Skip to main content

ஆனந்தின் சுற்றுவழிப்பாதை




பிராணிகளின் அழகும் குறும்பும் படைப்புணர்வும் ததும்பும் உறுப்பாக கடவுள் வாலைப் படைத்தார். என்னுடைய வளர்ப்புப் பிராணி பிரவுனியைப் பார்த்தபின்னர் தான் அதை அறிந்துகொண்டேன்.

மனிதர்களுக்கு வால் போய்விட்டது. அதை இடமாற்றி இன்னும் சூட்சுமமான வஸ்துவான மனமாக மாற்றியிருக்கிறார் என்று எனக்குப் படுகிறது.

அந்த வாலுக்குக் கண் வெளித்தெரியாமல் இருக்கலாம். ஆனால், விழிப்பு உண்டு.

வாலுக்குக் கண் இல்லை
யார் சொன்னது?
விழிப்புள்ளதெல்லாம் கண்களென்று கொண்டால்
வாலுக்குக் கண் உண்டுதான்.

வாலுக்குச் சுயம் உண்டு
அதை நான் வளர்க்கும்
ப்ரவுனியைப் பார்த்தே அறிந்துகொண்டேன்
அதன் வால் வழியேதான் அவன் அறிவிக்கிறான்
தான் பிரவுனி
தான் நாய்
தான் பிராணி
நான் நீயல்ல
நான் நீங்கள் அல்ல

மனிதர்களுக்குச் சுயமே வால்
பிராணிகளைப் போல அது கிடைமட்டமானது அல்ல
செங்குத்தாய் தரையிலிருந்து வானுலகம் வரை
அந்த வால் நீண்டிருக்கிறது

அவனுடைய வாலை
நான் பிடிக்கும்போதெல்லாம்
அவன் தான் தான் என்று
ஏன் அலறி அவன் எதிர்க்கிறான்
அதற்கு முதல் சாட்சியம் என் அப்பா
என் அம்மா அவர் வாலைப் பிடிக்கும்போதெல்லாம்
இப்படித்தான் தான் தான் என்று
விசுவரூபம் எடுத்தார்.

அடுத்த சாட்சி என் மனைவி
நான் அவள் வாலைத் தவறி மிதிக்கும்போதும் கூட
அலறிச் சீறுகிறாள்
அவள் காண்பிக்கும் எதிர்ப்பு அல்ல
அவள் சொல்லும் வசைகள் அல்ல
அவள் காண்பிக்கும் தனிமை
தான் தான் தான் என்று
என்னை வதைக்கிறது.

வாலின் நடுவில் உள்ள எலும்பு தான், தான், தான், தான் என்று வதைபடுகிறது. இந்தத் தானுக்கு இரண்டு வரலாறுகள். ஒன்று கூட்டு நனவிலி, கூட்டு அறிதிறன் என்பவற்றால் ஆன ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வரலாறு; இன்னொன்று பிறந்து மொழிபயின்ற பின்னணி, நினைவுகளால் அடையப்பட்ட தனிநபர் அனுபவங்களின் வரலாறு.

மாறுதலுக்கும் மாறாததற்குமான யுத்தம், இந்த இரண்டு வரலாற்றுக் களங்களிலும் சேர்ந்து நடக்கும் களம்தான் மனம்.




நாவல் என்றும் கதை என்றும் தோன்றும் வடிவத்தில் எழுதப்பட்ட ‘சுற்றுவழிப் பாதை’, மனம் என்னும் உயிர்-வேதி-கலாசார சாராம்சத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட யாத்திரையின் தடங்களைக் கொண்ட படைப்பு ஆகும். அந்த யாத்திரையில் நிர்ணயமான ஒரு காலம் இல்லை; அது தேவையும் இல்லை. கல்யாணராமன் முன்னுரையில் இந்த படைப்பின் காலத்தை நிர்ணயிக்க நினைக்கிறார்.   

