Skip to main content

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வுதமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் போன்ற சூழல்களைத் திறத்துடன் கையாள்வது பற்றிய நூல் அது. மணிவண்ணனது மனைவி மல்லிகாவுக்குப் பனிக்குடம் உடைந்தபோது, எப்படி அவரைக் கையாண்டு மருத்துவமனைக்கு பதற்றமில்லாமல் அழைத்துச் செல்லவேண்டுமென்பதை ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகமே அவருக்குச் சொல்லிக் கொடுத்தது. இப்படித்தான் அவர் வீட்டிலிருந்து மல்லிகாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை போனோம். 

இப்படி உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் வேறு வேறு முனைகளில் க்ரியாவின் அக்கறை தொழிற்பட்டுள்ளது. இலக்கிய உணர்வு குறைவாக உள்ள மொழியியல், இலக்கணத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு க்ரியா வெளியிட்ட தற்காலத் தமிழ் அகராதியும், மொழி நடைக் கையேடும், மரபுத் தமிழ் அகராதியும் அருஞ்செல்வங்களாக இருந்துகொண்டிருக்கும். ஆங்கிலம் அறியாமல் தமிழறிவின் மூலமாகவே உலகின் பிற அறிவுகளோடு பரிச்சயம் கொள்வதற்கான சாளரமாக க்ரியாவின் புத்தகங்கள் இருந்துள்ளன.
      
க்ரியா ராமகிருஷ்ணனுடனான உறவைவிட அதிக மூப்பு கொண்டது க்ரியா புத்தகங்களுடனான எனது உறவு. கல்லூரிப் படிப்பின் முதலாண்டில் நெருக்கமாக அறிமுகமான நண்பனுமான தளவாய் சுந்தரம் தான் க்ரியா புத்தகங்களை எனக்கு அறிமுகப்படுத்தியவன். பாலகுமாரனைத் தாண்டி வண்ணதாசன், பிரபஞ்சன், வண்ணநிலவன், அசோகமித்திரன், சூடாமணி என்று வந்துகொண்டிருந்த என்னிடம் ந. முத்துசாமியின் ‘நீர்மை’ சிறுகதைத் தொகுப்பை ஒரு மாலைப் பொழுதில், கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கட்டிடத் தொகுதியின் முன்பு கொட்டப்பட்டிருந்த மணல் குன்றில் அமர்ந்திருந்தபோது அறிமுகம் செய்தது அவன்தான். அவனுக்கு அந்த தொகுதியின் முன்னுரை மிகவும் பிடித்திருந்தது. என்னுடன் படிக்கும் ஒருவனுக்கு அத்தொகுதி பிடித்திருக்கிறது, எனக்கும் அது பிடித்திருக்கத்தானே வேண்டுமென்று சொல்லி அதைப் படிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுதி அந்த வயதில் என்னிடம் எந்த ஈர்ப்பையும் ஏற்படுத்தவில்லை. தளவாய்க்கு மௌனியின் சிறுகதைகளும் பிடித்திருந்தது. அதற்கு சில மாதங்களுக்குப் பின்னர் எங்களுக்கு அறிமுகமான சுந்தர ராமசாமியிடம், மௌனியும் முத்துசாமியும் தன்னைக் கவர்ந்தவர்கள் என்று தளவாய் சொன்னபோது, எனக்கு வியப்பாகவும் பொறாமையாகவும் இருந்தது. அவருக்கு பிரமிப்பாக இருந்தது. ஏனெனில், இன்றும் நவீன இலக்கிய வாசிப்பில் பரிச்சமுள்ளவர்கள் என்று நினைக்கப்படுபவர்கள் கூட, மௌனியையும் ந. முத்துசாமியையும் மிக அரிதாகவே நெருங்குபவர்களாக இருக்கின்றனர். நீர்மை சிறுகதைத் தொகுப்பின் கதைகள் அப்பருவத்தில் என்னிடம் நெருங்காவிட்டாலும் ஒரு புத்தக வடிவமாக அது வெளியிடப்பட்டிருந்த முறை என்னைக் கவர்ந்தது.
 
