Skip to main content

Posts

ஆஸ்கர் வைல்டை ரயிலில் படித்தபோது

ஆஸ்கர் வைல்டை ரயிலில் இருந்து படித்த போது, ஒரு கூற்றில் என்னை அவன் வெளியே எறிந்துவிட்டான். சூரியகாந்தி வயல்களில் இருந்து கிளிகள் பறந்தெழுந்தன. ஒரு புத்தகம் இப்படித்தான் ஒருவனை வெளியே விரட்டியடிக்க வேண்டும். பல யுகங்களாகப் பார்த்த மரங்கள் தான். அனைத்தும் புதிதாகத் தெரியத் தொடங்குகின்றன. பூக்கள் திருவிழா கோஷம் போடுகின்றன .  இயற்கைக்கு தன்னுணர்வுள்ள அழகோ, நீதியோ, மகிழ்ச்சியோ, முழுமையோ இல்லை. இயற்கைக்கு நான் வேண்டாம். எனக்குத் தான் அவர்கள் வேண்டும். இயற்கையோடு இணைந்து அதை அழகானதாகவும், நீதியுணர்வு கொண்டதாகவும், மகிழ்ச்சியாகவும், முழுமையாகவும் நானே மாற்றிக்கொள்கிறேன். அதை மறுபடைப்பு செய்கிறேன். நான்தான், நான் தான் காலம்காலமாக அதை மனிதாயப்படுத்தி என் கவிதையில், என் ஓவியத்தில், சிற்பங்களில், பாடல்களில், கதைகளில் இணைத்து அதற்கு ஒரு முழுமையைத் தருகிறேன்.

ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான் என் வீட்டு பால்கனியோர அரசமரம் என் மனம் காற்றிலும் ஒளியிலும் ஆடும் ஆயிரம் சந்தோஷ இலைகள்

நான்

என் தந்தையர் எனக்கு வழிவிட்டுப் போயினர். என் வீடும் நிலமும் விசாலம் கொண்டது துளியும் கவலை இன்றி பெயரோடு மகத்துவமும் சூடிய மலர்கள் காவியச்சாயல் ஏறாத புறக்கணிக்கப்பட்ட பூக்கள் மஞ்சளும் சிகப்புமாக குப்பைமேடுகள் சிதில வீடுகள், பாலங்களில் பூத்துச் சிரிக்கின்றன. என் குழந்தைகள் அந்தப் பூக்களைப் போல இந்த உலகை துல்லியமாக விடுதலையுடன் பார்க்க நான் அதே சிரிப்புடன் இங்கிருந்து நீங்கத்தான் வேண்டும்.

ஆப்பிள் பாபா வாணி

வாணி ஊருக்குப் போயிருந்தாள் வியாழக்கிழமை இரவன்று தவறாமல் சாய்பாபாவுக்கு ஆப்பிளைப் படைக்கச் சொல்லியிருந்தாள் நான் அந்த நாள் முழுவதும் பாபாவையும் வாணியையும் ஆப்பிளையும் நினைவில் வைத்திருந்தேன் இரவில் வீடு திரும்பி குளிர்சாதனப் பெட்டியைத்  திறந்தேன் ஆப்பிளை எடுத்து பூஜையறையில் சாய்பாபாவுக்கு வைத்தேன். ஆப்பிள் வியர்ததது தீபச்சுடர் ஒளியில் பாபாவின் முகத்தைப் பார்த்தேன் அவர் முகத்தில் வருத்தம் எனக்கும்தான்.

