Skip to main content

காந்திக்கும் கலைஞனுக்குமான உறவு என்ன?




காந்தியை மகாத்மா என்று சொல்வதற்கும் கருணாநிதியை கலைஞர் என்று சொல்வதற்கும் சங்கடம் தேவையில்லையென்ற உணர்வை அளித்த என் வயதுக்கு நமஸ்காரம்.

நவீனத்துவம் அளித்திருக்கும் சவுகரியங்களை அனுபவிப்பவனாகவும் கொந்தளிப்பும் சிதறலுமே கலை என்ற நம்பிக்கை ஆழ்மனதில் ஊன்றப்பட்டவனாகவும் சற்றே காந்தியின் மூத்த மகன் ஹரிலாலின் மீது அனுதாபம் கொண்டவனாகவும் அந்த மகாத்மாவின் மீது கொஞ்சம் விலகலைப் பராமரிப்பதையே கௌரவமாகவும் வைத்திருப்பவன் நான். சமீப வருடங்களில் காந்திக்கு ஏற்பட்டிருக்கும் மறுவாசிப்பு மற்றும் அவரது மறுவருகைக்கான பின்னணிகள், காரணங்கள், காந்தியைத் தூக்கி நிறுத்தும் ஆளுமைகள் சார்ந்த சந்தேகங்களும் எனக்கு அவருடனான விலகலை நியாயப்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால் காந்தியை மகாத்மா என்று ஏற்பதில் எனக்குச் சங்கடமொன்றும் இல்லை. காந்தியுடனான உறவு எத்தனை தொலைவு அல்லது எத்தனை நெருக்கம் என்பதில் தான் என்னுடைய பிரச்சினை உள்ளது. அண்ணா ஹசாரே, ஜெயமோகன் வழியாக காந்தி மீண்டும் வருகை புரிந்தபோது எனது சந்தேக எதிர்வினையை ஒரு கவிதையாக எழுதியிருக்கிறேன்.   

சமையலறைக் கத்திதான்
அதை எடுத்துப் பிடித்தால்
மத்தியகால
சண்டை சாகசங்களுக்கு
அழைப்பு விடுக்கிறது.
கை
வேட்டைக்குப்
பரபரக்கிறது
போதும்
காந்தி பிறந்தார்
போனார்
மீண்டும் வந்துவிட்டார் என்றும்
சொல்கிறார்கள்
இனி
எலுமிச்சம் பழத்தை
நறுக்கினால் போதும்.

மகாபாரதச் சித்திரக்கதை ஓவியக் கண்காட்சிக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் அகமதாபாத்துக்குப் போயிருந்தபோது, சபர்மதி ஆசிரமத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கஸ்தூரிபா நோய்படுக்கையில் இருக்கும்போது மகாத்மாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றைப் பார்த்தேன். மனைவி நோயுற்றிருக்கும் நிலையில் காமிராவை அத்தனைக் கூர்மையாகப் பார்க்கும் காந்தியின் கண்கள் எனக்குத் தொந்தரவை அளித்தன. நண்பர்களிடம் அதைச் சொல்லவும் செய்தேன். அவர் அதிக நாட்கள் தங்கிய இடம் அது. மதுரை காந்தி நினைவிடத்திலுள்ள அருளம்சம் கூட அங்கே இல்லை. காந்தி, ராட்டை நூற்கும் இடம் ஒரு நவீனத் தொண்டு நிறுவனத்தின் வாசனையைக் கொண்டிருந்தது.
கடந்த வாரம் வைக்கம் முகமது பஷீரின் அம்மா’ சிறுகதையைப் படித்தபோதுதான் காந்திக்கும் எனக்குமான உறவு எப்படி இருக்க வேண்டுமென்பது கொஞ்சம் தெளிந்தது.



எதிலும் அதீதமாகவும் மிகையாகவும் எதிர்வினையாற்றும் என் பழைய நண்பர், ஒரு நாள் எங்கள் பேச்சிலர் வீட்டுச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த காந்தியின் கோட்டுச்சித்திர சட்டகத்தை தன்னை நோக்கி பிடித்திழுத்தார். அப்படியும் அவரை இழுக்கலாம் தான். காந்தியின் மொத்த உடலையும் அவரவர் வசதிப்படி பிய்த்தும் தின்னலாம்; கிறிஸ்துவின் உடலைப் போல. மோடி ’ஸ்வச் பாரத்’ என்ற பெயரில் அவரை ஒருபுறமாகப் பிடுங்கிச் சாப்பிடலாம்.