அப்போதிலிருந்து க்ரியாவின் வெளியீடுகளை, எனக்கு ஈடுபாடுடைய உள்ளடக்கங்களையும் தாண்டி, புதிய பதிப்புகள் அனைத்தையும் அட்டையையும் முதுகையும் தொட்டு, முகர்ந்து திருப்பித் திருப்பி ஆசையோடு பார்ப்பது வழக்கமாக உள்ளது. கவிதைகளை எழுதத் தொடங்கிய காலத்தில் எனது முதல் தொகுப்பு க்ரியாவில்தான் வரவேண்டுமென்ற லட்சியம் இருந்தது. அந்தத் தலைமுறையினருக்கு அந்த லட்சியம் பொதுவாக இருந்தது. அது எனக்கு எனது ஏழாவது கவிதைத் தொகுதியில் சாத்தியமானது.  
க்ரியா புத்தகங்களின் அட்டை, தலைப்பெழுத்து, இம்பிரிண்ட், அச்சகத்தின் பெயர், பக்கங்களில் தீட்டப்பட்டிருக்கும் கோடுகள், அச்சுரு, மாறிக் கொண்டேயிருக்கும் க்ரியா என்ற பெயரின் எழுத்துருக்கள் வரை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

ராமகிருஷ்ணனின் சேகரிப்பிலேயே இல்லாத அரிய பதிப்புகள் இன்னமும் எனது சேகரிப்பில் உள்ளன. க்ரியா பதிப்பகத்தோடு தொடர்புடைய நண்பர் சி. மோகனிடம் க்ரியாவில் வேலை பார்த்த அனுபவம் குறித்த கதைகளை அவரைத் தூண்டிக் கேட்டிருக்கிறேன். க்ரியா ராமகிருஷ்ணனுடன் நெருங்கிப் பரிச்சயம் ஆவதற்கு முன்பாகவே அவருடன் அகராதியில் பணியாற்றிய பேராசிரியர் கி. நாராயணனுடன் சேர்ந்து மூளைத்திறன் குறைந்த, மாற்றுத் திறனாளி குழந்தைகளை அவர்களது பெற்றோர் பராமரிப்பதற்காக டேவிட் வெர்னர் எழுதிய ஆயிரம் பக்கக் கையேடு ஒன்றின் முதல் பகுதியை மொழிபெயர்த்த போது தான் மொழியுணர்வு என்றால் என்ன என்ற புரிதலை அடைந்தேன். கணிதம் போல இலக்கணமும் இன்னும் எனக்குக் கசப்பாகவே இருக்கும் நிலையில், மொழி சார்ந்த முறைசாராத கல்வி இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தான் தொடங்கியது.
 
‘தூலிகா’ பதிப்பகத்துக்காக பால் சக்கரியா குழந்தைகளுக்காக எழுதிய ஒரு படக்கதைப் புத்தகத்தை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி எனக்கு 2009-ம் ஆண்டு கிடைத்தது. நான் செய்த மொழிபெயர்ப்பை க்ரியா ராமகிருஷ்ணன் என்னோடு சேர்ந்து திருத்துவார் என்று ஏற்பாடு. நான் அப்போது குடும்பத்தைப் பிரிந்து மிக இக்கட்டுகள் சூழ்ந்த நிலையில் மேன்ஷனில் இருந்தேன். புகைக்கும் சிகரெட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து இருமலுடன், எனது மொழிபெயர்ப்பை சரிசெய்வதற்காக நலிவு உடலிலும் உடையிலும் மனத்திலும் ஏறியிருக்க க்ரியா ராமகிருஷ்ணனின் அலுவலகத்துக்குள் நுழைந்தேன். எனது கோலம் அவருக்கு உவப்பானதாக இருந்திருக்காது. நான் கையில் ஒரு பேனா, புதிதாக வாங்கிய ஒரு குயர் நோட்டுடன் சென்றிருந்தேன். இருமிக் கொண்டே இருந்தேன். ராமகிருஷ்ணன் உடம்புக்கு என்ன என்ன என்று கேட்டுக் கொண்டிருந்தார். க்ரியா அகராதி உங்களிடம் இல்லையா என்று கேட்டு வருத்தத்தைக் காண்பித்தார். அவருடன் சேர்ந்து பணியாற்ற ஒரு மணிநேரம் ஒதுக்கியிருந்தார். அப்படித்தான் அவர் நேரம் ஒதுக்குவார். தகவல் சொல்லாமல் அவரைப் போய் சந்திப்பதை அவர் விரும்புவதில்லை. நான் ஒருநாள் அப்படி எனது புதிய கவிதைத் தொகுப்பை அவரிடம் கொடுக்கச் சென்றபோது நேரம் வாங்கிக் கொண்டு பார்க்க வரவேண்டுமென்று சொல்லி, நான் பரிசாக கொடுக்கச் சென்ற புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்கி அனுப்பினார். பால் சக்கரியா கதையின் மொழிபெயர்ப்பை அவருடன் சேர்ந்து செப்பனிட்டது எனக்கு அரிய அனுபவம்தான். பால் சக்கரியாவின் கதையில் வரும் ஏழைப்பையன் அணியும் உடைகள் தளர்வாக இருக்கும் என்று மொழிபெயர்த்திருந்தேன். தளர்வு என்பதை விட ‘தொளதொள’வென்று போடலாமா என்று ராமகிருஷ்ணன் கேட்டார். அதுதான் அவனது வறுமை நிலையைச் சொல்லக்கூடியது என்று சொன்னார். அது மிகவும் சரியாக இருந்தது. இப்படி அர்த்தத்தை நெருக்குவதில், குறிப்பாக மொழிபெயர்ப்புப் பிரதியில் பணியாற்றுவதில் அவர் நிபுணர். சுந்தர ராமசாமியின் வாழ்நாள் பங்களிப்பு என்று சொல்லத்தக்க, அவர் மொழிபெயர்த்த உலகக் கவிதைகளின் தொகுப்பான ‘தொலைவிலிருந்து சில கவிதைகள்’ முன்னுரையில் க்ரியா ராமகிருஷ்ணனின் இத்திறனைச் சொல்லி வியந்திருக்கிறார். தான் மொழிபெயர்ப்பு செய்த கவிதைகளின் அர்த்தத்துடன், உணர்வுடன் எவ்வளவு லாகவமாக வார்த்தைகளை இட்டு நெருக்குவார் என்பதை எழுதியிருக்கிறார். 