நொறுங்கிக் கொண்டேயிருக்கும் காதலன்- அம்பிகாபதி

ஷங்கர்ராமசுப்ரமணியன் பஞ்சாபில் நிலவும் துயரக் காதல் கதையான ஹீர்-ராஞ்சாவை, காசியின் களத்தில் வைத்து தற்காலத்தில் நிகழ்த்தப்படும் கதைதான் ராஞ்சனா. அதுதான் தமிழில், இன்னொரு காவியக் கதாபாத்திரத்தின் பெயரோடு அம்பிகாபதியாக வெளியாகியுள்ளது. இந்தியில் ராஞ்சனா வெளியாகி நல்ல வர்த்தக வெற்றியையும், தனுஷூக்கு நல்லபெயரையும் பெற்றுத் தந்துள்ளது. ராஞ்சனா ஒருவகையில் இந்தி சினிமா உலகையும், ஆங்கிலப் பத்திரிக்கையுலகையும் ஒருவகை ‘அதிர்ச்சிக்கு ’ உள்ளாக்கியுள்ளதையும் அந்த எழுத்துகளின் வழியில் புரிந்துகொள்ள முடிகிறது. இன்னொரு வகையிலும் இந்தப் படம் முக்கியத்துவம் வாய்ந்தது. காதல் தவிர வேறெந்த ஈடுபாடுகளும் லட்சியமும் இல்லாமல் தீவிரமான வன்முறையால், வன்முறை வழி அன்பால் காதலியை வென்றெடுக்க முயலும், அதற்காக எல்லா அழிவுகளையும், குரூரங்களையும், நிகழ்த்தும் தமிழ் சினிமாவுக்குப் பரிச்சயமான நாயகன் இந்திய சினிமாவை நோக்கி நகர்ந்திருக்கிறான். அந்த நாயகனை முழுமையாக்கியவர் இயக்குனர் செல்வராகவன். அந்த நாயகன் சரியான முறையில் பொருந்தக்கூடிய   உருவாக நடிகர் தனுஷ் ; ஒரே கதாபாத்திரத்தை தமிழில் பல படங்களில்...

பாலத்தின் மீது காதலர்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அவன் ஏரியை நோக்கி வெளியே அந்தரத்தில் கால்களை சேர்த்து தொங்கவிட்டிருந்தான் அவள்  அவனது தோளில் சாய்ந்திருந்தாள் ஒரு உடைந்த பாலத்தின் கல்நுனிதான் ஆனால் பெரியதொரு மஞ்சள் சிகப்பு பூக்களாக அவர்கள் அங்கே ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தனர் அவர்களின் அந்த சாய்மானம் போதும் அந்த மெல்லிய கோட்டுச்சித்திரம் போதும் சீக்கிரத்தில் மறைய இருக்கும் அந்த சாயங்காலம் போதும் அவர்கள் அமர்ந்திருக்கும் உடைந்த பாலத்தின் சிறுநுனி போதும்.

பறக்கும் அனுபவம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் அந்த அபாய சவாரியில் சிறுவர்கள், பெரியவர்கள் அனைவருமே மரணக்கூச்சலை இட்டனர். அந்த தீம்பார்க் முழுவதுமே எழும் கூச்சலின் பின்னணி இப்போது எனக்குப் புரிந்துபோனது. அவர்கள் எல்லாருக்கும் மரண சந்தர்ப்பத்தைப் போன்ற ஒரு சந்தர்ப்பம் தேவையாக இருக்கிறது. முற்றிலும்  மனித இயற்கைக்கும், புவிஈர்ப்பு விசைக்கும் எதிரான ஒரு சவாரி அது. அடுக்கடுக்காக வளைந்து, பின்னி சுற்றிச் சுழலும்   தண்டவாளப் பாதையில் இருக்கும் ஒரு சிறு பொம்மை வண்டியில் ஏறி, வேகம் முடுக்கப்பட்டு நம் உடலை பக்கவாட்டாக, தலைகீழாக, முன் பின்னாக கவிழ்க்கும் அந்தச் சவாரியை நடுவில் நாம் நடுவில் நிறுத்த நினைத்தாலும் முடியாது. நம்மோடு சிறுவர் சிறுமியரும் இருக்கிறார்கள் என்ற கூச்சத்தைக் கூட மறந்து, அந்த ரோலர் கோஸ்டரை இயக்குபவரைப் பார்த்து சத்தமாக கூவி நிறுத்தச் சொன்னேன்.   கீழே இருக்கும் அவர் அதையும் ரோலர் கோஸ்டர் சவாரி அனுபவத்தின் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டார். பின்னர் சவாரியின் ஒரு புள்ளியில் உடலைப் பிணைத்திருக்கும் கம்பியை இறுக்கமாகப் பிடித்து, கால்பாதத்தை நான் உட்கார்ந்திருக்கும் சீட்டுக்கு முன் நீட்டி,...