Skip to main content

மொழியின் உயிர்த்துடிப்பு கவிதைதமிழ் புதுக்கவிதையில் தனிப்பட்ட பேச்சின் அந்தரங்கமும் இசைமையும் கொண்ட கவிஞராக கோடைக்கால குறிப்புகள் தொகுதியின் மூலம் அறிமுகமானவர் சுகுமாரன். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், இதழியல் என பல்வேறு பரிமாணங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் சுகுமாரனின் ஒட்டுமொத்த கவிதைகள் இந்த புத்தகச் சந்தையில் வருவதையொட்டி மின்னஞ்சல் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பேட்டி இது உங்களது ஒட்டுமொத்தக் கவிதைகள் தற்போது வெளியாகவுள்ள நிலையில், உங்கள் கவிதைகள் கடந்த பருவங்களைச் சொல்லுங்கள்...

கவிஞர் ஒருவரின் கவிதைகள் முழுத் தொகுப்பாக வருவது கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு என்ற எண்ணம் எனக்கு இல்லை. தனித் தனித் தொகுப்புகளைத் தேடி வாசகர் அலைவதைத் தவிர்க்கும் நடைமுறைச் செயல்பாடு என்றும் அந்தக் கவிஞரின் உலகைப் பற்றிய ஓரளவுக்கு முழுமையான பார்வை உருவாக உதவும் வாய்ப்பு. என்றுமே இதைக் கருதுகிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டது இப்போது செயலாகி இருக்கிறது. 

கவி வாழ்வில் கடந்து வந்த பருவங்கள் அந்தந்தக் காலங்களில் வெளிவந்த தொகுப்புக் கவிதைகளில் தெளிவாகத் தென்படுவதாகவே நம்புகிறேன். பருவங்கள் கடப்பதோடு பருவ மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு ஏற்பக் கவிதைகளிலும் கவிதையாக்கம் பற்றிய பார்வையிலும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அவை என்னவென்பதை கவிதை வாசகரோ விமர்சகரோ சொல்வதே சரியாக இருக்கும். எனினும் சுய பரிசோதனையில் நான் உணர்ந்தவை இவை. கோடைகாலக் குறிப்புகள் முழுக்கவும் தனி ஒருவனின் குரலில் வெளிப்படும் கவிதைகள் கொண்டவை. தன்னைச் சுற்றியுள்ள நிலைமையால் கசந்து போன கைவிடப்பட்ட மனோபாவத்தில் எழுதப்பட்டவை. சமூகத்திலிருந்து அந்நியப்படுத்திக் கொண்ட மனதின் மன்றாடல்கள். ‘பறக்கும் கழுகின் கால்களில் சிக்கிய துடிக்கும் இதயம் நான்’ என்ற வரி ஓர் எடுத்துக்காட்டு. இந்த மன நிலை மிக விரைவிலேயே கலைந்தது. ‘எனது நான் என்னுடையதல்ல; காற்றுப்போலப் புறவயமானது’ என்று மாறியது. சிலைகளின் காலம் தொகுப்புக்கு பிந்தைய கவிதைகள் பெரும்பான்மையும் இந்த மனமாற்றத்தின் பல நிறங்களும் பல குரல்களும் கொண்டவை. சுருக்கமாக, நான் என்பதை நாமாக உணர்ந்தது பார்வையில் நிகழ்ந்த மாற்றம். இதுவே கவிதையின் உள்ளடக்கத்தையும் பெருமளவு புதுப்பித்தது. முதல் இரண்டு தொகுப்புகளில் மொழி தொடர்பாக ‘வேண்டாத பிடிவாதங்கள்’ இருந்தன. நேரடியான சொல்லைப் பயன்படுத்தினால் மட்டும் போதும் என்ற எண்ணம் இருந்தது. ‘ரத்தம்’ என்று எழுதினால் போதும்; குருதி என்று எழுதத் தேவையில்லை என்பது போன்ற பிடிவாதம். அனுபவமும் தொடர் பயிற்சியும் கவனமான வாசிப்பும் பிடிவாதங்களை உதறச் செய்தன. ‘வளை எயிறு, கொன்றையுகிர்ப் பாதங்கள் ‘ என்று பிந்தைய கவிதையில் இயல்பாகக் கையாண்ட சொற்கூட்டுகளை முன்பு யோசித்தே இருக்க மாட்டேன். இவை மேலோட்டமான உதாரணங்கள். விரிவாகச் செல்ல கூச்சம் தடுக்கிறது. மாற்றங்களுக்குத் தொடர்ந்து ஆட்பட்டு வருகிறேன். அது கவிதைகளிலும் வெளியாகிறது. எனினும் கவிதையாக்கத்தில் மாறாத சில அடிப்படைகள்  எனக்கு இருக்கின்றன. அவைதாம் என் கவிதைகளைக் கட்டி எழுப்புகின்றன.  கவிதையை மலினப் பண்டமாகக் கருதக் கூடாது. அனுபவத்தில் தைக்காத ஒரு வரியையும் எழுதக் கூடாது. புரியாத வகையில் எழுதக் கூடாது. பொய்யான ஒன்றைச் சொல்லக் கூடாது. பகட்டான உணர்வைக் காட்டக் கூடாது. இது போன்ற ‘கூடாது’களை இன்றும் கடைப்பிடிக்கிறேன். ஒருபோதும் அவற்றைக் கைவிடக் கூடாது என்று விரும்புகிறேன்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கவிதை என்னும் வடிவத்தில் இயங்கி வருபவராக கவிதைகளைப் பற்றி எழுதிவருபவராக கவிதைகளை மொழிபெயர்ப்பவராகச் செயல்படுபவர் நீங்கள். இன்றும் கவிதையின் இன்றியமையாத தன்மை என்பதைச் சொல்லுங்கள்?