அரசாங்க எழுத்தர்கள் முதல் அரசுவாத எழுத்தாளர்கள் வரை சட்டம் ஒழுங்காக, தொண்டு நிறுவனங்களாகக் காந்தியைப் புசிக்கலாம். காந்தியின்  எளிய வாழ்க்கை முறையைத்தான் இந்தியக் கம்யூனிஸ்ட்கள் அவருடைய வஸ்திரத்தைப் போலப் பெற்றிருக்கிறார்கள். லாரி பேக்கர் போன்ற கட்டிடவியல் கலைஞர்கள் அவரை அழகிய சாண்ட்விச் போலப் பிட்டு மதுவுடன் படைத்துள்ளனர். ஆதிமூலம் தன் தந்தையைக் காந்தியில் மீண்டும் மீண்டும் கோடுகளாகப் படைத்திருக்க வேண்டும். தமிழ் சிறுபத்திரிகை மரபு கொண்டிருந்த பிடிவாதத்தில் காந்தியின் வைராக்கியம் கலந்திருந்தது.   

குழந்தைகளுக்கும் காந்திக்கும் இடையிலான தொடர்பு விளக்க முடியாததும் புதிரானதுமாகும். ஒரு மலருக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்குமிடையிலான உறவு அது. குழந்தைகளுக்கு அடுத்த நிலையில் கலைஞர்கள் காந்தியை எப்படி அணுகவேண்டும் என்பதற்கு வைக்கம் முகமது பஷீர் ஒரு உதாரணம்.

வைக்கம் முகமது பஷீர் மகாத்மா காந்தியை நேரில் பார்த்திருக்க வேண்டும். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தில் காந்தியின் வலது தோளைத் தொட்ட அனுபவத்தை தனது ‘அம்மா’ சிறுகதையில் எழுதியிருக்கிறார். இந்தியா முழுவதும் மகாத்மா காந்தியை ஒரு முறையாவது தொடுவதை ஏக்கமாகவும் தொட்டதைப் பிறவிப் பெறும்பேறாகவும் கருதியதை உணரமுடிகிறது. சென்னையில் காந்தியை சந்தித்த பாரதியார், காந்தியை ஆசிர்வதிக்கும் போது தொட்டாரா? தெரியவில்லை. பஷீர் கதையில் வரும் சிறுவனுக்கு இருக்கும் பரபரப்பும் பாரதிக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

“நெருக்கியடித்திருக்கும் ஜனத்திரளினூடே கார், சத்தியாகிரக ஆஸ்ரமத்தை நோக்கி மெல்ல நகர்ந்தது. மாணவர்கள் பலர் காரின் பக்கவாட்டில் பிடித்துத் தொங்கினார்கள். அதில் நானுமிருந்தேன். அந்தக் களேபரத்தினிடையில் எனக்கு ஒரு ஆசை. உலகம் போற்றும் அந்த உத்தமரை ஒரு தடவை தொட்டுப் பார்த்துவிட வேண்டும். தொடமுடியாவிட்டால் நான் செத்துப் போய்விடுவேன் போல் தோன்றியது. எனக்குப் பயமும் பதற்றமும் தொற்றிக்கொண்டன. அனைத்தையும் ஒரு நொடி மறந்து நான் காந்திஜியின் வலது தோளை மெதுவாகத் தொட்டுவிட்டேன்.” என்று எழுதுகிறார்.

பஷீர், தன் இளவயதில் பகத்சிங்கின் தாக்கத்தால் தீவிரவாத அமைப்பொன்றை நிறுவி ‘உஜ்ஜீவனம்’ என்ற பத்திரிகையையும் நடத்தி சிறைக்குச் சென்றார். பின்னர் பாரதமெங்கும் தேசாந்திரியாகவும் துறவியாகவும் சூஃபியாகவும் திரிந்து பின்னர் பேப்பூரில் அமர்ந்த பஷீரின் படைப்புகளில் காந்தியைத் தொட்ட அந்தச் சிறுவனின் சாரமும் இருக்கிறது.

தன்னிலையையும் சுயத்தையும் ஒரு கலைஞனின் மனோதர்மத்துடன் வாழ்நாள் முழுக்க பரிசீலித்து துலக்கிக் கொண்டே இருந்தவர் காந்தி. அவரைத் தொட்டுவிட்டு தன் சுதர்மமான கலைக்குள் ஓடி மறைந்துவிட்ட சிறுவன் வைக்கம் முகமது பஷீர்.

Comments