Skip to main content

மனிதனின் தனி நரகத்தைச் சொல்லும் ‘காதுகள்’  
எம். வி. வெங்கட்ராமன் எழுதி சாகித்ய அகாதமி விருதுபெற்ற ‘காதுகள்’ நாவலை அது வெளியானதும் படித்திருந்தேன். ஆனால் அது குறித்த மனப்பதிவு எதுவும் அப்போது உருவாகவில்லை. நாகர்கோயிலில் கல்லூரி முதல் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது, சுந்தர ராமசாமி தான் தனது நூலகத்திலிருந்து படிக்கக் கொடுத்தார். எனக்கு அந்த நாவலின் உள்ளடக்கத்தை அந்தப் பருவத்தில் நெருங்கியிருக்கவே முடியாது என்று தற்போது படித்தபோது தெரிந்தது.

தாமச சக்தி என்று கூறிக்கொள்ளும் காளி, முருக பக்தனான மகாலிங்கத்தை ஒலி, காட்சி, வாசனை எனப் பல வடிவங்களில் அரூபமாக அலைக்கழித்து ஓட ஓட வாழ்க்கையின் ஓரத்துக்கு விரட்டி அல்லல்படுத்தும் அனுபவங்கள் தான் அந்த நாவல். மகாலிங்கம் வேறு யாரும் அல்ல. எம். வி. வெங்கட்ராமன், தான்பட்ட இருபது வருட அல்லல்கள் தான் அந்த நாவல் என்று குறிப்பிட்டுள்ளார். 

நாத்திகரும் நவீனத்துவருமான சுந்தர ராமசாமியை 'காதுகள்' ஈர்க்கவில்லை. முருகனின் அருளால் சாகித்ய அகாதமி கிடைத்தது என்று எம். வி. வெங்கட்ராமன் ஒரு நேர்காணலில் வேறு அப்போது சொல்லிவிட்டார். அதை நண்பர்களிடம் சொல்லிச் சிரித்தார் சுந்தர ராமசாமி. அது அந்த நாவல் மீதான சிரிப்பும்தான்.

கிறிஸ்து, நபிகள், ஆதி சங்கரர், புத்தர், நீட்சே, பிராய்ட், யுங், ஷோபன்ஹேர், ஸ்பினோசா என எத்தனை பேர் வாழ்க்கையைப் பற்றி உரைத்தாலும், வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு சற்றே உதவினாலும், மனித குலம் இதுவரை எத்தனையோ விதமான அனுபவங்களைக் கடந்திருந்தாலும் இன்றும் ஒரு மனிதனுக்கு நேரும் அல்லது அளிக்கப்படும் நரகம் என்பது தனித்துவமானது; அந்த நரகம் எப்போது எங்கிருந்து வருமென்று தெரியாது. அது கண்ணுக்குப் புலப்படும் உலகத்திலிருந்து வரவேண்டுமென்பது கூட இல்லை. அது மற்றவர்களால் புரிந்துகொள்ளவோ பெரும்பாலும் தீர்க்கப்படவோ முடியாதது.

தீர்க்க முடியாத புதிர்களும் துயரங்களும் இருப்பதால்தானே வாழ்க்கை இத்தனை காலத்துக்குப் பிறகும் சுவாரசியமானதாகவும் நம்மை வேட்டையின் ருசியோடு துரத்த வைத்துக் கொண்டும் அடித்துப் புசித்துக் கொண்டும் இருக்கிறது. 

அந்தத் தீர்க்கமுடியாத புதிரைக் கையாள்வதற்கு நாவலைப் போல உகந்த வடிவம் வேறில்லை.

தன் சொந்த வாழ்க்கையில் மகாலிங்கம் சந்தித்த அத்தனை துயர்களுக்கும் தன் உடலையும் மனத்தையும் ஒப்புக்கொடுத்து மேடையாக்கிய எம். வி. வெங்கட்ராம் என்ற எழுத்தாளன், நமக்கு அளித்த பரிசுதான் ‘காதுகள்’. இந்த நாவல் அளவில் சிறியதாக இருந்தாலும், நான் படித்த சிறந்த இந்திய நாவல்களில் ஒன்று என்று இதைச் சொல்லத் துணிகிறேன். சம்பத்தின் 'இடைவெளி' நாவலை 'காதுகள்' அருகில் வைத்துப் பார்க்கலாம்.

'காதுகள்' நாவலின் நாயகன் கேட்கும் வசவுகள், பார்க்கும் ஆபாசங்கள், கோர, பின்ன உருவங்கள், அன்றாட வாழ்க்கையில் படும் அல்லல்கள், அவமானங்கள் அத்தனையையும் வாசகனாகப் படிக்கும்போது துயரமாக இல்லை. சில இடங்களில் சிரிப்பு கூட வந்துவிடுகிறது. இரண்டு பெண் சக்திகள் ஒரு இடத்தில் மகாலிங்கத்தின் காதுபடப் பேசுகின்றன. மகாலிங்கம் அதைக் கேட்கிறான். மகாலிங்கத்திடன் இன்னும் இரண்டே இரண்டு வேட்டிகள் தான் இருக்கின்றன. அதையும் இல்லாமல் ஆக்கி அவனைத் தெருவில் ஓட விடவேண்டுமென்கின்றன. நமக்கு நகைச்சுவையாக உள்ளது. இந்த இடைவெளி தான் நாவலாசிரியன் அடையும் கலைவெற்றி என்று தோன்றுகிறது. வாசகனுக்குக் கிடைக்கும் அந்த இடைவெளிதான் எம்.வி. வெங்கட்ராமன் என்ற சிருஷ்டிகர்த்தாவும் மனிதனும் அடைகிற வெற்றியும் ஆழமும்.   

