எனக்கு
நாற்பத்தி இரண்டு வயது ஆகியிருந்தது.
பொதிகை மலையில்
செண்பகாதேவி அருவிக்குப் போகும் பாதையில்
கானாங்கோழியைப் பார்த்தேன்.
காட்டுக்கோழி வகையினம்
நான் பார்த்தபோது பறக்கவில்லை.
என் நண்பர் அதைப் பெயர் சொல்லி
அறிமுகப்படுத்திய நொடியில் ஓட அரம்பித்தது.
பக்கவாட்டில்
மரம் செடி சருகுகள் அடர்ந்த புதருக்குள்
நூல் போல தன் வழியை நீட்டி
ஊசியாய் போய் காட்டுக்குள் செருகிக் கொண்டது
கானாங்கோழி.
ஒளிவேகத்துக்குக் குறைவுதான்
ஓடும்போது கானாங்கோழியின்
உருவத்தைப்
பார்த்தது போலத் தான் பார்த்தேன்
ஒரு ஆப்பிரிக்க தடகள வீரனையும்
38 உறவுக்காரர்கள் குழந்தைகளை
வளர்த்து பாடுபார்த்து மறைந்த
என் ஒல்லிக்குச்சியுடல் பெரியம்மாவையும்
ஞாபகப்படுத்தியது அந்தக் கானாங்கோழி
காட்டுக்கென்று பிரத்யேகமான
ஆபரணங்கள் எதையும் இயற்கை
அதற்குச் சூட்டவில்லை
சரசரசரவென்று
ஒலியாக மட்டுமே மாறி மறையும்போது
அதற்கு உடலும் இல்லை
என் மகள் எப்போது
ஒரு கானாங்கோழியைப் பார்க்கப் போகிறாள்?
ஊரிலும் நகரத்திலும் காணப்படும் கோழி இல்லை அதுவென்று
அவளுக்கு நான் அந்தப் பறவையை அறிமுகப்படுத்த வேண்டும்
கானாங்கோழி
பிரியாணிக்கு எதிர் திசையில் மிக தூரத்தில்
ஓடிக் கொண்டிருப்பதை
அவளுக்கு நான் புரியவைக்கவும் வேண்டும்.
000
மறைந்திருக்கும் வால்கள்
வெளித்தெரியும் வால்கள்.
வால்கள் தான்
வால்கள் தான்
வனத்தின்
தீராத விஷமம்
அலுக்காத விளையாட்டு
ஓயாத இசை
புதுப்புது தைலக்குப்பிகள் உடைந்து
நாள் முழுவதும் பரவிக் கொண்டேயிருக்கும்
நறுமணத் தோட்டம்
000
பச்சை பச்சையென்று
அத்தனை பச்சை காட்டும்
லச்சை கெட்ட கீரை மரம்
இலைகளின் அடர்காடு
அடுக்கடுக்காய்
பச்சை
அங்கே புகுந்து
வாலையும் இழுத்து
மறைந்தது
மாமதப் பூனை
000
ஞாயிற்றுக் கிழமையின்
இந்த அந்தியில்
வீட்டுச் செடிகள் கண்ணுக்கு
அணுக்கம் கொள்கின்றன
தாவரங்களோடு
ஆடிக்கொண்டிருக்கும்
ஈரம் மிச்சமிருக்கும்
என் மகளின் ஆடைகள்
இந்தச் சாயங்காலத்தை
தாங்கமுடியாத மதுரமாக்குகிறது
கழுவப்பட்டுக் காய்ந்துகொண்டிருக்கும்
அவளது கான்வாஸ் ஷூக்கள்
வளர்ந்துவிட்டதை
நான் பார்க்கவேயில்லை.
Comments