Skip to main content

ஸ்ரீநேசனின் ‘ஆண்டன் செக்காவ்வை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது’

 


அரிய, அபூர்வ தமிழ்க்குணம் கொண்ட கவிதைகளைப் படைத்த ஸ்ரீநேசனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘மூன்று பாட்டிகள்’. மொழியை வதைக்கும் போது வரும் ரத்த வாடையும் வெற்றுப்பூடகத்தின் புகைமூட்டமும் மலிந்திருக்கும் நவீன கவிதைச் சூழலில், ஒரு கவிதைத் தொகுப்புக்கு ‘மூன்று பாட்டிகள்’ என்ற தலைப்பு இருப்பதே ஆசுவாசத்தைத் தருகிறது. தன்னியல்பின் கம்பீரத்துடன் சுயமுகத்துடன் திகழும் ஸ்ரீ நேசனின் கவிதைகள் மூலிகை இலைகளை வாயில் சுவைக்கும் போது உணரும் குணமூட்டுதலைத் தருபவை.

மிக நீண்ட இடைவெளிகளில் வெளிவந்த காலத்தின் முன் ஒரு செடி, ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுப்புகளுக்குப் பிறகு மூன்று பாட்டிகளை வாசிக்கும் போது, ஸ்ரீ நேசன், தனது புராதனத் தன்மையைத் தக்கவைத்துக் கொண்டே இரண்டாம் பருவத்துக்குள் நுழைந்துவிட்டிருக்கிறான் என்ற முதல்பதிவு என்னுள் ஏற்பட்டது. அப்புறம் ஒரு சுயசரிதைத் தன்மை இந்த ‘மூன்று பாட்டிகள்’ கவிதைகளில் கூடியிருக்கிறது. ஏரிக்கரையில் வசிப்பவனில் தென்பட்ட ஒரு விரைப்பும், விமர்சனக் கூர்மையும் இலகுவாகி ஒரு கனிவை அடைந்திருக்கிறார் ஸ்ரீநேசன். கனிவு, வண்ணதாசன் வகையறா சேதாரங்களையும் ஸ்ரீநேசனுக்கு அளித்துள்ளது. 'ஐஸ்க்ரீம்' கவிதை ஒரு உதாரணம். சேதாரத்துக்கு கவிஞன் அஞ்சவே கூடாது.  

உரையாடல், சந்தம் இவற்றோடு தமிழ் நவீன கவிதை தவிர்த்த வெளிப்பாட்டு முறைகளையும் முயன்று வெற்றியையும் தோல்வியையும் இந்தத் தொகுதியில் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று பாட்டிகள் தொகுதியில் எனக்குப் பிடித்த கவிதைகளைத் தனித்தனியாக எழுதிப் பார்க்க வேண்டுமென்று திட்டமிட்ட போது, ஸ்ரீநேசனின் தனிமுத்திரையான கிராமியம் + புராணிகம் + புராதனம் தொனிக்கும் கவிதைகளைப் பற்றிப் பின்னரும், என் உலகத்துக்கு நெருக்கமான ‘ஆண்டன் செக்காவ்வை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது’ கவிதையை முதலிலும் எழுதவேண்டுமென்று நினைத்தேன். மூன்று பாட்டிகள் தலைப்பில் எழுதப்பட்ட மூன்று சிறிய கவிதைகளில் தமிழ்ப் பாட்டிகள் மூன்று பேர் வருகிறார்கள். பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள்  என அந்தப் பாட்டிகளின் பெயர்கள் மட்டுமே அகத்தில் அதிர்பவை. அந்தக் கவிதைகளைப் பற்றித் தனியாக எழுதவேண்டும். லா ச ராவின் அபிதா போல, நகுலனின் சுசீலா போல, ஞானக்கூத்தனின் கடைசிகாலக் கவிதைகளில் இடம்பெற்ற காதலியான ஞானாட்சரி போல இந்தப் பாட்டிகள் நிலைத்திருக்கப் போகிறவர்கள்.

ஆண்டன் செகாவ்வின் கதைகளின் இருட்டுக்குள் ஆண்டன் செகாவின் இடம் என்னவென்பதைக் கண்டுபிடித்த ஸ்ரீ நேசனின் கவிதை இது. ஆண்டன் செகாவின் கதைகளின் புரதம் இறங்கியவர்களுக்கு இந்தக் கவிதை கூடுதல் அனுபவத்தைத் தரவல்லது. ஆமாம், எப்போதும் புலப்படாமல் நம்முடன் இருக்கும் இருட்டுக்குள் சற்றே தன் சுடரை நீட்டும் அந்த மெழுகுவர்த்தியின் வினோதம்தான் ஆண்டன் செகாவ், ஸ்ரீநேசன்.

