ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன்
என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே
எனது கூட்டாளி நீ
உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன்
மனம் முழுக்கப் பழிகொண்ட கிரிகோரியனால்
உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன்
காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன்.
தூய்மையான கரமொன்றால்
பிரிவின்போது
நீ எனக்கு அளிக்கப்பட்டாய்.
நேசத்தின் கடைசி
நினைவுப் பரிசு நீ…
கசந்து பிரியும்போது
ரத்தம் அல்ல
முத்தைப் போன்ற கண்ணீர்
துயரமாக உனது கூர்முனையில்
விழுந்தோடியது.
எஃகாக இருக்கையில்
நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது
நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல
துயரம் தோய்ந்த மர்மக் கனவால்
நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும்
எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன.
சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை
ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி:
நான் ஒருபோதும் மாறப்போவதில்லை
என் ஆன்மா
உன்னைப் போல
உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட
உன்னைப் போல.
Comments