மகாலிங்கம் மனைவியின் ஆலோசனையைக் கேட்டு ஒரு துறவியிடம் போகிறான். இதைப்போன்ற துயரம் ஒருவருக்கு வருவது குரு அருள் கிடைப்பதற்கான முன்னோட்டம் என்கிறார். அதை நம்பிச் சற்றே ஆறுதல் அடைகிறான். மனநல ஆலோசகரிடம் சென்றுவிட்டு சில மணிநேரங்களோ சில நாட்களோ நாம் தற்காலிகமாக உணரும் ஆறுதலைத் தான் அதுவும் தருகிறது. ஏனெனில் வீட்டின் வறுமையும் அந்த வறுமையை எதிர்த்துப் போராட முடியாமல் ஆக்கும் தாமச சக்திகளின் ஆட்டமும் அவனைத் திக்குமுக்காடச் செய்கின்றன. இறந்து பிறந்த குழந்தையைப் புதைப்பதற்கு நர்சுக்குக் கொடுக்கப் பணமில்லாமல் வீட்டுத் தோட்டத்தில் பையில் கட்டிவந்து புதைக்கும் கொடூர நிலை வரைக்கும் அவன் வேட்டையாடப்படுகிறான்.

இடைவெளி நாவலில் தினகரனுக்கு அவனைத் துரத்தும் மரணத்தைப் பற்றிய கேள்விகளிலிருந்து தரையிறங்குவதற்கு ஆறுதலுக்கு தன் மறதிக்கு காமம் உதவுவதைப் போலவே மகாலிங்கத்துக்கும் அவனது மனைவியுடனான உடலுறவு மட்டுமே தற்காலிக அமைதியைத் தருகிறது.

‘காதுகள்’ நாவலின் முடிவு மிகவும் சம்பிரதாயமானதுதான். தாமச சக்தியை முருகனின் துணைகொண்டு முறியடித்து மீள்கிறான் மகாலிங்கம்.

மேல்மனம், ஆழ்மனம், நனவிலி, கூட்டு நனவிலி என மனோதத்துவ அறிவு நமக்குக் கோடுபோட்டு வகைப்படுத்தியிருக்கிறது. ஆனால், ஒருவன் அங்கே தடுக்கிவிழும்போது இந்தக் கோடுகளோ வகைப்படுத்தலோ அவனுக்கு உதவுவதில்லை. அது தனி நரகம் தான். அதன் நுழைவு வழியும் வெளியேறும் வழியும் அவனுக்கு மட்டும்தான். அந்த நரகத்தை முற்றிலும் தாங்கி மாளாமல் மாண்டு அவன் பிறக்க வேண்டும்; அப்படிப் பிறந்துவிட்டால் அது கல்விதான்; அது பரிசுதான்; அது ‘காதுகள்’ போன்ற படைப்புதான்.

உண்மையிலேயே விசித்திரமான அனுபவங்களை எதிர்கொண்ட எம். வி. வெங்கட்ராமன், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் நிதானமாக அழுத்தமாக எந்தத் தையலும் தெரியாமல் இந்த நாவலை எழுதியுள்ளார். ஒரு வித்தியாசமான களனைச் சொல்லப்போகிறோம் என்ற கிறுகிறுப்போ மோகமோ மிகைபேச்சோ எதுவும் இல்லாத படைப்பு ‘காதுகள்’.

மனம் என்னும் உயிர்-வேதியியல்-கலாசார சாராம்சத்தில் ஒரு விபரீதம் நடந்தால் என்ன ஆகும்? அதை, நம் முன்னர் ஒரு அனிமேஷன் திரைப்படம் போல நிகழ்த்திக் காட்டும் மகத்தான படைப்பு இது. 

எம்.வி. வெங்கட்ராமனின் பிற்காலத்தில் அவருக்கு காதுகேட்கும் திறன் குறைந்துபோனதில் ஆச்சரியமில்லை. அத்தனை சிரமங்களைக் கொடுத்த காதுகள் கொஞ்சம் ஓய்வெடுப்பது நிச்சயம் அவரை மகிழ்ச்சிப்படுத்தவே செய்திருக்கும். அந்த மகிழ்ச்சியும் புரிதலின் நிறைவும் அவரது பிற்காலப் புகைப்படங்களில் தெரிகிறது. காதுகளே வேண்டாம் என்பது போலச் சிரிக்கிறார்.