க்ரியா சமீபத்தில் பதிப்பித்த தற்கால அகராதியின் மூன்றாம் பதிப்புக்கு எழுதப்பட்ட முன்னுரையை சில நாட்களுக்கு முன்னர் படித்துக் கொண்டிருந்தேன். க்ரியா ராமகிருஷ்ணன் அந்த முன்னுரையை எழுதியிருக்கிறார். அவரது அந்த முன்னுரையைப் படித்தபோது, அது கொடுக்கும் ஆத்மார்த்தம், அது கொண்டிருக்கும் இலக்கு சார்ந்த துல்லியம், வார்த்தைகளுக்கு, அதைக் கோர்த்து வெளிப்படுத்துவதில் தெரியும் மதிப்பு எல்லாம் எனக்குத் துலங்கியது. அகராதியை வளரும் ஒரு உயிரியாக அறிமுகம் செய்து இந்த அகராதி உருவாக்கத்தின் கதையை மிக உயிர்த்தன்மையோடு அந்த முன்னுரையில் சொல்கிறார். 

பாலசரஸ்வதி குறித்து அவரது மருமகன் டக்ளஸ் நைட் எழுதி அரவிந்தன் மொழிபெயர்த்து க்ரியா வெளியிட்ட ‘பாலசரஸ்வதி அவர் கலையும் வாழ்வும்’ நூல் ஏற்கெனவே அந்த உணர்வை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. செவ்வியல் நிகழ்கலை, இசை சார்ந்த மொழியும் பழைய பண்பாட்டுத் தரவுகள் அதிகமும் கொண்ட நூல் அது. அரவிந்தன் ஆங்கிலமும் தமிழும் தெரிந்த நல்ல மொழிபெயர்ப்பாளர்தான். ஆனால் அந்தப் புத்தகம் மொழிரீதியாக அடைந்திருக்கும் செம்மையும் உயிர்த்தன்மையும் ராமகிருஷ்ணனின் மொழித்திறமும் ஆத்மார்த்தமும் சேர்வதால் சாத்தியமானது. நான் அந்தப் புத்தகத்தைப் பற்றி எழுதிய மதிப்புரையில் புத்தம்புதிய கரன்சியின் மதிப்பை இந்த மொழிபெயர்ப்பில் உணரமுடிகிறது என்று எழுதினேன். 
டாக்டர் இல்லாத இடத்தில், அந்நியன், விசாரணை, நீர்மை, தாவோ தேஜிங் எனப் பல புலங்களிலிருந்து தமிழை ஒரு காலகட்டத்தில் நவீனமாக்க, கனவு கண்ட ஒரு தனிமனிதனின் நனவுதான் அவர் கொண்டுவந்த நூல்களை மதிப்புமிக்க கரன்சியாக்கியது. தமிழுக்கு மதிப்பு வாய்ந்த ஒரு நவீன பயன்பாட்டுக்குரிய மொழி என்ற அந்தஸ்தை ஏற்படுத்துவதற்காக வாழ்நாளின் இறுதிவரை உழைத்தததோடு அதைச் சாதித்தும் உள்ளார். காம்யூவும், காஃப்காவும், எட்சுபெரியும், பாதலேரும், விக்டர் ஹியூகோவும் தமிழுக்குள் இறங்கி ஓர் உலகளாவிய அனுபவத்துக்கு நாம் விரியமுடியும் என்பதை நிரூபித்திருப்பவர் அவர். தமிழில் பெரும்பாலும் இன்றுவரை மொழிபெயர்ப்புகள் வன்கொடுமைகளாகவே ஆகும் சூழலில், மொழிபெயர்ப்புகளை நம்பத்தகுந்த வாசக அனுபவமாக்கியவர் அவர். 