நான், பிறந்து வளர்ந்த பின்னால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை மனத்தை நான் தனியாக உணர்ந்ததில்லை. நினைவுகள், எண்ண ஓட்டங்கள், உள் உரையாடல்கள், வெளியில் நிகழும் அனுபவங்களுக்கு அகத்தில் நடந்துகொண்டேயிருக்கும் விளக்கங்கள், மொழிபெயர்க்கப்படாத உயிர்-வேதித் தளத்தில் நடக்கும் துயர, சந்தோஷ மூட்டங்கள் எல்லாவற்றையும் ‘நான்’ தாங்கிக் கொண்டிருக்க முடிந்த வரை, மனம் என்பதை, நான் என்றே கற்பனை செய்திருந்தேன்.

மனத்தின் கனமும் என் கனமும் வேறு அல்ல. மனத்தின் வெப்பமும் என் வெப்பமும் வேறு அல்ல. மனத்தின் குளிரும் எனது குளிரும் வேறு அல்ல என்றுதான் மனத்தை, ‘நான்’ ‘நான்’ என்று தாங்கிக் கொண்டிருந்தேன்.

அந்தக் கதைக்கு ஒரு முடிவு வந்தது. அதுவரை ‘நான்’ எதிர்கொண்டிராத ஒரு ஒரு துயர் எனக்கு நேர்ந்தபோது தான், மனம் என்பது எனக்கு ஆதரவானதில்லை என்பதை அறிந்துகொண்டேன். மனத்தால் எதையும் செய்யமுடியாதென்ற ஏலாமையை உணர்ந்தேன். இந்த மனத்தை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது என்ற நகுலனின் வாக்கியம் முற்றிலும் புரிந்தது. மனமென்று அதுவரைத் தனியாகவே தெரியவே தெரியாமலிருந்த ஒரு பாண்டம் என் கையில் அமர்ந்து கொதிக்கத் தொடங்கிய போதுதான், மனத்தைக் கீழே போட்டு ஓடவேண்டுமென்று தோன்றிய போதுதான், மனம் என்பது அவ்வளவு எளிதாகச் சமாளிக்க முடியாத ஆளென்று தெரிந்தது; அது வேறொரு ஆள்.  

எதையும் தாங்க முடியாதபோதுதான், அதைவிட்டுப் பிரிய நினைக்கிறோம். அப்படியான தாங்க முடியாத வேளையில் மனத்தைக் கீழேபோட்டுவிடத் துடித்தபோது ஏற்பட்ட சந்திப்பு தான் ஆனந்துடனானது.

ஆனந்தை முன்வினை போல ஏற்கெனவே நான் பார்த்திருக்கிறேன்,எனது மாணவப் பருவத்தில். தியாகராய நகரின் நடேசன் பூங்காவில் எம். யுவனுடன், ஆனந்த்தைச் சந்தித்தேன். வில்ஸ் பில்டர் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே இருந்தார். எனக்கும் தாராளமாக உரிமையோடு உணரும்படி சிகரெட் தந்துகொண்டிருந்தார். முண்டக உபநிடதத்தின் புகழ்பெற்ற இரண்டு கிளிகள் கதையைத்தான், எம். யுவனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போது அவர் சொன்ன கதையின் உள்ளடக்கம் முழுக்க விளங்கவில்லை. ஒரு கிளி மேல் கிளையில் அமர்ந்திருக்கிறது; இரண்டாவது கிளி கீழ் கிளையில் அமர்ந்திருக்கிறதென்ற சித்திரம் மட்டும் மனத்தில் பதிந்தது. ‘காலடியில் ஆகாயம்’ தொகுதியை அதற்குப் பிறகு படித்தேன். ஆனந்த் எப்போதும் டைட்டன் வாட்ச் கம்பெனிக் காரர்களைப் போல காலம், காலம் என்று பேசிக் கொண்டிருப்பார் என்று சாரு நிவேதிதா ஒருமுறை கிண்டலாகக் கூறியிருந்தார்.

