Skip to main content

பொருளின் புதுப்பொருள் கவிதை

பிரமிள், ஆத்மாநாம், அபி, தேவதேவன், பிரம்மராஜன் ஆகியோர் தமது கவிதைகளிலும் உரைநடைகளிலும் கவிதை நிகழும் கணத்தைப் பற்றி அரிதான அவதானங்களை வைத்துள்ளனர். கவிதையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவர்கள் என்று அவர்களைச் சொல்வேன். அவர்களோடு கவிதையைத் தனது பிரதான வெளிப்பாடாகக் கொள்ளாமல் கவிதையின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து, அதுபற்றி அடிப்படையான சிந்தனைகளை ஒரு குழந்தைக்கும் புரியும்படி உரையாடும் தொனியில் பகிர்ந்துகொண்டவர் மா.அரங்கநாதன் என்பேன். அறிவு அல்ல, தகவல் அல்ல, அறிவியல் அல்ல, தத்துவம் அல்ல, மொழியும் அல்ல என்று சொல்லி, இதுவரை மொழியில் அறிந்த பொருளும் அல்ல என்று கவிதையை ‘பொருளின் பொருள் கவிதை’ நூல் மூலம் அணுகியவர் அவர்.

தமிழ் மட்டுமல்ல, ஆதிமொழிகள் புழங்கும் எல்லாச் சமூகங்களிலும் கவிதை பற்றிய உணர்வு இருக்கிறது; ஆனால், அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்போது அதன் வரையறை பிடிபடாத ஒன்றாகிவிடுவதை உணர்ந்திருக்கும் அவர், வார்த்தைகள் அற்ற மொழி, வண்ணங்கொண்டு தீட்ட முடியாத ஓவியம், ஒலி உருவம் அற்ற இசை, வடிவம் காணா ஒரு படிமம் என்ற இடத்துக்கு வருகிறார். கவிதை என்னவென்று கேட்கும் கேள்வியிலேயே தவறு இருக்கிறது என்று சொல்லி, கவிஞன் யார் என்ற கேள்வியின் மூலம் மட்டுமே சரியாக அணுக முடியும் என்று தனது விவாதத்தை இந்த நூலில் தொடங்குகிறார். சென்ற நூற்றாண்டில் கவிதை அழகியல் பற்றி எழுதப்பட்ட மிக அரிய உரைநடைப் படைப்பு இது. 

தமிழில் ‘பொருள்’ என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் நிலவுகின்றன. வஸ்து என்பதையும் அர்த்தம் என்பதையும் ‘பொருள்’ என்ற சொல் குறிக்கிறது. இதுவரை இருந்த, இதுவரை அறியப்பட்டிருந்த பொருளைப் புதிய பொருளாக்கி, அது தந்துகொண்டிருந்த பொருளின் ஒழிந்த அமைதியையும், அதன் வாயிலாகப் புதிய பொருளையும் எப்படி கவிதை தருகிறது என்பதை அவர் நம் முன்னால் நிரூபித்துக் காட்டுகிறார். கம்பன், தாயுமானவர், சார்த்ர், ஐன்ஸ்டைன், புதுமைப்பித்தன் ஆகியோரது படைப்புகளையும் கூற்றுகளையும் உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டு, கவிஞனின் ஈடுபடுதல் மூலம் ஒரு வஸ்துவுக்குப் புதிய பரிமாணமும் புதிய அர்த்தமும் எப்படிக் கிடைக்கிறது என்பதை நமக்குக் காண்பிக்கிறார்.

புதுமைப்பித்தன் எழுதிய ‘மகா மசானம்’ கதையை நம்மிடம் நிகழ்த்திக் காட்டி, சாலையில் இறந்துகொண்டிருப்பவனிடம் ஒரு குழந்தை காட்டும் பிரியத்தைச் சொல்கிறார். அதற்குப் பின்னர், அப்பா வாங்கிக்கொண்டுவரும், ஒரு மாம்பழத்தின் மணத்தில் அதுவரை இறந்திருந்த உலகை ஒரு குழந்தை புதுப்பித்துவிடுவதைக் கவிஞனின் பணியுடன் ஒப்பிடுகிறார். கவிஞனின் சார்பைக் கொள்ளும்போது இந்த உலகமும் இங்குள்ள வஸ்துகளும் தன்னை எப்படிப் புதுப்பித்துக்கொள்கின்றன என்பதைப் பகிரும் மா.அரங்கநாதன், முற்றிலும் புதிய அந்த ஈடுபடுதலையே அன்பு என்று சொல்வதாக நான் புரிந்துகொள்கிறேன். 

‘சிந்தனையின் வெளிப்பாட்டில் அன்பு வெளிப்பட்டுவிடாது. மானிட இனத்தில் ‘அன்பு’ வெளிப்படுவதற்காக மட்டுமே சிந்தனையைப் பயன்படுத்திக்கொண்ட இலக்கியவாதி கவிஞன் ஒருவனாகவே இருப்பான். அப்படிப்பட்ட சிந்தனையின் மொழிவடிவம்தான் கவிதையாக இருக்க முடியும். அறிவின் பாற்பட்டதுபோலத் தோன்றி, அறிவை அடிப்படையாகக் கொள்ளாது திகழும் அந்த வெளிப்பாடுதான், உண்மையை நேரடித் தொடர்பு ஏற்படுத்தித்தரக்கூடிய சக்தியைப் பெறுகிறது” என்கிறார்.