ழாக் ப்ரெவரின் 'சொற்கள்' கவிதைத் தொகுதியை அலியான்ஸ் ப்ரான்சேஸில் வெளியிட்டு கவிதைகள் சிலவற்றை அதிலிருந்து பிரெஞ்சிலும் தமிழிலும் படித்த அந்த இரவு எனக்கு இன்னமும் மறக்க முடியாதது. என் கவிதை உள்ளடக்கம், வெளியீடு சார்ந்த எனது அபிலாஷைகளுக்கு ஒரு வடிவத்தைக் கண்டுகொண்ட வெளிச்சத்துடன் நுங்கம்பாக்கத்திலிருந்து பேருந்தில் கோடம்பாக்கத்துக்கு வந்து இறங்கிய அந்த இரவின் வெள்ளித்தன்மையை மறக்கவே முடியாது. கவிதை என்ற வடிவத்தின் மந்திரத் தன்மை உறுதிப்பட்ட நாட்களில் ஒன்று.  

தாவோ தேஜிங் நூல் படிகள் சில வாங்குவதற்காகவும், இமையத்தின் கோவேறு கழுதைகள் 25 ஆண்டுகள் சிறப்புப் பதிப்பைப் பார்ப்பதற்காகவும் ஒரு நாள் மதியம் மூன்றரை வாக்கில் திருவான்மியூர் க்ரியா அலுவலகத்துக்குப் போனேன். இது நடந்து ஒரு ஆண்டு இருக்கலாம்.
க்ரியா ராமகிருஷ்ணன் தனது அறைக்குள் அழைத்துச் சென்று, கோவேறு கழுதைகள் சிறப்புப் பதிப்பைக் காண்பித்தார். அந்தப் புத்தகத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு தோல் பொதி போன்ற போல்டரையும் உருவாக்கியிருந்தார்.

க்ரியா இதுவரை வெளியிட்ட 131 புத்தகங்களின் அட்டைகளையும் புத்தகங்களின் தகவலையும் சேர்த்து ஒரு கேட்லாக் ஒன்றை மேஜையில் பார்த்தேன்.

தற்செயலாகத் தான் எடுத்துப் பார்த்தேன். பக்கங்களைப் புரட்டப் புரட்ட எனது பால்யம் திரும்பியது போன்ற உணர்வு. பார்த்த புத்தகங்களும் பார்க்காத புத்தகங்களின் அட்டைகளும் விவரங்களும் கடந்தன. நீர்மை அட்டையைக் கடக்கிறேன். அந்நியன் அட்டையில் உள்ள எஸ் என் வெங்கட்ராமனின் நீர்வண்ண ஓவியம் பற்றிக் கேட்கிறேன். இடைவெளி அட்டை கடக்கிறது. ராஜேந்திர சோழனின் எட்டுக் கதைகள் கடக்கிறது. மௌனி கதைகளையும் அந்நியமாதலையும் கடக்கிறேன்.

