Skip to main content

Posts

ஒரு கவிஞனின் உறுதிமொழிகள் – ததௌஸ் ரோசவிச்

  பல ஆண்டுகளாக நான் எனது அம்மாவுக்கு மூன்று உறுதிமொழிகளைத் தொடர்ந்து கொடுத்துவந்திருக்கிறேன்: அவளை நான் க்ரகோவ் நகரத்துக்கு வரவழைத்து ஷாக்கபனாவுக்கும் மலைப்பகுதிகளுக்கும் கடலோரப் பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வேன் என்று. ஆனால் அம்மாவுக்கு க்ரக்கோவைப் பார்க்கும் சந்தர்ப்பமே வரவில்லை. க்ரக்கோ மட்டுமில்லாமல் மலைகளையும் கடலையும் அவள் பார்க்கவேயில்லை. நான் எனது வாக்குறுதிகளைக் காப்பாற்றவில்லை. அம்மாவின் மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. க்ரகோவுக்கு அழைத்துவந்து சுகியன்னிஸ், புனித மேரியின் தேவாலயம், வாவல் கோட்டை, விஸ்துலா எதையும் நான் ஏன் அவளுக்குக் காட்டவேயில்லை. ஆமாம். அவளது மகன் க்ரகோவில் வாழ்ந்துவந்தான்…’நம்பிக்கையளிக்கும்’ இளம் கவிஞனாக…அவனது அம்மாவைப் பற்றி நிறைய கவிதைகளை எழுதியவன்… எல்லா அம்மாக்களைப் பற்றியும் இன்னும் நிறைய கவிதைகளை எழுதியவன்…1947-ம் ஆண்டிலோ 1949-ம் ஆண்டிலோ அவன் தனது அம்மாவை க்ரகோவுக்கு அழைத்து வரவேயில்லை. அவள் என்னிடம் வலியுறுத்தியதே இல்லை. அதுகுறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதும் இல்லை. அம்மா வார்சாவைப் பார்த்ததேயில்லை. அம்மா விமானத்தில் ...

சம்பங்கி ஏன் கண்களை மூடினாள்?

  கவிஞர் பச்சோந்தியிடமிருந்து இரவலாகப் பெற்ற ஷோபாசக்தியின் புதிய சிறுகதைத் தொகுதியான ‘ கருங்குயில் ’- ன் முதல் கதையான ‘ மெய்யெழுத்து ’ எனது பால்யகால வாசிப்பு நினைவின் மங்காமல் இருக்கும் புகைப்பட உருவமான திலீபனைப் பற்றியது என்பதால் காய்ச்சல் வந்தது போல அந்தக் கதையைப் படித்தேன் . கதையில் எட்டாம் வகுப்புச் சிறுவனாக ராகுலனுக்கு திலீபன் அறிமுகமானார் . அதே எட்டாம் வகுப்பில்தான் ஜூனியர் விகடனில் இந்திய அமைதிப்படையிடம் விடுதலைப் புலிகளின் சார்பில் சில கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன திலீபனின் புகைப்படங்களையும் செய்திகளாகப் படித்தேன் . ஆயுதப் போராட்டத்தில் இருந்த திலீபன் காந்தியின் வழியில் அமைதிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் என்பது அப்போதைய புரிதலாக இருந்தது . திலீபனின் கண்ணாடி அணிந்த கண்கள் மறக்க இயலாதவை . நல்லூர் முருகன் கோயில் வீதியில் ஒரு பந்தலின் கீழே கூட்டத்துக்கு நடுவில் திலீபன் படுத்திருக்கும் வண்ணப்புகைப்படம் இந்தச் சிறுகதையைப் படித்தபோது மேலெழுந்துவந்தது . திலீபன் வழியாகவே வி...

