Skip to main content

ட்சை க்வா சாங் உருவாக்கும் ஆகாய ஏணி



வெடிப்பது, மருந்துமானது என்ற முரண்பாட்டை தனது உள்ளடக்கத்திலும் பெயரிலும் ‘வெடி மருந்து’ கொண்டிருக்கிறது. வெடி மருந்தின் பூர்விகமான சீனாவிலும் இது 'ஃபயர் மெடிசின்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆக்கம், அழிவு என்ற இரண்டு பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வெடிமருந்தையே தனது கலைக்கான உள்ளடக்கமாக்கிய ‘ட்சை க்வா சாங்க்’ - ஐ ஓவியர் என்று ஒற்றையாக வகைப்படுத்த முடியாது. நிர்மாணக் கலைஞர், பட்டாசுகளில் மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் விற்பன்னர், தொழில்நுட்பத்தோடு தனது கலையை இணைத்துப் பிரமாண்டத் தோற்றங்களை நிகழ்த்தும் நிபுணர் என்று இவரைப் பற்றிச் சொல்லிப் பார்க்கலாமே தவிர இவரது படைப்புகளையும் வாழ்க்கையையும் பார்க்கும்போதுதான் உண்மையிலேயே இவர் அடைந்திருக்கும் அகண்டம் என்னவென்று தெரியும். இளம் வயதில் நவீன ஓவியனாக இருந்த ட்சை க்வா சாங், ஒரு கட்டத்தில் தனது கலை வாழ்க்கையில் அலுப்பை உணர்ந்தபோது, நவீன கலையில் பிகாசோவைக் கடந்து ஒருவன் சாதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. பிகாசுவுக்கான கீழைத்தேய பதில் தான் ‘ட்சை க்வா சாங்க்’ என்பதை அவரைப் பற்றி எடுக்கப்பட்ட Sky Ladder: The Art of Cai Guo-Qiang நமது கண்முன்னால் நிரூபிக்கிறது. 

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இரவை ஒளிபடைத்ததாக மாற்றும் வாணவேடிக்கைத் தொழில்நுட்பத்தை தனது கலைவெளிப்பாட்டுக்கான ஊடகமாக மாற்றி எத்தனையோ பிரமாண்டமானதும் நுட்பமானதுமான தோற்றங்களையும் பறவைகளையும் மயக்கமூட்டும் காட்சிகளையும்  ட்சை க்வா சாங் நமது கண்முன்னால் எழுப்புகிறார். வானத்தில் தோன்றும் மலர்களைப் போல அத்தனை பிரமாண்டமாக இருந்தாலும் அவை சில நொடிகளில் ஒளிர்ந்து அவிந்து உதிர்ந்துவிடுகின்றன. அவற்றின் அநித்திய அம்சத்தைத் தான் தனது பிரமாண்டங்கள் மூலம் ஞாபகப்படுத்துகிறார் ட்சை க்வா சாங். அணு ஆயுதப் பரிசோதனைகள் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட நூற்றாண்டான இருபதாம் நூற்றாண்டில் அணு ஆயுதச் சோதனைகளில் எழுந்த நாய்க்குடை வடிவிலான புகைக்காட்சிக்கு எதிர்வினையாகத்தான், ட்சை க்வா சாங், தனது கற்பனை வீச்சு கொண்ட வாணவேடிக்கை ஜாலங்களை நிகழ்த்துகிறார். பெய்ஜிங்கில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டின் ஆரம்ப நிகழ்ச்சியில் நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கைகளை உருவாக்கிய கலைஞரும் இவர்தான்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் பெயரால் ஏற்பட்ட சூழலியல் விளைவுகளுக்கு அரசியல் ரீதியாக முகம் கொடுக்கும் கலை, ட்சை க்வா சாங்கினுடையது. தாவோவும் கன்பூசியசும் செலுத்தும் தாக்கத்தோடு, சென்ற நூற்றாண்டில் சீனாவில் நடந்த நவீன மாற்றங்களுடன் சேர்ந்து பிளிறும் படைப்புகள் இவருடையது. கடந்த நூற்றாண்டில் கலாசாரப் புரட்சி என்ற பேரால் மாவோவின் தலைமையில் நடந்த ரத்தக்கோரங்களின் தாக்கம் ஊடுருவிய குழந்தைப் பருவத்தை ட்சை க்வா சாங் நம்மிடம் இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்துகொள்கிறார்.