அப்போதுதான் ஜே. ஜே. சில குறிப்புகளுக்காக நடனக் கலைஞர் சந்திரலேகா வரைந்து, அச்சிடப்பட்ட பின்னர் விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட அட்டையைப் பார்த்தேன். சந்திரலேகா ஓவியராகவும் வடிவமைப்பாளராகவும் செயல்பட்ட போது ஜே. ஜே. சில குறிப்புகள் நாவல் அட்டைக்கு ஒரு ஓவியத்தை வரைந்து தந்துள்ளார். அது அச்சில் வெளிவந்த விதம் தொடர்பில் கருத்து மாறுபாடு ஏற்பட்டு, தனது ஓவியம் இடம்பெறக் கூடாது என்று மறுத்துவிட்டதை என்னிடம் முன்னர் சொல்லியிருக்கிறார். க்ரியா ராமகிருஷ்ணனிடம் இருந்த அந்த கேட்லாக்கில் சந்திரலேகா வரைந்த அட்டையைப் பார்த்திருக்காவிட்டால் என் நினைவில் அது ஒரு கதையாகவே தங்கிப் போயிருக்கும். கால்பந்து இடம்பெற்றிருக்கும் கருப்பும் சிவப்புமான அட்டை அது.

ஆதிமூலம் ஓவியத்துடன் இடம்பெற்ற ஜே. ஜே. சில குறிப்புகள் புத்தகமே வெளியில் எல்லாருக்கும் தெரிந்தது. 45 ஆண்டுகாலத்துக்கும் மேலான மொழியினூடான அவரது ஈடுபாட்டை 131 பதிப்புகள் வழியாகப் பார்த்த பயணம் மூச்சுமுட்டுவதாக இருந்தது. இதயம் விம்ம, கண்களில் சிறு ஈரம் துளிர்க்க நான் அன்று வீடு வந்துசேர்ந்தேன்.

தமிழில் புத்தக உணர்வு என்பதற்கு உருவகம் க்ரியா ராமகிருஷ்ணன். ஒரு புத்தகம் என்பது உள்ளும், புறமும் அழகான ஒரு உயிர் என்கிற அந்தஸ்தை அளித்த பெருமை க்ரியாவுக்கு உண்டு. க்ரியா ராமகிருஷ்ணன் அளித்த தனிப்பட்ட பரிசு எனக்கு அந்த 131 பதிப்பு அட்டைகளினூடான பயணம்.

000

க்ரியா சார்ந்த மதிப்பு, வசீகரத்துடனுடாகவே க்ரியா சார்ந்தும் ராமகிருஷ்ணன் சார்ந்தும் எனக்கிருந்த இருக்கும் விமர்சனங்களையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  

க்ரியா தமிழில் சிறுபத்திரிகை இயக்கத்தில் நீட்சியாக, ஒரு பதிப்பகமாகச் செயல்படத் தொடங்கி, இலக்கிய ரீதியான முன்னணியிலிருந்த ஆசிரியர்களையும் நூல்களையும் வெளியிட்ட பதிப்பகமாக நிலைபெற்று இருபதாண்டுகளுக்குப் பிறகு நவீன இலக்கியத்தில், எழுத்து வகைமைகளில், உள்ளடக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் பிரதிபலிக்காமல் பின்தங்கிவிட்டதான உணர்வே எனக்கு இருக்கிறது. இரண்டாயிரத்துக்குப் பிறகு மொழியியல் சார்ந்து தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டது முக்கியமான காரணம். க்ரியா, இமையம் எழுதிய ஆறுமுகம் நாவலுக்கு முன்பக்கத்தில் மொழி சார்ந்து எழுதி வெளியிட்ட குறிப்பு ஒரு படைப்பிலக்கிய நூலுக்கு முன்பக்கத்தில் எழுதக்கூடாத குறிப்பாகும்.  ஜெயமோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், பெருமாள் முருகன், லக்ஷ்மி மணிவண்ணன், ஷோபா சக்தி, ஜே பி சாணக்யா, பா. வெங்கடேசன், ராணிதிலக், சபரிநாதன் வரை முன்னணி புனைவெழுத்தாளர்கள் யாருமே க்ரியாவின் கண்களுக்கே படவில்லை. 2000-க்குப் பிறகு க்ரியா வெளியிட்ட கவிதை நூல்கள், கவிதை என்னும் வடிவத்தில் கடந்த இருபதாண்டுகளில் நடந்த மாபெரும் சுழிப்பைப் பிரதிபலிக்காதவை. மொழியியல், தத்துவம் சார்ந்த மூழ்குதலில் எங்கோ ஓர் ஆழத்தில் படைப்புணர்வும் ரசனையும் புதுமை நாடலும் பங்கப்பட்டுவிடுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு இன்றும் இருக்கிறது. அந்த ஒச்சத்துக்கு, அந்தப் பங்கத்துக்கு, அந்த விபத்துக்கு படைப்பிலக்கியம் சார்ந்த குறியீடாக எனக்குத் தோன்றுபவர் சி. மணி. அந்த விபத்து க்ரியா ராமகிருஷ்ணனுக்கும் ஏற்பட்டேயிருந்தது. 

