Skip to main content

றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் 'சட்டை வண்ண யானைகள்'


நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும்.

எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையின் பாறைத்தன்மையைக் கொண்ட ஒரு அனாமதேயனாக ‘நான்’ ஆகிவிடக்கூடிய உத்தேசம், ஆசுவாசத்தை றாம் சந்தோஷின் கவிதைகள் அளிக்கின்றன.

‘உன் துயருக்கும் ஒரு பலன் உண்டா கவியே

நாலு கவிதை கிடைக்கும் ப்ரோ’

இப்படித் துணுக்குத் தன்மையையும் பாவித்தபடி தீவிரத்தின் ஊஞ்சலுக்கும் அடுத்து தாவும் தன்மையையும் சமீபத்தில் சாதித்துள்ளவர் றாம்.

எதைக் கற்றும் எந்த லாபமும் இல்லை

எதைப் பயின்றும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை

எதன் பொருட்டும் நீ பலியாவதை

நான் விரும்புவதில்லை என்று

அந்தக் கண்ணாடி முன் ஒருதரம் சொன்னேன்

அது அழுதது; நான் சிரித்தேன்.

அந்த முயற்சியில் பெரிதளவு வெற்றியையும் சில தோல்விகளையும் பெரிதளவு இசைமையையும் சின்னச் சின்ன அபசுரத்தையும் கொண்டது ‘சட்டை வண்ண யானைகள்’.

பிறப்பு இனிமையானது அல்ல. பிறப்பு குணமானதும் அல்ல. பிறப்பின் அருவருப்பை அதோடு தோய்ந்த அழகை, பிறப்பின் பயங்கரத்தை அதோடு ஒட்டிக்கொண்டுள்ள புது விழிப்பை, பிறப்பின் நசநசப்பை அதோடு ஒட்டிக்கொண்டிருக்கும் உயிர்த்துடிப்பை, பிறப்பின் ரண ஓலத்தை அதோடு பிரிக்கவியலாத அநாதி துக்கத்தைத் தொட்டுத் தொட்டுச் செல்வதால் றாம் சந்தோஷ் இக்கவிதைகள் வழியாக எனக்கு நெருக்கமாகிறார். பிறப்பு அத்தனை எளிதானதுமல்ல.

நண்பனுமில்லாத நண்பியுமில்லாத காதலனுமில்லாத காதலியுமில்லாத செல்லக்குட்டிகளாக இவர் தனது கவிதைகளைப் பராமரிக்கிறார். அவர்களை யார் என்று கேட்டால் ‘என் இதயம், என் பருவம், என் குழந்தைமை, என் தாய், என் தந்தை, என் அசகோதரன், மட்டுமில்லாது என் விரோதியின் அசல் வார்ப்பென்பேன் ’ என்று சமத்காரத்துடன் கூறும்போது உள்ளேயும் வெளியேயும் உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் விழிப்பை உணர்கிறோம்.

நவீன கவிதைகள், பார்த்தலாக, வெறும் பராக்காகப் பண்ணி பண்ணி தினுசு தினுசாக வனையப்படும் வஸ்துக்களாகத் தோற்றமெடுத்துவிட்ட நிலையில் றாம் சந்தோஷின் உள்ளும் புறமுமான விழிப்பு கவிதைச் செயல்பாட்டாளனான எனக்குப் புத்துணர்வை ஊட்டுகிறது.

தமிழில் வேடிக்கை என்ற சொல் இரண்டு வித்தியாசமான அர்த்தங்களில் செயல்படுகிறது. அதன் ஒரு பொருள் பார்த்தலை மட்டுமே குறிக்கிறது. நிகழ்த்திக் காட்டுவதையும் வேடிக்கை என்ற சொல் குறிக்கிறது. 



றாம் சந்தோஷின் கவிதைகளை நான் விழிப்பை உள்ளேயும் வெளியேயும் கொண்டு நிகழ்த்தும் செயல்பூர்வமான வேடிக்கை என்று சொல்வேன். தமிழில் நகுலன், கலாப்ரியா, ரமேஷ் – பிரேம், பச்சோந்தி எனக் காட்சியே கலகமாக மாறும் தீவிர வேடிக்கைக்கு ஒரு மரபு உண்டு. அந்த மரபில் மிகக் காத்திரமாக இணைந்திருப்பவர் றாம் சந்தோஷ். 

தமிழ் பக்திக் கவிதைகளின் நவீன தொடர்ச்சியாகவும் அந்த மரபின் ஒரு பகுதியான வைதீகத்தின் முதுகில் பிரம்பால் சாத்தியதுபோலச் சுளீர் தன்மை கொண்ட பதிலாக ‘மாயோன் அபிமான சர்ச்சை என்னும் மால் திரு கலகம்’ கவிதை வரிசையைச் சொல்லலாம். தமிழின் அபூர்வமான நீள் கவிதைகளில் ஒன்றாக அது திகழும்.

மைத்துனன் நம்பி

சூதனா சற்று சும்மா இரு

கோத்திரம் கேட்காதே; குலம் பொருளறியேன்

முதுகில் சாற்றிய சாதியின் வடுவுண்டு

நீ பாத்திரம் என வொன்றை நீட்டினால்

நான் இடுவேன் பத்து; போதுமா? தள்ளு.

