மகள் என் வயிற்றின் மீது
விளையாடிக்கொண்டிருக்கிறாள்
இடுப்பின் கீழே என் குறிமிதித்து
அவள் வானேறுகிறாள்
நான் அவளைத் தொடவேயில்லை
என் பால்யத்தில்
அந்தச் சிவப்புநிறப்
பலூனை
தொட்டுத்தொட்டு
கைவிடுத்து
காற்றில் அலையவிட்டேன்
நான் அந்தப் பலூனை
ரத்தச்சிவப்பைத்
தொடவேயில்லை
காதலியை ஸ்பரிசித்தேன்
தொட்டுத்தொட்டு
உச்சத்தில்
நான் இல்லாமல் ஆகும்
உன்மத்தத்தில்
அவளுக்குள் நுழைந்தேன்
நான் தொடவேயில்லை
இப்பூமியில் சற்றுமுன்
முளைத்திருக்கும் புற்கள்
அருவி
சாயங்காலம்
அலாதியாகச் சிவந்திருக்கும் வீடுகள்
கடல் ஆசை அலைகள் அழகு
இவற்றையெல்லாம்
குதிரைகள் கடக்கின்றன
தொட இயலாத துக்கம் எனக்கு.
Comments