உலகின் எந்த மொழியிலும் கதையோ நாவலோ எழுத முயல்பவர்களை விடக் கவிதை எழுத முன் வருபவர்களின் எண்னிக்கையே அதிகம். பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் அநேகரும்  கவிதையைத் தொட்டுப் பார்த்து விலகியவர்கள் என்பது இலக்கிய சுவாரசியம். மொழியின் முதல் இலக்கிய வடிவம் கவிதையே என்பதனால்தான் இந்த ஈர்ப்பு உருவாகிறது என்று எண்ணுகிறேன். நான் வசிக்கும் திருவனந்தபுரத்தில் ஒருமுறை ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருந்தேன். போக்குவரத்து நெரிசலில் வண்டி திணறியபோது ஓட்டுநர் பாழாய்ப் போன  இந்த வேலைக்கு வந்தது பற்றித் தனக்குள் நொந்துகொண்டு ஒருவரியைச் சொன்னார். ‘அவனி வாழ்வு இது கினாவு கஷ்டம்’. உலக வாழ்வு கனவு; கஷ்டம் என்று பொருள். அது மலையாளத்தின் மகாகவி குமாரன் ஆசானின் கவிதை வரி. ஆட்டோ ஓட்டுநர் படித்தவர் அல்லர்; ஒருவேளை பள்ளிப்படிப்பில் இந்தக் கவிதையைப் பாடமாகக் கேட்டிருக்கலாம். ஆனால் தனது வாழ்வின் துயரைச் சொல்ல அவருக்கு இந்த வரிதான் பொருத்தமாக இருந்தது. மொழியின் ஆதி மனநிலையைக் கிளர்த்தி விட்டதுதான் அந்த வரி செய்த காரியம். இன்றைய கொந்தளிப்பான சூழலில் எத்தனை பேர், எத்தனை முறை ‘ பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்’ என்ற பாரதி வரியை யோசித்திருப்பார்கள்? சிக்கலான தருணத்தில் கொந்தளிப்பைக் கொட்டச் செய்ததுதான் அந்த வரி ஆற்றிய கடமை. பாப்லோ நெரூதாவின் வீட்டைச் சர்வாதிகாரி பினோஷேயின் ராணுவம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று தேடிச் சூறையாடியது. ‘உங்கள் கைகளிலிருப்பதை விடவும் வலிமையான ஆயுதம் இங்கேஇருக்கிறது. அதன் கவிதை’ என்று நெரூதா பதில் அளித்தார். மொழியின் ஆதிக் கருவி கவிதை என்பதுதானே அந்த பதிலின் உட்பொருள்.