 காலம், காலம் என்று நமக்குத் தொடர்பில்லாத வேறு ஏதோவொன்றை ஆனந்த் போன்றவர்கள் பேசுகிறார்கள் என்ற எண்ணம் தான் எனக்கும் இருந்தது. ஆனால், நான் புறக்கணித்த அந்தக் ‘காலம்’ என்னைப் பின்னர் வதைக்கும், என் கையில் கனக்கும் என்று தெரிந்திருக்கவேயில்லை. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரிடமே நான் சிகிச்சைக்காக வந்துசேர்வேன் என்று எனக்குத் தெரியாது.

ஆனந்தைச் சந்தித்த பிறகு, வாழ்வில் தாங்கமுடியாதது என்ற ஒன்று இருக்கவே முடியாது என்று தோன்றும் புள்ளிக்கு அவர் என்னை நகர்த்தியிருக்கிறார். அதற்கு இந்தச் சுற்றுவழிப்பாதை நாவலுக்கும் சம்பந்தம் உண்டு.  

ஏனெனில், தாங்க முடியாத ஒன்று உண்மையிலேயே நேரும்போது, தாங்கமுடியவில்லை என்று சொல்வதற்கு நாம் இருக்கப் போவதில்லை. சந்தோஷம், வலி இரண்டுமே தாங்கமுடியும் அளவுதான் நமக்குத் தரப்படுகிறது. தாங்கமுடியாத போது நானோ நீங்களோ இங்கே இருக்கமுடியாது.

தாங்க முடியாத வேதனைக்குள்ளாக்கி விட்டு மனமே, தாங்கமுடியவில்லை இனிமேலும் என்று புகார் சொல்லி, அழுத நிலையில், ரணமாக்கும் எண்ணங்களை ஏவிவிட்டு ரத்தம் கோரிக் கொண்டேயிருக்கும் விலங்குகளாய் சதா பகலிலும் இரவிலும் என்னை உறங்காமல் ஓய்வுகொள்ளாமல் தமது குளம்படிகளால் மிதித்துக் குதறிக் கொண்டிருந்த வேளையில் தான், மனம் எனக்குக் கனக்கத் தொடங்கியது.

அதை அத்தனை காலம் மிக அனாயசமாக இயல்பான உள்ளுறுப்பாய் பாவித்து வந்த எனக்கு அது கைப்பாத்திரமாக கொதிக்கத் தொடங்கியது.

‘சுற்றுவழிப்பாதை’ படைப்பில் வரும் ஆசிரமத்தைப் போல அடைக்கலமாக ஆறுதல் தரும் இடமாக உண்மை வீடாக ஆனந்தும் இந்தப் படைப்பும் ஒரே நேரத்தில் இருந்தது. இந்த உலகத்திலேயே பாதுகாப்பான இடம் ஆனந்தின் அண்ணா நகர் அறையாக என்னால் அப்போது உணரப்பட்டது.

புறநிலை, புறப்பிரபஞ்சத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்று கல்யாணராமன் கேட்கிறார். நாம் சுத்தமான எதார்த்தம் என்ற ஒன்றைப் பார்க்கக் கூடிய, விளக்கக்கூடிய வல்லமையை அல்லது சாத்தியத்தைப் பெற்றிருக்கிறோமா? இது ஆன்மிகம் மட்டுமல்ல, இன்றைய நவீன அறிவியலும் கேட்கும் கேள்வி இது. பொய், மெய் என்ற இரட்டைகளில் அல்ல; குட்டி உண்மை, பெரிய உண்மை, ஒல்லி உண்மை, குள்ள உண்மை, சிகப்பு உண்மை, கருப்பு உண்மை, பச்சை உண்மை என எத்தனை கோடி மக்களாக உண்மைகளும் அனுபவ விளக்கங்களும் உருவெடுத்திருக்கின்றன.    