ஆனால், இந்த விமர்சனங்களையெல்லாம் அது சொல்லப்படும் முறையில் சொல்லும் போது காதுகொடுத்துக் கேட்பவராகவே எனக்குப் பரிச்சயமான ராமகிருஷ்ணன் இருந்தார். அவர் மருத்துவமனைக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் க்ரியா வெளியிட்ட புத்தகம் ஒன்றை அனுப்பியிருந்தார். அது சார்ந்த கருத்தை அவர் மருத்துவமனைக்குப் போய் அட்மிட் ஆன செய்தி தெரியாமல் மின்னஞ்சல் மூலமாக எழுதியிருந்தேன். அவர் மருத்துவமனைக்குப் போய் அட்மிட் ஆன மதியவேளையில், பேச முடிந்த ஆரோக்கியத்தில் இருந்தபோது என்னை போனில் அழைத்தார். எனது கருத்து சரியானது என்று சொன்னார். அதுதான் அவரிடம் வார்த்தையாகப் பேசியது. அதற்கப்புறம் அவரிடம் தீபாவளி அன்று இரவு சைகையாகப் பேசியதுதான். 

ராமகிருஷ்ணன் தன்னிடம் புதிதாக அறிமுகமாகுபவர்களுக்கு மேட்டிமைத்தனமாகவும் சிடுசிடுப்பும் சினேகபாவமில்லாதவராகவுமே அவர்  தெரிவார். எனக்கும் அப்படித்தான் முதலில் தெரிந்தார். அவருடன் மாணவப் பருவத்திலிருந்து பணியாற்றத் தொடங்கிய, நட்பு கொண்ட ஆசை, சமஸ் போன்றவர்களுக்கு வேறொரு பிம்பத்தைத் தந்திருக்கிறார். 

க்ரியா ராமகிருஷ்ணன், நாவல்களையே திருத்தி எழுதுவார், நாவலாசிரியர்களின் மொழிநடையையே மாற்றிவிடுவார் என்றெல்லாம் தமிழில் இன்று எழுதும் முன்னணி எழுத்தாளர்களும் தெரிந்தே பெரும் பொய்களைச் சொல்லி வருகிறார்கள். சென்ற ஆண்டு வெளிவந்த எனது கவிதைத் தொகுதியான ‘கல் முதலை ஆமைகள்’ தொகுதி சார்ந்த மொழிச் செப்பனிடுதல் பணிக்காக 25 நிமிடங்கள் ஒதுக்க முடியுமா என்று ஒரு நாள் அழைத்தார் க்ரியா ராமகிருஷ்ணன். மிகுதியும் ஒற்று, காற்புள்ளி, நிறுத்தற்குறி சார்ந்த விஷயங்களைப் பற்றித்தான் கேட்டார். நான் பிரக்ஞைப்பூர்வமாகப் பயன்படுத்தியிருப்பது என்னவென்று ஆலோசித்தார். சில இடங்களில் எனது கவனத்துடனேயே செய்யப்பட்டிருக்கும் அம்சங்களை அப்படியே ஏற்றுக்கொண்டார். எனக்குக் காரணம் தெரியாத நிலையில் இப்படி இருக்கலாமே என்று சொன்ன மாற்று யோசனைகளை நான் ஏற்றுக் கொண்டேன். ‘அசோகமித்திரன் வசித்த வீடு’ கவிதையில் அசோகமித்திரன் என்ற பெயர் இல்லாமல் அவரது ஞாபகத்தைக் கொண்டுவர முயற்சி செய்யலாமா என்று கேட்டார். நான் முயற்சித்துப் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இருபது நாட்களுக்குப் பிறகு அப்படிச் செய்ய முடியாது என்று சொன்னவுடன் ஏற்றுக்கொண்டு இறுதிப் பணிகளுக்கு அனுப்பினார். கொடுக்கப்பட்ட கவிதைகளில் சில பலவீனமாக இருப்பதாக நான் தெரிவித்தேன். அவற்றை ஏற்றுக்கொண்ட அவர், ஒரே ஒரு கவிதையை மட்டும் எடுக்க வேண்டாம், நன்றாக இருக்கிறதென்று சொன்னார். இதுதான், எடிட்டிங் தொடர்பில் அவருடன் எனக்கு என் புத்தகம் தொடர்பில் ஏற்பட்ட அனுபவம்.    
 