மா.அரங்கநாதனின் சிறுகதைகளிலும் எண்ணத்துக்கு அப்பால் உள்ள அமைதியைத்தான் நிகழ்த்துகிறார். எந்த நினைவும் இல்லாதபோது, செயல் நடக்கும் நிலையை நோக்கிய ஏக்கம் இவரது கதைகளில், கதைகளில் வரும் உரையாடலில் தென்படுகிறது. வாழ்வில் இருப்பதுபோலவே குரோதம், பாகுபாடு, போட்டி, சந்தேகம், அச்சம் என அனைத்துக் கல்யாணக் குணங்களோடும் கதாபாத்திரங்கள் வருகிறார்கள். ஆனால், கதைசொல்லியோ, சம்பவங்களுக்கு மத்தியில் வார்த்தைகளுக்கு மத்தியில் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் ஓட்டில் ஒட்டாமல் ஆன புளியம்பழத்தின் அமைதியைப் படைப்பில் நிகழ்த்திவிடுகிறான். 

மா.அரங்கநாதனின் சிறந்த சிறுகதைகளான ‘வீடுபேறு’, ‘மயிலாப்பூர்’, ‘அரணை’ போன்றவற்றில் அந்த அமைதி அழுத்தமாக இருக்கிறது.

மனிதனைத் தாண்டி, மனிதனின் எண்ணங்களைத் தாண்டி எத்தனை கோடி சீவராசிகள் இருக்கின்றனவோ அத்தனை கோடி உலகங்கள் இங்கே இருக்கின்றன என்ற பிரக்ஞை உருவாக்கும் அமைதி அது. ஜீவன் என்று மா.அரங்கநாதன் எழுதுவதில்லை.

சீவன், சீவராசிகள் என்றே எழுதுகிறார். சீவராசிகள் எனும்போது குணம் கூடுகிறது என்று உணர்கிறேன்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கவிதை வழியாகவே நீதியையும் உரைத்த ஒரு மொழியின் தொடர்ச்சியையும் அது கொடுத்த அறிவின் தொடர்ச்சியையும் புதுப் பொருளாகவே அகப்படுத்திக்கொண்டு உலகளாவிய அறிவோடும் உரையாடிய அறிவுயிராக மா.அரங்கநாதன் இந்த நூலில் வெளிப்படுகிறார்.

எல்லா அறிவுகளையும் கவிதை வழியாகவே சிந்தித்த ஒரு மொழியின் உயிர்த்தாதுக்கள் மின்னும் இந்த நூலைப் பள்ளி இறுதி வகுப்புகளிலும் கல்லூரிகளிலும் பாடநூலாகவே தமிழ்க் குழந்தைகள் வாசிக்க வேண்டும். நீதி, உண்மை, அறிதலின் மகிழ்ச்சி என்ற ஒளிமயமான உலகங்களுடனான உறவை நமது பிள்ளைகள் சிறுவயதிலேயே பெறுவதற்கான சத்துகொண்ட படைப்பு இது.

எழுதிய காலத்தில் மிகக் குறைந்த வாசகர்களையே கொண்டிருந்த, சக படைப்பாளர்கள் சிலராலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்த மா.அரங்கநாதன் போன்ற படைப்பாளிகளின் எழுத்துகள் மூலிகை மணத்துடன் எழுந்து தமது குணத்தைக் காட்டும் காலம் இது. தமிழ்க் குணம் என்னவென்று நாம் அறிய வேண்டியிருக்கும் சமயத்தில்தான், பொருத்தப்பாட்டுடன் மா.அரங்கநாதன், இன்றைக்கு அத்தியாவசியமான படைப்பாளராகத் தோன்றிவிடுகிறார்.

Comments

Popular posts from this blog

விகடன் என்னும் ஒரு பெருநிறுவனத்துக்கு எதிராக எளியவர் பச்சோந்தி பெற்றிருக்கும் வெற்றி

கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது.      இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந

ஒருநாள் - நகுலன்

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவார்கள் என்பதும் நிச்சயமில்லை .

நீலக்குதிரைகள் - மேரி ஆலிவர்

நான்கு நீலக்குதிரைகள் ஓவியத்துக்குள் நுழைகிறேன் அது சாத்தியமாவதில் எனக்கு ஆச்சரியம் கூட இல்லை. நான்கில் ஒரு குதிரை என்னை நோக்கி நடந்துவருகிறது. அதன் நீல மூக்கு என்னிடம் லேசாக நீள்கிறது. நான் எனது கையை அதன் நீலப்பிடறியில் இட்டு கட்டிக் கொள்கிறேன். என் புளகிதத்தை அது அனுமதிக்கிறது. ஓவியன் ப்ரான்ஸ் மர்க் மூளையில் வெடிகுண்டின் உலோகத்துண்டு தாக்கி இறந்துபோனான். போரென்றால் என்னவென்று அந்த நீலக்குதிரைகளுக்கு விளக்குவதை விட நான் இறந்தே விடலாம். அவை பீதியில் மயக்கம் போட்டு விழுந்துவிடும் அல்லது அதை அவற்றால் நம்பவே முடியாது. ப்ரான்ஸ் மர்க் உனக்கு எப்படி நன்றி சொல்வது. நமது உலகம் காலப்போக்கில் கூடுதலாக அன்பானதாக ஆகலாம். அழகான ஒன்றை ஆக்கும் வேட்கை நம் எல்லாருக்குள்ளும் இருக்கும் கடவுளின் ஒரு சிறு துண்டாக இருக்கலாம். இப்போது அந்த நான்கு குதிரைகளும் நெருக்கமாக வந்து ரகசியங்கள் சொல்ல இருப்பதைப் போல என்னை நோக்கி தங்கள் தலையைத் தாழ்த்துகின்றன அவை பேசவேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அவை பேசவும் செய்யாது. என்ன சொல்லக் கூடும் அவை இத்தனை அழகாக