Skip to main content

Posts

Showing posts from March, 2025

அசோகமித்திரன் இருந்த வீதி

  அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட்...

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  நான் அறிவேன் அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை வரையறுக்கப்பட்ட வருத்தங்களை நான் அறிவேன்.   ஆனால் நான் அவர்களைக் கவனிக்கிறேன் அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை நான் விரும்புகிறேன் அதுவே ரொம்ப.   அவர்கள் புகார் சொல்கின்றனர் ஆனால் கவலைப்படுவதில்லை. அவர்களின் மிடுக்கு நடை  ஆச்சரியகரமான கண்ணியம். மனிதர்களால் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில் எளிமையாக அவர்கள் உறங்குகின்றனர்.   நமது கண்களை விட பூனைகளின் கண்கள்  அபரிதமிதமான அழகு கொண்டவை. அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில் உறங்கமுடியும் எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி.   நான் சோர்வாக உணரும்போதெல்லாம் எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.   நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன் அவர்களே எனது ஆசிரியர்கள். (சுஜாவுக்கு)

றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் 'சட்டை வண்ண யானைகள்'

நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது. றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது. றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும். எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையி...

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்

ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன் என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே எனது கூட்டாளி நீ உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன் மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால் உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன் காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன். தூய்மையான கரமொன்றால்  பிரிவின்போது  நீ எனக்கு அளிக்கப்பட்டாய். நேசத்தின் கடைசி நினைவுப் பரிசு நீ… கசந்து பிரியும்போது  ரத்தம் அல்ல முத்தைப் போன்ற கண்ணீர்  துயரமாக உனது கூர்முனையில்  விழுந்தோடியது.  எஃகாக இருக்கையில் நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல  துயரம் தோய்ந்த மர்மக் கனவால் நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும் எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன. சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி: நான் ஒருபோதும் மாறப்போவதில்லை என் ஆன்மா  உன்னைப் போல உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட உன்னைப் போல. 

அவள் பெயர்

அவள் பெயர் தான் இந்த உலகில் நான் கேட்ட ஒலிகளிலேயே அழகானது- இத்தனை துயரங்களை அந்தப் பெயர் கொண்டவள் அளித்தபிறகும். அவள் உருவம், உடை, குரல், அவளைப் பற்றி வரும் செய்திகள். எல்லாம் என்னைக் கழுமுனைக் கூர்மையில் இருத்துவதாக இருப்பினும், அவள் பெயரை வாயில் மெல்லும்போதெல்லாம், எனது கபாலச்சுவர்கள் எரிவது உண்மைதான். எனினும், அவள் பெயர்தான் இந்த உலகத்திலேயே இனிமையானது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை. தின்னத் தெவிட்டாது வயிறும் கனக்காத தின்பண்டத்தின் தீராத மென்சுவை அவள் பெயர். கருத்தின் எடையில்லாமல் காற்றில் மயங்கிக் குழையும் இறகு அந்தப் பெயர். மென் குறில், மென் நெடிலாய் உணர்வுக்கு ஏற்பச் சுருக்கி விரிக்க இயலும் அந்தப் பெயர். அவள் என்னிடமிருந்து எத்தனையோ தொலைவு சென்றபின்னும் அவளை எண்ணும்தோறும்- சுயம், இழியும் வாதையாக என் மேல் ஒழுகும்போதும்- தித்திக்கின்றதே அவள் பெயர். இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமேயில்லை. அவள் பெயரைப் போன்ற ஒன்றை நான் இக்கணம் வரைக் கடக்கவில்லை. பகலின் விளிம்புகளில் பொன்னின் ஜரிகையாகச் சுடரும் பெயர். அந்தியின் செந்தைலம். கடற்கரை மணலோடு குழையும் போது என்னுடன் சேர்ந்து சேர்ந்து குழ...

அம்மா நாணாவில் ஸ்ரீ தேவி

அம்மா நாணா சூப்பர் மார்க்கெட்டில் அலாஸ்காவைச் சேர்ந்த பதப்படுத்தப்பட்ட டூனா மீன் டப்பாக்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. பாலாடைக்கட்டி வாங்குவதற்காகப் எப்போதாவது போகும் நான் அங்கே தற்செயலாய் என் பிரிய தேவதையைப் பார்த்து வணக்கம் வைத்தேன். இறந்தபிறகு யாருக்கும் நான் அடையாளம் ஆவதில்லை. அதனால் பெரிதாகத் தொந்தரவும் இல்லை. நீங்கள் எப்படிப் பார்த்தீர்கள்? என்றார். இறந்தவர்களோடு உலவக்கூடியவன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. எதிரேயுள்ள அடையார் கேட் விடுதியில் தங்க நேரும்போதெல்லாம் இங்கே கணவருக்காகவும் குழந்தைகளுக்காகவும் வருவேன். தற்போது அதையும் இடித்துவிட்டார்கள் மும்பையில் குடியிருக்கச் சென்றபோது நான் நீங்கிய சென்னை முழுமையாக மாறிவிட்டது. பெருமூச்செறிந்தார் ஸ்ரீ தேவி. இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தில் நடித்தது தவிர ரசிகனாக எனக்கு உங்கள் மேல் சிறுபுகார் கூட இல்லை என்றேன். ஒடுங்கிய முகம், உடலுடன் ஒரு யுவதியின் அம்மாவாக நடித்ததில் ராம் கோபால் வர்மாவுக்கும் சங்கடமே! என்ன செய்வது? என்று அலமாரியைப் பார்த்தபடி சிரித்தார். மூன்றாம் பிறை படத்தில் நீங்கள் வளர்த்த சுப்பிரமணி ஞாபக...

யாசகன் - மிகெயில் லெர்மன்தோவ்

கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு இல்லம் அதன் வாசலில் ஒருவன்  பசி, தாகம், வறுமையின் காரணமாக நன்கொடை கேட்டுக் கொண்டிருந்தான். அவன் யாசகன் குரூரமாய் ஒடுக்குதலுக்குள்ளானவன். அவன் ஒரு ரொட்டித் துண்டை மட்டுமே கேட்டான் அவன் தோற்றத்தில் அத்தனை வேதனை மெலிந்து, நலிந்து அவன் நீட்டியிருக்கும் கரத்தில் ஒரு கூழாங்கல். இப்படித்தான் நான் வீணே  உன் நேசத்துக்காகப் பிரார்த்தித்தேன் கசந்த கண்ணீர், ஏக்கம் மற்றும் உன்மத்தம் கொண்டு. மகத்துவமாகச் செழித்திருந்த எனது புலன்கள்  இப்படித்தான்  உன்னால் என்றென்றைக்குமாகத் தண்டிக்கப்பட்டன.