கலாசாரப் புரட்சியின் விளைவாக பூர்ஷ்வா பழக்கமென்று விமர்சிக்கப்பட்டு அடித்துக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வளர்ப்பு நாய்களில் சிறுவனாக இருந்த ட்சை க்வா சாங்கின் நாயும் ஒன்று. அடித்துக் கொல்லப்பட்ட நாயை துக்கத்தோடு அவரது குடும்பம் சாப்பிட்டதை நினைவுகூருகிறார். ட்சை க்வா சாங்கின் தந்தை ஓவியராகவும் மிகப் பெரிய படிப்பாளியாகவும் இருந்திருக்கிறார். தீப்பெட்டிகளில் அச்சிடுவதற்கு பிரமாண்ட நிலக்காட்சி ஓவியங்களை வரைபவராக இருந்திருக்கிறார்.  தீப்பெட்டியின் முதுகுகளில் கிடைக்கும் சிறிய வெளியில் பூமியின் மூலைகளை அடக்கிவிடுபவராகத் தனது தந்தையைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.



மாவோ மேற்கொண்ட கலாசாரப் புரட்சியின் போது இவரது தந்தையின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களை சீனப்படையினர் கைப்பற்றி தீயில் எரித்த சம்பவத்தை நினைவுகூர்கிறார். நூல்கள் அத்தனையையும் எரிக்க மூன்று நாட்கள் ஆகின என்று அந்த நிகழ்ச்சியை தனது மகள்களிடம் இந்த ஆவணப்படத்தில் பகிரும்போது அறுபது வயதுகளில் தற்போதுள்ள ட்சை க்வா சாங் அழத்தொடங்கிவிடுகிறார். அவரது குழந்தைப் பருவத்தில் எரிந்த புத்தகங்களும் அப்பாவின் மீனியேச்சர் ஓவியங்களும் கொல்லப்பட்ட வளர்ப்பு நாயின் கடைசி ஓலமும் தான் பிரமாண்ட படைப்புகளாக இன்னும் பிளிறிக்கொண்டிக்கிறது. ட்சை க்வா சாங் சாப்பிட்ட அவரது வளர்ப்பு நாய், தனது வற்றாத அன்பையும் ஆற்றலையும் ட்சை க்வா சாங்கின் கலைக்குத் தந்து கொண்டிருக்கிறது. மாவோவின் கலாசாரப் புரட்சி ட்சை க்வா சாங்கிடம் எதிர்மறையான எதிர்வினை உணர்வை மட்டும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் அவரது கலையின் சாதகமும் பிரமாண்டத்துக்கான வலுவையும் கொடுக்கிறது. கலகம் என்பது என்ன வகையிலிருந்தாலும் அது நியாயமானதே என்ற செய்தியை தன்னிடம் விதைத்ததாக ட்சை க்வா சாங் கூறுகிறார். ஒரு சமகாலப் படைப்பாளியாக, மரபிலிருந்து விலகிவருவதற்கும் கேள்வி கேட்பதற்கும் மரபான திருவுருவங்களுக்கு எனது பிரத்யேக காட்சிமொழியால் மாறுதலாக விளக்கங்களைக் கொடுப்பதற்குமான தைரியத்தை அளித்தது என்கிறார். சீனாவில் நடந்த கலாசாரப் புரட்சியின் காரணமாக உள்ளூர் மக்கள் ஒரு காரியத்தை முன்னிட்டுத் திரட்டப்பட்டதையும் தனக்கு உந்துதலாகச் சொல்கிறார். பல்வேறு கலாசாரங்கள், பின்னணிகளிலிருந்து வரும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களை இணைத்து தனது வாணவேடிக்கை நிர்மாண நிகழ்ச்சிகளில் பணியாற்றுவதற்கான காரணம் அதுவே என்கிறார்.

பிரமாண்டத்தோடும் தொழில்நுட்பத்தோடும் கலையின் தத்துவார்த்த ஆழத்தையும் தேடலையும் கொண்டதாக இருக்கின்றன ட்சை க்வா சாங்கின் படைப்புகள். அதேநேரத்தில் கண்களைக் கவரும் சீர்மையையும் அழகையும் அமைதியையும் இவரது படைப்புகள் கொண்டுள்ளன. நாசிசம் போன்ற வெகுமக்களைக் கவரும் தத்துவங்களுக்கான விமர்சனமாக இவர் உருவாக்கிய நிர்மாணச் சிற்பமான ஹெட் ஆன் இதற்கு ஓர் உதாரணம். பாடம் செய்யப்பட்ட 99 ஓநாய்கள் வரிசையாகப் பாய்ந்து ஒரு கண்ணாடிச் சுவரில் மோதி விழுகின்றன. மனித குலம் தான் செய்த தவறிலிருந்து ஒரு பாடத்தைக் கற்க முடியாத நிலை குறித்து பேசும் இந்தச் சிற்பத்தில் ஓநாய்கள் தங்களது துவக்க இடத்துக்கு மீண்டும் திரும்பும் காட்சி தெரிகிறது. இந்தக் காட்சியும் அதன் பின்னணியும் நமது மனத்தைத் தொந்தரவுபடுத்துபவை. ஆனால், இந்தத் தொந்தரவையும் தாண்டி தனது படைப்புகளை வடிவமைப்பு ரீதியாகவும் சீர்மை அடிப்படையிலும் கம்பீரமான அழகியல் வெளிப்பாடாக மாற்றுகிறார். அங்கே கண்களையும் நிறைவு செய்யும் கவித்துவம் நிகழ்கிறது.