க்ரியா பதிப்பகம் சார்ந்தும் க்ரியா ராமகிருஷ்ணன் சார்ந்த குறைகளும் வெளிப்படையாயானவை. அவை பேசப்பட்டவையும் பேசப்பட வேண்டியவையும்தான். ஆனால் அவரை இழிவுபடுத்துவதற்கான எந்தக் காரணத்தையும் அவர் நமக்குக் கொடுக்கவோ விட்டுச்செல்லவோ இல்லை. 

தன்னைப் போல எல்லாருமே ஒரு மாஃபியாவாக, ஒரு மாஃபியா கும்பலாக, ஒரு மாஃபியா தலைவனாகச் செயல்படுவார்கள் என்ற மனப்பீடிப்பிலிருந்து க்ரியா ராமகிருஷ்ணன் போன்றவர்களை தன்னிடத்திலிருந்துப் பார்க்க வேண்டியதில்லை. தனது நிறைகுறைகளோடு, தனிப்பட்ட வரையறைகளுடனேயே அரசு, நிறுவனங்கள் போன்றவற்றின் தொடர்ந்த உதவியின்றி தனிப்பட்ட நபராக, ஒரு மொழிக்கு கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் தனது வாழ்வை அர்ப்பணித்துச் சென்றுள்ளார் ஒருவர். மரணதேதி நெருங்கும் வரை, துல்லியமாகத் தனது வேலையைத் திட்டமிட்டு அதை முடித்து அதன் பலனைக் குழந்தையாக தன் மடியில் இருத்திப் பார்த்து மறைந்திருக்கிறார். 

க்ரியா ராமகிருஷ்ணன் போன்றவர்கள் வாழ்ந்த அந்த மேன்மை நிலையை, அந்தத் தீவிர நிலையில் அவர்கள் அடைந்த நிறைவை புத்தக வியாபாரிகளும் அவர்களைச் சுற்றி அறிஞர்களும் எழுத்தாளர்களுமென்ற பெயரில் திரண்டிருக்கும் தாரமிகச் சுரணை சிறிதுமற்ற கும்பலும் அறியவே மாட்டார்கள். 

பொய், சூது, விபச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்த இருபது ஆண்டுகளில் பண்பாட்டு சாமர்த்தியமாக ஆக்கியவர்களுக்கு அந்த மேன்மை தெரியவே தெரியாது. ஒரு கையில் அரூபப் பூணூலைப் பிடித்துக் கொண்டே சமூகநீதியையும் தார்மிகத்தையும் அவர்கள் வெட்கமின்றிப் பேசுவார்கள். தனிவாழ்வில் பாகுபாட்டையும் ஆச்சாரத்தையும் தீண்டாமையையும் பேணிக்கொண்டே தலித் அரசியலுக்கும் கொடி காட்டி அதன் ஆதாயங்களையும் உண்டு செரிக்கத் தெரிந்தவர்கள் அவர்கள். சாதி, பிதுரார்ஜிதம், கலாசார மூலதனம் என எல்லா அனுகூலங்களையும் கடைசிதுளி வரை நக்கி ருசித்துக் கொண்டே ஆசாதி ஆசாதி என்று குரல் கொடுப்பவர்கள். உள்ளூரில் பாரதிய ஜனதா, டில்லியில் மார்க்சியம் என்று எலிக்கு வாலையும் பாம்புக்கு தலையையும் காட்டிப் பிழைக்கும் எத்தர்கள் இவர்கள். அவர்களுக்கு அந்த மேன்மை தெரியவே போவதில்லை. பாராதவனும் பார்ப்பவன்தான். 