ஸ்ரீநேசனின் இந்தக் கவிதையை வாசிக்கும்போதெல்லாம் வைக்கம் முகமது பஷீரின் ‘நீல இருட்டு’ கதை ஞாபகம் வந்தது. கதைசொல்லி தனியாகக் குடியிருக்கும் வீட்டில் மின்சாரம் போய்விடும். விளக்குக்கு மண்ணெண்ணெய் கேட்க நண்பர்கள் இருக்கும் அறைக்குச் சென்று கொஞ்ச நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பும் கதை சொல்லி, தனது பூட்டிய வீட்டுக்குள் நீல வெளிச்சம் படர்ந்திருப்பதைப் பார்ப்பார். அகாலத்தில் அந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோய் அந்த வீட்டிலேயே சுற்றுவதாகச் சொல்லப்படும் பார்கவி என்ற இளம்பெண்ணின் ஆவி அது.

ஸ்ரீ நேசனின் கவிதையில் ஆண்டன் செகாவ், அப்படி ஒரு வெளிச்சமாகப் படர்ந்திருக்கிறார். ஒரு சிற்றூரின் அறையில் தான் ஆண்டன் செகாவ் வாசிக்கப்படுகிறார். செகாவின் மெழுகுவர்த்தி நுழையும் போது காலம், நிலத்தைக் கடந்துவிடுகிறது அந்த அறை.

வெளிச்சம் நமது உடல்கள் மீது நோய் படர்த்திவிட்டது ஸ்ரீ நேசன். செகாவின் இருட்டை நோக்கிப் போகவேண்டுமென்ற ஓர்மையை இந்தக் கவிதை கொடுக்கிறது.

ஆண்டன் செக்காவ்வை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிப்பது

புதிய மொழிபெயர்ப்பில் ஆண்டன் செக்காவ் வந்து சேர்ந்த 
அன்றைய முன்னிரவில் 
புரட்டிய பக்கத்தில் எதிர்ப்பட்ட கதையை 
வாசித்துக் கொண்டிருந்தேன் 
மின்சாரம் போனது 
மெழுகுவர்த்தி ஏற்றி 
மிச்சக் கதையைப் படித்து முடித்தேன் 
அடுத்தநாள் 
இரவு உணவுக்குப் பின்பு செக்காவ் அழைத்தார் 
இரண்டு சிகரெட்டுகளைத் தொடர்ந்து புகைப்பவன்போல் 
இரண்டு கதைகளை ஒருசேர வாசித்தேன் 
இரண்டாவது கதை முடிவுறும் தருணம் 
இன்றும் மின்வெட்டால் வாசிப்பு இருண்டது 
மெழுகுவர்த்தித் துணையுடன் தொடர்ந்தேன் 
எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி ஒன்றை 
கதைக்குள்ளும் கண்டு 
அதன் இணை நிகழ்வை வியந்தேன் 
அந்நேரம் 
அறையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி தீர்ந்தது 
அவ்விருளில் நூற்றாண்டைக் கடந்து 
அக்கதைக்குள் தொடர்ந்து எரியும் 
அந்த மெழுகுவர்த்தியின் வினோதத்தை 
செக்காவ் என உணர்ந்தேன் 
மூன்றாம் நாள் நள்ளிரவு 
தூங்கிக் கொண்டிருந்தவனை 
மின்விசிறி நின்று எழுப்பியது 
புதிய மெழுகுவர்த்தியில் 
புதிய கதையைத் தொடங்கினேன் 
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எழுதிய கதையை 
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாசிக்கையில் 
செக்காவ் என் அறைக்குள் வந்து அமர்கிறார் 
அல்லது நான் அவர் அறைக்குள் சென்று அமர்கிறேன் 
இனி மின்சாரமும் மெழுகுவர்த்தியும் இல்லாமல்கூடச் 
செகாவ்வைப் படிக்கலாம் 
அவர் கதைக்குள் எரிந்து நிற்கும் மெழுகுவர்த்தி 
என்றென்றைக்கும் தீரப்போவதில்லை.     

Comments