Skip to main content

அசோகமித்திரன் இருந்த வீதி

 


அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட் செங்கலை எடுத்து, முன் சக்கரத்தில் போட்டு ஆட்டோவை நிறுத்துவதற்காக நானும் குப்பை ஆட்டோவுக்குப் பின்னால் குப்பைக்காரருடன் ஓட, தெருவின் முனையில் முன்சக்கரம் இடதுபக்கமாக திரும்பி, அடுக்குமாடிக் குடியிருப்பின் வாசல் ஏற்றத்தில் வேகம் தடைபட்டு நின்றது வண்டி. அதற்குள் தெரு முழுவதும் பரபரப்பாகிச் சிறுவனின் அப்பா ஓடிவந்து அவன் முதுகில் ரெண்டு மொத்து போட்டு அழைத்துச் சென்றார். முட்டைக் கண்ணாடி போட்டிருந்த குண்டுச் சிறுவனோ தனக்கு இந்த தண்டனையெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல சாவகசமாகப் போனான். சார் எந்தப் பிரச்சனையும் ஆகவில்லை. அவன்தான் பாதுகாப்பாக நிறுத்திவிட்டானே என்று சொல்லி, அவரையும் அப்போதுதான் சம்பவ இடத்துக்குள் நுழைந்து, அடுத்த தாக்குதலுக்குத் தயாராகிக் கொண்டிருந்த இளம் அம்மாவையும் ஆறுதல்படுத்தினேன். அசோகமித்திரன் வழக்கமாக நின்றுகொண்டிருக்கும் பால்கனியைப் பார்த்தபடி வாகனத்தை எடுத்துக்கொண்டு வீடுதிரும்பினேன். அசோகமித்திரன் விஷமத்துடன் இன்னும் சிரித்துக் கொண்டிருக்கிறார்.

Comments