மனம் நோயுற்ற நாட்களில் தான், தற்பொழுதை எதிர்கொள்ள முடியாமல் இறந்த கால நினைவுகள் அளித்த வேதனையும் எதிர்காலம் குறித்த எண்ணிலடங்காத அச்சங்களும் போகும் இடம், பார்க்கும் நபர்கள் எல்லாரிடத்திலும் படர்ந்திருந்த போதுதான், பொன்மொழிகள், மகாவாக்கியங்கள் மீதான நம்பிக்கையும் கூடியது. ஒரு தேவாலயச் சுவரில் உள்ள, ஆட்டோவின் கூரையில் எழுதப்பட்ட வாசகங்கள் எல்லாவையும் அந்தக் கணத்தைக் கடப்பதற்கு, ஆறுதல் கொள்வதற்கான சொற்களாக மாறின. ஏகார்ட் டோலிலிருந்து, அஷ்டாவக்கிரர் யு. ஜி. கிருஷ்ணமூர்த்தி வரை, ஷிர்டி சாய்பாபாவிலிருந்து சேப்பாக்கத்திலுள்ள இஷ்டலிங்கேஸ்வரர் வரை அனைத்து குருக்களையும் தெய்வங்களையும் ஆலயங்களிலிருந்து நான் ஓட ஓடத் துரத்திய நாட்கள் அவை. மனம் தொடர்பிலான புத்தகங்களை கழுதை போலத் தின்று செரித்திருக்கிறேன்.

000

மனம், மனம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்வதில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கிறது. மனம், தனக்கு எதிரான தனக்கு ஊறுவிளைவிக்கும் தகவல்களைக் கூட ருசியோடு கேட்கிறது. தன்னை இல்லாமலாக்குவதற்கான சதி, ரகசியங்களை ஏவிவிடும் ஆனந்த் போன்ற மனநல ஆலோசகர்களின் அறைகளில் கூட, குளிர்சாதன வசதி கொடுத்த குளிரில், ஆனந்த் கொடுக்கும் காபியைச் சப்புக்கொட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் மனத்துக்கு எத்தனை வலு இருக்க வேண்டும்; எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக மனம் தன் மீது செய்யப்படும் யுத்தத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.

மனம் பற்றியும் மனிதனைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியும் புரிந்துகொள்வதற்கான மிகச் சிறிய குளிகைகளாய் வார்த்தைகள் தேவையாக இருந்த காலகட்டத்தில்தான் ஆனந்தோடு ‘சுற்றுவழிப்பாதை’ படைப்பில் அவருடன் அமர்ந்து வேலைசெய்ய ஆரம்பித்தேன்.

குருதேவருக்கும் சத்யரூபனுக்கும் தொடக்கத்தில் வரும் உரையாடலில் துவங்கி புத்தகத்தின் ஒவ்வொரு மூலையிலும் குருதேவர் சொல்வதை மனம் குவிந்து கேட்டேன். இரண்டு சிகரங்களுக்கிடையே குறுநாவலிலிருந்தே ஆனந்தின் கதாபாத்திரங்களாகத் தொடரும் மலைகள் பற்றிய விவரிப்பையும் நான் கதாபாத்திரங்களின் பேச்சைப் போலத்தான் கூர்ந்து பார்த்துக் கேட்டேன். சத்யரூபன் பார்க்கும் ஒரு குன்று தனிமையாகவும் தன் தனிமையில் நிமிர்ந்தும் நிற்கும். அந்தக் குன்று கதியற்ற தனிமையில் இல்லை. அந்தக் குன்று இனிய ஓருணர்வில் நிமிர்ந்து தனித்து இருக்கிறது. அது எனக்கும் ஒன்றைச் சொல்கிறது. தேவதச்சனின் கவிதையில் அன்பைவிட மதிப்பு மிக்க வஸ்து என்று சுதந்திரத்தைச் சொல்வார். அதைப் பரிந்துரைக்கிறது ஆனந்த் சொல்லும் குன்று.

