Skip to main content

அவள் பெயர்



அவள் பெயர் தான் இந்த உலகில் நான் கேட்ட ஒலிகளிலேயே அழகானது- இத்தனை துயரங்களை அந்தப் பெயர் கொண்டவள் அளித்தபிறகும். அவள் உருவம், உடை, குரல், அவளைப் பற்றி வரும் செய்திகள். எல்லாம் என்னைக் கழுமுனைக் கூர்மையில் இருத்துவதாக இருப்பினும், அவள் பெயரை வாயில் மெல்லும்போதெல்லாம், எனது கபாலச்சுவர்கள் எரிவது உண்மைதான். எனினும், அவள் பெயர்தான் இந்த உலகத்திலேயே இனிமையானது என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை.

தின்னத் தெவிட்டாது வயிறும் கனக்காத தின்பண்டத்தின் தீராத மென்சுவை அவள் பெயர். கருத்தின் எடையில்லாமல் காற்றில் மயங்கிக் குழையும் இறகு அந்தப் பெயர். மென் குறில், மென் நெடிலாய் உணர்வுக்கு ஏற்பச் சுருக்கி விரிக்க இயலும் அந்தப் பெயர்.

அவள் என்னிடமிருந்து எத்தனையோ தொலைவு சென்றபின்னும் அவளை எண்ணும்தோறும்- சுயம், இழியும் வாதையாக என் மேல் ஒழுகும்போதும்- தித்திக்கின்றதே அவள் பெயர்.

இப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமேயில்லை. அவள் பெயரைப் போன்ற ஒன்றை நான் இக்கணம் வரைக் கடக்கவில்லை. பகலின் விளிம்புகளில் பொன்னின் ஜரிகையாகச் சுடரும் பெயர். அந்தியின் செந்தைலம். கடற்கரை மணலோடு குழையும் போது என்னுடன் சேர்ந்து சேர்ந்து குழைந்தது அந்தப் பெயர்.

ஆனால், அந்தப் பெயரை என்னால் வெளிப்படுத்த முடியாது. அதை உரிமையோடு சத்தமாகச் சொல்ல முடியாது. அந்தப் பெயரை வெளியே கூறினால் நான் மரித்துவிடுவேன்.

(நன்றி : அகழ் இணைய இதழ்)

Comments