Skip to main content

அருண் கோலாட்கர் கவிதைகள்


திரும்புதல்

பாம்பே என்னை யாசகனாக்கியது
ஒரு கவளம் வெல்லத்தை நக்கத் தந்தது கல்யாண்
ஒரு சின்ன கிராமம்
அங்கே ஒரு அருவி
ஆனால் அதற்கோ பேரில்லை
எனது போர்வையை விற்க ஒருவன் கிடைத்தான்
அத்துடன்
வெறும் தண்ணீரைக் குடித்து விருந்தாடினேன்

எனது பல்லுக்கிடையே அரசமர இலைகளின் துணுக்கோடு
நான் நாசிக் வந்துசேர்ந்தேன்
அங்கே கொஞ்சம்
ரொட்டிக்காகவும் கொத்துக்கறி வாங்கவும்
எனது துக்காராமை விற்றேன்.
ஆக்ரா சாலையைக் கடந்தபோது
எனது செருப்புகளில் ஒன்று பழுதாகிப் போனது.

சிறிய ஓடை ஒன்றில் நன்றாகக் குளித்தேன்.
பார்த்த முதல் கதவைத் தட்டி யாசகம் கேட்டு
அந்தக் கிராமத்தை விட்டு நீங்கினேன்.
ஒரு மரத்தினடியில் அமர்ந்தேன்,
பசியே இல்லை
இப்படியொரு தாகத்தில் நான் தவித்ததே இல்லை.

யாசகர்களை அறவே வெறுக்கும்
துக்காராமின் பெயரை அறிந்திருந்த
மாட்டுவண்டி மனிதனிடம்
என் பெயரையும் இன்னபிறவற்றையும் சொன்னேன்
ஆனால் அவன்
நாங்கள் பண்ணைக்குப் போய்ச் சேர்ந்த பின்னர்
குளிர்ந்த நீரைக் கொடுக்குமளவு பரிவு காட்டினான்.


அப்புறம் ரோட்காவ் வந்தது
அங்கே எனக்குக் கடும் சோதனை
சற்றே உடலைச் சாய்த்து உறங்கலாமென்று
நினைத்த கோயிலில்
இரவு முழுவதும் ஊளையிட்டு இறந்துபோன
நாயின் சடலத்தை இழுத்து அகற்ற வேண்டியிருந்தது
சாப்பிடுவதற்கு அங்கே பாக்ரி கிடைத்தது
ஒரு பெண் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தாள்
இருட்டில் அவளை நான் பார்க்கவில்லை
அவள் வெடித்துச் சத்தமிட்டாள்
குருட்டுக்கூதி தாயோளி
உனக்கு பாக்ரி வேண்டுமா
நான் தருகிறேன் பாக்ரி
என்றாள்.

கரும்புச் சக்கைகள் வேகும் மணம் வயலில்
நான் சாப்பிடுவதற்குக் கரும்பு கேட்டேன்.
விஷ்ணுகிரந்திச் செடிகளில் மலம் கழித்தேன்
வேப்ப இலைகளால் குதத்தைத் துடைத்தேன்.
சாலையில் கிடந்த பீடியைப்
பொறுக்கி எனது சட்டைப் பையில் போட்டுக் கொண்டேன்.

நடந்தேன் நடந்தேன் வழியெல்லாம் நடந்தேன்
அது பஞ்சம் கண்ட ஆண்டு
நான் இறந்த இளம் காளையைப் பார்த்தேன்
ஒரு குன்றைக் கடந்தேன்
அந்தக் குன்றின் உச்சியிலிருந்த கோயிலிலிருந்து
சிறிய நாணயம் ஒன்றை எடுத்துக் கொண்டேன்.

கோபர்காவ் ஒரு பெரிய நகரம்.
அங்கேதான் ஸ்டாலின் இறந்த செய்தியை வாசித்தேன்.
கோபர்காவ் பெரிய நகரம் என்பதால்
யாசகம் கேட்பதற்கு வெட்கமாய் இருந்தது.
கையில் பாதிகொள்ளும் சோற்றைப் பெறுவதற்கு
ஐந்து கதவுகளைத் தட்ட வேண்டியிருந்தது.

தாடி தலைமுடியெல்லாம் புழுதி.
தலையைச் சுத்தியென அறைந்தது சூரியன்.
அரிக்கும் புட்டம்.
பலகைக் கற்களில் கழிக்கும் இரவு.
தப்பித்துவந்த என் கால்களில்
உஷ்ணம் ஏறிவருகிறது.

ரயில் நிலையம் இரண்டு மைல்களுக்கு அப்பால்
நகரமோ மூன்று மைல்கள்
தொடைக்கு மேல் சுருண்ட வேட்டியை
உதறிக் கட்டுவதற்காக நின்றபோது
வேர்வை என் கண்களைக் கொட்டியதை
என்னால் பார்க்க முடிந்தது

சாலையோரத்தில் குட்டையான வேலி.
நன்கு பெருக்கப்பட்ட முற்றம்.
ஒரு குடிசைஒரு கிழவன்.
ஒரு யுவதி நுழைவாயிலில்.
கொஞ்சம் தண்ணீர் கேட்டுக்
குடிப்பதற்காக என் கைகளைக் குவித்தேன்.

எனது முழங்கைகளில் தண்ணீர் வழிந்தது
நான் அந்தக் கிழவனைப் பார்த்தேன்.
அடர்ந்து வளர்ந்த தாடியையும்.
அவர் கண்களில் நிறைவு தெரிந்தது.
மேல்பகுதி வெட்டப்பட்ட மண்ணெண்ணெய் டப்பா
அவர் காலடியில் சேவிப்பது போலக் கிடந்தது.

ஒரு பாக்ரி வந்தது கேட்காமலேயே
ஒரு வெங்காயம் துணையாக.
நான் சாப்பிட்டேன்.
அமர்ந்திருந்த எனது மூட்டையை எடுத்துக் கொண்டு
கிளம்பினேன்.
அதைப் பற்றி ஓரிரு மைல்கள் எண்ணமிட்டேன்.
ஆனால்எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது
அதுதான் திரும்புவதற்கான சமயமென்று.

000

நாம் கிளம்பிச் செல்வதற்கு முன்னால்
நாய்கள் வீணே கடலலைகளைப் பார்த்துக்
குரைத்தன
ஏன் என்று எனக்குச் சொல்.

நாட்கள் அலைகளுக்கு அப்பால்
ஓர் அனாமதேய ஆலயத்தில்
வேறு எங்கிருந்தும் அல்ல
நம்மிடமிருந்து
அரவமற்று வந்த ஒரு கருப்பு நாய்
நம்மை வெற்றுடம்பாக்கி
அவமானத்துக்குள்ளாக்கி
ஊளையிட்டுக் குதித்தோடியது
ஏன் என்று எனக்குச் சொல்.

கடவுளுக்கும் நமது தலைகளுக்கும் இடையே
மர்மமான முறையில்
அந்தக் கருப்பு நாய் இறந்து போனது
ஏன் என்று எனக்குச் சொல்.

Comments