எல்லாக் காலமும் இப்போதில் இருப்பதைத் தெரிந்துகொள்

பொருள் அல்லாததைப் பற்றுவதற்குக் கற்றுக்கொள்

நீ இல்லாதபோது இருக்கும் ரகசியத்தை அறிந்துகொள்.

‘சுற்றுவழிப்பாதை’ என்ற ஒட்டுமொத்தப் படைப்பும் எனக்குக் கொடுக்கும் இந்தக் கணம் வரைக்கும் பயனுள்ள மாத்திரைகளாக இந்த மூன்று வாக்கியங்களையும் நான் பற்றியிருக்கிறேன். முதல் வாக்கியத்தில் என்னிடம் இல்லாதது எதுவும் இல்லை என்ற நிறைவு ஏற்படுகிறது.

பொருள் அல்லாததைப் பற்றுவதற்குக் கற்றுக்கொள் என்ற வாக்கியம் தான் புதிது. ஆனால், கலை இலக்கியத்தில் அழகில் சத்தியத்தில் சிவத்தில் எங்கோ தொடர்பைக் கொண்டவருக்கு மிகவும் நெருக்கமான வாக்கியம் தான் இது.

நீ இல்லாதபோது இருக்கும் ரகசியத்தை அறிந்துகொள் என்ற வாக்கியம் நிச்சயம் மனத்தால் புரிந்துகொள்ள முடியாதது. ஆனால் வேறு எதுவோ புரிந்துகொள்கிறது.

இந்த மூன்று வாக்கியங்கள் தான் ஆனந்த் தன் சுற்றுவழிப் பாதை வழியாக அடைந்த மகாவாக்கியங்கள் என்றும் நான் சொல்வேன். அவை புதியவையா, பழையவையா என்பதை விட இப்போதும் உபயோகமானவை என்பதால் அவை பொருளுடையவை.

000

சுற்றுவழிப்பாதை நாவலின் வேலையின் முக்கால்பகுதியில், ஆனந்திடம் பேசிக்கொண்டிருந்த போது, அவர் இது நாவலா என்று கேட்டார்.

இது நாவலின் வடிவத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அஷ்டாவக்கிர கீதையைப் போன்ற ஒரு சம்வாத வடிவத்தில் அமைந்த மெய்யியல் வழிகாட்டி நூல் இது என்று சொன்னேன்.

ஏன் இதை நாவல் என்று சொல்லக்கூடாது என்று கேட்டார்?

நாவலில் நாவலாசிரியன் தன் கைவிளக்கைத் தொலைத்து நிற்க வேண்டும். அவனே இருள்சூழ்ந்த நிலவறைகளில் அலையவேண்டும். ஆனால், சுற்றுவழிப் பாதையில் நாவலாசிரியன் ஒரு இடத்தில் கூட கைவிளக்கைத் தொலைக்கும் பகுதியே இல்லை என்றேன். நாவலில் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் அனுபவங்கள், நடக்கும் பாதைகள், நிகழ்ச்சிகள் குறித்த ஒரு தெளிவு இருக்கிறது என்று சொன்னேன். அப்போது நான் படித்துக் கொண்டிருந்த கரமசோவ் சகோதரர்கள் படைப்பை உதாரணமும் காட்டினேன்.

ஆனந்தும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டுக் கொண்டார். 

மீளவே முடியாதென்று தோன்றும் இருள்கொண்ட மனத்தின் புதிர் அம்சங்கள் சூழ்ந்த உலகத்தை நீங்கள் எழுதமுடியும் என்று சொன்னேன்.

ஆமாம், என்னால் எழுதமுடியும் என்றார் ஆனந்த்.

அந்த நாவலை நீங்கள் எழுத வேண்டும்.  

ஆனந்த் சார், உங்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும். 

Comments