Skip to main content

நிர்வாணப் பூச்சி


ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கவிஞர் ஹான்ஷான் எழுதி சசிகலா பாபு மொழிபெயர்த்திருக்கும் 'குளிர்மலை' தொகுப்பிலுள்ள 79-வது கவிதையில் வரும் நிர்வாணப் பூச்சி என்னைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அதன் கையிலோ இரண்டு புத்தகங்கள் வேறு உள்ளன. வெள்ளை உடல், கருப்புத் தலையுள்ள பூச்சி. நெடிய தூரம் நடைபயிலும் போது கோணல் மாணலான உடைகளை அணியும் பூச்சி அது. நிர்வாணமாய் இருந்தாலும் அந்தப் பூச்சியின் இடுப்பில் மெய்யறிவின் வாள் உள்ளதாம். 

எதற்கு? அர்த்தமற்ற ஏக்கத்தை வெட்டியெறிவதற்கு. 

எல்லாப் பூச்சியும் நிர்வாணமாகவே இருக்கிறது. அப்படியென்றால், குளிர்மலையில் வாழும் இந்தப் பூச்சியின் நிர்வாணம் எதைக் குறிக்கிறது? 

தாவோவின் தாக்கத்தைக் கொண்ட சீனக்கவிஞர் ஹான்ஷானின் கவிதைகளில், பூரண அறிவின் வெளிச்சமும் நிறைவும் மட்டும் அல்ல, ஒரு ஏழையின் அல்லல், கவிஞனின் விந்தை, நிறைவின்மையிலிருந்து எழும் பிதற்றல் எல்லாம் உண்டு. 

ஹான்ஷானின் வாழ்க்கை பற்றித் திரட்டப்பட்ட விவரங்களைப் படிக்கும்போது, அந்த நிர்வாணப் பூச்சி யார் என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. வெளியே ஏழை போலவும் பைத்தியம் போலவும் கோமாளி போலவும் தென்பட்ட ஹான்ஷான், மஞ்சுஸ்ரீ என்று அவர் வாழ்ந்த காலத்திலேயே கருதப்பட்டிருக்கிறார். மஞ்சுஸ்ரீ என்றால் இந்தப் பிறவியில் ஞானத்தை எட்டி, அடுத்த பிறவியில் புத்தர் ஆவதற்காகக் காத்திருப்பவர் என்று பொருள்.

ஆங்கிலத்தில் இதன் மூலத்தைப் பார்த்த போது, பூச்சி என்று முதல் வரியில் அழைத்து அதற்குப் பிறகு, அந்தப் பூச்சி பற்றி He என்றே விவரிக்கப்படுகிறது. பூச்சி என்றும் அவன் என்று அழைக்கப்படுபவன் கவிஞனாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

இந்தக் குறிப்பிட்ட கவிதையை நெருங்குவதற்காக நானே செய்துள்ள மொழிபெயர்ப்பு இது. இதன் ஆங்கில மூலத்தையும் கீழே கொடுத்துள்ளேன். மேலதிகமாக இந்தக் கவிதையை யாருக்காவது துலக்க முடிந்தால் அவர்கள் அதைப் பகிரலாம். 

வெள்ளை உடல் மற்றும் கருத்த தலையுடன்

குளிர்மலையில் நிர்வாணப் பூச்சியொன்று இருக்கிறது.

அதன் கரம் இரண்டு புத்தகச் சுருள்களைப் பற்றியிருக்கிறது,

ஒன்று 'நெறி' மற்றொன்று அதன் 'திறம்'.

அதன் குடிலில் பானைகளோ தணலடுப்போ இல்லை

கோணல்மாணலான சட்டை மற்றும் கால்சட்டையுடன்

அது நெடுநடை போகிறது.

ஆனால், அர்த்தமற்ற ஏக்கத்தை வெட்டியெறிவதற்காக

மெய்யறிவின் வாளை அது எப்போதும் சுமந்து செல்கிறது. 

(There's a naked bug at Cold Mountain

With a white body and a black head.

His hand holds two book scrolls,

One the Way and one its Power.

His shack's got no pots or oven,

He goes for a long walk with his shirt and pants askew.

But he always carries the sword of wisdom:

He means to cut down sensless craving.) 


(ஆங்கிலத்தில் Gary Snyder )

Comments

shabda said…
அருமை நண்பா