சாலவும் தூரமிருந்து நான் வந்தேன்;

எனத் தொடங்கும் கவிதை வரிசை றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் தமிழறிஞர் பின்னணியையும், மொழி லாகவத்தையும் உணர்த்துவது. பேச்சுவழக்கை இயல்பாகத் தொனிக்க விடுதல், சமத்கார மொழி, அழுத்தமான கேலியுடன் தெலுங்கு, மலையாள விளிப்புகளையும் கவிதைக்குள் இணைத்துவிடுகிறார். இசைத்தன்மை கொண்ட கவிதைகளில் ஞானக்கூத்தனின் தாக்கத்தைப் பார்க்கமுடிகிறது.

தன்னுடனேயே விளையாடும் ஒரு சிறுவனுடைய தனி மொழி, தன் செல்லம், தன் பாவனை, தன் உரையாடலாக, ஆராட்டி, சீராட்டி, சீண்டி, பிணங்கும் அந்தரங்கமான கவிதைமொழியை தன் கவிதைகளுக்குத் தேர்ந்துள்ளார். மெனக்கெடல் தொனிக்காத ஆத்மாநாமின் அந்தரங்க உரையாடல் தன்மை றாம் சந்தோஷிடம் வேறு தீவிரத்துடன் இறங்கியுள்ளது. ஆத்மாநாமின் ‘என் ரோஜா பதியன்கள்’, ’மறுபரிசீலனை’, ‘நாளை நமதே’, ‘நன்றி நவிலல்’ கவிதைகளின் தொனி றாம் சந்தோஷில் புதுக்கப்பட்டுள்ளது.

சட்டை வண்ண யானைகள் தொகுப்பின் துவக்கத்திலுள்ள ‘பரஸ்பரம்’ கவிதையிலேயே முகத்துக்கும் முகமூடிக்கும், ஆளுக்கும் பிம்பத்துக்குமான உரையாடல், பரஸ்பரப் பரிமாற்றம் துவங்கிவிடுகிறது. புது வருடத்தை, புது அனுபவத்தைக் கொண்டாட திறக்காத சிப்பிகளைப் பார்த்துக் கொண்டிருப்பது போலத் திறக்கப்படாத சொற்கள் காத்திருக்கின்றன.

குளிரும் வெயிலும் அருகருகே மாறி உட்காருமளவுக்குத் திகழ்கிறது.

அப்போது கவியின் எதிர்கால மூப்பை முகத்தில் கொண்ட மந்தி. அதன் கரத்திலோ கவிதை உரைப்பவனின் கடந்த காலப் புண்கள். அது என்னைவிடவும் அழகு. அது என்னைவிடவும் சமத்து என்று கோதிவிட்டு யாருமில்லையா உனக்கு மந்தி என்று கேட்கும்போது அந்தரங்க குரல் பிரமாண்டமான பாறைகளை உண்டாக்கி, அவற்றுக்குள் மோதி பெரும் எதிரொலியாக, அசரீரியாக, ஓலமாகத் தொனிக்கிறது. தனிமை தனது கூழாங்கல்லை உருட்டி உருட்டிப் பாறையாக்கும் சம்பவம் இந்தக் கவிதையில் நிகழ்கிறது.

யாருமில்லையா உனக்கு மந்தி

உன் மந்தை எங்கே

அது என்னைப் போலவே

என்னோடு பேசாமல் பார்க்கிறது.

கவி தனது துக்கத்தைத் திராட்சைக் கொத்தாக அந்தக் குரங்குக்கு அளித்துவிட்டான். அது பதிலுக்கு மகிழ்ச்சி என்னும் ரசமாய் மாற்றித் தருகிறது. அந்த மந்தி யார்? அண்மையிலேயே இருந்துகொண்டு அனாமதேயமாக நமக்குத் தொனித்துக் கொண்டிருக்கும் நம்மையும் உள்கொண்ட இயற்கை என்று றாம் சந்தோஷிடம் ஒரு பதில் உள்ளது.

றாம் சந்தோஷ், நல்ல கவிதைகளையும் அந்தரங்கக் குறிப்புகளோ எனத் தொனிக்கும் ஊதாரியாய் அலையும் விவரணைகளுக்கு நடுவில் வைத்துள்ளதால், வாசிப்பவன் கவிதையைத் தனியே உருவிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது.‘வெள்ளி பார்த்தல்’ கவிதை அதற்கு ஒரு பருக்கை உதாரணம்.

‘நாங்கள் தொடர்ந்தோம்’ என்ற இடத்தில்தான் எனக்கு வெள்ளி பார்த்தல் கவிதை தொடங்குகிறது. போகும் போது இடதுகாலையும் வரும்போது வலதுகாலையும் நனைக்கும் ஏரியைப் போலவே ஓர் அல்லாத நிஜத்தில் படர்கிறதாம் குளிர்ச்சி. உண்மையின் குளிர்ச்சியில் அகம் விரிந்து உயர்ந்து குருவியாகச் சுயம் பறக்கிறது.

விண்மீன்களின் சேய்மையை உணராமல் இருக்க, பாவனை மின்மினிகள் தீண்டித் தீண்டிச் செல்கின்றனவாம். நிலைத்த மெய்மையாக, றாம் சந்தோஷ், வானத்து விண்மீன்களைச் சுட்டுகிறார் போல. மனிதனின் உயரத்திலேயே தீண்டும் அநித்தியமான நட்சத்திரங்களான மின்மினிகளைக் கவிதைகள் என்று கொள்வோமா?

இந்தக் கவிதையில் புதிய வஸ்துகள் எதுவும் இல்லை. வெள்ளி, வண்ணத்துப்பூச்சி, மலர், நிலா, நெல்லிக்கனி என எல்லாமே பழைய வஸ்துகள். ஆனால், அத்தனை வஸ்துவும் நித்தியத்தின் சுடரில் ஒளிர்கின்றன.

(நன்றி: திணைகள் இணைய இதழ்)

Comments