மனிதர்களின் நடத்தையை, ஆட்சியாளர்களின் கொள்கைகளைப் பற்றி தனது படைப்பில் பேசுவதற்கு மனிதர்களை வரைவதைவிட பிராணிகளின் மூலம் வெளிப்படுத்துவதே தனக்கு உகந்ததாக இருக்கிறதென்கிறார் ட்சை க்வா சாங். பிராணிகள் இயற்கையாகவும் மனிதர்களைவிட வெளிப்பாட்டுடனும் இருக்கின்றன, விலங்குகளை கண்காட்சி வெளிகள், உள்ளடக்கங்களுக்குள் ஒருங்கிணைப்பதும் எளிதானது என்கிறார். பிரிஸ்பேனில் உள்ள மாடர்ன் ஆர்ட் கேலரியின் நடுவில் இப்படித்தான் குதிரைகளும் மானும் ஒட்டகச்சிவிங்கியும் ஆடும் சேர்ந்து ஒரு நீர்நிலையில் நீர்பருகுகின்றன. அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக மனிதர்களும் இடம்பிடிக்கின்றனர்.

இயற்கையோடு சீனர்கள் கொண்டிருக்கும் சமயத்துவம் வாய்ந்த உறவுகள், சடங்குகளை இவரது கலை உட்கொண்டிருக்கிறது. புதிய வேலைகளில் ஈடுபடும்போது படுத்த படுக்கையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் தந்தையைப் போய்ப் பார்த்துப் பேசுகிறார் ட்சை க்வா சாங். நூறு வயதுப் பாட்டியிடம் தான் செய்யும் வேலைகளை குழந்தையின் உற்சாகத்துடன் பகிர்ந்துகொள்கிறார். உலகின் பெரும் வல்லரசுகளில் ஒன்றாக மாறியிருக்கும் சீனா சந்தித்து வரும் சூழலியல் பிரச்சினைகளை ஒன்பதாவது அலை என்ற கண்காட்சியின் உள்ளடக்கமாக மாற்றியிருக்கிறார். அதற்காக அவர் ஹூவாங்பு நதியில் வடிவமைத்த பழங்காலப் படகொன்றில் பாடம் செய்யப்பட்ட விலங்குகள் இறக்கும் நிலையில் இருக்கின்றன. மீண்டும் சீனா இயற்கையை ஆராதிக்கும் தனது ஆன்மிகத்துக்கும் திரும்பவேண்டிய அவசரத் தேவையை அந்த விலங்குகளின் கண்கள் நமக்கு உணர்த்துகின்றன. 

Sky Ladder: The Art of Cai Guo-Qiang ஆவணப்படத்தின் மையம்,   ட்சை க்வா சாங், வாணவேடிக்கை வழியாக வானத்துக்கு  ஒரு ஏணியை அமைக்கும் காட்சிக்காக இருபது வருடங்களாக முயற்சி செய்வதுதான். நிலத்தில் பிறந்து விழும் மனிதனின் எட்டவேண்டிய லட்சியமாக ஆகாயம் எக்காலத்திலும் எல்லா கலாசாரங்களிலும் இருந்துவருகிறது. தொழில்நுட்பம், கலை, கூட்டுமுயற்சி அனைத்தையும் கொண்டு ட்சை க்வா சாங் தனது கனவை நனவாக்குகிறார். நூறு வயதுப் பாட்டிக்கு அதை தனது சொந்தத் தீவு ஊரிலிருந்து நிகழ்த்தி சமர்ப்பிக்கிறார். ஒரு பிரமாண்டமான எரிவாயு பலூனை பறக்கவிட்டு அதிலிருந்து ஏணி போல நடுக்கற்றைகளுடன் தரைவரை தொங்கும் சரத்தைப் பற்ற வைத்து, அந்தத் தீ மத்தாப்பு போல வானத்தை நோக்கி அந்தர ஏணியில் ஏறும் காட்சி அது. ட்சை க்வா சாங், அவரது மனைவி உட்பட நூற்றுக்கணக்கான பேர் சேர்ந்து 1600 மீட்டர் உயரத்தில் இந்த ஏணியை உருவாக்கி இந்தக் கண்கொள்ளாத காட்சியை நிகழ்த்துகின்றனர். நம்மைச் சூழ்ந்திருக்கும் அந்தகார இருட்டில் ஒளிர்ந்து தோன்றி மறையும் ட்சை க்வா சாங்கின் சிற்பம் இது. அத்தனை பிரமாண்டத்திலும் ட்சை க்வா சாங்கின் பிரத்யேகமான அந்தரங்கமான ஆத்மார்த்தமான கலையும் சேர்ந்து எரிகிறது. இந்த நிகழ்ச்சியை அவர் வெற்றிகரமாக முடித்து, ஆறுமாதங்களில் அவர் பாட்டி இறந்துவிட்டார். சீன அரசுக்கு முன்னதாகத் தகவல் எதுவும் தெரிவிக்காமல், உலகின் மற்ற பகுதிகளிலும் அனுமதி கிடைக்காமல் தான் பிறந்த ஊரிலேயே மிகத் துணிகரத்துடன் ட்சை க்வா சாங் நிகழ்த்திய சாகசம் இது. 



