Skip to main content

ஸ்ரீநேசனின் பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள்

 



ஸ்ரீநேசனின் ஏரிக்கரையில் வசிப்பவன் தொகுதியில் உள்ள முதல் கவிதையில் வரும் இளந்துடி கொண்ட ‘ஏரிக்கரை அம்மன்’ தான் ஸ்ரீநேசனின் புதிய இத்தொகுதியில் ‘மூன்று பாட்டிகள்’ ஆக மாறியுள்ளனர். பெருமாத்தம்மாள், கன்னியம்மாள், ஜடசியம்மாள் மூவரும் அம்மாவை ஏந்தியிருக்கிறார்கள். பண்பாட்டின் நிழலும் இருட்டும் சுரந்துகொண்டிருக்கும் அம்மைகள் அவர்கள். கன்னியம்மாள் என்ற பெயர் மட்டும் வடதமிழகத்தில் புழங்கும் பெயர். பெருமாத்தம்மாள், ஜடசியம்மாள் இருவர் பெயரும் புனைந்தவையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பெயர்களை உச்சரிக்கும் போது ஒரு நிலம் அதிர்கிறது. இந்தப் பெயர்கள் கவிதையில் வரும் பாட்டிகளின் பெயர்கள் அல்ல. ஸ்ரீநேசன் என்ற கவி, தனது கவிதைக்குள் வந்த அம்மாள்களுக்குச் சூட்டியிருக்கும் பெயர்கள் அவை. மூன்று பேரும் பேருந்தில் வேறு வேறு சூழல்களில் பயணிப்பவர்கள்.

பாட்டி ஒன்று : பெருமாத்தம்மாள்  

படிக்கட்டோர இருக்கையில் ஒரு பாட்டி 
எதையோ தவறவிட்டதான முகபாவம் 
சுமக்க முடியாத புத்தக மூட்டையை 
யாரோ ஒரு சிறுமி 
அவள் மடியில் இறக்குகிறாள் 
என்னவொரு மிடுக்கு கிழவிக்கு இப்போது 
தானே பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பதைப்போல.

கல்விக்கு, புதிய அனுபவத்துக்குச் சலிக்காத, வற்றிப் போகாத ஒரு சிறுமி, முதல் பாட்டியின் கோட்டோவியம் தான் பெருமாத்தம்மாள்.

 

பாட்டி இரண்டு : கன்னியம்மாள்  

கோயில் பிரசாதமெனினும் 
நீ கொடுக்கும் சுண்டலை 
மயக்க மருந்திட்டதோ என இப்பேருந்து பயணிகள் 
ஒருவரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் 
உன் அன்பை 
அழுகையைப்போல் அடக்கிக் கொள் பாட்டி.

 

பெருமாத்தம்மாள் என்ற சிறுமி, மாறிய ஒரு காலச்சூழலுக்குள் சூழலுக்குள் வளர வேண்டிய துயரத்தில் கன்னியம்மாளாகத் தென்படுகிறாள். பரஸ்பரம் சந்தேகங்கள் தொடங்கிவிட்ட ஒரு பருவத்துக்குள் பயணிக்கும் அந்தப் பேருந்துக்குள் கன்னியம்மாள் அன்பை அழுகையைப் போல அடக்கிக் கொண்டு தான் வளரவேண்டும். கன்னிமையே, கன்னியம்மாளே நீ அன்பை அடக்கிக் கொள்.

மூன்றாவது பாட்டியான ஜடசியம்மாள் வளர்ந்துவிட்டவள்; வலுவானவள்; இந்தப் பூநிலத்தில் வாழ்வதற்கான அத்தனை சூட்சுமங்களும் தன்னைப் புணர அனுமதித்தவள். அவள் முதல் கவிதையில் வரும் சிறுமி அல்ல; கன்னியாய் அன்பை யாருக்கும் தரமுடியாமல் பயணத்தில் மிதப்பவள் அல்ல; ஜடசியம்மாள், தனக்கு வேண்டியதை அவள் நிலத்திலிருந்து மட்டுமல்ல, பேருந்திலிருந்தும் எடுத்துக் கொண்டு தரையில் இறங்கி நடந்து செல்பவள். துரியோதனன் படுகளம் சடங்கு நிகழ்ச்சியில் மண்ணுக்கு உரமாக மாறும் துரியோதனன் வீழ்ந்து கிடக்கும் தெரு வழியாகப் போகிறாள் ஜடசியம்மாள். கவிதைக்குள் வந்த அபூர்வம் இவள்.

பாட்டி மூன்று : ஜடசியம்மாள்  

பச்சை வேர்க்கடலை 
கிடைக்காத பருவத்தில் ஒரு மரக்கால் பைநிறைய 
மாமியார் பெருமையோடு கொடுத்தனுப்பியதை 
அம்மாவுக்குக் கொண்டு செல்வேன் 
விடிகாலை உறக்கத்தைப் பயன்படுத்தி 
ஒரு கிழவி தன்னுடையதைப் போல் 
என்னுடைய பையோடு இறங்கிச் செல்கிறாள் 
தூக்கக் கலக்கத்தில் கவனித்துவிட்ட நான் 
பதற்றமடைந்து விட்டேன் 
யாரும் பாட்டியைப் பிடித்துவிடக்கூடாது 
யாரும் அவமானப் 
படுத்திவிடக்கூடாது.

ஜடசியம்மாளின் பின்புறம் பேருந்தை விட்டு தரையில் இறங்கிச் செல்கிறது. இன்னும் எந்த ஊரும் விடியத் தொடங்கவில்லை. ஜடசியம்மாளுக்குப் பொழுதும் கவிஞனைப் போலவே உடன் ஒத்துழைக்கிறது.    

Comments

Ranjani basu said…
கவிஞருக்கு கிடைக்கும் ஆகப் பெரிய சன்மானம் தன் கவிதையை மற்றொரு கவிஞர் மனமாரப் பாராட்டுவது தான்.ஶ்ரீநேசனுக்கு கிடைத்த பெரும் பரிசு