அந்த எம்.வி.வி தான் சொல்கிறார். வாழ்க்கையை, என்னை வாழவைக்கிற இந்தச் சமுதாயத்தை இங்குள்ள உயிரினங்களையும் உயிரற்ற சடப் பொருள்களையும் நான் நேசிக்கிறேன். இந்த மண்ணுக்கு, இந்தச் சுழலுக்கு, சூழலுக்கு, இந்த இன்பதுன்பத்துக்கு என்னை அனுப்பிவைத்தது யார் அல்லது எது என்று கண்டுபிடிக்க நான் ஓயாமல் செய்யும் முயற்சிதான் என்னுடைய இலக்கியப் படைப்பு. அதாவது, என்னைத் தேடிக் கண்டுபிடிக்கவே நான் எழுதுகிறேன். அவர்தானே இதைச் சொல்லமுடியும். கவியும் ஞானியுமான துளசிதாசரின் வார்த்தைகளை ஒத்தவை இவை. 

அமரரின் புகழ் அவர்தம் அமரத்துவத்திற்காக
நீசர் புகழ் நீசத்தனத்திற்காய்
அமரத்வம் அளிப்பதால் அமிழ்தத்தினைப் போற்று
மரணிக்க வைப்பதால் விஷத்திற்கு வாழ்த்து(பிரமிள் மொழிபெயர்ப்பு)

இன்னும் காணும் கண்ணால் அவதியைக் காணும் கண்ணைப் பற்றி ஒரு நாவலை நான் எழுதவே வேண்டும்.

Comments

Popular posts from this blog

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

பெரியாரைப் பற்றி எழுதப்பட்ட நவீன கவிதையைப் படித்திருக்கிறாயா சங்கர்?

ஓவியம் : ராஜராஜன் எனக்குத் தெரிந்து இல்லை. அது ஆச்சரியமான விஷயம்தான். எத்தனையோ வரலாற்றுக் கதாபாத்திரங்கள் இடம்பெற்ற நவீன கவிதையில் பெரியார் பற்றி எழுதப்பட்ட கவிதை ஒன்றை இதுவரை நான் பார்த்ததில்லை. அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா சங்கர்? உண்மைக்கு அருகில் வரும் காரணங்களில் ஒன்றாக அது இருக்குமென்றுதான் தோன்றுகிறது. புனிதம் ஏற்றப்படாத அழகு என்று ஒன்று இருக்கிறதா? இயற்கை, கலாசாரம் உட்பட திரட்டப்பட்ட எல்லா செல்வங்களின் உபரியாகவும் பாகுபாட்டை உருவாக்குவதாகவும் அவர் கலையை கவிதையை அழகைப் பார்த்திருப்பார்தானே. அப்படியான பின்னணியில் அவர் கவிதையையும் கவிஞர்களையும் புறக்கணித்ததைப் போலவே நவீன கவிதையும் அவரைப் புறக்கணித்துவிட்டது போலும்.  அழகு ஒரு அனுபவம் இல்லையா சங்கர்? நல்ல என்று மனம் கொடுக்கும் அந்த விளக்கத்தின் வழியாக அங்கே பேதம் வந்துவிடுகிறது. அனுபவத்தின் பேதத்திலிருந்து தான் தீண்டாமை தொடங்குகிறது. அதனால்தான், தனது தடியால் அழகைத் தட்டிவிட்டு பாம்பைப் போலப் பிடித்து அடிக்க அலைந்தார் போலும் பெரியார். புதுக்கவிதை உருவான சூழலும், புதுக்கவிதைய

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்கிய ஆலயத்துக்குள் வருவதற்கு மறுக்கிறார். சாலை ஓரத்து மரத்தின் கீழே அமர்ந்து கடவுளைப் பாடிக் கொண்டிருக்கிறார். பக்தர்கள் அவரை பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துள்ளனர். ஆனந்தத்தில் அவர்களிடமிருந்து பெருகும் கண்ணீரோ நிலத்திலுள்ள புழுதியை எல்லாம் கழுவுகிறது. நீங்கள் உருவாக்கிய ஆலயமோ சீந்துவார் அற்றுக கிடக்கிறது. புதரில் தனது இதழ்களை விரிக்கும் மலரின் வாசனைகண்டு பொன்முலாம் பூசிய தேன்பானையைப் புறக்கணித்து, பித்தேறிப் புதரை நோக்கி தமது தாகத்தைத் தீர்க்கப் போகும் தேனீக்கள்  போலத்தான் மக்கள். அவர்களுக்கு பொன்னால் நிறைந்த மாளிகை ஒரு பொருட்டுமில்லை. சொர்க்கத்தின் நறுமணத்தைப் பரப்பும் விசுவாசமுள்ள இதயத்தில் உள்ள மலரை நோக்கி மொய்க்கிறார்கள். ஆபரணங்களிட்டு அலங்கரிக்கப்பட்ட பீடத்தில் காலியான கோயிலில் நமது கடவுள் அமர்ந்திருக்கிறார் தனிமையில். அதைக் கேட்டு எரிச்சலுற்ற மன்னன் அரியணையிலிருந்து எழுந்து துறவி அமர்ந்திருக்கும் மரத்தை நோக்கிக் கிளம்பினார். துறவியின் முன்