நியூயார்க் வாசியாகி இருபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் ட்சை க்வா சாங் தனது ஊரையும் கலாசார வேர்களையும் இணைக்கும் இடம் இது. புலப்படுபவற்றுக்கும் புலப்படாததற்கும் நடுவில் மரபுக்கும் நவீனத்துக்கும் இடையில் காலத்துக்கும் வெளிக்கும் இடையில் இப்படித்தான் இவரது கலைப்படைப்புகளை கலாசார பேதங்களைக் கடந்து எல்லாரும் அடையாளம் காணும் முழுமை உணர்வாக மாற்றுகிறார்.

ட்சை க்வா சாங் போன்ற கலைஞர்கள் இந்தக் காலகட்டத்தில் இதுபோன்ற பெரும் பிரமாண்டங்களை நோக்கிப் போகிறார்கள் என்ற கேள்வியையும் இந்த ஆவணப்படம் என்னில் எழுப்பியது. எந்த நிகழ்வும் எந்தச் செய்தியும் எந்தத் தருணமும் எந்த அதிர்ச்சியும் உடனடியாக மறக்கப்படும் அதி ஊடக யுகத்தில் எதையும் கவனிப்பதற்கான அவகாசத்தைக் கூட நாம் இழந்துள்ள நிலையில் ஒரு கலைஞன் தனது படைப்பின் மீது, அவன் எழுப்ப விரும்பும் கேள்விகளின் மீது அவனது உலகத்துக்குள் கொந்தளிக்கும் லட்சியங்கள் மீது அபிலாஷைகள் மீது உலகத்தின் கவனத்தைத் திருப்ப இப்படியான பிரமாண்டத்தால் மட்டுமே சாத்தியம் என்று உரத்துச் சொல்வது போல போல ட்சை க்வா சாங்கின் படைப்புகள் திகழ்கின்றன. தமிழில் ஜெயமோகன் 2014-ம் ஆண்டில் தொடங்கி சமீபத்தில் நிறைவு செய்திருக்கும் வெண்முரசு நாவல் வரிசைக்குப் பின்னால் உள்ள உணர்வை ட்சை க்வா சாங்கின் பிரமாண்டத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும். 

ட்சை க்வா சாங் படைப்புகளைப் பார்க்கும்போது ஒரு பெரும் வனத்திலுள்ள தாவரங்களும் விலங்குகளும் சேர்ந்து பிளிறுவது போல உள்ளது. கலையோடு தன்னை அடையாளம் காணும் எவரும் 67 வயதிலும் தன்னிடம் உள்ள குழந்தையைத் தனது பிரமாண்ட வெளிப்பாடுகளால் போஷித்துக் கொண்டிருக்கும் ட்சை க்வா சாங்கின் படைப்புகள் குறித்த ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அகத்தில் எழும் பிளிறலை உணர்வார்கள். 

Sky Ladder: The Art of Cai Guo-Qiang ஆவணப்படத்தைப் பார்த்த இரவை நான் மறக்கவே மாட்டேன். நான் அன்று முழுவதும் ட்சை க்வா சாங்குடன் அடையாளம் கண்டு பிளிறிக் கொண்டே இருந்தேன். 

ஒவ்வொரு கலைஞனும் இப்படித்தான், தனது கலை, கனவு,  லட்சியங்களின் மூலம் படுக்கைவாட்டிலான பரிவர்த்தனை நுகர்வு உறவுகள் மட்டுமே போதும் போதும் என்று தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கும் பூமியின் விசையை மீறி, சுற்றிச் சூழப் படர்ந்திருக்கும் அந்தகாரத்தின் அசாத்தியத்தின் இருட்டில், ஆகாய ஏணியாகத் தனது படைப்பை, நித்தியத்தை நோக்கி ஏவி விட விரும்புகிறான். அதைத்தான்  நினைவூட்டுகிறார் ட்சை க்வா சாங்.

Comments