நாம்தேவ் தசால் கவிதைகள் - நீங்காத வலியின் உலகம்

(1949 - 2014) சாதி ஒடுக்குமுறை என்னும் வரலாற்றுத் துயரமும் நேசத்துக்குரிய ஆன்மாவைப் பிரிந்து வேகும் தனித்துயரமும் நீங்காத வலியின் சிறிய உலகம் மராட்டிய கவி நாம்தேவ் தசால் உடையது. `மொழியின் அந்தரங்க உறுப்பில் இருக்கும் மேகப்புண் நான்' என்ற கூற்று நூறு சதவீதம் பொருந்தும் உலகம் அவருடையது. ரணமும் நிணமும் வழியும் விமர்சனக் கருத்துகள் மேவும் சிக்கலும் உக்கிரமுமான படிமங்கள் இவர் எழுப்புபவை என்பதால் மொழிபெயர்ப்பதற்கும் கடினமானவை. அமெரிக்கக் கவிஞர் சார்லஸ் பூக்கோவ்ஸ்கி  பிரதிநிதித்துவம் செய்த விளிம்புநிலை வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் கவிஞர் என்றாலும் அவரின் கவிதைகளில் உள்ள விடுதலை அம்சமும் மகிழ்ச்சி, அழகு அம்சங்களும் நாம்தேவ் தசாலின் கவிதைகளில் கிடையாது. சாதியக் கட்டமைப்புள்ள இந்தியச் சூழலில் எழுதும் இவரிடம் அவற்றை எதிர்பார்க்கவும் முடியாது. ஏனென்றால் வலி, குரூரம், துயரம், இருள் மண்டிய உலகம் இவருடையது. மகாராஷ்டிர மாநிலத்தில் புனே நகரத்துக்கு அருகே உள்ள புர் கிராமத்தில் 1949இல் பிறந்தவர். தாயின் ஊர் கனெர்சார். கிராமத் திருவிழாக்களில் நடக்கும் தமாஷாவில் பாடப்படும் லாவணிப் பாடல்களை நன்றாகப் பாடக்...

விக்ரமாதித்யனின் நவபாஷாணம்

நவபாஷாணம் நெடுங்கவிதையை வாசிக்க  "சைதாபேட்ட கிரோம்பேட்ட ராணிபேட்ட பேட்டராப் இன்று என்ன நாளை என்ன தினசரி அதே காலை என்ன மாலை என்ன மாற்றம் இல்லையே மறந்திருப்போமே கவலை மறந்திருப்போமே அட கெட் அப் அண்ட் டான்ஸ் இதுதான் உன் சான்ஸ் முதல்ல யார் முதல்ல யார் பேட்ட ராப் பேட்ட ராப் அம்மாபேட்ட ஐயம்பேட்ட தேனாம்பேட்ட தேங்காமட்ட”. 1994-ல் வெளியான காதலன் திரைப்படத்தில் அதன் இயக்குனர் ஷங்கர் எழுதிய “பேட்ட ராப்” பாடல்  மிகப் பிரபலமானது. அக்காலத்துக்குப் புதுமையான பாப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியிருந்தார். “விடிய விடிய பேட்ட ராப் வாடக கரன்ட்டு மொரவாசல் பாக்கெட் பாலு புள்ள குட்டி ஸ்கூல் பீஸு நல்லெண்ண மண்ணெண்ன ரவ ரேஷன் பாமாயிலு பச்சரிசி கோதும பத்தல பத்தல காசு கொஞ்சங்கூட பத்தலயே” என்று அப்பாடல் தமிழ் வெகுஜனப் பேச்சு, பொது ஏக்கம், ஆசாபாசம், பொன்மொழி, கழிவிரக்கம், நம்பிக்கை எல்லாவற்றையும் மெட்ராஸ் பேச்சுவழக்கில் வெளிப்படுத்தும். “பேட்டராப்” பாடல் ஆரம்பித்து வைத்த வகைமையில் தமிழ் சினிமாவில் “நாக்கு முக்க நாக்கு முக்க” மாதிரி நிறைய வந்துபோய்விட்டன. “பேட்டராப்” தமிழ் வெகுஜன கலாச்சாரத்தை உள்ளடக்கிய பாப் ...

ஒற்றை இருதயத்தின் வாசனை

சென்ற நூற்றாண்டு பிறப்பதற்கு சில வருடங்களுக்கு முன்னர் நான் யார் என்று கேட்டு வெங்கட்ராமன் என்னும் சிறுவன் வந்து நின்ற அதே கோயிலுக்குள் தான் அன்றிரவு வந்து நின்றேன். அவன் நுழையும்போது, வெளியில் உள்ள பித்தளைப் பாத்திரக் கடைகள் இருந்திருக்காது. நான் உள்ளே நுழைந்த பிறகும் வெளியில் உள்ள உலகமும் காலமும் மறைந்துபோய்விட்டது. கரையான்களும் எறும்புகளும் கடித்து மண்ணோடு மண்ணாக ஒட்டி அழுகிய தசையோடு, நிஷ்டையில் அந்தச் சிறுவன் இருந்த பாதாள லிங்கம் இருக்கும் ஆயிரம்கால் மண்டபம்  தெரிகிறது. நான் பிரம்ம தீர்த்தக் குளத்தின் அருகே உள்ள மண்டபத்தின் முன்னர் நின்றேன். உள்ளே நுழைந்ததும் தென்பட்ட முருகனின் சந்நிதியில் விபூதியை நெற்றி முழுக்கப் பூசி எனது நோய் இங்கே இப்போதே குணமாகிவிட வேண்டுமென்ற உன்மத்த வெறியுடன் தான் இந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்திருந்தேன்.  பிரிவு நேரும் என்று அறிந்தே வந்த உறவென்றாலும், உறவின் போது சந்தோஷமும் குற்றவுணர்வும் ரகசியமும் சுமையும் சேர்ந்து மூச்சு முட்டினாலும் அவளைப் பிரியும் கணத்தில் தான் பிரிந்தவளின் மகத்துவம் எனக்குத் தெரியத் தொடங்கியது. பிரிவு நோயாகியது. சேர்ந்திருந்த...