மொழியின் குருதியோட்டம் என்று சொல்வது அலங்காரமாகத் தோன்றினாலும் அதன் உயிர்த் துடிப்பை அளந்து பார்க்கக் கவிதையைத் தவிர வேறு வழி இல்லை என்பது உண்மை. என்றும் கவிதையின் இன்றியமையாத இயல்பு அது கவிதையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே.

ஒரு பத்திரிகையாளன் என்ற பின்னணியில் ஒரு படைப்பாளி அனுபவம், மொழி சார்ந்து என்னவிதமான அனுகூலங்களைப் பெறுகிறான்?

பத்திரிகையாளனாக வேண்டும் என்ற குறிக்கோளுடனோ அதற்கான கல்விப்புலப் பயிற்சியுடனோ பத்திரிகையாளன் ஆனவந் அல்லன். பிழைப்பு நிமித்தம் இதழாளன் ஆனவன். அந்தப் பணியின் மீது ஒரு தூரத்து வசீகரம் இருந்தது. எனவே பணியில் அமர்ந்த உடனேயே அதற்கு என்னைத் தயார் செய்து கொண்டேன். பின்னாட்களில் ‘ உலகத்திலேயே மிகச் சிறந்த வேலை இதுதான் ‘ என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான காப்ரியேல் கார்ஸிகா மார்க்கேஸ் வியந்து சொன்னதை நடைமுறையில் உணர்ந்தேன். எந்தக் கதவையும் திறக்கும் மாயச் சாவி அவன் கையில் இருக்கிறது. எந்த மனதையும் துருவிப் பார்க்கும் நுண்ணோக்கி இருக்கிறது. எந்தக் கொண்டாட்டத்திலும் எந்தத் துயரத்திலும் அவனால் அழைப்பின்றிப் பங்கேற்க முடியும். இவையெல்லாம் அவனுக்கான தகுதிகள். ஆனால் இவற்றை அப்படியே  நடைமுறையில் பின்பற்றும் வாய்ப்பு தமிழ்ப் பத்திரிகை உலகில் அரிது. எனக்கும் அப்படி முழுச் சுதந்திரவானாகச் செயல்படும் வாய்ப்பு அமையவில்லை. ஆனால் இந்தப் பணியில் கிடைத்த அனுபவங்கள் படைப்புக்கு உதவிகரமாக இருந்திருக்கின்றன. ஒரு இதழாளனாக இல்லாமலிருந்தால் என்னுடைய சில கவிதைகளை நான் எழுதியிருக்க மாட்டேன். மொழியைத் தெளிவானதாகவும் தெளிவு தருவதாகவும் பயன்படுத்த உறுதிகொண்டதும் இந்தப் பணி வாயிலாகத்தான். இவை நான் பெற்ற பயன்கள்.

ஒரு நூறு ஆண்டைக் காணப்போகும் தமிழ் புதுக்கவிதையில் நடந்திருக்கும் மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்லமுடியுமா?

நூற்றாண்டின் ஒவ்வொரு பதிற்றாண்டிலும் மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதுதான் சுருக்கமான பதிலாக இருக்கும். உயிர்ப்புக் குன்றாத இலக்கிய ஊடகம் என்ற நிலையில் அது இயல்பானது. இறுதியான கருத்தல்ல என்ற பொறுப்புத் துறப்புடன் மேலோட்டமாக இப்படிச் சொல்லப் பார்க்கிறேன். தமிழ்க் கவிதைகளை அதன் நீண்ட மரபையொட்டியே அகம், புறம் என்று இரண்டாகப் பகுக்க முடியும். புதுக்கவிதையின் தோற்ற ஆண்டான 1934 முதல் எழுபதுகளின் இறுதிவரையான கவிதைகள் அக உணர்வுகளுக்கு முதன்மையளித்தவை; என்பதுகள் முதல் தொண்ணூறுகள் வரையானவை புற உணர்வுகளையும் அகத்துக்குள் ஏற்றவை. அதற்குப் பிந்தையவை அகம், புறம் என்ற வேறுபாட்டை இல்லாமல் ஆகியவை என்று பிரித்துக் காண விரும்புகிறேன். இரண்டும் ஒன்றுக்கொன்று கலந்தும் இயங்கியவை. எனினும் எழுத்து முதலான காலகட்டக் கவிதைகளில் அதிகம் வெளிப்பட்டவை நகர மனிதனின் மனமும் சூழலும். மொழியும். அவற்றில் அரசியல், சமூகப் பேசுபொருள்கள் குறைவு. அதன் பின்னரானவற்றில் களம் விரிந்தது. மொழி மாறியது. பல்வேறு சூழல்கள் சித்தரிக்கப்பட்டன.. அரசியலும் சமூகமும் பேசுபொருள்களாயின. ஈழக் கவிதையின் அறிமுகம் தனி மனிதனையும் அரசியல் உயிரி என்று கருதத் தூண்டியது. தொண்ணூறுகளுக்குப் பின்னர் கல்வி பெற்று வந்த புதிய தலைமுறை கவிதையின் பொதுத் தோற்றத்தை முழுவதுமாக மாற்றியது. கவிதையில் புதிய பொருள்கள் பேசப்பட்டன. ஒடுக்கப்பட்டோரின் நிலை. பெண் மைய வாதம், சூழலியல், மாற்று அரசியல் இவையெல்லாம் புதுக் கவிதையை விரிவாக்கின. நவீனமாக்கின. அலகிட்டு விரிவாகப் பேசப்பட வேண்டிய தலைப்பைச் சுருக்கமாகச் சொல்ல முடியவில்லை. பிற மொழிக் கவிதைகளையும் வாசிப்பில் பின் தொடர்பவன் என்ற தகுதியில் ஒரு விஷயத்தை அழுத்தமாகச் சொல்ல முடியும். சம கால இந்தியக் கவிதையில் தமிழ் அளவுக்கு விரிவும் ஆழமும் வேற்றுமைகளும் கொண்ட கவிதைகள் இல்லை.

வெல்லிங்டன் நாவலை எழுதும்போது மிக நேரடியான எதார்த்த மொழியைக் கையாண்டுள்ளீர்கள். கவிஞனின் சாயல் அதில் வரவே கூடாது என்று கவனமாக இருந்தீர்களா?

வெல்லிங்டன் நாவலில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. வெல்லிங்டன் உருவாக்கத்தைச் சொல்லும் வரலாற்றுப் பகுதியும் வெல்லிங்டன் மனிதர்களின் தற்கால வாழ்க்கை பற்றிய பகுதியும். முதற் பகுதியில் அங்கங்கே கவிஞன் எட்டிப் பார்க்கிறானே?. இரண்டாம் பகுதி மையப் பாத்திரமான சிறுவனின் இளம் பருவத்திலும் பதின் பருவத்திலுமாக நிகழ்கிறது. அவனுடைய பார்வையிலேயே சம்பவங்கள் முன்வைக்கப் படுகின்றன. அந்தப் பின்புலத்தில் அங்கே கவிஞனுக்கு வேலை இல்லை.

வெல்லிங்டன், பெருவலி இரண்டில் எது உங்களுக்கு மனத்துக்கு நெருக்கமானது?

வெல்லிங்டன். அதில் கொஞ்சூண்டு நானும் இருக்கிறேன்.

இசையில் ஈடுபாடு கொண்டவர் நீங்கள். உங்கள் மொழியில் இசை ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் இசை ஈடுபாடும் ரசனையும் மிக அந்தரங்கமானவை. கவிதையையும் இசையையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. ஆனால் என்னைப் பாதிக்கும் எதுவும் கவிதையையும் பாதிக்கும் என்ற வகையில் இசை சில விளைவுகளைக் கொடுத்திருக்கிறது. சுருதி பிசகாத சொற்களைத் தேர்ந்து கவிதையில் பயன்படுத்துவது; அநாவசிய ஆலாபனைகளுக்குள் இறங்காமலிருப்பது; கவிதைக்குப் பொருந்தக் கூடிய தொனியை உருவாக்குவது. இவற்றில் இசையின் தாக்கம் இருக்கலாம். இரண்டும் தனித்தனியான கலைவடிவங்கள் என்றாலும் இசையைக் கேட்டு முடித்ததும் வாய்ப்பதும்  நல்ல கவிதையை வாசித்து முடித்ததும் வாய்ப்பதும் ஒரே மனநிலைதான், 

கோவையில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள். இப்போது திருவனந்தபுரத்தில் இருக்கிறீர்கள். வாழ்நிலங்களின் மாற்றம் உங்களிடம் என்ன செய்திருக்கிறது?

கேரளத்தின் பிற நகரங்களுடன் ஒப்பிடும்போது திருவனந்தபுரம் தமிழுக்கு அந்நிய நகரமல்ல. மலையாளமும் பேசப்படும் தமிழ் நகரம்.. எனவே பெரிய மாற்றங்கள் எதையும் உணர்ந்ததில்லை. மலையாள வாசிப்பும் கேரளப் பண்பாட்டைச் சார்ந்த விஷயங்களின் மீதான கண்ணோட்டமும் செழிப்படைந்திருக்கின்றன. நான் கணியன் பூங்குன்றனின் வாரிசு. எனவே இந்த ஊரும் எனது ஊரே; இந்த மனிதர்களும் எனது சுற்றமே.

ஒரு இடதுசாரிப் பின்னணியைக் கொண்ட கவிஞர் நீங்கள். தமிழ் நவீன கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவரும் கூட. சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனின் ஆற்றலும் காதலில் ஈடுபடுபவனின் ஆற்றலும் ஒரு தளத்தில் சந்திப்பவையா?

இதுவரையானவற்றில் பதில் சொல்லச் சிக்கலான கேள்வி இது. நவீன கவிதையில் காதல், காமம் சார்ந்த உணர்வுகளை அதிகம் கையாண்டவர் என்று நீங்கள் சொல்வது புதிதாக இருக்கிறது. உண்மையில் இது தமிழ் இலக்கிய மரபிலிருந்து  நான் கண்டெடுத்துக் கொண்ட  இயல்பு. காதல் உயர்வானது;காமம் விலக்கானது என்ற பேதம் பண்டைத் தமிழ் இலக்கியத்தில்  கிடையாது என்பது வாசிப்பில் அறிந்த உண்மை. அதையே நிஜத்திலும் கவிதையிலும் பின்தொடர முயன்றிருக்கிறேன். ஆணின் பார்வைக் கோணத்திலானவைதாம் நீங்கள் குறிப்பிடும் கவிதைகள். ஆனால் அது பெண்ணை ஆகாயத் தாமரையாகப் புகழ்வதோ பாதாளப் புழுவாக இகழ்வதோ அல்ல, மாறாக நிகர்நிலையில் வைத்துப் பார்க்கும் எத்தனம். இயற்கையின் பகுதியாக ஏற்கும் முனைப்பு. காதல், காமம் பற்றிய என் கவிதைகள் எதிலும் இயற்கையின் குறிப்பீடு இல்லாமலிருக்காது என்பதை என் தரப்பு விளக்கமாகச் சொல்வேன்,

இன்றுவரையில் நமக்கு அறிமுகமாகியிருக்கும் புரட்சியாளர்களில் பெரும்பான்மையினரும் மாளாக் காதலர்கள்தாம். காதலும் மானுடர்க்கிடையிலான மாற்றத்தைக் கோருவது என்பதால் சமூக மாற்றத்தில் ஈடுபடுபவனுக்கு இரு ஆற்றல்களும் ஒரு தளத்தில் இருப்பத்தானே சரி? இடதுசாரிப் பின்னணி அதற்கு ஒருபோதும் தடையல்ல என்று வரலாறு சொல்கிறது. நாம் பேசுவது காதலிலும் சமூக மாற்றத்திலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்களைப் பற்றித்தான். நாடகக் காதலர்களையோ போலிப் புரட்சியாளர்களையோ அல்லவே. 
Comments

Popular posts from this blog

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது.

புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில்.
அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து
துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார்.

துறவியின் முன்னால் தாழ…

ஹாருகி முராகமி - என் தந்தையின் நினைவுகள்

ஒருபூனையைதொலைத்தல்!


தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் எனது தந்தை குறித்து எனக்கு நிறைய நினைவுகள் இருக்கவே செய்கின்றன. நான் பிறந்ததிலிருந்து பதினெட்டு வயதில் வீட்டை விட்டு வெளியேறும் வரை அத்தனை பெரிதாக இல்லாத வீட்டில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்துவந்ததை வைத்துப் பார்த்தால் அது இயற்கையானதே. பெரும்பாலான குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உள்ளதைப் போன்றே, எனது தந்தை குறித்த எனது நினைவுகள் சில மகிழ்ச்சியானவையாகவும், சில அப்படிச் சொல்ல முடியாததாகவும் இருந்திருக்கலாம். ஆனால் என் மனத்தில் திட்டவட்டமாக உள்ள நினைவுகள் இந்த இரண்டு பிரிவையும் சேராதவை; சாதாரண நிகழ்ச்சிகள் தொடர்பான நினைவுகள்.

உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சி:

நாங்கள் சுகுகவாவில்( நிஷினோமியா நகரத்தின் ஒரு பகுதி, ஹியோகோ உள்ளாட்சி மாநிலம்) வாழ்ந்துவந்த போது, ஒரு பூனையைத் தொலைப்பதற்காக ஒரு நாள் கடற்கரைக்குப் போனோம். அது குட்டி அல்ல; வயதான பெண் பூனை. கொண்டு போய் விடுவதற்கான காரணத்தை என்னால் நினைவுகூர முடியவில்லை. நாங்கள் வாழ்ந்துவந்த வீடு தோட்டத்துடன் கூடிய, ஒரு பூனைக்குத் தாராளமாக இடமுள்ள தனி வீடுதான். தெருவிலிருந்து வீட்டுக்கு வந்ததாக இருக்கலாம்; …

அருவியை மௌனமாக்கும் சிறு செடி கவிதை

உலகின் வெவ்வேறு தேசங்கள், கலாசாரம், அழகியல், அரசியல் பின்னணிகள் கொண்ட கவிஞர்களையும் கவிதைகளையும் அறிமுகம் செய்து எஸ். ராமகிருஷ்ணன் தடம் இதழில் தொடராக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘கவிதையின் கையசைப்பு’. இதில் 12 கவிஞர்களும் அவர்கள் கவிதைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்கள். ஒரு மாத இடைவெளி கொடுத்து அந்தந்தக் கவிஞர்களையும் அவர்களது கவிதைகளையும் வாசிப்பதற்கான அவகாசம் தேவைப்படும் அளவுக்கு திடமான அறிமுகங்கள் இவை.
ஒரு ஜப்பானியக் கவிஞரையும் ஒரு ரஷ்யக் கவிஞரையும் அவர்களது கவிதைகளையும் எனக்கு ஒரு நாளில் குறிப்பிட்ட இடைவெளியில் படிப்பது மூச்சுமுட்டுவதாக இருந்தது. ஒரு கோள் இன்னொரு கோளுடன் மோதுவது போல மூளையில் கூப்பாட்டையும் ரப்ச்சரையும் உணர்ந்தேன்.
எஸ். ராமகிருஷ்ணன், ஒவ்வொரு கட்டுரையிலும் அவனது உலகத்தை அறிமுகப்படுத்தும் போது, கவிதை குறித்த அந்தந்தக் கவிஞர்களின் சிந்தனைகளையும் தனது எண்ணங்களையும் சேர்த்தே தொடுத்துச் செல்கிறார்.
000
ஒரு கவிதையை எப்போதும் அகத்தில் சமைப்பவனாக, கவிதை ரீதியில், படிமங்கள், உருவகங்களின் அடிப்படையிலேயே சிந்திப்பவனாகவும் பேசுபவனாகவும் இருக்கிறேன். ஆனால், கவிதை என்றால் என்னவ…