தமிழைப் பொருத்தவரை செத்து வாய்க்கரிசி போடும்வரை இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டேயிருப்பவர்கள் தான் அதிகம். அவர்களை அஞ்சினால் நினைக்கும் பணிகளைச் செய்யவே முடியாது. பண்பாட்டுச் செயல்பாடு என்ற பொதுக் காரியத்தில் முதலும் முடிவுமாக ஒருவன் சுமப்பதற்குக் கற்றுக்கொள்ள வேண்டியது இந்த அவதூறுகளையும் பொய்களையும் இழிவுகளையும் தான். அந்த அவதூறுகள், அந்தப் பொய்கள் ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் தொடங்கும்போதே இணையத்திலும் முகநூலிலும் பேதி போல பொழியத் தொடங்குகின்றன. அந்தப் பேதி நோய், இன்று எல்லாப் புகழையும் எல்லா சௌகரியங்களையும் எல்லா அங்கீகாரங்களையும் அடைந்து அதன் எல்லா வளங்களையும் கையில் வைத்திருக்கும் பண்பாட்டுச் செல்வந்தர்களின் மனத்தில்தான் குடிகொண்டிருக்கிறது என்பது மட்டுமே முரண்நகை. 

இந்தச் சூழலில்தான் தனது வாழ்நாளின் இறுதியில் இணையம் வழியாக மேற்கொள்ளப்பட்ட அத்தனை அவதூறுகளுக்கும் முகம்கொடுக்காமல் நெருங்கிய நண்பர்களிடம் கூட பெரும்பாலும் தனது சங்கடங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் தன் வாழ்நாள் பணியான தற்காலத் தமிழ் அகராதி என்ற சாதனையைச் செய்துவிட்டுப் போன ராமகிருஷ்ணன் போன்றோரை, அவர்கள் செய்த காரியங்களைத் தான், இனிவரும் நாட்களில் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். அந்தப் போதத்தை எனக்குத் தருகிறது ராமகிருஷ்ணனின் வாழ்வும் மரணமும்.

மருத்துவமனையில் அவர் உடல் கடந்த போது, ராமகிருஷ்ணா ராமகிருஷ்ணா என்று கூப்பிட்டு அழுத அவரது அக்காவும் இரண்டு உறவினர்களையும் தவிர அவருடன் இருந்தவர்கள் அனைவரும் அவர் செய்த காரியங்கள் தொடர்பான பிணைப்பிலிருந்து தாக்கத்திலிருந்து வந்திருந்தவர்களே. சாதி, வர்க்கம், சமயம் என்ற அடையாளங்களைத் தாண்டிய இணக்க உணர்வு அது. 
லக்ஷ்மி மணிவண்ணன், சுந்தர ராமசாமி, சி. மோகன், விக்ரமாதித்யன், க்ரியா ராமகிருஷ்ணன் என்று என்னைப் பெற்ற எண்ணற்ற தந்தையர்களில் கடைசியில் வருபவன் என்னை என் அம்மாவோடு சேர்ந்து பெற்ற தந்தை. என்னைப் பெறுவது அவனது லட்சியமும் அல்ல. 

அப்படிப்பட்ட லட்சியத் தந்தையரில் ஒருவனுக்கு நேற்று நான் பெசண்ட் நகர் கடற்கரையில் விடைகொடுத்தேன். ‘கல் முதலை ஆமைகள்’ முன்னுரையின் கடைசிப் பத்தியில் வரும் குதிரைகள் இருக்கும் அதே கடற்கரையில் தான் அந்த இறுதிவிடை கொடுத்தல் நடந்தது தற்செயல் என்றாலும் மிகவும் அபூர்வமானது. 

பொது மக்களின் வாழ்க்கை, பண்பாடு, அரசியல், அறிவியல், தொழில்நுட்பம், கல்வி என எத்தனையோ புலங்களில் பெரும் மாற்றங்களைக் கண்ட ஒரு காலகட்டத்தில், செவ்வியல் தன்மையை விட்டுவிடாமல், நவீனத்தோடும் குடித்தனம் செய்து, சாகாத உயிராக வம்சங்களைப் பரிபாலிக்க வேண்டிய அவசியமிருந்த தமிழ் மொழியின் தசைக்கு வலுசேர்க்கும் உயிருணவை அளித்தவர்களில் ஒருவராக க்ரியா ராமகிருஷ்ணன் என்றும் நினைவுகூரப்படுவார். 

Comments