கும்பலின் மேதைமை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

துரோகம், வெறுப்பு, வன்முறை போதுமெனும் அளவுக்கு உள்ளது குறிக்கப்பட்ட நாளன்று ஒரு ராணுவத்துக்கு  வழங்கும் அளவுக்கு   சராசரி மனிதனில் அபத்தம் உள்ளது அத்துடன் கொலைக்கு எதிராகப் போதிப்பவர்கள் எவரோ அவர்களே அதில் தேர்ந்தவர்களாக உளர் அத்துடன் நேசத்தைப் போதிப்பவர்கள் யாரோ அவர்களே வெறுப்பதில் சிறந்தவர்களாய் உளர் அத்துடன்  போரிடுவதில் சிறந்தவர்கள் யாரோ அவர்களே  இறுதியில் சமாதானத்தைப் பிரசங்கிக்கிறார்கள் கடவுளைப் போதிப்பவர்களுக்கு கடவுள் தேவை அமைதியைப் போதிப்பவர்களிடம் அமைதி இல்லை நேசத்தைப் போதிப்பவர்களிடம் நேசம் இல்லை போதிப்பவர்களிடம் ஜாக்கிரதை அறிந்தவர்களிடம் ஜாக்கிரதை புத்தகங்களை வாசித்தபடி இருப்பவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள். வறுமையைப் பழிப்பவர்கள் எவரோ வறுமையில் பெருமிதம் கொள்பவர்கள் எவரோ அவர்களிடம் ஜாக்கிரதையாய் இருங்கள் உடனடியாகப் புகழ்பவர்களிடம் ஜாக்கிரதை தேவை அவர்களுக்கு திரும்பப் புகழ்வது அவசியமாக உள்ளது உடனடியாக எதிர்ப்பு தெரிப்பவரிடம் கவனம் தேவை தமக்கு தெரியாதது குறித்து அவர்கள் அச்சப்படுகிறார்கள் தொடர்ந்து கூட்டத்தைத் தேடிக்கொண்டிருப்பவரிடம் எச்சரிக்கையாய் இ...

அதிகமாக விற்கும் நாவலாசிரியனின் நேர்காணலைப் படித்தபோது - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  அவன் எழுதுவதைப் போன்று பேசுகிறான் அவனது முகம் புறாவைப் போன்றது, வெளிவிவகாரங்களால் தீண்டப்படாதது. அவனது சௌகரியமான உறுதியான வெற்றியை வாசிக்கும்போது  பயங்கரத்தின் சின்ன நடுக்கம் என்னில் பாய்கிறது. “அடுத்த வருடம் ஒரு முக்கியமான நாவலை எழுதப் போகிறேன்” என்று உரைக்கிறான். சில பத்திகளை விட்டுத் தாவுகிறேன் ஆனால் அந்த நேர்காணல் இரண்டரை பக்கங்களுக்கும் அதிகமாக நீள்கிறது. ஒரு மேஜை விரிப்பில் பால் சிந்தியதைப் போல டால்கம் பவுடரின் மிருதுவை ஒப்ப சாப்பிட்ட மீனின் எலும்புகளைப் போல வெளிறிய கழுத்து டையில் ஈரமான கறையைப் போல அதிகரிக்கும் முணுமுணுப்பு போல. இந்த மனிதன் மிகவும் அதிர்ஷ்டசாலி அவன் சூப் கிச்சனில் வரிசையில் நிற்கவேண்டியதில்லை. இந்த மனிதனுக்குத் தோல்வி என்ற கருதுகோளே தெரியாது அதற்காக அவனுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. நான் படுக்கையில் கிடந்து நேர்காணலை வாசிக்கிறேன். தரையில் செய்தித்தாளை நழுவவிடுகிறேன். அப்போது ஒரு சத்தம் கேட்கிறது. ஒரு சிறிய ஈ ரீங்கரிக்கிறது.  அது பறப்பதை அறையை ஒழுங்கற்றுச் சுற்றுவதை கவனிக்கிறேன். இறுதியாக வாழ்க்கை.  (சூப் கிச்சன் - இலவச உணவு விடுதி)