்சார்பின்மையையும் நல்லிணக்கத்தையும் வேறுபாடுகளுக்கிடையிலும் அமைதியான சகவாழ்வுக்கான சாத்தியத்தையும் மறுபடியும் பரிசீலிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம். வரலாற்று காலமாக சமாதானம், அமைதி, கூடிவாழ்வதின் நறுமணத்தை வைத்திருக்கும்  இந்து – இஸ்லாமியப் பண்பாட்டு உறவின் உருவகமாகத் திகழும் கலை ஆளுமையான ஆஹா சாகித் அலி தமிழுக்கு அறிமுகமாவது அவசியமானது. அரசு அதிகாரத்தின் பெரும் ஆதரவுடன் தன்னைத் துரத்தி வந்த ஒரு கும்பல் முன்னால் ‘அல்லாஹூ அக்பர்’ என்று சொன்ன அந்தச் சிறுமி முஸ்கானின் குரலுக்கு இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.

ஆஹா சாகித் அலியின் கவிதைகளில் வரும் காஷ்மீர் தனியான பிரதேசம் அல்ல. இந்தியாவின் ஒவ்வொரு இடமும் காஷ்மீர் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முயற்சியில், காஷ்மீர் என்பது தனித்த நிலமும் அல்ல. அது நமக்கு ஒரு எச்சரிக்கையான உருவகம்.

ஆஹா சாகித் அலியின் இந்தப் பத்துக் கவிதைகள் மொழிபெயர்ப்பை மேம்படுத்த நண்பர் விஜயராகவன் சிரத்தை எடுத்துக் கொண்டு உதவினார். கஸல் கவிதையைச் செப்பனிடுவதற்கு உதவியவர் நண்பர் மிஷ்கின். உரைநடைக் கவிதைகளாகத் தெரிந்தாலும் ஆஹா சாகித் அலியை மொழிபெயர்க்கும்போது கவிதை மொழிபெயர்ப்பு என்பது எத்தனை உழைப்பையும் திறனையும் கோருவது என்பதை உணர்ந்தேன். க்ரியா ராமகிருஷ்ணன் போன்றவர்களின் இழப்பு எத்தகையது என்பது புரிந்தது. ஆஹா சாகித் அலி தமிழுக்கு முதல்முறையாக அறிமுகமாகிறார். அதற்கான வெளியை உருவாக்கிய பரிசல் செந்தில்நாதனுக்கும் இடைவெளி ஆசிரியர் குழுவினருக்கும் சி. மோகனுக்கும் நன்றி.  

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக