Skip to main content

பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலம் அகாலம்




பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளை அவை வெளிவந்த காலத்துத் தொகுப்புகளை மேய்ந்த போதும், இந்தப் புதிய தொகுப்பின் கவிதைகளைக் கிட்டத்தட்ட முழுமையாகப் படித்துமுடித்தபோதும் இந்தக் கவிதைகளின் காலம் குறித்த கேள்விதான் முதலில் தோன்றியது.
கவிதை அகாலத்தில் தானே எழுதப்படுகிறது என்ற எளிய பதிலைக் கொண்டு அந்தக் கேள்வியை முறிக்கப் பார்த்தேன். ஆமாம், அகாலத்தில் எழுதப்பட்டாலும் கவிதையின் பொருத்தப்பாடு என்பது காலத்துடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. கவிதையின் பொருத்தப்பாடும் பின்னணிகளும் மாறும்போது கவிதையைக் காலம் கவ்வுவதற்கு முயன்றபடி இருக்கிறது. காலம் கவ்வாத கவிதைகள் இன்றைக்கும் என்றைக்குமானதாக எப்போதும் பொருத்தப்பாடுடையதாக அகாலத்தின் பொலிவேறி சோபை தழும்ப இருக்கின்றன.
ஒவ்வொரு கவிஞனும் தனது காலத்தின் மொழியை எடுத்துக் கொண்டு, தனது தனிச்சாயல் கொண்ட அனுபவங்களைச் சேர்த்து மொழியில் சமைக்கும்போது அவனுடைய ஆற்றல், வேகம், அவனுக்குக் கிடைக்கும் அருள் எல்லாவையும் சேர்ந்து கூடுதலோ குறைவாகவோ தன் சில கவிதைகளை அகாலத்தின் பீடத்துக்குக் கொண்டுபோய் சேர்த்துவிடுகிறான். அருள் என்பதை மேலிருந்து, புலப்படாததிலிருந்து அப்பாலிலிருந்து வருவதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எல்லாம் ஒத்திசையும் யோகம் என்று அதைச் சொல்லலாம். சுயத்துடன் தொடர்பில்லாத ஒரு வஸ்து படைப்புச் செயல்பாட்டில் கலப்பதென்று சொல்லலாம். ஆழ்மனம், கூட்டு நனவிலி என்ற நிலவறை வெளிப்படுத்தும் சிரிப்பு அல்லது பெருமூச்சு, கருணை என்று சொல்லலாம்.  களமும் காலமும் சேர்ந்து நிகழ்த்தும் ஆட்டம் சிறந்த படைப்புகளில் நிகழ்கிறது. அந்தப் படைப்புகள் தான் காலத்தைத் தாண்டுகின்றன. அதேவேளையில் அகாலத்தின் பொன்னிறத்தையும்  சூடிக்கொள்கின்றன.   
பூமா ஈஸ்வரமூர்த்தியின் கவிதைகளில் எண்பதுகள், தொண்ணூறுகள், இரண்டாயிரம், 2010-ல் எழுதப்படும் கவிதைகளின் சாயல்கள் ஏறியுள்ள கவிதைகளையும் முடிப்புகளையும் பார்க்கிறேன். வண்ணதாசன், தேவதச்சன், அப்பாஸ், ஆத்மாநாம் என்று காலம் ஆளுமைகளாகவும் இந்தக் கவிதைகளில் சாயல் கொண்டுள்ளன.
பூமா ஈஸ்வரமூர்த்தியின் களமும் அவரது காலமும் சேர்ந்து ஆடிய அவரது மன அடையாளத்தை மட்டுமே கொண்ட கவிதைகளைத் துப்பறிவது எனக்குச் சுவாரசியமான அனுபவமாக இருந்தது. அந்தக் கவிதைகள் இவர் கடந்து கண்டதின் சாரத்துடன் இவர் கடந்து கண்டதின் சிரிப்புடன் இருக்கின்றன. எனக்கு அந்தக் கவிதைகளைத் தெரியும். அந்தக் கவிதைகள் வழியாக, அவர் கண்ட உலகத்தினுடனான உறவுதான் எனக்கு பூமா ஈஸ்வரமூர்த்தியினுடனான உறவும்.

இந்தத் தொகுதியில் துவக்கத்திலேயே அவரது கவிதையைக் கண்டுவிட்டேன்.
என் வன யானைகளை
வழி பிசகாமல்
அழைத்துச் செல்ல வேண்டும்
மின்மினிகள்
நான் இருக்கிறேன் என்றது.

மின்மினிகள் யாருக்குச் சொல்கிறது. யானைகளை அழைத்துச் செல்பவனையா, யானைகளிடம் சொல்கின்றனவா.
அல்லது யானையின் பாதையை மட்டுமே நோக்குபவர்களுக்கு மின்மினிகளின் இருப்பை நாம் பார்க்க வேண்டுமென்று சொல்கிறதா?
எனது உலகத்துக்கு எனது அனுபவத்துக்கு நெருக்கமாக, யானையிடம் மின்மினிகள் பேசுவதாகவே நினைப்பேன். நான் இருக்கிறேன். பார்த்துப் போங்கள். நான் இருக்கிறேன். பார்த்துக் கொள்ளலாம். போங்க இந்த மனிதனுடன். இப்படித்தான் நான் புரிந்துகொள்வேன். எனக்கும் அந்த மின்மினிகள் ஆறுதல் சொல்கின்றன. நான் இருக்கிறேன்.
இப்படி பூமா ஈஸ்வரமூர்த்தியின் தனிக் கையெழுத்தைக் கொண்ட கவிதைகள் ஒரு பகுதி இவரிடம் இருக்கின்றன.
000
பூமியில் சிறிய இருப்புகளை, கண்ணுக்குத் தெரியாத இருப்புகளை மின்மினிகள் சொல்வதைப் போல வெளிச்சமிட்டுக் காண்பிப்பது; சின்னச் சின்ன இருப்புகள் அவை. குழந்தை வரைந்த ஒரு சுவர் சித்திரம்,  ஒரு சுவர் , ஒரு சிறிய செடித் தொட்டி, பீரோவில் ஒட்டப்படும் சிறிய வண்ணத்துப்பூச்சி வடிவ காந்தம். சின்னப் பொருட்கள், சின்ன உணர்வுகள் மீது கவனம் குவிக்க வைப்பது பூமா ஈஸ்வரமூர்த்தியின் உலகத்தின் ஒரு குணம் என்று வகுக்கலாம். இந்தச் சிறிய அழகுகளைக் கொண்டு அழகேயற்ற, அழகு உணரப்படாத ஒரு இடத்தில் வைப்பதுதான் பூமா ஈச்வர மூர்த்தியின் வேலை என்று கூடச் சொல்லிவிடலாம்.
கவிஞனின் இருப்பு கூட அந்தச் சின்ன அழகைப் போன்றது தான் இந்த உலகத்துக்கு. உலகம் அவனை அழகுபடுத்துவதில்லை. அவன் இந்த உலகத்தை அழகுபடுத்துகிறான். உலகம் அவனுக்கு விருந்திடுவதில்லை அவன் விருந்துகொடுத்து மகிழ்கிறான். அவன் தன்னை தனது படைப்புப் பணியை ஒரு கலை சாதகம் என்ற பிரக்ஞையுடன் இயங்குகிறான்.
000
பூமா ஈஸ்வரமூர்த்தியின் இன்னொரு உலகம் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் கலாசாரத்தின் அவரது கனவாக இருக்கும் ஊரின் அடையாளங்களுடன் உள்ளது. சித்தப்பா, பூச்சுற்றும் பெண் குறித்த கவிதைகளை உதாரணமாகச் சொல்லலாம். குழந்தையின் கால்கொலுசு தொலைந்த ஆற்றை, தாமிரபரணி கொலுசு அணிந்து ஓடிக்கொண்டிருக்கிறாள் என்று எழுதுகிறார். புதுமைப்பித்தன் இந்தப் படிமத்தை சற்றேறக்குறைய நெருக்கமாக ஒரு சிறுகதையில் பேராச்சியம்மன் படித்துறையில் நீர்விளையாட்டில் ஈடுபடும் குழந்தையை வைத்து எழுதியிருக்கிறார். இந்த உலகில் எழுதப்பட்ட எல்லா கவிதைகளிலும் கண்ணீர் சிறு துளியளவு இருக்கிறது.
ஈஸ்வர மூர்த்தியின் கவிதைகளில் வரும் குழந்தைகள் கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையில் அவர் கவிதைகளைப் போல மிதப்பவர்கள்.
என் கவிதையின் முதல் வரியில்
வந்து அமர்ந்து கொள்ள விரும்புகிறாள்
இவள்
மூன்றுக்கு மிகாத வயதுச் சிறுமி
மாலை சிறுவர் பூங்காவில் வந்தமர்ந்தவள்
இன்று சின்னஞ்சிறு விரிந்த நீலக் குடையோடும்
வந்திருக்கிறாள்
மழையில்லை வெயிலில்லை தூறலுமில்லை
வான்நீலக் குடையின் மேற்புரத்தில்
கண்ணாடியில் வீழும் மழைத்துளிகளை
சித்திரம் தீற்றியிருக்கிறார்கள்
சிறுமியர்கள் தொட்டுப் பார்த்து செல்கிறார்கள்
சிலரிடம் கொடுத்தும் வாங்கியும் கொள்கிறாள்
கூடவே ஒரு சிறு நாய்க்குட்டியும்
அவளோடு சேர்ந்து மற்றவர்கள்
விளையாடுவதை பார்க்கிறது
மழையில்லை வெயிலில்லை தூறலுமில்லை
விரித்த குடைக்குள் நாய்க்குட்டியை
அழைத்துக் கொள்கிறாள்
பின்னாளில் இவள் அன்பிலாப் பெண்டிரில்
தன்னை இணைத்துக் கொள்ளாள்.
இந்தக் கவிதையின் உள்ளடக்கம் எனக்குப் பிடித்தமானது. ஆனால் இந்தக் கவிதையில் காலம் ஏறியிருக்கிறது. ஏனெனில் இன்றைய கவிஞன் இந்தக் கவிதையை இப்படி முடிக்கமாட்டான். ஈஸ்வர மூர்த்தியின் கவிதை முடிவை நான் பொய்யென்று சொல்லமாட்டேன். ஆனால், உண்மைக்கு அருகில் இல்லை. விரித்த குடைக்குள் நாய்க்குட்டியை அழைத்துக் கொள்ளும் சிறுமியின் சாத்தியத்தை அங்கே ஈச்வரமூர்த்தி மட்டுப்படுத்தி விடுகிறார் என்பதை மட்டும் சொல்வேன். மென்னுணர்வு, ரொமாண்டிக் என்று இந்த இடத்தைச் சொல்லிப் பார்க்கலாம். இங்கேதான் காலம் என்பது கவிதையின் மீது ஒரு இடமாக அமர்ந்திருக்கிறது. இடம் என்பது மதிப்பீடாகவும் இருக்கிறது. நான் திரும்பவும் சொல்கிறேன். பொய்யென்று சொல்லமாட்டேன். ஆனால் அது உண்மைக்கு அருகில் இல்லாமல் இருக்கிறது..அவள் அன்பற்ற பெண்டிரில் ஒருவளாக ஆக்கவும் இந்த பூமியின் எத்தனை குறுக்குவெட்டுப் பாதைகள் காத்திருக்கின்றன.

மழை பனி குளிருக்காக
சன்னல் கீழிறக்கப்படவேண்டும்
உள்ளிருக்கும் கதகதப்பு காற்றுப் போதும்
வெளிச்சம் புதுக் காற்று வேண்டும்
உள்ளிருக்கும் அழுகல் காற்று அகல
சன்னல் மேலேற்றப்பட வேண்டும்
சொற்கள்
ரயில் பெட்டிகள்
என்ற ஒரு கவிதையை வைத்தே சொல்லிப் பார்க்கலாம். புதிய காற்று, பழைய காற்று என்பதை காலமாக விழுமியங்களாகவும் மாற்றிப் பார்க்கலாம்.

இக்கரையில் ஏறி அக்கரைக்கு
சென்றானபின்
வெற்றுப் படகை
நீருக்குள் தள்ளி விடுங்கள்
படகு கரையோரம் நின்று
நீரை ஏக்கத்துடன் பார்ப்பதை
மனதாலும் பார்க்க இயலாது
என்கிறார். இதிலும் எனக்கு முந்தைய ஒரு காலம் செயல்படுகிறது. நான் அந்தப் படகை கரையிலேயே தான் வைத்திருப்பேன். நானும் அந்தப் படகும் வேறு இல்லை, என்னைப் பொருத்தவரை.
கடல் முற்றத்தில்
தீய்க்கும் வெய்யிலின்
சுடுமணலில்
இங்கிருந்து அங்கும்
அங்கிருந்து இங்கும்
என் பறவை நடந்து
கடல் பார்க்கிறது.

தீய்க்கும் வெய்யிலின் சுடுமணலில் இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்கும் நடக்கும் பறவை தான் பூமா ஈச்வரமூர்த்தியின் கவிதைகள். அப்படித்தான் பூமா ஈஸ்வரமூர்த்தியின் காலத்துக் கவிதைகளும் பூமா ஈஸ்வரமூர்த்தியின் அகாலத்துக் கவிதைகளும் செயல்படுகின்றன.

இந்தக் கவிதைகள் இருக்கும் காலத்தைக் கடந்து கண்ட ஒரு உலகம் எனக்கு மிகவும் பயனுள்ளது. அவருக்கும் அதுதான் நிறைவையும் கருணையையும் சுரக்கச் செய்திருக்க வேண்டும். அதுதான் மிக நெடுங்காலமாக காணாதிருந்த ஈஸ்வரமூர்த்தியை எனக்கு மிகவும் நெருக்கமாக்கவும் செய்கிறது.
அந்த இரண்டு கவிதைகளை நான் படித்து நிறைவு செய்கிறேன்…

இந்த விதைகள் என்னையும் சேர்த்தணைத்து
நிலத்தில் விதைத்துக் கொள்கிறது
இந்த மீன்கள் என்னையும் சேர்த்தணைத்து
நீரில் நீந்தி மகிழ்கிறது
இந்த எழுத்துக்கள் என்னையும் சேர்த்தணைத்து
நெருப்போடு எரிகிறது
இந்த மூச்சு என்னையும் சேர்த்தணைத்து
காற்றோடு கலந்து கொள்கிறது
இந்தப் பறவை என்னையும் சேர்த்தணைத்து
ஆகாயத்தில் மிதந்து கொள்கிறது
இந்த உயிர் என்னுயிரையும் சேர்த்தணைத்து
இன்பம் துய்க்கிறது
இந்த உயிர் என்னுயிரையும் சேர்த்தணைத்து
துன்பம் துய்க்கிறது.

இதுதான் ஈஸ்வரமூர்த்தி கண்டது என்று கருதுகிறேன். இதுதான் அவர் அடைந்திருக்கும் கனிவு என்று தெரிகிறது. இதுதான் அவர் என்னுடன் என் காலத்துக்கும் சேர்த்து அகாலத்துக்கு அளித்திருக்கும் பரிசு.

நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
கடந்து போகிறீர்கள் சிறு புன்னகையுடன்
நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
அகன்று போகிறீர்கள் சிறு புன்னகையுடன்
நீங்கள் உங்களை உணர்ந்து கொள்ளும் போது
ஏற்றுக் கொள்கிறீர்கள் சிறு புன்னகையுடன்.

கடவுளைக் கண்டும் எதையுமே கேட்கத் தோன்றவில்லை என்று சொல்லும் ஆத்மாநாமின் நிறைவு கொண்ட பூரணப் புன்னகையின் எதிரொலியை இந்தக் கவிதையில் காண்கிறேன்.

ஈஸ்வர மூர்த்தி, உங்களை மிகத் தொலைவிலிருந்து காலத்திலிருந்து இடத்திலிருந்து பார்க்கிறேன். மகிழ்ச்சி.

நீந்தி துள்ளித் துள்ளி விளையாடும்
மீன்கள் சொல்லும் இது எனது நதி
நதி சொல்லும் இவைகள் எனது மீன்கள்
மகனே கவனம் கொள்
இன்று மிக நல்ல நாள்
மீன் பிடிக்கக் கற்றுத் தரப்போகிறேன்
தேர்ச்சி கொள்
இனி உனக்குப் பசி இல்லை
இது உனது நதி இவைகள் உனது மீன்கள்
மீன் கொத்திப் பறவையும்
சொல்லும்
இது உனது நதி இவைகள் உனது மீன்கள்

மீன்கள் சொல்வதும் உண்மை. மீனைப் பிடித்துப் பசியாற்றுவதற்குக் கற்றுக்கொடுக்கு மனிதத் தகப்பன் சொல்வதும் உண்மை. மீன்களைக் கொத்திச் சாப்பிடப் போகும் மீன்கொத்தி சொல்வதும் உண்மை. உனதும் எனதும் ஒன்றாகும் உண்மை. நீயும் நானும் ஒன்றாகும் உண்மை. காலத்தை விழுங்கிய கவிதையின் உண்மை.

Comments